"நீங்கள் விருப்பத்துடன் முயற்சித்தால், எல்லா வரையறைகளையும் உங்களால் கடந்து செல்ல முடியும்", இந்த ஒரு செய்தி, 15000 வருடங்களையும் கடந்த இந்த செய்தி, குரு பௌர்ணமியன்று ஆதியோகி நமக்களித்த இந்த செய்தி - பிரபஞ்சம் முழுதும் எதிரொலிக்க வேண்டும். எல்லோருமே அந்த நிலையை அடைகிறார்களோ இல்லையோ, தேவையான கவனம் இருந்தால் அவர்களால் அடைய முடியும் என்பதையாவது அவர்கள் அறிந்திருக்க வேண்டும் என்பதே சத்குருவின் விருப்பம். குரு பௌர்ணமியின் சிறப்பை மேலும் அறிந்துகொள்ள வேண்டுமா? இதோ இந்த வார சத்குரு ஸ்பாட்டில்.....

பூமியைப் பொறுத்து சூரியன் வடதிசையிலிருந்து தென்திசை நோக்கி நகரும் தக்ஷிணாயணத்தில் நாம் இப்போது இருக்கிறோம். இந்தக் காலத்தில், இந்த உடலில் ஏற்படும் மாற்றங்கள், ஆன்மீகப் பயிற்சிகள் செய்வதற்கும் நோக்கங்களை வகுத்துக் கொள்வதற்கும் மிகவும் உகந்ததாக இருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் விவசாயி தன் நிலத்தில் உழத்துவங்குவார். இதே காலகட்டத்தில்தான் ஒரு யோகி, இந்த பூமியின் ஒரு சிறு பகுதியாக இருக்கும், தன் உடலை பண்படுத்தத் துவங்குவார். இதே காலகட்டத்தில்தான், பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால், ஆதியோகியின் கம்பீரமான பார்வை மனித உயிரினத்தின் மீது விழுந்தது.

தக்ஷிணாயணத்தில் வரும் முதல் பௌர்ணமியில்தான், ஆதியோகி, ஒரு குருவாக இருந்து, சப்தரிஷிகளுக்குக் கற்றுக்கொடுக்க ஆரம்பித்தார். முதல் குரு உருவான அந்த பௌர்ணமியே குரு பௌர்ணமி என்றழைக்கப்படுகிறது. இந்தக் கற்றல், எல்லைகளைக் கடந்து முக்தியடைவது பற்றியது. இதைப்பற்றி அப்போது மனிதர்கள் ஏதும் அறியாமல் இருந்தனர், இன்னமும் கூட பலர் அதைப்பற்றி அறிந்திருக்கவில்லை. உங்களுடைய மரபு என்ன, உங்களுடைய தந்தை யார் அல்லது எந்தவகையான வரையறைகளோடு நீங்கள் பிறந்தீர்கள் அல்லது எந்த வகையான வரையறைகளில் நீங்கள் இருக்கிறீர்கள் என்பது பிரச்சனையில்லை. 'விருப்பத்துடன் நீங்கள் முயற்சித்தால்' உங்களால் இவையெல்லாவற்றையும் கடந்து செல்ல முடியும்.

இந்தக் கலாச்சாரத்தில், குரு பௌர்ணமி என்பது மனித இனத்திற்கு புதிய வாய்ப்புகளை பெற்றுத்தந்த நாளாக எப்போதுமே கொண்டாடப்பட்டது. ஆனால் இந்த நாட்டை 300 வருடங்களாக ஆண்டவர்கள் வேறுவிதமான திட்டங்கள் வைத்திருந்தனர். மக்கள் ஆன்மீகத்தில் வேரூன்றி உறுதியாக இருக்கும் வரை இவர்களை ஆளமுடியாது என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்.

Sign Up for Monthly Updates from Isha

Summarized updates from Isha's monthly Magazine on Isha and Sadhguru available right in your mailbox.

No Spam. Cancel Anytime.

குரு பௌர்ணமி தினம் ஏன் ஒரு விடுமுறை நாளாக இல்லை? ஞாயிற்றுக்கிழமை ஏன் ஒரு விடுமுறை நாளாக இருக்கிறது? ஞாயிற்றுக் கிழமையன்று நீங்கள் என்ன செய்வீர்கள்? உருளைக்கிழங்கு சிப்ஸ் சாப்பிட்டுக்கொண்டு டிவி பார்த்துக் கொண்டிருப்பீர்கள்? அன்று எதை செய்வது சரி என்று கூட உங்களுக்குத் தெரியாது! ஆனால் ஒரு பௌர்ணமியன்றோ அல்லது ஒரு அமாவாசையன்றோ விடுமுறையாக இருந்தால் நமக்கு என்ன செய்ய வேண்டும் என்று தெரியும். எனவே விடுமுறை என்பது நமக்கு ஒரு முக்கியமான நாளாக இருக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது. குறைந்தபட்சம், குரு பௌர்ணமி தினமாவது விடுமுறை நாளாக இருக்கவேண்டும். அப்போதுதான் மக்கள் அதன் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வார்கள். மனித உயிரினத்தோடு இணைந்திருக்கும் இம்மாதிரியான ஒரு நிகழ்வு இருக்கும்போது, அது வீணாகிவிடக்கூடாது.

விருப்பத்தோடு முயற்சித்தால், உங்கள் அனைத்து வரையறைகளையும் கடந்து உங்களால் செல்லமுடியும். இந்த ஒரு செய்தி உலகம் முழுவதும் எதிரொலிக்க வேண்டும் என்பது நம்முடைய விருப்பம்.

நீங்கள் எல்லோரும் இந்த விஷயத்தைக் கையில் எடுத்துக்கொள்ளவேண்டும் என்பது எனது விருப்பம். இந்த குரு பௌர்ணமி தினமன்று நீங்கள் அலுவலகத்திற்கு செல்லக்கூடாது. "குரு பௌர்ணமி தினம், எனவே நான் வரவில்லை" என்று விடுமுறை கேட்டு விண்ணப்பம் அனுப்புங்கள். உங்கள் நண்பர்களைக் கூட, குரு பௌர்ணமி நாளன்று விடுமுறைக்கு விண்ணப்பிக்கச் சொல்லுங்கள். அந்த நாளில் நீங்கள் என்ன செய்யவேண்டும்? உங்களுடைய உள்நலத்திற்காக அந்த நாளை அர்ப்பணியுங்கள், அளவாக சாப்பிடுங்கள், இசை கேளுங்கள், தியானம் செய்யுங்கள், பூரண நிலவைப் பாருங்கள். உங்களுக்கு இது மிகவும் அற்புதமாக இருக்கும், ஏனென்றால் இது உத்தராயணத்திற்குப் பின் வரும் முதல் பௌர்ணமி. இது ஒரு முக்கியமான நாள் என்று குறைந்தது பத்து பேருக்காவது நீங்கள் சொல்லவேண்டும்.

என் மனத்தில் இப்போது மிகவும் முக்கியமானதாக இருப்பது மற்றும் எஞ்சியிருக்கும் வாழ்க்கையில் நாம் செய்யப்போகும் மிகவும் முக்கியமானது என்னவென்றால், ஆதியோகி அளித்த இந்த ஒன்றை இந்த உலகம் முழுவதும் கவனத்தில் கொள்ளச் செய்வதே: நீங்கள் விருப்பத்துடன் முயற்சித்தால், எல்லா வரையறைகளையும் உங்களால் கடந்து செல்ல முடியும். இந்த ஒரு செய்தி, 15000 வருடங்களையும் கடந்த இந்த செய்தி, பிரபஞ்சம் முழுதும் எதிரொலிக்க வேண்டும். எல்லோருமே அந்த நிலையை அடைகிறார்களோ இல்லையோ, தேவையான கவனம் இருந்தால் அவர்களால் அடைய முடியும் என்பதையாவது அவர்கள் அறிந்திருக்க வேண்டும். இந்த நோக்கத்தில் நாம் பல செயல்கள் செய்து வருகிறோம்.

முதல் படியாக, ஆதியோகியின் முதல் சிற்பத்தை ஜுலை 12ம் தேதியன்று திறந்து வைக்க இருக்கின்றோம். இது ஈஷா யோகா மைத்தில் நடைபெறும். இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உங்கள் அனைவரையும் வரவேற்கிறோம். 21 அடி உயரம் உள்ள இந்த சிற்பம் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நம்முடைய யோகா மையத்தில் நிறுவப்பட உள்ளது. இது ஒரு துவக்கம்தான். ஆதியோகியின் முகத்தை மட்டும் கொண்ட மற்றுமொரு சிற்பத்தை உருவாக்க உள்ளோம். இது 112 அடி உயரம் கொண்டதாக இருக்கும். இந்த பூமியில், மிக அதிக உயரம் கொண்ட முகமாக இது இருக்கும். நாட்டின் நான்கு மூலைகளிலும் இப்படி நிறுவ முடியும் என நம்புகிறோம். எப்படியும் ஈஷா யோகா மையத்தில் ஒன்றை நிச்சயமாக நிறுவிவிடுவோம். மற்றவற்றை நீங்கள் அனைவரும் நிச்சயமாக செய்ய வேண்டும்.

இந்த ஒரு செய்தி ஒவ்வொரு மனிதரையும் சென்றடைய வேண்டும் என்பதே என்னுடைய விருப்பம். போராட்டங்கள், வெறுப்புணர்வுகள், முட்டாள்தனங்கள், ஏக்கங்கள் இப்படி வாழ்க்கையில் எவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் 'விருப்பத்துடன் முயற்சித்தால், இவை எல்லாவற்றையும் தங்களால் கடந்து செல்ல முடியும்'. இந்த ஒன்றை மனித மனத்திலும் இதயத்திலும் பதிப்பிக்க வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இது நிகழ்வதற்கு, நீங்கள் எல்லோருமே, உங்களால் என்ன முடியுமோ, அதை செய்ய வேண்டும் என்பது என்னுடைய விருப்பம்.

அன்பும் அருளும்,
சத்குரு