லிங்கபைரவி - உங்களை மூழ்கடிக்கும் தெய்வீக சக்தி
நான் லிங்கபைரவியை தரிசித்தேன், என் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, இது எதனால்? என ஒரு சாதகர் கேட்ட கேள்விக்கு, பதிலளிக்கிறார் சத்குரு. ஆம் இந்த வார சத்குரு ஸ்பாட், தேவியின் உக்கிர ரூபமாய் வடிவம் பெற்றிருக்கிறது. படித்து மகிழுங்கள்!
 
 
 
 

லிங்கபைரவி - உங்களை மூழ்கடிக்கும் தெய்வீக சக்தி

நான் லிங்கபைரவியை தரிசித்தேன், என் கண்களில் தாரைத் தாரையாக கண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது, இது எதனால்? என ஒரு சாதகர் கேட்ட கேள்விக்கு, பதிலளிக்கிறார் சத்குரு. ஆம் இந்த வார சத்குரு ஸ்பாட், தேவியின் உக்கிர ரூபமாய் வடிவம் பெற்றிருக்கிறது. படித்து மகிழுங்கள்!


Question:அன்பிற்குரிய சத்குரு, முதல்முறையாக நான் ஆசிரமத்திற்கு இப்போதுதான் வந்திருக்கிறேன். லிங்கபைரவிக்கு சென்றேன். நான் உள்ளே சென்று என் கண்களை மூடியவுடன் கண்களில் நீர் தாரைத் தாரையாக வழிந்து கொண்டே இருந்தது. நான் அழவில்லை. எனக்கு என்ன நிகழ்ந்தது என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

சத்குரு:

நீர்க் கசிவு! உங்கள் கண்களிலிருந்து நீர் கசிந்ததில் எனக்கு மகிழ்ச்சி. நான் ஜோக் அடிக்கவில்லை, நீங்கள் ஏதோ ஒர் அனுபவத்தால் மூழ்கடிக்கப்படும் போது நீர் வரும். அது இனிமையான அனுபவமாக இருந்தால் கண்களில் நீர்க் கசியும். அதுவே இனிமையற்ற சம்பவமாக இருந்தால் வேறெங்கிருந்தாவது கசியும்!

கண்ணீரை வலியுடனும் வேதனையுடனுமே இணைத்துப் பார்க்கிறது சமூகம். கண்ணீரைத் துடைப்பது பெரும் விஷயமாக கருதப்படுகிறது. கண்ணீருக்கும் வலிக்கும் வேதனைக்கும் சம்பந்தமே இல்லை. கண்ணீருக்கும் தீவிரமான அனுபவத்திற்கும் சம்பந்தம் இருக்கிறது. உங்கள் வேதனை தீவிரமாக இருந்தால் கண்ணீர் வரும். உங்கள் கோபம் தீவிரமாக இருந்தால் கண்ணீர் வரும். உங்கள் சந்தோஷம் தீவிரமாக இருந்தால் கண்ணீர் வரும். உங்கள் அன்பு தீவிரமாக இருந்தால் கண்ணீர் வரும். நீங்கள் தீவிரத்தை தொட்டாலே கண்ணீர் வரும். அதற்கு நீங்கள் குறிப்பாக எந்தப் பெயர் வைத்தும் அழைக்கத் தேவையில்லை. வேதனையோ சந்தோஷமோ உங்களுக்கு கண்ணீரை வரவழைக்கவில்லை, அனுபவத்தின் தீவிரமே கண்ணீரை வரவழைக்கிறது.

பைரவி - நீங்கள் அவளை அழகற்றவள் என நினைக்கலாம், ஆனால் அவள் உக்கிரமானவள். உக்கிரம் என்றால் மகா உக்கிரம். நீங்கள், அவள் அருகாமையில், கேள்விகளற்று, முடிவுகளற்று சில நாட்களை செலவழித்தால், தன் உக்கிர அலையால் உங்களை அணுகுவாள். கண்ணில் ஒரு சொட்டுக் கண்ணீர் வந்தால் பத்து கேள்விகள் நம் மனதில் உதிக்கத் தொடங்கிவிடும், நம்மிடம் இருக்கும் பிரச்சனையே இதுதான். எந்தக் கேள்வியும் எழுப்பாமல், முடிவுகள் செய்து கொள்ளாமல் அவளுடன் அமர்ந்தால்... "ஓ! தேவி என்னுடன் இருக்கிறாள், ஓ! எனக்கு இது நடக்கப் போகிறது, தேவி எனக்கு இதைச் செய்வாள், அதைச் செய்வாள்" என அமராமல், அங்கு வெறுமனே அமர்ந்தால், தீவிரத்துடன் தேவி உங்களிடம் வருவதை நீங்கள் உணரலாம். அவள் உங்களை சோதித்து பார்க்கிறாள். நீங்கள் எவ்வளவிற்கு தயாராக இருக்கிறீர்கள் என பரிசோதித்து பார்க்கிறாள். நானும் மக்கள் எத்தனை தயார் நிலையில் உள்ளனர் என பரிசோதித்து பார்ப்பதுண்டு. பலரும் பல விஷயங்களுக்கு தயாராய் இருப்பதில்லை.

பலருக்கும் நொருக்குத் தீனி உண்பதுபோல் அனுபவத்தை தீண்டிச் செல்லத்தான் முடிகிறது. அவர்களுக்கு முழு விருந்து பிடிப்பதில்லை. இங்கே கொஞ்சம், அங்கே கொஞ்சம் என்று கொறித்துவிட்டு, கடைசியில் தங்களுக்கு மேன்மையான அனுபவங்கள் ஏற்பட்டிருப்பதாக நினைத்துக் கொள்கிறார்கள். உங்கள் வாழ்வனுபவங்கள் மேம்பட வேண்டுமென்றால், ஏதோவொரு அனுபவம் உங்களை திணரடிக்க நீங்கள் அனுமதிக்க வேண்டும், நீங்கள் இல்லாமல் போக வேண்டும். நான் என்ற உணர்வில்லாமல் நீங்கள் அமரும் அந்தத் தருணத்தில் மட்டுமே, இங்கு அனைத்தும் இருக்கிறது. உங்களை நீங்கள் மேம்படுத்திக் கொண்டால், சமூகத்தின் பார்வையில் நீங்கள் சற்றே மதிக்கப்படலாம்; மற்றொருவரை விட நீங்கள் சற்றே சாமர்த்தியமானவராய் பார்க்கப்படலாம்; பிறரால் செய்ய இயலாத வேறு சில தந்திரங்களை நீங்கள் செய்யலாம், ஆனால் அவை எதுவுமே உண்மையான சமாச்சாரம் அல்ல.

இவையெல்லாம் சக்தி வாய்ந்த ரூபங்கள். தியானலிங்கம் சற்றே சூட்சுமமானது. தியானலிங்கம், நீங்கள் உணராமலேயே தன் சக்தியால் உங்களை ஆரத் தழுவிக் கொள்ளும். நீங்கள் அவளை உணர்வதற்காக, உங்கள் முகத்தில் ஓங்கி அரைவாள் தேவி. இதனால் கண்களில் நீர் வழிகிறது. உங்களால் தியானலிங்கத்தை உணர முடியாமல் போனதால், உங்களை அந்த மூலைக்கு அனுப்பினோம் (லிங்கபைரவி இருக்கும் தென்கோடி மூலையைக் குறித்துச் சொல்கிறார்). அவள் வியக்கத்தக்க சக்தி ரூபம் கொண்டவள். அவளை நாம் மூன்று வருடங்களுக்கு முன்னரே பிரதிஷ்டை செய்திருந்தாலும், தான் செயல்படும் விதத்தால் என்னை அவள் பிரம்மிக்கச் செய்கிறாள். ஆ! அற்புதத்திலும் அற்புதம் அவள்!

நீங்கள் ஒன்றை உருவாக்கும்போது அந்தப் பொருளில் உள்ள சங்கதி அனைத்தும் உங்களுக்கு தெரிந்திருக்கும். நீங்கள் ஒரு விமானத்தை உருவாக்கினால் அதன் தொழில்நுட்பம் உங்களுக்கு தெரியும். அது எப்படி பறக்கிறது, அது எதனால் பறக்கிறது அனைத்துமே உங்களுக்கு தெரிந்திருக்கும். ஆனால் அது பறக்கும்போது அந்தச் செயல் உங்களை நெகிழ்வுறச் செய்யும். அதன் அத்தனை அம்சமும் உங்களுக்கு தெரிந்திருந்தாலும், அது பறக்கும்போது உங்களை அது திகைப்புறச் செய்கிறது. தேவியும் அதுபோலத்தான். தேவி எப்படிப்பட்டவள், அவள் எவ்வாறு வேலை செய்வாள் என அனைத்தும் நமக்கு தெரிந்திருந்தாலும், அவள் செயல்படும் விதத்தினால் நம்மை நெகிழ்வுறச் செய்கிறாள். அருமை. அருமையிலும் அருமை.

அதனால் அங்குபோய் சும்மா அமருங்கள், அவள் உங்களை அழிக்கட்டும். அதுவே வழி. உங்களை காப்பாற்றிக் கொள்ளும் இடமல்ல அது. நீங்கள் என்னவாக இருக்கிறீர்களோ அது அழிக்கப்பட வேண்டும். நீங்கள் வெளியே செல்லும்போது தெய்வீக சக்தியை ஏந்திச் செல்ல வேண்டும். இந்தச் சக்தி எந்தவொரு காரியத்திற்காகவும் அல்ல. இதுவே வாழ்க்கை வாழக்கூடிய வழி. என்னைக் கேட்டால் வாழ்வதற்கான ஒரே வழியும் இதுதான் என்பேன். இல்லாது போனால், நீங்கள் இங்கு ஓர் அற்ப உயிராக வாழ்வீர்கள். உடல் கொண்ட உயிராக மட்டுமே வாழ்ந்தால் நாம் இவ்வுலகில் சிறிய உயிர்தான். நம்மைவிட மேலான, இயற்கையிலேயே எல்லையில்லாததான ஒரு சக்தியினால் நாம் மூழ்கடிக்கப்படும்போது மட்டுமே நம்முடைய ஒவ்வொரு மூச்சும், ஒவ்வொரு படியும் பயனுள்ளதாக இருக்கும்.

Love & Grace

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1