புவியில் 'Being' என்று குறிக்கப்படும் ஒரே உயிரினம், மனித இனமே. (Being என்றால் இருப்பது அல்லது இருத்தல் என்று பொருள்.) புலியோ, யானையோ, பாம்போ, கரப்பான்பூச்சியோ, Being என்று அழைக்கப்படுவதில்லை - மனிதன் மட்டுமே Human Being என்று அழைக்கப்படுகிறான். ஒரு உயிரினத்திற்கு Being - ஆக இருப்பதைவிட பெரிய மதிப்பு எதுவுமில்லை. இதற்கு அர்த்தம் என்னவென்றால், இந்த உயிரினம் எதுவும் செய்யாமலிருந்தாலும் மகத்துவம் வாய்ந்தது. மனிதர்கள் தாங்கள் செய்யும் செயலால் மகத்துவம் வாய்ந்தவர்கள் அல்ல. மனிதர்கள் மகத்துவம் வாய்ந்தவர்களாக இருப்பது அவர்கள் இருப்பின் தன்மையால்தான். ஆனால் துரதிர்ஷ்டவசமாக, எத்தனை மனிதர்கள் உண்மையில் இருத்தலாக இருக்கிறார்கள் என்பது மிகப்பெரிய கேள்வியாகவே இருக்கிறது. அடிப்படையில், ஈஷாவில் நாம் முயல்பவை அனைத்தும், உங்களுக்குள் இந்த இருத்தல் நிலையைக் கொண்டுவருவதற்குத்தான்.

நான் உங்களிடம், "வெறுமனே இருங்கள்," என்று சொன்னால், அதற்கு அர்த்தம் உங்களுக்குத் தெரியாது. அல்லது, "எதுவும் செய்யாதிருங்கள்," என்றால், உங்களால் அப்படி இருக்கமுடியாது. உடலளவில், மனதளவில், உணர்வளவில், அல்லது சக்தியளவில் நீங்கள் ஏதாவது செய்தாக வேண்டும். அதனால் உங்களிடம் "என்னுடன் இருங்கள்," என்று சொல்கிறேன். செயலில் இதுவும் அதுவும் இருக்கிறது. இருத்தலில் இதுவும் அதுவும் இல்லை. என்னுடன் இருக்கும் முயற்சியில்கூட சற்று செயல் இருக்கிறது. ஆனால் அப்படிப் பார்த்தால், "என்னுடன் இருங்கள்," என்பது ஒரு தந்திரமான கருவி மட்டுமே. அடிப்படையில், நீங்கள் வெறுமனே இருத்தலாக இருக்கவேண்டும். ஆனால், "வெறுமனே இருங்கள்," என்று நவீன கலாச்சாரத்தில் பரவலாக பரிந்துரைக்கப்படுவது, மனதளவிலான சர்க்கஸ் மட்டுமே - தாங்கள் வெறுமனே இருக்கிறார்கள் என்று நினைக்க மட்டுமே செய்கிறார்கள்.

நீங்கள் எதனுடன் இருப்பதையும் தேர்வுசெய்யலாம், ஆனால் அந்த ஏதோவொன்று அல்லது யாரோவொருவர் உங்கள் நல்வாழ்வுக்கு உறுதுணையாக இல்லாதிருக்கக்கூடும். ஒரு நாய், பூனை, மனிதர் என்று வெளியே இருக்கும் ஒன்றுடன் நீங்கள் இருக்க முயன்றால், அவர்களுக்கு உங்கள் இருத்தலுக்கு எப்படி உறுதுணையாக இருப்பதென்று தெரியாது, ஏனென்றால் அவர்களுக்கே எப்படி வெறுமனே இருப்பதென்று தெரியாது. நீங்கள் வெறுமனே இருக்க முயன்றாலும்கூட, நீங்கள் ஏதாவது செய்யவேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் - "என்னை ஏன் இப்படி வெறித்துப் பார்க்கிறீர்கள்? ஏதாவது பேசுங்கள்!" என்பார்கள். என்னுடன் இருக்கையில், நீங்கள் முற்றிலுமாக கவனம் செலுத்தினால், நான் உங்கள் செயலை அழித்துவிடுவேன், எந்த நிலையிலும் எதுவும் செய்யாதிருக்கும் தருணங்களை நீங்கள் அனுபவித்துணர்வீர்கள். பொருள்தன்மையில் இப்படி நடந்தால், இதை induction என்பார்கள். (induction என்றால் ஒன்றில் இருக்கும் தன்மை, மற்றொன்றில் அதையே தூண்டுவது என்று பொருள்.) உங்கள் சூழ்நிலையும் அத்தகையதே. நீங்கள் இங்கே முழுமையான உயிராக வந்திருக்கிறீர்கள். தேவைப்படும் அனைத்தும் இருக்கிறது, இருந்தும் எப்படி வெறுமனே இருப்பது என்று உங்களுக்குத் தெரிவதில்லை. அதற்கு induction தேவைப்படுகிறது. அதற்கு சக்தி தேவைப்படுகிறது, சக்திக்கு உயிரை விலையாய்த் தரவேண்டியுள்ளது.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

எந்நிலையிலும் எதுவும் செய்யாமல் உண்மையாகவே உங்களால் வெறுமனே இருக்க முடிகிறது என்றால், யாரோ ஒன்றுடன் இருப்பது என்று எதுவுமில்லை. "நான் யாரோ ஒருவருடன் இருக்கிறேன்" என்பது வெறும் வார்த்தை மட்டுமே. பொருளளவில் பார்த்தால், நீங்கள் யாரோ ஒருவருடன் இருப்பது சாத்தியமானதுதான். ஆனால் நீங்கள் உண்மையில் இருத்தலாக இருந்தால், ஒன்றே ஒன்றுதான் இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் எல்லாமே "நான், நான், நான் மட்டுமே." இதுதான் இருத்தலின் அழகு. நீங்கள் செயல் செய்யும்போது, நீங்கள் ஏதோவொன்று அல்லது யாரோ ஒருவருடன்தான் செய்யமுடியும். செயல் என்று வந்த மறுக்கணமே - உடல், மனம், உணர்வு, சக்தி என்று எதுவாக இருந்தாலும், இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட விஷயங்கள் அதில் சம்பந்தப்பட்டிருக்க வேண்டும். இருத்தலில்தான், ஒன்றே ஒன்று மட்டுமே இருக்கிறது. வெறுமனே இருக்கையில், நீங்கள் எல்லாவற்றுடனும் ஒன்றிவிடுகிறீர்கள்.

இருத்தல் என்பது அடிப்படையில் யோகநிலையைக் குறிக்கிறது. யோகா என்றால் சங்கமம். ஆங்கிலத்தில் மற்ற நான்கெழுத்து வார்த்தைகளைப் போல yoga என்ற வார்த்தையும் பிரபலமாகிவிட்டதால், ஏதோவொன்றைக் குறிப்பதற்கு அதனை மக்கள் பயன்படுத்துகிறார்கள். யோகா என்பது எதையும் குறிப்பதல்ல. ஏதோவொன்றும், இதுவும் அதுவும் இல்லாதுபோகும்போது, எல்லாம் ஒன்றாகிவிடும்போது, ஒரு சங்கமம் இருக்கிறது - அதைத்தான் யோகா என்கிறோம். உச்சகட்ட அர்த்தத்தில், யோகா என்றால் எல்லாவற்றுடனும் ஒன்றிவிடுவது. யோகா என்றால் சாத்தியமில்லாத கடினமான நிலைகளுக்கு உடலை வளைப்பது என்ற கருத்தை மக்கள் மனதிலிருந்து நாம் நீக்கவேண்டும். நாம் செயல் செய்யும்போது, அந்த செயல் எவ்வளவு பெரிதாக இருந்தாலும் சரி, அது வரையறுக்கப்பட்ட எல்லையுடன் இருக்கிறது. நாம் வெறுமனே இருக்கும்போது, எல்லைகள் எதுவுமில்லை.

நீங்கள் இருத்தலாக இருக்க முயலும்போது, சக்தியளவில் அதற்கு உறுதுணையாக இருக்கும் ஒன்றுடன் நீங்கள் இருப்பது முக்கியம். உங்களுக்குள் பிரிவினை உருவாக்காத ஒன்றாக அது இருக்கவேண்டும். உங்கள் அடையாளத்தை மிகைப்படுத்தாத ஒன்றாக அது இருக்கவேண்டும். உங்கள் அடையாளங்களை அழிக்கும் ஒன்றாக அது இருக்கவேண்டும். அடையாளம் என்றால் தனிப்பட்ட தன்மை. தனிப்பட்ட தன்மை என்றால் எல்லை. "இது என் ஆளுமைத்தன்மை" என்றால், "இது என் எல்லை" என்று அர்த்தம். மக்கள் தங்கள் அறியாமையால் இதை பெருமையாக சொல்லிக்கொள்கிறார்கள். உங்களிடம், "அறியாமையே பேரின்பம்" என்றும் கூறியிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையாக இருந்திருந்தால் உலகின் மக்கள்தொகை முழுவதும் பரவசத்தில் திளைத்திருக்கவேண்டும். அறியாமையே பேரின்பம் என்பது, உண்மை இடர்ப்படும் வரையில் மட்டும்தான். நீங்கள் உயர்ந்த ஒரு கட்டிடத்திலிருந்து குதித்தால், உண்மையாகவே அற்புதமாக இருக்கும் - ஆனால் உங்களை தரை தடுத்து அடிபடும் வரையில் மட்டும்தான். அறியாமையில், நீங்கள் நிஜத்தை உணராமல் இருக்கும்போது, உண்மையாகவே ஆனந்தமாக இருக்கும் ஒருசில தருணங்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால் இருத்தல் என்றால், முற்றிலும் நிஜத்தில் இருப்பது. செயல்செய்வது, சிந்திப்பது என்றால் நீங்கள் ஏதோவொன்றை செயற்கையாக உருவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள். வெறுமனே இருக்கையில், நீங்கள் மேலும் எதையும் உருவாக்குவதில்லை.

வெறுமனே இருப்பது சுலபமாக வருவதில்லை. அதனால் உங்கள் இருத்தலுக்கு உறுதுணையாக இருக்கும் ஏதோவொன்றுடன் இருங்கள். சக்தியளவில் உங்கள் எல்லைகளை எப்போதுமே அழிக்க முயற்சிக்கும் ஏதோவொன்றுடன் இருங்கள். அந்த அர்த்தத்தில் உங்களிடம் சொல்கிறேன், "என்னுடன் இருங்கள்." நீங்கள் எங்கு இருந்தாலும் சரி, ஒரு குறிப்பிட்ட காலத்திற்காவது முயன்று என்னுடன் இருக்கப்பாருங்கள். காலை 6:20 மணியும் மாலை 6:20 மணியும் சிறந்த நேரம். தேவையெனில் என் புகைப்படத்தை பயன்படுத்துங்கள், அல்லது கண்மூடி என்னுடன் இருங்கள். நான் ஏற்கனவே இந்த நோக்கத்தில் அதிகப்படியான சக்தியை முதலீடு செய்திருப்பதால், இது உறுதுணையாக, புத்துணர்வு தருவதாக, பரவசமாக்குவதாக இருப்பதை நீங்கள் கவனிப்பீர்கள். என்னுடன் இருந்து பாருங்கள்.


Love & Grace