சென்ற வாரத்தில், சந்திர கிரகணத்தின்போது உணவு உண்ணவேண்டாம் என்ற எனது ஆலோசனையைப் பற்றி, சிலர் மூடநம்பிக்கை என்றும், அறிவியல் அடிப்படையற்றது என்றும் விமர்சனம் செய்தனர். அவர்கள் கிரகணத்தின்போது உணவு உட்கொண்டபோதும் இறக்கவில்லை என்றனர். தாங்கள் இறக்கவில்லையே என்ற ஏமாற்றமோ என்றே வியக்கத் தோன்றியது. முதலில் மூடநம்பிக்கை என்றால் என்னவென்று நாம் புரிந்துகொள்வோம். மூடநம்பிக்கை என்றால், ஏதோவொன்று பற்றி எதையும் புரிந்துகொள்ளாமல் முடிவுகள் எடுப்பது. இதுதான் வாழ்க்கையின் தன்மை : உங்கள் கிரகிப்பும் வாழ்க்கை அனுபவமும், நீங்கள் எந்த அளவு கூர்மையான உணர்திறனுடன் இருக்கிறீர்கள் என்பதைப் பொருத்ததாக இருக்கிறது. கிரகிப்புத்திறன் என்பது காரண அறிவில் சேகரிக்கும் விஷயங்களால் வருவதில்லை. உயர்நிலைப் பள்ளிப் பாட புத்தகத்தைப் படித்தவர்கள் தங்களை விஞ்ஞானிகள் என்று நினைத்துக்கொண்டால், நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. ஒரு உண்மையான விஞ்ஞானியாக இருந்தால், வாழ்க்கையின் எந்தவொரு அம்சத்தையும் சற்றேனும் ஆழமாகப் பார்த்திருப்பவராக இருந்தால், அவர் இப்படிச் சொல்லமாட்டார்.


ஒரு யோகியாக, நான் முடிந்த அளவு, சமைத்து ஒன்றரை மணி நேரத்திற்கு மேல் ஆகிய ஆன உணவை உட்கொள்வதில்லை. ஆசிரமத்தில் நாம் ஒரு குறிப்பிட்ட விதத்தில் உணவு பரிமாறுவதன் நோக்கமே, யோகப் பயிற்சி செய்பவர்களாக இருப்பதிலிருந்து மெதுவாக யோகிகளாக மக்கள் முன்னேற வேண்டும் என்பதுதான். உடலை வளைப்பதும் முறுக்குவதும் மட்டுமில்லாமல், பிரபஞ்சத்துடனான சங்கமத்தை அவர்கள் உணரத் துவங்க வேண்டும். இது நடக்கவேண்டும் என்றால், உடல் கூர்மையான உணர்திறனுடன் இருக்கவேண்டும். அதற்கு உடலில் மந்தத்தன்மை குறைந்தபட்சமாக இருக்கவேண்டும். ஏதோவொரு விதத்தில் அழிந்திருக்கும் உணவை நீங்கள் உட்கொண்டால் - அது கெட்டுப்போகாமல் இருக்கலாம், அது உங்கள் உயிரை எடுக்கவல்லதாக இல்லாதிருக்கலாம் - ஆனால் அது உங்கள் உணர்திறனைக் குறைத்துவிடும்.


என் வாழ்க்கை அனுபவத்தில், குறைவான கிரகிப்பு மரணத்திற்கு சமம். ஒருவருள் இருக்கும் யோகி இறப்பதற்கு சமம். அந்த மனிதர் உயிர்வாழலாம் - ஆனால் தன் கிரகிப்புத்திறனையும் கூருணர்வையும் இழந்தால், அவருள் இருக்கும் யோகி இறந்திருப்பார். இந்த கூருணர்வை இழப்பது உங்களுக்கு ஒரு பொருட்டாக இல்லாவிடில், என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்; குப்பையை உண்டாலும் உயிர்வாழ்ந்துவிடலாம். பல நாட்கள், வாரங்கள், அல்லது மாதங்களுக்கு முன்பு சமைத்த உணவை மக்கள் உட்கொள்ளுகிறார்கள். புதிதாக சமைத்த உணவிற்கும், நெடுங்காலம் குளிர்சாதனப்பெட்டியில் வைத்த உணவிற்கும் இடையிலான வித்தியாசத்தை அவர்கள் உணரவில்லை என்றால், அவர்களுக்கு என்ன சொல்வது. அவர்கள் தினமும் எட்டு முதல் பத்து மணி நேரம் தூங்கக்கூடும் - அது என்னைப் பொருத்தமட்டில் மரணத்திற்கு சமம். இருபத்திநான்கு மணி நேரத்தில் பத்து மணி நேரம் தூங்கினால், அது நாற்பது சதவிகிதத்திற்கு மேல் இறந்திருப்பதற்கு சமம். நீங்கள் அப்படி வாழ விரும்புகிறீர்கள் என்றால், என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

நான் ஒரு விஞ்ஞானியும் இல்லை, விஞ்ஞானியாக இருக்க விரும்பவுமில்லை. நான் அறிவியல் புத்தகங்கள் படிக்கவில்லை, எதையும் ஆராய்ச்சி செய்யவில்லை, என் வீட்டுக் கொல்லையில் எந்தவொரு ஆய்வுக்கூடமும் இல்லை. 'நான்' எனும் இந்த மனித இயந்திரத்தின் செயல்பாட்டை நான் கவனித்துப் பார்க்கிறேன். அதை ஒரு குறிப்பிட்ட விதத்தில் வைத்துக்கொள்கிறேன், அப்படி வைத்துக்கொள்ள நிறையவே செய்யத் தேவையாக இருக்கிறது. இயற்கையில் நடப்பது எதுவாயினும், அதற்கேற்ப எனக்குள் நடப்பதை நான் கவனிக்கிறேன், அதைத்தான் நான் பேசவும் செய்கிறேன். அதை உறுதிப்படுத்த என்னைச் சுற்றியுள்ள உயிர்களையும் நான் கவனிக்கிறேன். ஒவ்வொரு பூச்சியும், புழுவும், பறவையும், விலங்கும், மரமும், அதையேதான் சொல்கிறது. இதை நீங்கள் சிலகோடி டாலர் பணம் செலவழித்துச் செய்யும் பலவருட ஆராய்ச்சிக்குப் பின்னரே கண்டறியப்போகிறீர்கள் என்றால், அது உங்கள் விருப்பம்.


விஞ்ஞானிகள் என்று அழைக்கபடுபவர்கள் சிலர், உண்மையான அறிவியலுடன் எவ்விதத்திலும் தொடர்புடையவர்கள் அல்ல. எதையும் சற்று ஆழமாகப் பார்த்துள்ள விஞ்ஞானி எவரும் இப்படிப் பேசமாட்டார். பிரச்சனை என்னவென்றால், இணையத்தில் உலவுவதால், எல்லா அறிவியலும் தங்களுக்குத் தெரியும் என்று நினைத்துக்கொள்ளும் "இன்டர்நெட் விஞ்ஞானிகள்" சிலர் இருக்கிறார்கள். மதுவும், புகையும், சிவப்பு இறைச்சியும் உங்கள் ஆரோக்கியத்திற்குக் கேடு விளைவிப்பவை என்ற சாதாரண விஷயத்தையே இவ்வளவு வருடங்களாக பலகோடி டாலர் செலவழித்துச் செய்த ஆராய்ச்சிக்குப் பிறகுதான் புரிந்துகொண்டுள்ளார்கள். அவர்களுக்கு சமீபகால கண்டுபிடிப்பாக இருப்பது, காலங்காலமாக நமக்கு அனுபவ அறிவாக இருந்துவந்துள்ளது.
உதாரணத்திற்கு, இந்திய பூர்வீகம் கொண்ட ஒரு அமெரிக்க மருத்துவருடன் நான் பேசிக்கொண்டு இருந்தேன். அவர் அறிவியல் துறையில், இதயத்திலுள்ள ஏட்ரியம் எனும் பகுதி, சுத்திகரிக்க வேண்டிய இரத்தத்தை உறிஞ்சுகிறது என்பதைக் கண்டுபிடித்தவராக அங்கீகரிக்கப்பட்டுள்ளார். அவர் தொகுத்திருக்கும் வீடியோ மற்றும் ஆராய்ச்சி ஆவணங்களைக் கண்டபோது, சில வருடங்களுக்கு முன்புவரை மருத்துவ அறிவியலுக்கு இது தெரியாதிருந்ததா என்று என்னால் நம்பமுடியவில்லை. யோக அறிவியல் எப்போதும் இந்தவொரு அம்சத்திற்கு கவனம் கொடுத்துள்ளது. யோகமுறையில், இரத்தத்தை எந்த அளவு தூய்மையாக வைத்துக்கொள்ள முடியும் என்பதில்தான் நமக்கு ஆர்வம். இரத்தத்தில் அசுத்தங்கள் அதிகமானால், உங்கள் கூருணர்வுத்திறனை நீங்கள் இழக்கிறீர்கள். உங்கள் உணர்திறன்தான் உங்கள் வாழ்க்கைத்தரத்தை நிர்ணயிக்கிறது. உங்கள் உணர்திறன் எவ்வளவு ஆழமாக இருக்கிறது என்பது இந்தக் கலாச்சாரத்தில் எப்போதும் முக்கியமாக இருந்து வந்துள்ளது.


ஏதோவொன்று புத்தகத்தில் எழுதப்பட்டால் மட்டும்தான் அது உண்மை என்று நீங்கள் நினைத்தால், நீங்கள் மூடநம்பிக்கையும் மதநம்பிக்கையும் கொண்டவர் என்று அர்த்தமாகிறது. அதில் அறிவியல்பூர்வமானது எதுவும் இல்லை. ஒரு சந்திர கிரகணம் ஏற்படுகிறது என்றால், சந்திரன் தனது இருபத்தெட்டு நாள் பயணத்தை சிலமணி நேரங்களில் முடிக்கிறது என்பது அர்த்தமில்லை என்று எல்லோருக்கும் தெரியும் - சந்திரனை பூமியின் நிழல் மறைக்க மட்டுமே செய்கிறது. இதற்கு உதாரணம் சொன்னால், நமக்கு இரவாக இருக்கும்போதும் சூரியன் இருக்கத்தான் செய்கிறது, ஆனால் சூரியனிடமிருந்து மறைந்திருக்கும் பூமியின் பகுதியில் நான் இருக்கிறோம். உங்கள் அனுபவத்தில், இரவு என்றால் வெளிச்சம் இல்லாத தன்மை மட்டும்தானா? இல்லை, உயிர் நடக்கும் தன்மையிலேயே பகலுக்கும் இரவுக்கும் இடையே அபாரமான வித்தியாசம் இருக்கிறதா? ஒவ்வொரு பூச்சியையும், பறவையையும், விலங்கையும், மரத்தையும், ஒரு பாறையையும்கூட நீங்கள் பார்த்தால் போதும், வித்தியாசம் கண்கூடாகத் தெரியும்.


நீங்கள் இரவுப்பொழுதில் சற்று திறந்த தன்மையுடன் வெளியே அமர்ந்தால், இரவு என்பது வெளிச்சம் இல்லாத தன்மை மட்டுமல்ல என்பதை உணர்வீர்கள். பகலுக்கும் இரவுக்கும் இடையே அவற்றின் தன்மையிலேயே வித்தியாசம் இருக்கிறது. சிலர் இதைக் கேட்டு, "இதெல்லாம் முட்டாள்தனம் - இரவில் வெளிச்சமில்லாத் தன்மை மட்டுமே இருக்கிறது." என்று சொல்ல வாய்ப்பிருக்கிறது. இப்படித்தான் கிரகணம் குறித்தும் சிலர் பேசுகிறார்கள். அவர்கள் பேசுவது ஒரு பொருட்டல்ல. கிரகணத்தின்போது சமைத்து சாப்பிடாதீர்கள் என்று நான் சொல்கிறேன். அதற்கு வெகுநேரம் முன்பாக, அல்லது கிரகணம் முடிந்தபிறகு சாப்பிடுங்கள் என்கிறேன். இது உயிரை உணர்வதால் வருவது, இது இன்டர்நெட் அறிவியலில்லை. 'சத்குரு' என்பது இதுதான் - அதாவது அவர் உள்ளிருந்து உயிரை உணர்கிறார். அவ்வளவுதான். உயிரின்மேல் ஆர்வமுள்ளவர்களுக்காகவே நான்!


நீங்கள் அறியாமையில் இல்லை என்று நீங்கள் நினைப்பதுதான் மிகப்பெரிய அறியாமை. உங்களுக்குத் தெரியாதது இருக்கவேமுடியாது என்பது அறியாமையின் உச்சம். இந்த இன்டர்நெட் விஞ்ஞானிகள் அனைவரிடமும் நான் கேட்டுக்கொள்கிறேன், "புதிதான உணவை உண்ணுங்கள், உங்களை நீங்களே ஆரோக்கியமாகவும், உயிரை உணரும் கூருணர்வுடனும் வைத்துக்கொள்ளுங்கள். கிரகணத்தின்போது உங்களுக்கு விருப்பமென்றால் உண்ணுங்கள். இறக்கமாட்டீர்கள் - ஆனால் மந்தத்தன்மை அதிகரிக்கும். அந்த மந்தத்தன்மையை நீங்கள் பொருட்படுத்தாவிடில் உண்ணுங்கள். மது அருந்தி, புகைப்பிடித்து, என்னென்னவோ எடுத்துக்கொள்பவர்களுக்கு அது எந்த வித்தியாசமும் ஏற்படுத்தாமல் இருக்கலாம். நீங்கள் அதிக செயல்திறன் கொண்ட ரேஸ்கார் ஒன்றை வைத்துக்கொண்டு, அதில் மலிவான பெட்ரோலை நிரப்பினால், உங்கள் கார் சில கிலோமீட்டர் சென்று நின்றுவிடும். அதிக செயல்திறனுக்கு உங்களுக்கு விசேஷமான பெட்ரோல் தேவை.


நீங்கள் உயர்ந்த செயல்திறனுடன் இருக்க விரும்பினால், எப்படிப்பட்ட எரிவாயு உங்களுக்குள் போகிறது என்று மிகவும் கவனமாகப் பார்க்கவேண்டும். நீங்கள் குப்பையான இயந்திரமாக இருந்தால், என்ன வேண்டுமானாலும் சாப்பிடுங்கள், என்ன வேண்டுமானாலும் அருந்துங்கள், எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்ளுங்கள். உயிரின் தன்மை எத்தகையது என்றால், பூமியும் சூரியனும் சந்திரனும் இந்த உடலமைப்புபின்மீது குறிப்பிடத்தக்க தாக்கம் ஏற்படுத்தும் விதத்தில் அது இயங்குகிறது. அவை செயல்படும் விதங்கள் குறித்த விழிப்புணர்வுடன் நீங்கள் இருந்தால், இயற்கையின் இந்த சக்திகள்மீது நீங்கள் சவாரி செய்யலாம், உங்கள் வாழ்க்கையை முயற்சியின்றி சுலபமாக நடத்திக்கொள்ளலாம். நீங்கள் விழிப்புணர்வாக இல்லாவிடில், அதே சுழற்சிகள் உங்களை நொறுக்கிவிடலாம் - அப்போது எல்லாம் போராட்டமாகிவிடும். அடுத்த கிரகணம் வரை உங்களுக்கு எனது வாழ்த்துக்கள். ஒன்றே ஒன்று, அறியாமையால் பிறந்த உங்கள் அகங்காரம், வாழ்க்கையின் உயரிய சாத்தியங்களை கிரகணம்போல மறைத்துவிட அனுமதிக்காதீர்கள்."


Love & Grace