கேள்வி: நமஸ்காரம் சத்குரு "இன்மை" (இல்லாத நிலை) எனும் தலைப்பில் நீங்கள் எழுதிய கவிதையில் "ஓ! என் இன்மையை நீங்கள் சுவைத்துப் பார்க்கவேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அதற்கு அர்த்தம் என்ன?

சத்குரு: இப்பிரபஞ்சத்தின் தன்மை இதுதான்: இங்கு என்னவெல்லாம் இருக்கிறதோ (அ) படைப்பாய் இருப்பது எதுவோ (அ) உருவமெடுத்து நிகழ்ந்திருப்பவை எவையோ, அவையெல்லாமே மிக மிகச் சிறிது. அதற்கு இத்தனை முக்கியத்துவம் கிடைத்திருப்பது, நம் பார்க்கும் திறத்தால்! ஆனால் உங்கள் வாழ்வில் நிஜமாக தாக்கம் ஏற்படுத்துவது உங்களிடம் எது இல்லையோ, அது. அதை நீங்கள் ஆசை, குறிக்கோள், ஏக்கம், தேடுதல் என எப்படி வேண்டுமானாலும் கூறலாம். ஆனால் உங்களிடம் எது இல்லையோ அதுதான் உங்கள் வாழ்வை அதிகாரம் செய்கிறது, உங்கள் வாழ்க்கைத் திசையை நிர்ணயிக்கிறது, அதோடு உங்கள் வாழ்வை எப்படியெல்லாம் முடியுமோ அப்படியெல்லாம் ஆள்கிறது.

இருப்பு, இன்மை என்பதை, ஒருவர் இங்கு இருப்பது அவரது "இருப்பு" என்றும், அவர் இங்கு இல்லாமல் போனது அவரது "இன்மை" என்றும் புரிந்து கொள்ளவேண்டாம். நான் யாராக இருக்கிறேனோ, அது என் "இன்மை"யினால் தானே தவிர்த்து என் "இருப்பால்" அல்ல. என்னைச் சுற்றி பல காலமாக இருப்பவர்கள், ஒன்று, எப்போதும் என்னைப் பற்றிய குழப்பத்தில் இருப்பார்கள், இல்லையெனில் நான் நேர்மையற்று சந்தர்ப்பவாதி ஆகிவருகிறேன் என்று எண்ணுவார்கள். ஏனெனில் "நாளை எப்படி இருக்கவேண்டும்" என்பதைப் பார்த்து என் வாழ்வில் நான் தொடர்ந்து மாற்றம் கொண்டுவந்து கொண்டே இருக்கிறேன். இன்று எப்படி இருக்கவேண்டும் என்பதல்ல, நாளை எப்படி இருக்கவேண்டும் என்பதைப் பொறுத்து! இன்று என்ன தேவையோ அது எனக்கு நடந்தாகிவிட்டது. நாளை நான் எப்படி இருக்கவேண்டுமோ அதைப் பொறுத்து என் குணாதிசயம், தோற்றம், பேச்சுவழக்கம், என் எல்லாவற்றையுமே நான் மாற்றி வருகிறேன்.

ஒரு நிலையான நங்கூரமாய் இருப்பவர் குரு என்ற எதிர்பார்ப்போடு குருவை அணுகியவர்கள் இன்று குழப்பத்தில் ஆழ்கிறார்கள். ஏதோவொரு குறிப்பிட்ட நேரத்தில், "ஆம்! இவர் நன்றாக இருக்கிறார்" என்ற எண்ணம் தோன்றியதால் குருவாக ஏற்றவர்கள், இன்று "அவர் நேர்மையற்று சந்தர்ப்பவாதியாகி வருகிறார். 10 வருடங்களுக்கு முன் அவர் எப்படி இருந்தாரோ இன்று அவர் அப்படியில்லை!" என்றெண்ணுகிறார்கள். நிச்சயமாக அவர் அதேபோல் இல்லைதான், அவர் உயிரற்ற பாறை இல்லையே - அவர் ஒரு வாழும் சாத்தியம்!

ஒரு தென்னைமரமோ அல்லது உங்கள் குழந்தையோ 10 வருடங்களுக்கு முன் எப்படி இருந்ததோ இன்றும் அப்படியே இருந்தால் உங்களுக்குப் பிடிக்குமா? அல்லது இன்று அவர்கள் முற்றிலும் வேறுவிதமாக இருப்பது உங்களுக்கு வேண்டுமா? ஆனால் உங்கள் குரு மட்டும் 10 ஆண்டுகளுக்கு முன் அவர் எப்படி இருந்தாரோ, இன்றும் அவர் அப்படியே இருக்கவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள், ஏனெனில் உங்களுக்குத் துணையாய் ஒரு உறுதியான கல்லை நீங்கள் தேடிக் கொண்டிருக்கிறீர்கள். நான் வேண்டுமானால் ஒரு கல்லை உங்கள் கழுத்தில் தொங்கவிடுகிறேன். எங்கு போனாலும் அதை நீங்கள் தூக்கிச்சுமந்தால் எப்போதும் நிலையாய் இருப்பீர்கள்.

பெரும்பான்மையான நேரம் நான் ஒரு வெற்றிடம். அதுதான் மிக மதிப்பானது.

"இதுதான். இது போதும்" என்று எப்போதும் ஒரே இடத்தில் தங்க முற்படாதீர்கள். நாங்கள் இங்கு (கோவை ஈஷா யோக மையம்) வந்து, முதன்முதலாக ஒரு கட்டிடத்தை கட்டிமுடித்தபோது, சிற்சிறு நகரங்களில் இருந்து வந்து அதற்கு தன்னார்வத் தொண்டு செய்த பெண்மணிகள், "இது நமக்கு தாய் வீடு மாதிரி" என்று பேசிக் கொண்டார்கள். அவர்கள் "தாய் வீடு" என்று சொல்லக் காரணம், கணவனின் வீடு என்றால், முடிவில்லாத வேலையும், இடைவெளியில்லாத குழந்தைப்பேறும் என்று அவர்கள் வாழ்க்கை ஆகியிருந்தது. தாய் வீடு என்றால் இது இரண்டில் இருந்தும் விடுதலையல்லவா!

இது அவர்களுடைய தாய் வீடல்ல என்பதை அவர்களுக்கு நினைவுறுத்தினேன். ஆசிரமம் என்பது தப்பிச்சென்று அடைக்கலம் புகும் இடமல்ல. அது விடுமுறைக்கான இடமுமல்ல. அது முயற்சி மேற்கொள்ள வேண்டிய இடம். நமக்கு ஒரு அடையாளமாகவோ, மனதளவில் நிம்மதியை உணர்வதற்காகவோ அவ்விடம் உருவாக்கப்படவில்லை. தங்குவதற்கு வீடற்ற நிலையிலும் ஆனந்தமாக வாழும் கலையை கற்கும் இடம் இது. பாதுகாப்பாய் தங்க ஓரிடம் வேண்டும், அதனால் கூரையுள்ள இடங்கள் உள்ளன. ஆனால் நாளை காலையே வேறிடம் போகவேண்டும் என்றாலும், அதற்கும் தயார். தயக்கங்கள் ஏதும் இல்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

ஆசிரமம் என்பது வெறும் தங்குமிடம் அல்ல - அதுவொரு மாபெரும் சாத்தியம். பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு பெரும் சாத்தியமாய் அமையக்கூடிய இடம் அது. அதனால் அதைப் பராமரிப்பது நமக்கு முக்கியம். எனினும் இவ்விடம் யாருக்கும் வீடல்ல. "வீடு" என்றால் நீங்கள் ஒரு அடையாளத்தை, சௌகரியத்தை நீங்கள் நிரந்தரமாகக் குடியேறுவதற்கு ஒரு இடத்தைத் தேடுகிறீர்கள் என்று அர்த்தம். ஒரே இடத்தில் பாதுகாப்பாய் தங்கிவிட நினைப்பவர்களை எனக்குப் பிடிக்காது. நாங்கள் உங்களைப் புதைக்கும் போதோ, எரிக்கும் போதோ ஓரிடமாய் இருங்கள். ஆனால் அதுவரை நீங்கள் முழு தீவிரத்துடன் இயங்கவேண்டும். அதுதான் வாழ்வின் பயன்: எப்போதும் முழு தீவிரத்துடன் இயங்குவது - செத்து மண்ணில் விழும்வரை!

நான் உங்களுக்கு முக்கியமாக இருப்பது என் "இன்மை"யால் தானே தவிர்த்து என் "இருப்பால்" அல்ல. நான் உங்களுக்கு முக்கியமாக இருப்பது நான் ஒரு வெற்றிடமாக இருப்பதால் தானே தவிர்த்து சூரியனைப் போல் எரிவதால் அல்ல. எனக்கு எப்போது வேண்டுமோ அப்போது சூரியனைப் போல் என்னால் எரிய முடியும், ஆனால் பெரும்பான்மையான நேரம் நான் ஒரு வெற்றிடம். அதுதான் மிக மதிப்பானது. இந்த அறையில் சுவர்கள், தூண்கள் இருக்கிறது, கூரை இருக்கிறது, பளபளப்பான தரை இருக்கிறது, ஆனால் இதில் மிக மதிப்பானது வெற்றிடம்தான். அதனால்தான் நீங்கள் இங்கு இருக்கிறீர்கள். இந்த அறைக்கும் அதுதான் உண்மை, இந்தப் பிரபஞ்சத்திற்கும் அதுதான் உண்மை, எனக்கும் அதுதான் உண்மை, உங்களுக்கும் அதுவே உண்மையாக வேண்டும் என்று விரும்புகிறேன்.

யாரோவொருவர் அவரைப் பற்றிய எண்ணத்திலே மூழ்கிப் போயிருக்கிறார் என்பதை ஆங்கிலத்தில், "He is so full of himself" என்று சொல்வார்கள். நீங்கள் உங்களால் நிறைந்திருக்கவில்லை என்றால் நீங்கள் இல்லை என்று அர்த்தம். "இன்மை"தான் இருப்பதற்கு சிறந்த நிலை. இன்மையின் ஆனந்தத்தில் திளைத்திடுங்கள்.

இன்மை

என் இருப்பின் சுவை உங்களை மயக்கியது என்றால்
என் இன்மையை நீங்கள் சுவைத்துப் பார்க்கவேண்டும்!

என் இருப்பில் அர்த்தமிருப்பதாக நீங்கள் உணர்ந்திருந்தால்
என் இன்மையில் வாழ்வின் சாரத்தை உணர்வீர்கள்

என் இருப்பில் சிறிதளவு ஈர்ப்பை நீங்கள் உணர்ந்திருந்தால்
என் இன்மை உங்களை முழுமையான பணிவில் ஆழ்த்தும்

என் இருப்பில் என் அருள் உங்களை திக்குமுக்காடச் செய்திருந்தால்
என் இன்மை உங்களை அருள் - இருள் தாண்டி கூட்டிச்செல்லும்

என் இருப்பு உங்களை மதிமயக்கும் மதுவாய் இருந்திருந்தால்
என் இன்மை எல்லையற்ற தெய்வீகத்தில் உங்களை மூழ்கடிக்கும்

அன்பும் அருளும்,