பலமுடையவர்கள் பலமற்றவர்கள் மீது எப்பொழுதுமே ஆதிக்கம் செய்து வந்தே இருக்கிறார்கள். அவை தேசங்கள் ஆகட்டும், சமூகங்கள் ஆகட்டும் அல்லது தனியொரு மனிதராகட்டும் அடாவடித்தனம் என்பது அனைத்து நிலைகளிலும், எல்லா நேரங்களிலும் நிகழ்கின்றன. இன்று இவ்வுலகில் சிலவற்றை நாம் வடிவமைத்திருப்பதை பார்த்தால் உங்களுக்கு ஏமாற்ற தெரியவில்லை என்றால் இந்த உலகத்தின் பார்வையில் நீங்கள் பிழைக்கத் தெரியாதவர்தான். ஏமாற்றுதல் என்பது வெறும் தசைகளின் பலத்தால் நிகழலாம் அல்லது மிக சூட்சுமமாகவும் இருக்கலாம், ஆனால் அவை எல்லா இடங்களிலும் நடந்து கொண்டேதான் இருக்கிறது. வீதியில் நடப்பதுதான் நாடுகளிலும் நடக்கிறது. எந்த வித்தியாசமும் கிடையாது என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். எளியவர் மீது வலியவர் ஆதிக்கம் செலுத்துவது பலவிதங்களிலும் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றது. கற்காலத்தில், பலமுள்ளவனே பிழைக்கமுடியும் என்ற நிலைமை இருந்தது. அதே நிலைமைதான் இப்போதும் தொடர்கிறது. சொல்லப்போனால் இன்று அவை அதிகமான சூழ்ச்சியுடன், வஞ்சகமாக நடத்தப்படுகிறது நேர்மையாக நிகழ்வதில்லை.

தலைவர்கள் எப்பொழுதும் அடாவடியுடன் நடப்பவர்களாகவே உள்ளனர். தங்கள் பாதைக்கு குறுக்கே வருவதை எல்லாம் எப்படி கீழே தள்ளிவிட்டு மேலே போவது என்பது அவர்களுக்குத் தெரியும். உலகத்தில் வெறும் அடாவடிப் பேர்வழிகள் மட்டுமே தலைவர்களாக இருக்க முடியும் என்பதான ஒரு நிலைமையை உண்டாக்கி விட்டோம். நாம் சரியான தலைவர்களை உருவாக்காததால் அடாவடிகளையே தலைவர்களாகக் கருதுகிறோம். மனிதகுலத்திற்காக கருணையுள்ளம் கொண்டு, பெரிய கனவுகள், தொலைநோக்கு பார்வைக் கொண்ட மனிதர்களை நாம் தலைவர்களாகக் கருதுவதில்லை. அவர்களை நாம் வெறுமனே தத்துவவாதிகள் என்று சொல்லி விட்டு விடுகிறோம். இந்நிலை மாற வேண்டும், ஆனால் இந்த மாற்றம் ஓர் இரவில் நிகழப் போவதில்லை.

"ஈஷா லீடர்ஷிப் அகாடமி," என்னும் ஒரு திட்டத்தை நாம் துவங்க இருக்கிறோம். இதன் மூலம் தலைவர்களை உருவாக்கி வளர்க்க இருக்கிறோம். இவ்வருடக் கடைசியில், பெரிய அளவில் இந்தத் திட்டம் தொடங்கப்படும். இன்றைய காலகட்டத்தில் இத்தேசத்தில் நல்ல தலைவர் ஒருவர் தோன்றினால் அவரை இந்த தேசமே வழிபடும். ஆனால் தற்சமயம், பல அடுக்குகளாக, தலைவர்கள் இல்லை. எனவே நம் நோக்கங்களில் மிக முக்கியமாக பல நிலைகளில் தலைவர்களை நாம் உருவாக்குவோம். இவர்கள் பிரதானமான தலைவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

தலைமை என்பது நாடாளுமன்றத்திலோ அல்லது சட்டமன்றத்திலோ மட்டும் இருக்கக் கூடாது. தலைமை என்பது வீதிகளிலும், வீடுகளிலும், உங்கள் அலுவலகங்களிலும் இருக்க வேண்டும். பொறுப்புகளை கையில் எடுத்துக் கொண்டு செயல்படும் மக்கள் நமக்குத் தேவைப்படுகிறார்கள். எல்லா நிலைகளிலும், அடுக்குகளிலும் இந்நிகழ்ச்சியை நாம் வழங்க இருக்கிறோம். ஐந்து அல்லது பத்து நபர்களின் மேல் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய ஒவ்வொருவரும் ஒரு தலைவர்தான். எனவே இந்நிகழ்ச்சியை நாம் எல்லா நிலைகளில் உள்ள மனிதர்களுக்கும் வழங்குவோம். இதற்காக இந்த சமூகத்தில் நிறைய வேலைகள் செய்யத் தேவையிருக்கிறது. வீதிகளில் போய் கோஷமிடுவதோ, அறிக்கைகள் விடுவதோ இதற்கு உதவாது. எனவே தனி மனிதர்களின் மீது நாம் மிகவும் கூரிய நோக்கோடு வேலை செய்யத் தேவையிருக்கிறது. ஆனால் இதனை நிகழச் செய்ய தேவையான கட்டமைப்பு தற்போது இல்லை.

நாளை "குரு சங்கமம்" நிகழவிருக்கிறது. சென்ற வருடம் ஜனவரி 6ம் தேதியில், இத்தேசத்தில் உள்ள மிக முக்கியமான ஆன்மீக தலைவர்கள் ஒன்று கூடி இதனைத் தொடங்கினர். இந்தியாவை இவ்வுலகின் ஆன்மீக நுழைவாயிலாக முன்னிறுத்துவதே இதன் நோக்கமாகும். மேலும் ஆன்மீகத்தின் அனைத்து பரிமாணங்களும் ஒரே மேடையில் கிடைக்கப் பெற செய்யவும் இந்த சங்கமம் வழி வகுக்கும். இந்த முயற்சி ஆன்மீக செயல்முறைகளை பாதுகாப்பதாயும் அமையும், ஆன்மீக செயல்முறைகளை தன்நலத்திற்காக சுரண்டுவதை நம்மால் தடுக்க இயலும். இதனை செயல்படுத்துவதற்கு பல வழிமுறைகள் உள்ளன.

நாளை, கிட்டத்தட்ட 100 குருமார்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறுகின்றனர். பங்குபெற இயலாத மேலும் பல குருமார்கள் தங்கள் ஆசிகளையும் ஆதரவையும் வழங்கியுள்ளனர். இதற்கு முன், இவ்வளவு ஆன்மீக தலைவர்கள் இவ்வளவு எண்ணிக்கையில் ஒன்றிணைந்தது இல்லை. இக்காலகட்டத்தில் இது மிகவும் குறிப்பிடத்தக்க ஒரு நிகழ்ச்சியாக மட்டுமல்லாமல் இவ்வுலகிற்கு ஆன்மீக தலைமைகள் மிக அற்புதமான சாத்தியங்களாய் திகழ்வதற்கு இது வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுககும்.

Love & Grace

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.