குழந்தைகளுக்கும் ராணுவ வீரர்களுக்கும் உதவுவோம்

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்த வருட உலக யோகா தினத்திற்கு நாம் ஏன் குழந்தைகள் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் கவனம் செலுத்துகிறோம் என்று சத்குரு விளக்குகிறார். "யோகா எனும் இந்த பிரம்மாண்ட சாத்தியத்தால் தேசம் பலன்பெற வேண்டும்" என்று சத்குரு சொல்கிறார்.
 
 
 
 

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், இந்த வருட உலக யோகா தினத்திற்கு நாம் ஏன் குழந்தைகள் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் கவனம் செலுத்துகிறோம் என்று சத்குரு விளக்குகிறார். "யோகா எனும் இந்த பிரம்மாண்ட சாத்தியத்தால் தேசம் பலன்பெற வேண்டும்" என்று சத்குரு சொல்கிறார்.

இவ்வருட யோகா தினத்திற்கு, நமது கவனம் தேசத்தின் குழந்தைகள் மீதும் ராணுவ வீரர்கள் மீதும் இருக்கப்போகிறது. கடந்த ஆண்டில் எத்தனை ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பது குறித்த புள்ளி விவரம் என்னிடமில்லை, ஆனால் 2015ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 10,000 குழந்தைகள் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டார்கள். அதில் 1500 குழந்தைகள் 14 வயதுக்குக் குறைவானவர்கள். நம் குழந்தைகள் தற்கொலை செய்கிறார்கள் என்றால், ஒரு சமுதாயமாக நாம் அடிப்படையாகவே ஏதோ தவறு செய்கிறோம் என்று அர்த்தம். குறிப்பாக ஏழ்மையில் இருந்து பொருள்வளத்திற்கு முன்னேற முற்படும் மக்கள் வசிக்கும் இந்தியாவைப் போன்ற தேசங்களில் இந்நிலை அதிகமாக நிலவுகிறது. குழந்தைகள் தற்கொலை செய்வதற்கு ஒரு முக்கிய காரணம், பரிட்சைகளில் தோல்வியைத் தழுவுவது. இன்னொரு காரணம், இளவட்டங்கள் காதல்வயப்படுவது.

சென்ற வருடம், தேசம் முழுவதிலுமுள்ள 35,000க்கும் மேற்பட்ட பள்ளிகளிலுள்ள குழந்தைகளுக்கு எளிமையான யோகப்பயிற்சி கற்றுக்கொடுத்தோம். இந்தியாவைப் போன்ற ஒரு பெரிய தேசத்தில் 35,000 பள்ளிகள் என்பது சிறு துளிதான். நாம் கற்றுக்கொடுப்பது உப-யோகா. இதனை சுலபமாக கற்றுக்கொடுக்கலாம், சுலபமாக பயிற்சியும் செய்யலாம். குழந்தைகளை இப்படி அதிக எண்ணிக்கையில் சென்றடைய, இந்த செயல்முறை எளிமையாக இருக்கவேண்டும். உப-யோகாவுடைய ஒரு நோக்கம், உள்நிலையில் சமநிலையான ஒரு ரசாயனம் உருவாக்குவது. அடிப்படையில் தற்கொலைகள் நிகழ்வது, ஒருவருக்குள் அலைபோல் கொந்தளிக்கும் உணர்ச்சிப்பெருக்கு, இறப்பதே மேல் என்ற உணர்வை அவருக்கு ஏற்படுத்துவதால்தான். பலருடைய வாழ்வில் உண்மையிலேயே சில விஷயங்கள் தவறாகிப்போன தருணங்களுண்டு. அப்போது அவர்கள் உணர்வளவில் துவண்டுபோய், தங்களைத் தாங்களே மாய்த்துக்கொள்ள வேண்டும் என்று எண்ணியதுண்டு. ஆனால் அது கடந்துபோனது. அதை அவர்கள் செயல்படுத்தவில்லை.

துரதிர்ஷ்டவசமாக சிலர் அந்த உணர்ச்சிப் பெருக்கை எதிர்கொள்ள இயலாமல் தங்கள் எண்ணத்தை நிஜமாகவே செயல்படுத்தினார்கள்.

இந்தியாவில் உண்மையாகவே எத்தனை தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன என்பது எவருக்கும் தெரியாது, ஏனென்றால் எவரும் தான் தற்கொலை முயற்சி செய்ததை ஒப்புக்கொள்ள மாட்டார்கள். சமீப காலம் வரை, தற்கொலை முயற்சி செய்வது தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது, அதற்கு நீங்கள் ஒரு வருடம் சிறைக்குச் செல்ல நேரிடும். அது திறமையின்மைக்கு கொடுக்கும் தண்டனை, தங்கள் முயற்சியில் வெற்றி கண்டவர்களை அவர்களால் தண்டிக்க முடியாது. யாரோ ஒருவர் தற்கொலை முயற்சி செய்தால் அவர்களுக்கு கருணையும், கரிசனமும், அக்கறையும் தேவை, தண்டனையல்ல. குதூகலம் ததும்ப குதித்துத் திரியவேண்டிய சின்னஞ்சிறு குழந்தைகள் தங்களை மாய்த்துக்கொள்ள நினைக்கிறார்கள் என்பதுதான் நம் அவலநிலை.

இதற்கு நாம் செய்யவேண்டிய அதிமுக்கியமான செயல், நம் கல்விமுறையை சீர்திருத்தி புனரமைக்க வேண்டும். இது ஒரு நாளில் செய்யக்கூடிய விஷயமல்ல, இதற்கு அர்ப்பணிப்பான மக்கள் வேண்டும். புதிய ஒரு கல்விமுறையை அறிமுகப்படுத்துவது மட்டுமே தேவையான பலனைத் தராது. தாங்கள் செய்யும் செயலை விரும்பிச்செய்யும் மனிதர்கள் இதை நடத்தவேண்டும். கல்வி புகட்டுவதும் குழந்தைகளை கவனிப்பதும் ஒரு வேலையாக மட்டும் செய்யப்படக்கூடாது. ஆசிரியர்கள், மருத்துவர்கள், குருமார்கள், ஆன்மீக செயல்முறையை பரிமாறுபவர்கள், ஆகியோர் தாங்கள் செய்யும் செயல்களை அர்ப்பணிப்புணர்வாலும், தங்களைச் சுற்றியுள்ள மனிதர்கள் மீதுள்ள அன்பாலும் செய்யவேண்டும். இந்நிலைக்கு லட்சக்கணக்கான ஆசிரியர்களைக் கொண்டுவருவது வெகுதூரத்தில் இருக்கும் விஷயம். இப்போது நாம் செய்யவேண்டியது, இருக்கும் ஆசிரியர்களையும் கல்விமுறையையும் தாக்குப்பிடிக்கும் விதமாக குழந்தைகளை சக்தி படைத்தவர்களாக்குவதே. நம் கல்விமுறை என்று அழைக்கப்படும் பைத்தியக்காரத்தனத்தை கையாளுவதற்கு குழந்தைகளுக்கு போதுமான சமநிலை இருக்கவேண்டும்.

மிகவும் கடினமாக இருப்பதால் நம் கல்விமுறை மனிதாபிமானமற்றதாய் இருக்கிறது என்று கிடையாது, அது நடத்தப்படும் விதத்தால் அப்படி இருக்கிறது. நம் கல்விமுறை மிகவும் சுலபமானதாக இருக்கிறது என்றே நான் சொல்வேன். குழந்தைகள் தங்கள் எல்லைகளைத் தாண்டி செயல்பட கற்றுக்கொள்ள வேண்டும். இதனை செய்யும் விதமும், இதனை செய்பவர்களும்தான் அதிமுக்கியமான அம்சங்கள். ஒருவர் ஆனந்தமாக இருக்கும்போது, அவர்களுக்கு எவ்வளவு கடினமான செயலைக் கொடுத்தாலும் அவர்கள் நலமாகவே இருப்பார்கள். அவர்களை ஆனந்தமாக வைத்துக்கொள்வது எப்படி என்பதறியாமல் அவர்களின் எல்லை தாண்டி அவர்களை செயல்பட வைக்க முயற்சிக்கும் போதுதான் அவர்கள் உடைந்துபோவார்கள். குழந்தைகள் இதைக் கையாளுவதற்கு, எளிமையாக பயிற்றுவித்து எளிமையாக பயிற்சிசெய்யக்கூடிய ஒரு எளிமையான யோகப்பயிற்சியை அவர்களுக்கு வழங்கவேண்டும். குறிப்புகளிலிருந்து அவர்கள் பத்து முதல் இருபது சதவிகிதம் பிறண்டாலும் துளியும் பாதிப்பு இல்லாத விதமாக அது இருக்கும். சில இடங்களில், தேவையான புரிதலின்றி எல்லாவிதமான ஆசனங்களையும் குழந்தைகளுக்கு கற்றுக்கொடுக்கிறார்கள். அவர்களுடைய எலும்பு கட்டமைப்பு இன்னும் வளர்ந்துகொண்டு இருக்கும்போது, சிலவிதமான ஆசனங்களைச் செய்தால், அவர்களுடைய எலும்புகள் உருக்குலைந்து வளர்ந்துவிடும். பதினான்கு வயதுவரை குழந்தைகள் சில யோகப்பயிற்சிகளைச் செய்யக்கூடாது, ஏனென்றால் சில பயிற்சிகள் வயதில் பெரியவர்களுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளன. இன்னும் சிலவிதமான யோகப்பயிற்சிகளை, பெண்குழந்தைகள், அவர்களின் உடலின் கட்டமைப்பு காரணமாக செய்யக்கூடாது.

உப-யோகா என்பது குழந்தைகளின் உடல் மற்றும் மனதின் மேம்பாட்டிற்காக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒரு யோகமுறை. எல்லாவற்றுக்கும் மேலாக, இது உணர்வளவில் சமநிலை கொண்டுவருவதற்கானது. இது தற்கொலையை தவிர்ப்பதற்காக மட்டுமல்ல. இதன்மூலம் குழந்தைகள் தங்கள் புத்திக்கூர்மை, திறமை மற்றும் மேதமையை பல்வேறு விதங்களில் அராய்ந்தறிவர். பெரும்பாலான மனிதர்கள், உணர்வளவில் சமநிலை இல்லாததால் தங்கள் புத்திசாலித்தனம், திறமை, மற்றும் ஆற்றலை முழுவதுமாக பயன்படுத்துவதே கிடையாது. அவர்கள் எப்போதுமே துயரம், வேதனை, ஏமாற்றம், அல்லது மனச்சோர்வு தங்களை ஆட்கொள்ளும் என அஞ்சியிருக்கின்றனர்.

சாதாரண செயலான சைக்கிள் ஓட்டுவதில்கூட, சமநிலை இல்லாவிட்டால் போராடுவீர்கள். இது வாழ்க்கையில் நீங்கள் செய்யும் எல்லாவற்றுக்கும் பொருந்தும். தேவையான சமநிலை இருந்தால் உங்களால் ஒரே சமயத்தில் பல விஷயங்களைச் செய்யமுடியும். இதுதான் இளம் வயதிலேயே நாம் கொண்டுவரவேண்டிய அடிப்படையான தன்மை, அதாவது மனதளவிலும் உணர்வளவிலும் சமநிலை கொண்டுவர வேண்டும். சமநிலை இல்லாவிட்டால், பாதிப்பு பற்றிய பயத்தால் அதீத ஆற்றல் இருந்தாலும் அதை உணரமுடியாமல் போகும். உணர்வளவில் சமநிலை இல்லாத ஒரே காரணத்தால் மனிதகுலத்தின் எண்பத்தைந்து சதவிகிதத்தினர் தங்கள் ஆற்றலின் முழு ஆழத்தையும், பரிமாணத்தையும் உணர்வதில்லை.

உணர்வளவில் சமநிலையாக இருப்பது ராணுவ வீரர்களுக்கும் அதே அளவு முக்கியமானது. நம் தேசத்தைக் காப்பாற்றும் முயற்சியில் நிறைய வலி ஏற்படுகிறது. ஒவ்வொரு நாளும் நீங்கள் உயிரைவிட நேரிடலாம். நாம் எல்லோரும் ஒருநாள் இறக்கப்போவது உண்மைதான். "ராணுவ வீரராக இருப்பதில் என்ன பெரிய பிரமாதம், அதைவிட அதிக மக்கள் நம் தெருக்களில் இறக்கிறார்கள்" என்று சிலர் சொல்வதுண்டு. ஆனால் மிகப்பெரிய வித்தியாசம் என்னவென்றால், சாலை விபத்துகளில் உயிரிழப்போர் இன்று எவரோ தங்களைக் கொல்லப்போகிறார்கள் என்பதை அறிந்துகொண்டு உயிர்விடுவதில்லை. யாரோ ஒருவர் உங்களைக் கொல்லப்போகிறார் என்பதை அறிந்தபோதும் நீங்கள் அங்கு சென்று செய்யவேண்டியதை தினமும் செய்வது என்பது முற்றிலும் மாறுபட்டதொரு பணி. அதனால்தான் நம் தேசத்தின் வீரர்களுக்கு, தங்கள் நல்வாழ்வை உறுதிப்படுத்தி தங்களுக்குள் சமநிலை கொண்டுவரக்கூடிய எளிமையான யோகக் கருவிகளை வழங்கி வல்லமைபடைத்தவராக்க விரும்புகிறோம்.

நம் குழந்தைகள், நம் ராணுவ வீரர்கள், நம் அதிகாரிகள், அரசியல் தலைவர்கள் மற்றும் பிற தலைவர்கள் அனைவரும் இந்த அற்புதமான யோகக் கருவிகளை பயன்படுத்த வேண்டும். யோகா எனும் இந்த பிரம்மாண்ட சாத்தியத்தால் தேசம் பலன்பெற வேண்டும். இந்த சர்வதேச யோகா தினத்தன்று, உங்கள் வாழ்விலும் உங்கள் சுற்றத்திலும் யோகாவைக் கொண்டுவாருங்கள்.

அன்பும் அருளும்