இந்த வார ஸ்பாட்டில், சத்குரு, 'நீங்கள் கடவுளுக்கு பக்தராவதை விட வாழ்வுக்கு பக்தராகுங்கள்' என்கிறார். இன்றைய தேவை அதுதான் என்றும் சொல்கிறார். அதற்கான வழிமுறைகளையும் இங்கே நமக்குத் தருகிறார்...

"நேரம்" என்பதை ஒரு அனுபவம் என்று சொல்வது நம் அனைவருக்குமே பொருத்தமானது. ஏனென்றால் நாம் அனைவரும் ஒரு நாள் இறப்பது நிச்சயம். உடல், மனம், உணர்ச்சிகளின் அடிப்படையில் "நான் இதுதான்" என நீங்கள் முடிவுக்கு வருவது, உங்கள் நினைவுகளின் விளைவால்தான். பரிணாமம், மரபணு, விழிப்புணர்வு, ஆழ்மனம், உணர்வற்ற மனம் என நினைவின் ஒவ்வொரு அடுக்கும் காலத்தின் அடிப்படையிலேயே அளவிடப்படுகிறது. ஒரு வகையில் சூரிய குடும்பத்துக்கென தனிப்பட்ட நினைவு உள்ளது. ஒவ்வொரு ஜீவராசியிலும் இது பிரதிபலிக்கிறது. ஒவ்வொன்றையும் சூரிய குடும்பமே வடிவமைக்கிறது.

உங்கள் உடல் ரீதியான, உணர்வு ரீதியான செயல்முறையில் நீங்கள் முற்றிலுமாக அமிழ்ந்து போயிருந்தால் நீங்கள் நேரத்தின் விளைபொருளே. நேரத்தின் விளைபொருள் என்றால் மீண்டும் மீண்டும் ஒரே மாதிரியாக இருப்பதும் உங்கள் உண்மையான இயல்பு எப்போதும் வெளிப்படாமல் இருப்பதுமே. இதனால்தான் ஆதியோகி காலத்தில் இருந்து விழிப்புணர்வு பற்றி பேசி வருகிறோம். ஏனெனில் விழிப்புணர்வு என்றால் காலத்தின் சுழற்சியில் இருந்து விடுபடுவது. வெளி உலகம் குறித்த அறிவு உங்களுக்கு இருக்கலாம். ஆனால் ஒரு உயிராக உங்களைப் பற்றிய விழிப்புணர்வு இல்லாமல்தான் இருக்கிறீர்கள். உலகம், இங்கே இருக்கும் மக்கள் குறித்த அனுபவம் இருந்தாலும், சுயம் குறித்த அனுபவம் எதுவும் இல்லாமல் இருக்கிறீர்கள்.

உங்கள் மனம் மற்றும் உடலானது, இந்த உலகம் மற்றும் அதில் இருக்கும் மக்களின் உற்பத்தி பொருளே. உங்கள் உண்மையான இயல்பு உங்கள் அனுபவத்தில் இல்லை. அது மனதின் இன்னொரு புறத்தில் இருக்கிறது. மனம் என்பது ஒரு கண்ணாடி போல. பிறழ்ந்த கண்ணாடி என்றாலும் கண்ணாடிதான். நீங்கள் உலகை காண்பது உங்கள் மனதில் அதன் பிரதிபலிப்பு இருப்பதால். ஆனால் உங்கள் சுயத்தை அது பிரதிபலிப்பதில்லை. உங்களின் உடல், உள ரீதியான சுயத்தைப் பற்றி இங்கே நான் பேசவில்லை. உங்கள் எண்ணங்கள் பற்றி நீங்கள் சிந்திக்கலாம், உணர்வுகள் பற்றி சிந்திக்கலாம். ஆனால் சுயம் பற்றி சிந்திக்க முடியாது. உங்கள் இருப்பை சிந்திக்க முடியாது, அதை அனுபவிக்கவே முடியும். மனமானது உங்களை சுற்றி இருக்கும் உலகை பிரதிபலித்தாலும், உயிர் குறித்த எந்தவித அனுபவமும் இல்லை. இந்த பிரபஞ்சத்தில் உங்களுக்கு அதி முக்கியமான விஷயம் நீங்கள் இப்போது இங்கே இருப்பது தான்.

சுயம் குறித்த எந்த அனுபவமும் இல்லாமல், உயிரை ஆழமானதொரு நிலையில் தொடாமல், சுயத்தின் மூலத்தை அனுபவித்தல் என்ற கேள்விக்கே இங்கு இடமில்லை. பெரும்பான்மை மனிதர்கள் மனதின் கண்ணாடியில் தெரியும் பல வண்ணக் காட்சிகளை மட்டுமே அனுபவிக்கிறார்கள். தங்களை மகிழ்ச்சியாகவோ, துக்கமாகவோ வைத்துக் கொள்ள நினைவுகளை தோண்டிக் கொண்டே இருக்கிறார்கள். துக்கமோ, மகிழ்ச்சியோ அதன் ஊற்று மனதில் நிகழ்வதுதான்.

மனமெனும் கண்ணாடியின் நிகழ்வுகள், உங்கள் ஆயுளுக்கும் அதை தாண்டியும் கூட உங்களை இயக்கிக் கொண்டிருக்கும். அதே எண்ணங்கள், அதே உணர்வுகள் முடிவில்லாமல் தோன்றிக் கொண்டிருக்கும். உங்களுக்கு முடிவுத் தேதி உண்டு என்பதற்கு இன்றைய நாள் ஒரு நினைவூட்டு. இன்னொரு கணம், இன்னொரு நாள், இன்னொரு வருடம் நீங்கள் உயிரை அறியாது கடந்து போகக் கூடாது. உணவில், பானங்களில், அன்பில், இன்பத்தில் நீங்கள் உயிரை அறிய மாட்டீர்கள். அதற்கு ஒரே வழி கண்ணாடியின் மறுபுறம் செல்வது மட்டுமே. கண்ணாடியின் இந்தப் புறத்தில் நீங்கள் காண்பதெல்லாம் நாடகம் மட்டுமே. உயிரின் சாரம் அறிய மாட்டீர்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

இதை பல வழிகளில் அணுகலாம். எளிமையாக செய்யக் கூடிய ஒன்று ஈஷா க்ரியா. நான் உடலல்ல, நான் மனமல்ல என்று நீங்கள் சொல்லும் பொழுது, நான் நினைவுகளின் உற்பத்திப் பொருள் அல்ல, நான் வெறும் குவியலும் அல்ல, அதற்கும் மேலே என்று அர்த்தம். மனக்கண்ணாடியின் இன்னொரு புறத்தில் இருக்கும் அடிப்படை மூலத்தில் இருந்தே உங்கள் உயிரோட்டம் நிகழ்கிறது.

நீங்கள் ஒரு தொடர்ச்சியான முயற்சி மேற்கொள்ள வேண்டுமென விரும்புகிறேன். இந்த கணம் நீங்கள் எங்கிருந்தாலும், கண் மூடி நீங்கள் இங்கே இருக்கிறீர்களா என்று பாருங்கள். எண்ணங்களும், உணர்வுகளும் இங்கே இருக்கிறது, உடலும் இங்கே இருக்கிறது. ஆனால் நீங்கள் உண்மையில் இங்கே இருக்கிறீர்களா? இதை உணர சில எளிய முறைகளை உபயோகிக்கலாம். நெடுங்காலமாக, ஆன்மிகத்தில் இருப்பவர்கள் சில காலம் உணவைத் துறப்பது தங்களைத் துன்புறுத்திக் கொள்வதற்கு அல்ல. நீங்கள் மிகவும் பசித்திருக்கும் பொழுது, வெறுமனே உட்கார்ந்து இருந்தால் உங்களுக்கும், உங்கள் உடலுக்கும் ஒரு தெளிவான இடைவெளி இருப்பதை பார்க்க முடியும். பிறகு முதல் கவளத்தை வாயில் இடும் பொழுது உடலெங்கும் ஒரு பரவசம் பரவுவதை உணர முடியும். அல்லது மிகவும் தாகமாக இருக்கும் பொழுது ஒரு டம்ளர் நீர் அருந்தினால் முழு இருப்பும் பரவசம் உணரும்.

அந்த பரவசத்தில் இருந்திடுங்கள். வயிறு நிறைவது பற்றியோ, தாகம் தணிவது பற்றியோ அல்ல இது. உள்ளே விளைந்த அனுபவத்தின் பரவசம் பற்றியது. மனம் அந்த அனுபவத்தை தேர்வு மட்டுமே செய்கிறது, மனதால் அந்த அனுபவத்தை ஏற்படுத்த முடியாது. உள்ளே இருக்கும் ஏதோ ஒன்று - நீங்கள் சுயம் என்று சொல்வதோ, உள்ளிருக்கும் உயிர் என்று சொல்வதோ - தான் அந்த அனுபவத்தை ஏற்படுத்துகிறது.

இதில் உணர்ச்சி, அனுபவம் என இரண்டு அம்சங்கள் இருக்கிறது. புலன் இன்பம் என்பது உண்மையான ஒன்றல்ல. ஏனெனில் புலன்கள் அந்த அனுபவத்தை உருவாக்குவதில்லை. ஒரு டம்ளர் தண்ணீர் குடிக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். தாகம் தணிந்து, உடலெங்கும் ஒரு குளுமை பரவும். ஆனால் இது அதை பற்றி அல்ல. அந்த உணர்வை அனுபவிக்கலாம். ஆனால் இங்கு முக்கியமானது ஆழமான நிலையில் ஏற்படும் இனிமைதான்.

உங்களுக்குள் இனிமை ஏற்படுத்தும் ஒன்றை தேர்வு செய்யுங்கள். தென்றலோ, உணவோ, சுவாசமோ, தண்ணீரோ வேறு எதுவாக இருந்தாலும் அதை தேர்வு செய்யவும். ஆரம்பத்தில் சில நொடிகளாவது, எண்ணங்கள் இன்றி, உணர்வுகள் இன்றி அந்த இனிமை அனுபவத்தில் இருந்திடுங்கள். மெதுவாக கண்ணாடியின் இன்னொரு புறம் சென்று விட முடியும்.

காலம் சுழலும் பொழுது, நீங்கள் காலத்தின், நினைவுகளின் முழு உற்பத்திப் பொருளாக ஆகிறீர்கள். சந்தியா காலங்களில் இதனைக் கடந்து செல்ல ஒரு சிறு இடைவெளி, சிறு வெளி கிடைக்கும். ஒரு நாளில் நான்கு முறை இருக்கும் சந்தியா காலம் சிறந்த ஒரு வாய்ப்பு. உங்கள் கட்டமைப்புக்கு, நீங்கள் உறங்க செல்லும் கணமும், கண் விழிக்கும் கணமும் முக்கியமான காலங்கள். இந்த கணங்கள் நிகழும் பொழுது ஒரு சிறு இடைவெளி கிடைக்கும். அந்த இடைவெளியை உபயோகப்படுத்திக் கொள்ளவும்.

நீங்கள் விழிக்கத் துவங்கும் பொழுது உடல் முழுவதும் ஒரு இனிமை பரவுகிறது. அந்தக் கணத்தில் அந்த இனிமையிலேயே திளைத்திருந்தால் நாள் முழுவதும் மனம் இனிமையில் மூழ்கி இருக்கும். மனம் உங்களுக்கு இனிமையான விஷயங்களை செய்தால், சுற்றி இருக்கும் உலகத்துக்கு நீங்கள் இனிமையான விஷயங்களை செய்வீர்கள். அது போல உறங்க முற்படுகையில் உடலில் இனிமை பரவுகிறது. சிறிது முயன்று அதை கவனித்தால் உங்கள் உறக்கம் கனவுகள் அற்று முற்றிலும் வேறு விதமாக இருக்கும். ஏனெனில் அப்போது கண்ணாடியின் இன்னொரு புறத்தில் இருப்பீர்கள்.

பெரும்பான்மை மனிதர்கள் புலன் இன்பங்களை மட்டுமே அறிவார்கள். தங்களுள் ஆழத்தில் நிகழும் இனிமை பற்றி விழிப்புணர்வு அவர்களுக்கு இருப்பதில்லை. எந்த வகை தியானமாக இருப்பினும், கண் மூடி செயல்முறைகள் இருப்பதன் அடிப்படை நோக்கம் கண்ணாடிக்கு இடு பொருளை குறைப்பதற்கே. நெடு நேரம் உள்ளே எதுவும் போகவில்லை என்றால், மனம் எதையும் பிரதிபலிக்காது. பிறகு இன்னொரு புறம் செல்வது எளிதாகி விடும்.

நீங்கள் இப்பொழுது அனுபவிப்பது மனதின் பிரதிபலிப்பு மட்டுமே. நிஜம் என்பது இன்னொரு புறத்தில் இருக்கிறது. இன்னொரு புறம் என்பது காலத்தின், வெளியின் உற்பத்திப் பொருள் அல்ல. அனைத்தும் இங்கே, இப்பொழுது இருக்கிறது. முழு பிரபஞ்சமும் இங்கே இருக்கிறது. எளிமையான செயல்முறைதான், ஆனால் நீங்கள் உளவியல் நாடகத்தில் மும்முரமாக இருப்பதால் வாழ்க்கை தவறி விடுகிறது. தவற விடப்பட்டதால் வாழ்க்கையானது மனிதர்களை சுழற்சி ஏற்படுத்துவதன் வாயிலாக தண்டிக்கிறது.

நீங்கள் இங்கே இருக்கும் பொழுது வாழ்க்கை பற்றி ஒரு சக்தி வாய்ந்த அனுபவம் பெறுவதே உங்களுக்கான முக்கியமான விஷயமாக இருக்கிறது. தற்பொழுது உயிர் தவிர மற்ற அனைத்தைக் குறித்தும் நீங்கள் அறிவீர்கள். ஏனெனில் உலகை பிரதிபலிக்கும் மனக் கண்ணாடியை மட்டுமே காண்கிறீர்கள். உங்களுள் ஏற்படும் அனுபவங்களின் அடித்தளத்தை பார்ப்பதில்லை. ஒவ்வொரு உள் மூச்சிலும், ஒவ்வொரு வெளி மூச்சிலும், எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும், உட்கார்ந்தாலும், நின்றாலும், உண்டாலும், அருந்தினாலும் அனைத்திலும் உள்ளே பரவும் இனிமையை கவனிக்க ஒரு வாய்ப்பு இருக்கிறது. அந்த இனிமை உணர்வு தளத்தில் இல்லாமல் ஒரு ஆழமான அனுபவமாக இருக்கும்.

பெரும்பான்மை மனிதர்கள் இது குறித்த விழிப்புணர்வு இல்லாது இருக்கிறார்கள். ஏனெனில் அவர்களின் உளவியல் நாடகம், உணர்வுகள், எண்ணங்கள் முற்றிலும் அதனை புறக்கணிக்கச் செய்கிறது. நாம் கற்றுக் கொடுக்கும் சக்தி வாய்ந்த செயல்முறைகள் அடிப்படையில் மனக்கண்ணாடியின் மறுபுறம் சென்று வாழ்வை ருசிப்பதற்கான கருவிகளாக உள்ளன. நினைவுகள் மற்றும் காலத்தின் உற்பத்திப் பொருளாக இல்லாமல் உயிரின் மூலத்தையே கொண்டிருக்கும் வாழ்வை ருசி பார்க்க உதவும் கருவிகளாக உள்ளன. வாழ்வின் மூலமே உயிர்தான். படைத்தவனும், படைப்பும் தனித்தனியாக இருக்கும் ஒரு இடம் இந்த பிரபஞ்சத்தில் இல்லை. கடவுளுக்கும், உயிருக்குமான இடைவெளி மனித மனதில் மட்டுமே ஏற்படுகிறது.

நீங்கள் அனுபவிக்கும் ஒவ்வொரு துயரமும் உங்கள் உருவாக்கமே. உள்ளே இருக்கும் உயிர் எந்த ஒன்றையும் இனிமையற்றதாக அறியாது. இனிமையின்மை என்பது உணர்வு உடலில், பெரும்பாலும் மனதில் ஏற்படுவது. மனதின் இன்னொரு புறம் சென்று விட்டால் பிறகு என்ன நடந்தாலும் அது மேலோட்டமாக இங்கே, அங்கே எழும்பும் அலைகள் மட்டுமே. இதை அனுபவப்பூர்வமாக நீங்கள் அறிந்து விட்டால், பிறகு வாழ்வின் பக்தராகி விடுவீர்கள். இன்றைய உலகின் தேவை அதுதான். மற்றவர் உயிரை பறிக்கும் கடவுள் பக்தர்களுக்கு மாற்றாக நீங்கள் வாழ்வின் பக்தர்களாக ஆக வேண்டும். எப்படியும் அதுதான் படைப்பின் மூலத்துக்கு உருக் கொடுக்கிறது.

நீங்கள் சற்று கவனித்தால், மனம் உண்டாக்கும் பிரம்மாண்ட, வண்ண மயமான வெளிப்பாடுகளின் பின்னால் உயிர் அதன் வெளிப்பாட்டை தொடர்ந்து உருவாக்கிக் கொண்டிருப்பது அறிய முடியும். அந்த உயிரின் வெளிப்பாடோடு நீங்கள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். இந்த உயிரோட்டத்தை அறிவது மிக முக்கியமான ஒரு பரிமாணம் ஆகும். உங்கள் அனுபவத்தில் 'நீங்கள்' இங்கே இருப்பதைத் தெரிந்து கொண்டால், ஒரு கணத்தை நீங்கள் கைப்பற்றி விட்டாலே, நீங்கள் முதலும் முடிவுமற்ற ஒன்றை கை கொள்கிறீர்கள். ஒரு கணத்தை நீங்கள் பற்றி விட்டால் முழு பிரபஞ்சத்தையும் கை கொள்கிறீர்கள்.

Love & Grace