வேண்டுவதில் கவனம் தேவை!

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் தற்போது இருக்கும் நிலையில் கேட்பதைக் கொடுக்கும் கற்பகவிருட்சம் இருந்தால் அற்புதமாகுமா, அபத்தமாகுமா என்பதை விளக்குவதோடு, வாழ்க்கையை உண்மையிலேயே அற்புதமாக்கும் சூட்சுமத்தையும் சத்குரு விளக்கியுள்ளார்.
 
 
 
 

இந்தவார சத்குரு ஸ்பாட்டில், மனிதர்கள் தற்போது இருக்கும் நிலையில் கேட்பதைக் கொடுக்கும் கற்பகவிருட்சம் இருந்தால் அற்புதமாகுமா, அபத்தமாகுமா என்பதை விளக்குவதோடு, வாழ்க்கையை உண்மையிலேயே அற்புதமாக்கும் சூட்சுமத்தையும் சத்குரு விளக்கியுள்ளார்.

நீங்கள் உலகத்தில் நடக்கும் விஷயங்களை கவனித்துப் பார்த்தால், சாதாரண வித்தைகளை மக்கள் ஆன்மீகம் என்று தவறாக புரிந்துகொள்கிறார்கள். அதிசயிக்கத்தக்க ஹீலிங் முறையில் குணப்படுத்துவது, காற்றிலிருந்து பொருட்கள் எடுப்பது போன்ற வித்தைகளைச் செய்தால் நீங்கள் மிகவும் பிரபலமாகலாம். மக்கள் குறுக்கு வழிகளையே தேடுகிறார்கள், ஆனால் வாழ்க்கை அப்படி வேலை செய்வதில்லை. ஆசைகளை நிறைவேற்றும் கற்பகவிருட்சம் போன்றதொரு மரத்தை நான் நிஜமாகவே அவர்களுக்காக உருவாக்கவேண்டும் என்று சிலர் எதிர்பார்க்கிறார்கள். ஆசைகளை நிறைவேற்றும் கற்பகவிருட்சம் உங்களிடம் இருக்கிறதென்றே வைத்துக்கொள்வோம், அதனிடம் நீங்கள் ஒவ்வொரு நாளும் அதிகமாகக் கேட்டுக்கொண்டே போவீர்கள். கடைசியில் ஒரு குடோனில் வாழ்ந்துகொண்டு இருப்பீர்கள். ஏற்கனவே பல வீடுகள் தரையிலிருந்து கூரைவரை எல்லாவித பொருட்களும் அடுக்கப்பட்டு குடோன்கள் போலக் காட்சியளிக்கின்றன. கடைத்தெருவிலிருந்து பொருள் வாங்குவதற்கும், மரத்திலிருந்து பொருள் விழுவதற்கும் பெரிய வித்தியாசமில்லை, இரண்டிலும் உங்கள் கட்டாயத்தினால் முடிவில்லாமல் ஷாப்பிங் செய்கிறீர்கள்.

பல ஆண்டுகளுக்கு முன்பு, ஈஷா அறக்கட்டளையை நிறுவுவதற்கு முன்பு, மனதை வைத்து விரும்புவதை கிடைக்கச்செய்வது எப்படி என்ற ஒரு பயிற்சி வகுப்பு நடத்தினேன். இந்த வகுப்பில், 80 சதவிகித பங்கேற்பாளர்களை, மனதின் சக்தியை மட்டுமே பயன்படுத்தி, மடித்துவைத்த ஒரு பேப்பரை டேபிளின் ஒருமுனையிலிருந்து மறுமுனைக்கு நகர்த்தச்செய்தேன். பிறகு இந்த திறமையை பயன்படுத்தி அவர்கள் முட்டாள்தனமான செயல்கள் செய்வதைப் பார்த்தேன். இது முறையல்ல என்பதை உணர்ந்து, அந்த நிகழ்ச்சியை அப்படியே நிறுத்திவிட்டேன். முன்பே இப்படிப்பட்ட செயல்களை நான் பார்த்திருக்கிறேன். நான் சிறுவனாக இருந்தபோது, உயிர்வாழ்வதைக் கடந்த விஷயங்கள், பேய்கள், ஆவிகள் போன்ற விஷயங்களைப் பற்றி மக்கள் பேசியது, என் கவனத்தை ஈர்த்து ஆர்வத்தைத் தூண்டியது. ஒரு வீட்டை பேய்வீடு என்று ஒருவர் சொன்னபோது, நான் தொடர்ந்து சில இரவுகள் அங்கு சென்று தூங்கினேன். பேய் மட்டும் வந்த பாடில்லை.

பல மாதங்கள் மயானபூமிக்குச் சென்று உட்கார்ந்திருந்தேன். எந்த பேயும் ஆவியும் வரவில்லை. "இந்த புளியமரத்தில் பெரிய ஆணியடித்து ஈர நூலால் உன் மோதிரவிரலை அந்த ஆணியில் கட்டிவைத்தால் கட்டாயம் பேய் வரும்" என்றார்கள். அதையும் செய்து காத்திருந்தேன், எதுவும் வரவில்லை. "மோதிர விரலைக் கத்தியால் கீறி அதன்மேல் எலுமிச்சம்பழத்தை மாட்டவேண்டும்" என்றார்கள். எலுமிச்சை சாற்றுக்கும் எந்த பேயும் ஆர்வம் காட்டவில்லை. பேயைப் பிடித்து பாட்டில்களில் அடைப்பவராக அறியப்பட்ட ஒருவர் இருந்தார். யாரோ ஒருவரை பேய் பிடித்துவிட்டது, அல்லது ஏதோ இடத்தில் பேய் நடமாட்டம் இருக்கிறது என்று நினைத்தால் அவரை அழைப்பார்கள். அவர் வந்து பேயை ஒரு பாட்டிலிற்குள் அடைத்து எடுத்துச்செல்வார். நான் அவர் வீட்டில் என்ன இருக்கிறதென்று பார்க்கச்சென்றேன். ஒரு சிறு கோயில் போன்றதொரு இடத்தில் அவர் பலவிதமான பாட்டில்கள் வைத்திருந்தார். பாட்டில்கள் காலியாகத் தெரிந்தன, ஆனால் மூடியால் அடைக்கப்பட்டிருந்தன.

ஏதோவொன்று இருக்கவேண்டும் என்று நினைத்தேன், அதனால் ஒரு பாட்டிலை திருடிவிட நினைத்தேன், ஆனால் அவர் விடவில்லை. அவர் அரிசிமாவை வைத்து ஒரு கோலம் போட்டார், அந்த கோலத்தின் ஐந்து மூலைகளில் ஐந்து முட்டைகளை வைத்தார். அவருடைய ஒரே கைதட்டலில் ஐந்து முட்டைகளும் உடைந்தன. இதைப் பார்த்துவிட்டு நான் வீட்டிற்குச் சென்றபோது, எதையாவது உடைக்கவேண்டும் என்று பார்த்தேன். வீட்டின் கொல்லைப்புறத்தில் ஒரு கொய்யாமரம் இருந்தது. ஒரு கொய்யாப்பழத்தைப் பார்த்து கைதட்டினேன், பழம் கீழே விழுந்தது. இதையே இன்னும் சில பழங்களுக்குச் செய்தேன். ஒவ்வொரு முறை கைதட்டியதும் நான் பார்த்த பழம் கீழே விழுந்தது. இதைக் காட்ட என் நண்பர்கள் சிலரை அழைத்து வந்தேன். அவர்களிடம் "எந்தப் பழம் வேண்டும்?" என்று கேட்டேன். அவர்கள் கைகாட்டினர். நான் அதைப் பார்த்து கைதட்டினேன், உடனே அந்தப்பழம் விழுந்தது. திடீரென என் உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் ஒரு அசிங்கமான அறுவறுப்பு பரவியது. நான் செய்வது முற்றிலும் தவறு என்று உணர்ந்து அதை உடனே நிறுத்தினேன். பொருள்தன்மையில் செயல் செய்வதற்கு உங்கள் சக்திகளை பயன்படுத்துவது உயிர்தன்மைக்கு முற்றிலும் எதிர்மறையான செயல்முறை. உலகின் பொருள்தன்மை சார்ந்த அம்சங்கள், பொருள்நிலை பரிமாணங்களான உடல் மற்றும் மனம் கொண்டு கையாளப்பட வேண்டும்.

காற்றிலிருந்து பொருட்கள் வரவேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால், அதற்காக நீங்கள் பாடுபடத் தயாராக இல்லை என்றே அர்த்தம். இது முதல் நாளிலிருந்தே உங்களுக்கு நான் புரியவைக்க முயற்சி செய்யும் விஷயத்திற்கு நேர்மாறானது. "உங்கள் வாழ்க்கையில் எல்லாவற்றுக்கும் நீங்கள் பொறுப்பு." இப்போது வேறொருவரிடம் இருப்பது உங்களுக்கு வேண்டும் என்றால், இது மிக மோசமான பிரச்சனை. பூமியில் நீங்கள்தான் ஒரே மனிதர் என்று வைத்துக்கொள்வோம், அப்போதும் இவை அனைத்தும் உங்களுக்குத் தேவைப்படுமா? அப்போது உங்களை மிகப்பெரிய விதத்தில் மேம்படுத்துவது மட்டுமே உங்கள் நோக்கமாக இருக்கும்.

நீங்கள் அவ்வளவுதான் செய்யவேண்டும். என்ன தேவையோ அதை மட்டும் செய்யுங்கள், அதற்கு அதிகமாகவும் இல்லை, குறைவாகவும் இல்லை. பார்க்கக் கண்ணிருந்தால், உலகில் இப்போது தேவைப்படும் கோடி விஷயங்கள் இருக்கின்றன. பொருள்நிலையில் செயல் என்பது என்ன தேவையோ அதைச் செய்வது பற்றியது. ஆசைகளை நிறைவேற்றும் மரம் இருந்து, அதிலிருந்து பொருட்கள் விழுந்தால், அப்பொருட்கள் அனைத்தையும் வைத்து என்ன செய்வீர்கள்? இப்போது நீங்கள் உருவாக்கும் ஒவ்வொன்றுக்கும் முயற்சி எடுக்க வேண்டியிருக்கிறது. ஒரு கட்டிடம் கட்டவேண்டும் என்று வைத்துக்கொள்வோம், அதற்கு நிலத்தைத் தோண்ட வேண்டும், இரும்பு, செங்கல், சிமெண்ட், போன்ற பொருட்களை கொண்டுவர வேண்டும். இந்த பொருட்கள் அனைத்தும் பூமியிலிருந்தே வருகின்றன. இப்பொருட்களை உற்பத்தி செய்து, ஒன்றாகச் சேர்த்து கட்டமைத்து, ஒரு கட்டிடம் எழுப்புவதில் எவ்வளவு வேலைகள் உள்ளன!

அதற்கு அதிகப்படியான வேலை தேவையிருக்கும் போதிலும், பூமியையே அழிக்கும் அளவிற்கு நாம் கட்டிடங்கள் கட்டி வருகிறோம். விருப்பங்களை நிறைவேற்றும் மரம் இருந்திருந்தால், இன்னும் அதிகமாக வேண்டும் நீங்கள் கேட்பீர்கள். இப்போது நீங்களே கட்டவேண்டிய நிலை இருப்பதால், மூன்று பெட்-ரூம் கொண்ட வீடு வேண்டும் என்று நினைக்கிறீர்கள். அது மரத்திலிருந்து விழக்கூடியதாக இருந்திருந்தால், நூறு பெட்-ரூம் வீடு வேண்டும் என்று கேட்பீர்கள். அத்தனை பெட்-ரூம்களையும் பயன்படுத்துவீர்களா மாட்டீர்களா என்றுகூட சிந்திக்க மாட்டீர்கள். நூறு பெட்-ரூம் இருந்தால் அதை வீடு என்று சொல்லமுடியாது, ஹோட்டல் என்றுதான் சொல்லவேண்டும். ஆனால் அதற்குத் தேவைப்படும் கடுமையான வேலைகளையும் தாண்டி, இப்படிப்பட்ட வீடுகளையும் மக்கள் கட்டியுள்ளார்கள். எல்லாம் மரத்திலிருந்து விழுந்தால், என்ன கொடுமையான நிலைகளுக்கு இது நீளும் என்று யோசித்துப் பாருங்கள்! அது அடிப்படையில் எந்த விதத்திலும் உங்கள் வாழ்க்கையை மேம்படுத்தாது. நீங்கள் விரும்பும் அனைத்தும் நாளை காலை உங்கள் வீடு வந்து சேர்ந்தால், மீதமுள்ள உங்கள் வாழ்நாளை மிகவும் சந்தோஷமாகக் கழிப்பீர்கள் என்று நினைக்கிறீர்களா? ஐம்பது வருடங்களுக்கு முன்னால் மனிதர்களிடம் இருந்ததோடு ஒப்பிடும்போது, இப்போது ஏற்கனவே உங்களுக்கு நிறைய வசதிகள் கிடைத்துவிட்டன. ஆனாலும் இன்னும் அதிகமாக வேண்டும் என்ற வெறியோடு இருக்கிறீர்கள்.

இப்போது இருப்பதைவிட இன்னும் ஆயிரம் மடங்கு உங்களிடம் இருந்தால், இந்த வெறி மறைந்துவிடும் என்று நினைக்கிறீர்களா? அது மறையாது. நமக்கு அதிக மரங்கள் நிச்சயமாக வேண்டும், ஆனால் ஆசைகளை நிறைவேற்றும் மரங்களல்ல. உடலும் மனதும் நீங்கள் விரும்புவதை மட்டுமே செய்யவேண்டும். உங்கள் உடலும் மனதும் நீங்கள் விரும்புவதை மட்டுமே செய்தால், நீங்கள் அற்புதமான வாழ்க்கை வாழ்வீர்கள். நீங்கள் விரும்புவது முயற்சியின்றி நடந்தேறும். உங்களுக்கு என்ன வேண்டும் என்ன வேண்டாம் என்றுகூட நீங்கள் தேர்ந்தெடுக்கக் கூடாது. அற்புதமாக வாழவேண்டும் என்று மட்டும் தேர்வு செய்யுங்கள். நீங்கள் அற்புதமாக வாழும்போது, குகையில் வாழ்கிறீர்களா, குடிசையில் வாழ்கிறீர்களா, அல்லது அரண்மனையில் வாழ்கிறீர்களா என்பதில் என்ன வித்தியாசம் இருக்கப்போகிறது? நீங்கள் அற்புதமாக வாழ்கிறீர்கள் என்பது மட்டும்தான் முக்கியம்.

அன்பும் அருளும்

 
 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1