இந்த வாரம், உண்மையிலேயே, வார்த்தைகளால் விவரிக்க இயலாத வகையில், நம்ப முடியாததாக அமைந்துள்ளது. நாங்கள் பயணித்த பிரதேசங்களின் நிலப்பரப்புகளையும், அவற்றின் அமைப்புகளையும், வடிவங்களையும், நிறங்களையும் என்னால் வர்ணித்துக் கூற இயலவில்லை - இவை அத்தனையையும் ஒருவரால் உள்வாங்கிக் கொள்ளவாவது முடியுமா என்னும் அளவுக்கு இவை இருக்கின்றன.

கடந்த இரண்டு நாட்களாக, பாகிஸ்தான் எல்லைக் கோட்டுக்கு மிக அருகே, சிந்து நதியின் உப நதிக் கரையில், பாதுகாப்பாகத் தங்கக்கூடிய வாய்ப்பு எங்களுக்குக் கிடைத்தது. சிந்து சமவெளி நாகரீகத்தின் மேல்பகுதியில் அமைந்திருக்கும் ஜீகீ நகரிலிருந்து சில கிலோமீட்டர்கள் தொலைவில் இந்த இடம் இருக்கிறது. "ஹிந்து" என்கிற வார்த்தை "சிந்து என்ற வார்த்தையின் திரிபுதான் - அது, இந்த நிலத்தில் வாழ்ந்த மக்களைத்தான் குறிக்கிறது. காலம் காலமாக "ஹிந்துஸ்தான்" என்று குறிப்பிடப்பட்டு வந்த இந்த நிலப்பரப்பு, தற்போது, ஆங்கிலேயர் உச்சரிப்பின்படி, 'இந்தியா' ஆகிவிட்டது.

சிவனின் பாதம்பட்ட இந்த நிலப்பரப்பு இன்னமும் அவரின் அதிர்வுகளைத் தாங்கி நிற்க்கின்றன. மணிக்கொரு முறை நிறம் மாறும் மலைகள் சூழ்ந்த நதிக்கரையில் கூடாரங்கள் அமைத்து தங்கியிருக்கிறோம். இந்த இடத்தின் அழகு ஒருபுறம் இருந்தாலும், இங்கிருக்கும் அபார சக்திநிலை மனித எல்லைகளைத் தகர்க்கக்கூடியதாக இருக்கிறது. அமைதியிலும், சாதனாவிலும் ஒரு நாள் இருந்தது எனக்குள் ஒரு புதிய எழுச்சியை, புத்துணர்ச்சியை உண்டாக்கியது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஜீகீ நகரிலிருந்து காலை 9 மணிக்குக் கிளம்பி, சாலைகளே அற்ற மிகக் கடுமையான மலைப் பாதையில் பயணித்து இப்போது மாலை 7 மணிக்கு மானசரோவர் வந்தடைந்துள்ளேன். நதிகளிலும், பாலைவனங்கள் வழியாகவும் டொயோட்டாவில் பயணித்தது உற்சாகமூட்டும் அனுபவமாக இருந்தது. மற்ற வாகனங்கள் எதுவும், இரவு 8.30 மணி ஆகியும், இன்னமும் வந்து சேரவில்லை. நான் இதை மானசரோவரிலிருந்துதான் எழுதிக் கொண்டிருக்கிறேன். சாகாவிலிருந்து சுருக்கமான பாதை வழியாக இங்கு ஏற்கனவே வந்து சேர்ந்துவிட்ட இன்னொரு குழுவுடன் 9 மணிக்கு சத்சங்கம் இருக்கிறது. இவர்கள் அனைவரும் சீரான நெடுஞ்சாலையில் பேருந்தில் பயணித்து இங்கு வந்து விட்டார்கள்.

கிட்டத்தட்ட 500 கிமீ கடுமையான மலைப்பரப்பில் பயணித்து வந்திருந்தாலும், இப்போதும் நான் அதிகாலையில் இருப்பது போல் புத்துணர்வாக உணர்கிறேன். ஆழம் காண இயலா அவனின் (சிவனின்) துணையால், எனக்கு சோர்வே தெரியவில்லை.

நாளை நாங்கள் கைலாஷுக்கு மலைப் பயணமாக செல்கிறோம். தொடர்ந்து 7வது வருடமாக வந்து கொண்டிருந்தாலும், நான் மிகவும் ஆர்வத்துடனும், துடிப்புடனும் இருக்கிறேன். கைலாஷின் சக்தியையும், ஆனந்த பரவசத்தையும் அனைவரும் அறிந்து கொள்வதாக...

Love & Grace

 

* Photo of Lake Manasarovar