இந்த வார சத்குரு ஸ்பாட்டில், சத்குரு அவர்கள் தனக்குள் நிகழும் மாற்றம் குறித்தும், உலகெங்கும் உள்ள மனிதர்களின் வாழ்க்கை குறித்த கண்ணோட்டம் மாறும் இவ்வேளையில், மனிதகுலத்திற்கு அடுத்த சில வருடங்களில் வரவிருக்கும் பொற்காலம் குறித்தும் பகிர்ந்துள்ளார். படித்து மாற்றத்திற்குத் தயாராவோம்.

கடந்த சில மாதங்களில் அசுரத்தனமான அளவில் என் பயணங்கள் இருந்தன. எனக்கு வயதாகியபிறகு, ஒரு பயணப்பெட்டியிலிருந்து வாழ்வதிலிருந்து, அலமாரியிலிருந்து வாழ்வதற்கு முன்னேறுவேன் என்று நினைத்தேன், ஆனால் மீண்டும் பயணப்பெட்டிக்கே திரும்புகிறேன். கடந்த ஒன்றரை மாதங்களாக, நாம் ஒரு காலத்திலிருந்து இன்னொரு காலத்திற்கு மாறும் இடைப்பட்ட காலத்தில் இருந்தோம். தோராயமாக ஏப்ரல் கடைசி அல்லது மே ஆரம்பத்தில், சூரியனின் ஐந்து சுழற்சிக்காலம் எனக்கு நிறைவடைந்தது. வரும் 12 ஆண்டுகள் பூமியில் ஆன்மீகத்திற்குப் பொற்காலமாக இருக்கப்போகிறது. பலவிதங்களில் இது அற்புதமான சாத்தியங்களுக்கான நேரமாக அமையப்போகிறது. நாம் மாறும் இந்த அதிவேக gear-ல், ஆன்மீக இயக்கத்திற்கும், ஈஷாவிற்கும், உங்கள் அனைவருக்கும் இது நல்ல வேகமாக இருக்கும். அதற்கேற்ப நிறைய வேலையும் இருக்கும். செயலைப் பொருத்தவரை, அதன் பெரும்பாலான சுமையை நான் எடுத்துக்கொள்வேன், ஆனால் நான் என்னிடம் இருப்பதைப் பகிர்ந்துகொள்பவன் ஆயிற்றே! எனக்கு இருப்பதெல்லாம் வேலைகள் மட்டுமே என்பதால், அது உங்களுக்கும் கிடைக்கும். அதை நாம் சிறப்பாகச் செய்வதும், அதிக தாக்கம் ஏற்படுத்துவதாகச் செய்வதும் மிகவும் முக்கியம்.

மனிதகுலம் ஒரு திருப்புமுனையில் உள்ளது. மனிதர்கள் இருக்கும் விதத்திலேயே அடிப்படையாக ஏதோவொன்று மாறிக்கொண்டு இருக்கிறது. மனிதகுலத்திற்கு நம்பிக்கையளித்த விஷயங்கள் உடைந்து சிதறிக்கொண்டு இருக்கின்றன. உங்களுக்கு சொல்லப்பட்ட எல்லாவற்றையும் நீங்கள் நம்பியிருந்தால், நீங்கள் ஆன்மீக செயல்முறையை நாடமாட்டீர்கள். படைப்பு முழுவதும், கடவுளும், சொர்க்கமும், நரகமும், அனைத்தும் உங்களுக்குத் தெரியுமென்று நம்பத் துவங்கிவிடுவீர்கள். உங்களுக்கே தெரியாமல் வாழ்க்கை உங்களைக் கடந்து சென்றுவிடும். பெரும்பாலான மனிதர்களுக்கு, அவர்களை ஆழமாகத் தொட்டது எதுவுமில்லை. அவர்கள் ஒருபோதும் ஒரு மரத்தை கண்களில் கண்ணீர் மல்கப் பார்த்ததில்லை. அவர்கள் ஒருபோதும் ஒரு பட்டாம்பூச்சியைப் பார்த்து அதனோடு துடித்ததில்லை. அவர்கள் ஒருபோதும் சூரியனின் கதிர்கள் புல்நுனிகளில் படும்முன் அதைத் தொட்டதில்லை. அவர்கள் உண்மையில் உயிருடன் இல்லாமலே உயிர்வாழ்கிறார்கள்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வரும் சில வருடங்களில், ஆன்மீகரீதியாகவும் சரி, சமூகரீதியாகவும் சரி, பெரிய விஷயங்கள் நடக்கும். உலகில் பல மாற்றங்கள் நிகழும், என்னிடமும் நிறைய மாற்றம் ஏற்படும். அதற்குத் தயாராக இருங்கள். இது நல்ல நேரமாக இருக்கப்போகிறது, ஆனால் நல்ல விஷயங்கள் எல்லாவற்றைப் போலவும், இதுவும் அதிக வேலையோடு தான் வரும். வேறு பல அமைப்புகளும் இதற்காக முயற்சிகள் செய்துவருகிறார்கள், ஆனால் இதில் நம்முடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கதாக இருக்கும். அமெரிக்காவில் ஸ்டான்ஃபோர்டு, ஹார்வர்டு, யேல், வார்ட்டன் வணிகப் பள்ளி, பல ஐவி லீக் பள்ளிகள் என மிக உயரிய பல்கலைக்கழகங்கள், முதன்முறையாக ஆன்மீக செயல்முறைக்குக் கதவுகளைத் திறக்கிறார்கள். நேரமின்மையால் நாம் அவற்றில் சிலவற்றின் அழைப்பை மட்டும் ஏற்றுள்ளோம். ஆனால் என்னுடைய நோக்கமோ, அனைத்து தரப்புகளைச் சேர்ந்த இளைஞர்களையும் தொடுவதுதான். தனிப்பட்ட முறையில் நான் university-க்களைப் பெரிதாகக் கருதுவது கிடையாது, நான் universe-ல் வாழ்கிறேன். ஆனால் எதிர்ப்பின் கடைசி அடுக்காக இருந்தவை இப்பல்கலைக்கழகங்கள் தாம். இப்போது கல்விக்கூடங்கள் மறைஞானத்தையும் ஆன்மீகத்தையும் தங்கள் வாழ்க்கையின் அங்கமாய் ஏற்றுக்கொள்ளத் துவங்கியுள்ளன.

பிரசித்தி பெற்ற துறைகளான தொழில்துறையும், கல்வித்துறையும், அரசியல்வாதிகளும் கூட ஆன்மீகச் செயல்முறைக்குக் கதவுகள் திறப்பது, உலகிற்கு மிகவும் நல்ல விஷயம். சமீபத்தில் ஆந்திரப்பிரதேசம் மற்றும் மத்தியப்பிரதேச அரசுக்கு யோக நிகழ்ச்சிகள் நடத்தினோம். இப்போது ராஜஸ்தான் அரசுக்கு, முதல்வரிலிருந்து மந்திரிகள் மற்றும் அதகாரிகள் அனைவருக்கும் நாம் நிகழ்ச்சி நடத்தப் போகிறோம். இது, கடந்தகாலத்தில் ஆன்மீக செயல்முறைக்கும் அரசியல் செயல்முறைக்கும் மணம்முடிக்க விழைந்த பல முனிவர்கள் மற்றும் ஞானிகளின் ஆசீர்வாதம். இந்தியாவைப் போன்ற வேற்றுமைகள் நிறைந்த தேசத்தை நிர்வகிப்பது எவராலும் சாதாரணமாக செய்யக்கூடிய விஷயமல்ல. சில அரசியல்வாதிகள் மிக மோசமான செயல்களைச் செய்துள்ளார்கள், ஆனால் அற்புதமான விஷயங்களையும் சாதித்துள்ளார்கள். 1947 முதல் இன்று வரை, நம் நாட்டில் அபாரமான மாற்றம் நிகழ்ந்துள்ளது. நாம் இன்னும் சிறப்பாக செய்திருக்கலாம், ஆனால் நாம் மிகவும் மோசமான நிலையில் இல்லை. அடுத்த 5 முதல் 10 ஆண்டுகள் இந்தியாவிற்குப் பொற்காலமாக இருக்கப் போகிறது.

ஆன்மீக செயல்முறை பரவுவதற்குப் பொருளாதார வளர்ச்சி அத்தியாவசியமானது. ஏனென்றால், நன்கு சாப்பிட்டு, மனமார shopping செய்த பிறகும் வாழ்க்கை நிறைவைத் தரவில்லை என்பதை மக்கள் பார்க்க வேண்டும். இதை பசியோடு இருக்கும் ஒருவரிடம் நீங்கள் சொல்ல முடியாது - அப்படிச் சொல்வது கொடுமையானது. அவர் வயிறு நிறையவேண்டும், வயிறு நிறைந்தாலும் வாழ்க்கை நிறைவைத் தரவில்லை என்பதை அவர் உணரவேண்டும். அதனால் ஆன்மீக செயல்முறை மனிதர்களுக்கு நிகழ்வதற்கு பொருளாதார முன்னேற்றம் ஒரு முக்கியமான அம்சமாக இருக்கிறது. அதோடு, பொருளாதார முன்னேற்றத்தின் நோக்கமான மனித நல்வாழ்வை உணர்ந்திட, ஆன்மீக செயல்முறை என்பது முக்கியமான பங்கு வகிக்கிறது. பொருளாதார முன்னேற்றம் இருந்தும் மக்கள் நல்வாழ்வை உணரவில்லை என்றால், அதுவும் கொடுமையானது தான். இன்று உலகில் அதுதான் நிகழ்ந்துள்ளது. ஐரோப்பியர்களில் கிட்டத்தட்ட 40 சதவிகிதத்தினர் மனம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளுக்கு மருந்துகள் எடுத்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் பத்தில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுகிறார், அதோடு மக்கள்தொகையில் பெரும்பான்மையினர் கொஞ்சம் பணம் கிடைத்தாலே குடிப்பவர்களாக இருக்கிறார்கள். இது நல்வாழ்வு கிடையாது.

பொருளாதார நலனுக்கு ஆன்மீக நலம் மூட்டுக்கொடுக்காவிட்டால், உங்களிடம் எல்லாம் இருக்கும், ஆனால் எதுவும் இருக்காது. இந்த விதத்தில் இந்தியா அதிர்ஷ்டமான நாடு, ஏனென்றால் அடுத்த 12 ஆண்டுகளில் பொருளாதார நலனும் ஆன்மீக நலனும் பெரும்பாலும் சேர்ந்தே வரப்போகிறது. ஆனால் ஆன்மீக நலனைப் பொருத்தவரை, நாம் மனிதகுலம் முழுவதின் நலத்தையும் நம் கருத்தில் கொள்ள வேண்டும். நீங்கள் எதன்மீது அக்கறைகொண்டு, எதை உண்மையாகவே விரும்புகிறீர்களோ, அதை உருவாக்குவதில் உள்ள ஆனந்தத்தை நீங்கள் உணரவேண்டும். ஈஷாவில் சில இளைஞர்கள் ஆசிரியர்களாகவும் முழுநேரத் தன்னார்வத் தொண்டர்களாகவும் மாறுவதற்கு எழுந்து நின்று, உங்கள் ஊரிற்கே வந்து யோக நிக்ழச்சிகளை உங்களுக்கு வழங்கிட தங்கள் உயிரைக் கொடுத்து உழைத்து வந்துள்ளார்கள். நீங்களும் எழுந்து நின்று அதைச் செய்வதற்கான நேரம் வந்துவிட்டது, ஏனென்றால் ஆன்மீக இயக்கம் என்பது, ஆன்மீகம் நோக்கிச் செல்லும் நாட்டத்தையும் போக்கையும் உலகெங்கும் ஏற்படுத்தினால்தான் வெற்றிகரமானதாக இருக்கும். உங்கள் தனிப்பட்ட முக்தி கவனிக்கப்படும் - அது எங்களுக்கு ஒரு பொருட்டே கிடையாது. ஆனால் நாம் எங்கு சென்றாலும் ஆன்மீக நறுணம் வீசும் ஒரு உலகில் நாம் வாழ்வது முக்கியமல்லவா?

ஆன்மீகத்தின் இந்த வசந்தகாலம் உலகெங்கும் நிகழும் நிகழ்வாக இருக்கவேண்டும். மனிதகுலத்தின் சரித்திரத்தில், 100 கோடி மக்களிடம் ஒரே சமயத்தில் பேசக்கூடிய குரு இதுவரை இருந்ததில்லை. கிருஷ்ணர் அவ்வளவு அற்புதமாக இருந்தபோதும், மென்மையாக பேசியிருப்பார், அதனால் சிலருக்கு மட்டுமே அவர் பேசியது காதில் விழுந்திருக்கும். கௌதம புத்தர் ஒருமுகமான நோக்கம் கொண்டு இயங்கியதால், அவர் சற்று குரலை உயர்த்திப் பேசியிருப்பார், இன்னும் சற்று அதிகமான மக்கள் அவர் பேசியதைக் கேட்டிருப்பார்கள். இன்று தொழில்நுட்பத்தால் நம்மிடம் இருக்கும் ஆற்றல் எத்தகையது என்றால், தேவையான வேலையை நாம் செய்தால், நாம் இங்கே உட்கார்ந்துகொண்டு 100 கோடி மக்களிடம் பேசமுடியும். முன்பு எப்போதும் இது சாத்தியமாக இருந்ததில்லை. எல்லாவிதமான குப்பையும் உலகம் முழுவதையும் சென்றடையும் போது, ஆன்மீக செயல்முறை உலகம் முழுவதையும் சென்றடைவதற்கான நேரம் வந்துவிட்டது.

இந்த கட்டத்தில், நம்மோடு இருந்து, நம் பணிகளில் பல விதங்களில் பங்களிப்பவர்களில், ஏற்கனவே மூன்றில் இரண்டு பங்கு மக்கள் நம்மோடு எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளாதவர்கள். அவர்கள் YouTube-ல், Facebook-ல், நம்மைப் பார்த்து, நம் புத்தகம் படித்து, அல்லது நம்மை தொலைக்காட்சியில் பார்த்து ஊக்கம் பெற்றவர்கள். உதாரணம் சொல்லவேண்டும் என்றால், நான் சமீபத்தில் உஜ்ஜெயின் கும்பமேளாவிற்குச் சென்றபோது, பிரதமரின் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஆயுதம் ஏந்திய போலீஸ் இருந்தார்கள். என்னைப் பார்த்தவுடன் முகத்தில் புன்னகையுடன், மஹாசிவராத்திரியின் போது thunderclap-ல் வெளியான "சிவ சிவ" பாடலைப் பாட ஆரம்பித்துவிட்டனர். அவர்கள் மஹாசிவராத்திரியில் நம்மோடு நேரடி வர்ணனையில் இணைந்துள்ளனர், அவர்களைப் பொருத்தவரை அவர்கள் நம்மில் ஒருவராகவே இருக்கிறார்கள்.

தொழில்நுட்பத்தின் அதிசயங்கள் சரியான நோக்கத்திற்காக பயன்படுத்தப்பட வேண்டும், அதாவது மனிதகுலத்தின் நல்வாழ்விற்குப் பயன்படுத்தப்பட வேண்டும். ஆன்மீக செயல்முறையும் பொருளாதார செயல்முறையும் அரசியல் செயல்முறையும் ஒன்று சேர்த்தால்தான், மனித நல்வாழ்வு நிகழமுடியும். இந்த விசேஷமான தருணத்திற்கு நீங்கள் அனைவரும் தயாராக வேண்டும். பல விஷயங்கள் செய்வதற்குக் காத்திருக்கிறது. அடுத்த சில வருடங்களில் அவை பல்வேறு விதங்களில் வடிவம் கொள்ளத் துவங்குவதை கவனிப்பீர்கள். நான் இதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன் - நாம் gear மாற்றி வேகத்தை அதிகரிக்கும்போது, இறுகப் பிடித்துக்கொள்ளுங்கள், இல்லாவிட்டால் கீழே விழுந்துவிடுவீர்கள். எனக்கு மிகவும் பிரியமாக இருந்தவர்கள் பலபேர் பிடித்துக்கொள்ளாமல் கீழே விழுவதை என் வாழ்க்கை முழுவதும் பார்த்திருக்கிறேன். எனக்கு மிகவும் முக்கியமானது, வேகம் மாறும்போது நீங்கள் கீழே விழுந்துவிடக் கூடாது என்பதுதான். அதனால் உங்கள் அனைவரிடமும் சொல்கிறேன், நாம் இப்போது gear மாறுகிறோம். தூங்கிக்கொண்டு இருப்பவர்கள் - விழுந்துவிடாதீர்கள். இதை நாம் உங்களுக்கும் உலகிற்கும் நிகழச்செய்வோம்.

Love & Grace