மூன்றாவது பாலினம் !

இந்திய உச்ச நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்த "மூன்றாவது பாலினம்" பற்றி இந்த வாரம் சத்குரு ஸ்பாட்டில் பேசும் சத்குரு, சிவன் ஏன் அர்த்தநாரீஸ்வரனாக கொண்டாடப்படுகிறார் என்பதையும் விளக்குகிறார். அமெரிக்க ஈஷா உள்நிலை மையத்திலிருந்து அவர் எழுதிய இந்தக் கட்டுரை இங்கே உங்களுக்காக... படித்து மகிழுங்கள்.
 
 
 
 

மூன்றாவது பாலினம்!

இந்திய உச்ச நீதிமன்றம் சட்டபூர்வமாக அங்கீகரித்த "மூன்றாவது பாலினம்" பற்றி இந்த வாரம் சத்குரு ஸ்பாட்டில் பேசும் சத்குரு, சிவன் ஏன் அர்த்தநாரீஸ்வரனாக கொண்டாடப்படுகிறார் என்பதையும் விளக்குகிறார். அமெரிக்க ஈஷா உள்நிலை மையத்திலிருந்து அவர் எழுதிய இந்தக் கட்டுரை இங்கே உங்களுக்காக... படித்து மகிழுங்கள்.

அன்பார்ந்த மக்களே, மற்றும் தங்கள் மனதை இன்னும் தயார் செய்து கொள்ளாதவர்களே; நமது இந்திய உச்ச நீதி மன்றம், மூன்றாம் பாலினத்தை அங்கீகரித்து, அவர்களின் இருப்பை சட்டபூர்வமாக்கியுள்ளது. இந்த சட்டமானது நீண்ட தாமதத்திற்குப்பின் அமலுக்கு வந்துள்ளது. பண்டைய காலத்திலிருந்தே, மூன்றாம் பாலினம் என்பது இந்திய கலாச்சாரத்தில் அங்கீகரிக்கப்பட்டு தான் இருந்தது. அவர்களை நாம் துன்புறுத்தியது இல்லை, ஆனால் அதே சமயத்தில் அவர்களை நம்மில் சமபங்காக நாம் ஏற்றிருக்கவும் இல்லை. இது, இந்த நாட்டின் மிக உயர்ந்த நீதிமன்றத்தின் மிக அருமையான, வரவேற்கத்தக்க முடிவு என்றாலும், சமூகத்தில் பல இடைஞ்சல்கள் இதனால் உருவாகக் கூடும். உதாரணமாக, பொதுபணித்துறை அலுவலகங்கள், சொத்து பதிப்பு, திருமணம், இது தவிர இதனால் வரக்கூடிய கலாச்சார தாக்கங்கள் - பொது இடங்களில் கழிவறை உபயோகம் என பல பிரச்சினைகள் கிளம்பவிருக்கிறது. மூன்றாவது பாலினத்திற்கான அங்கீகாரம் நல்லதுதான் என்றாலும், ஆண் - பெண் உணர்வுகளையும் சிறிது கவனத்தில் கொள்ள வேண்டும்.

அர்த்தநாரீஸ்வரர் என்று கொண்டாடப்படும் சிவன், மூன்றாவது பாலினத்தைச் சார்ந்தவர் அல்ல - ஆண்-பெண் தன்மைகளின் உச்சத்தில் இருப்பவர். இது அல்ல, அதுவும் அல்ல, என்ற நிலை நம் நோக்கம் அல்ல, இரண்டிலும் உச்சத்தில் இருப்பது தான். இருமை நிலையைக் கடந்திருப்பது என்றால் ஆண் - பெண் என்ற இந்த உடலின் இயல்பை தவிர்த்து விடுதல் என்று பொருளல்ல. இரண்டிற்கும் இடையில் சமநிலை பெறுவது. சமநிலை என்றால், அது இவ்விரண்டையும் புறக்கணிப்பதோ அல்லது மூன்றாவதாக ஒன்றை உருவாக்குவதோ அல்ல; ஒரு விதத்தில், யோகா என்றால், ஒருவருக்குள் இருக்கும் ஆண்தன்மையும், பெண்தன்மையும் இணைவது என்றும் கூட சொல்லலாம். இவ்விரு தன்மையுமே கலந்தது தான் நம் வாழ்க்கை. அதனால், நான் 'ஆண்' என்றும், நான் 'பெண்' என்றும், நீங்கள் உங்களை அவ்வளவு ஆழமாக அடையாளப் படுத்திக் கொள்ளத் தேவையில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைந்ததால்தான், நாம் ஒவ்வொருவரும் பிறந்துள்ளோம். நான் ஆண் அல்லது பெண் என்ற அடையாளத்தை நம் உடல் எப்படியுமே சுமக்கிறது, அதை நம் மனதிலும் பதித்துக் கொள்ளத் தேவையே இல்லை. 'ஆணாக' இருப்பதோ 'பெண்ணாக' இருப்பதோ அது உடலின் வேலை. இந்த வித்தியாசத்தை உடல் தாண்டி நம் மனதிலும் வளர்த்துக் கொள்ள அவசியமே இல்லை. இது நம் அடையாளம் கிடையாது, வெறுமனே நம் உடல் அமைப்பு மட்டும்தான். அறியாமையினால், நான் என் 'உடல்' மட்டுமே என்பது போல் உடலுடன் நாம் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் அந்த ஆழமான அடையாளத்தின் காரணமாக, சமூகத்திலும் இந்த வித்தியாசங்கள் அளவுக்கதிகமாக ஆதிக்கம் செலுத்துகின்றன.

ஆண்-பெண் என்ற சிந்தனை உங்களிடம் ஓங்கியிருக்கிறது என்றால், உங்கள் கவனம் முழுவதும் உங்கள் பாலுறுப்புகள் மீது மட்டுமே இருக்கிறது என்று அர்த்தம். அப்படி உங்கள் உடலின் ஏதோ ஒரு அங்கத்தோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொண்டே ஆக வேண்டுமெனில், உங்கள் மூளையைத் தேர்வு செய்யுங்களேன். இது உங்களுக்கு நன்மை பயப்பது மட்டுமல்லாமல், சமூக சீர்கேடுகளைக் குறைத்து, ஒரு ஆரோக்கியமான சமூகம் உருவாகவும் வழி செய்யும். "விழிப்புணர்வு" என்பதை, உங்கள் உடல் அங்கங்களின் குறுகிய எல்லையைக் கடந்து, இப்பிரபஞ்சத்தின் பரந்து விரிந்த எல்லைகளோடு உங்களை நீங்கள் அடையாளப்படுத்திக் கொள்வது என்றும் கூட சொல்லலாம். இப்படி வளர்வதில்தான் இந்த பிரபஞ்சத்தின் மதிநுட்பத்தை புரிந்து கொள்வதற்கான சாத்தியங்கள் உள்ளது.

நான் இப்போது அமெரிக்காவின் டென்னஸியில் இருக்கும் நம் ஈஷா மையத்தில் இருக்கிறேன். இங்கே வசந்தகாலம் ஆரம்பிக்கப் போகிறது. வசந்த காலம் என்றாலே புதிய இலைகள், மலர்ந்து மணம் வீசும் வண்ணமயமான மலர்கள், பறவைகள், தேனீக்கள், மகரந்தச் சேர்க்கை, இனப்பெருக்கம் என்று எல்லா திசையும் கோலாகலம்தான். ஆனால், நம் மனித இனம் அழிந்துபோகும் அபாயத்தில் இல்லை, அதனால் நீங்கள் அதிகமாக பரவசப்பட்டு விடாதீர்கள்.

நாம் இதனை நிகழச் செய்வோம்,

அன்பும் அருளும்