சிவன் - என்றுமே நிரந்தர Fashion!

பகுதி 7

சுடுகாடு, மயானம் என்றால் அனைவருக்குமே ஒரு பயம், ஒருவித தயக்கம், கலக்கம் இருக்கும். முடிந்தவரை அவை இருக்கும் வழியில் கூட செல்லாமல், சுற்றிச் செல்லும் பாதையையே தேர்ந்தெடுப்போம். ஆனால் சிவனோ சுடுகாட்டிலேயே சென்று அமர்ந்து கொண்டார். அவர் ஏன் அவ்வாறு செய்தார்? சுடுகாட்டில் இறந்து போனவர்களும், அவர்கள் ஆவிகளும் இருக்கின்ற இடத்தில் சிவனுக்கு என்ன வேலை?

சத்குரு:

இன்று மனிதர்கள் பலரிடம் தீவிரம் இருப்பதில்லை. பலரின் வாழ்வில் மரணம் நெருங்கும் அந்தக் கணம், அல்லது கிட்டத்தட்ட மரணம் நிகழ்ந்திருக்கக் கூடிய அந்த நொடி தான், அவர்கள் வாழ்விலேயே மிகத் தீவிரமான நேரமாக இருக்கிறது. இந்தத் தீவிரத்தை அவர்களின் வாழ்நாளில் வேறு எப்போதுமே அவர்கள் அனுபவித்திருக்க மாட்டார்கள். அன்பு, நேசம், பாசம், காதல், சிரிப்பு, சந்தோஷம், சோகம், துக்கம் என எதிலுமே அவர்களிடம் இந்த அளவிற்குத் தீவிரம் தென்படுவதில்லை - மரணத்தைத் தவிர.

நீங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கை, வாழ்க்கை என்ற பெயரில் ஊரெல்லாம் நடக்கும் நாடகம் ஆகிய முட்டாள்த்தனங்களில் அலுப்படைந்த சிவன், ஷ்மஷானத்தில் அமர்ந்தார்.

இதனால் தான் சிவன் மயானத்தில் சென்றமர்ந்தார். மயானத்தை 'காயந்த்த' என்றழைப்பார்கள். 'காயா' என்றால் உடல். 'அந்த்த' என்றால் முடிவு. அதாவது உடல் முடியும் இடம். கவனிக்க, இதை 'ஜீவந்த்த' என்று சொல்லாமல் 'காயந்த்த' என்றே சொல்கிறார்கள். அதாவது, இது உயிர் முடியும் இடமல்ல; உடல் மட்டும் முடிவுறும் இடம். இந்த மண்ணில் இருந்து நீங்கள் எடுத்து சேர்த்த அனைத்தையும் இங்கேயே விட்டுவிட வேண்டும்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வாழ்பவர்களிடம் தேவையான அளவிற்கு தீவிரம் இருப்பதில்லை. நீங்கள், நீங்கள் வாழும் வாழ்க்கை, வாழ்க்கை என்ற பெயரில் ஊரெல்லாம் நடக்கும் நாடகம் ஆகிய முட்டாள்த்தனங்களில் அலுப்படைந்த சிவன், ஷ்மஷானத்தில் அமர்ந்தார். ஊரெங்கும் நடக்கும் பலவற்றுள், 'உண்மை'யாக நடக்கும் ஒன்றே ஒன்று... அதுவும் மயானத்தில் தான் நடக்கிறது. அதனால் சிவன் தன் இருப்பிடத்தை 'ஷ்மஷான்' த்திற்கு (மயானம்) மாற்றிக் கொண்டார். 'ஷ்ம' என்றால் சவம், இறந்தவரின் உடல். 'ஷான்' என்றால் படுக்கை. வாழ்பவர்களின் மத்தியில் இருப்பது நேர விரயம் என்றுணர்ந்த சிவன், இறந்தவர்களின் உடல் இருக்கும் இடத்திற்கு வசிக்கச் சென்றார்.

எந்த இடத்தில் வாழ்க்கையின் அர்த்தம் மிகத் தெளிவாக விளங்குமோ, அவ்விடத்திலே சிவன் அமர்ந்தார். நீங்கள் பயத்தால் கவரப்பட்டிருந்தாலோ, பிழைப்பே கவனமாக இருந்தாலோ, 'சுய-பாதுகாப்பு' கவசத்திற்குள் வாழ்ந்திருந்தாலோ, இதில் அர்த்தம் இருப்பதாக உங்களுக்குத் தோன்றாது. ஆனால் உண்மையை உணர்ந்தே ஆகவேண்டும் என்ற உந்துதல் உங்களுக்கு இருந்தால், அப்போது இதில் அர்த்தம் பொதிந்திருப்பதை நீங்களே உணர்வீர்கள்.

சிவனை அழிக்கும் சக்தி என்று சொல்வார்கள். இது ஏதோ அவருக்கு உங்களை அழிப்பதில் அவ்வளவு ஆசை என்று அர்த்தமல்ல. மயானத்தில் அவர் உங்கள் 'உடல்' அழிவதற்காகக் காத்திருக்கிறார். காரணம், ஒருவரின் உடல் அழியும் வரை, அவரின் சுற்றத்தாருக்கும் கூட மரணம் என்றால் என்ன என்பது தெளிவாகப் புரிவதில்லை. யாரேனும் ஒருவர் இறந்துவிட்டால், அவரின் நெருங்கியவர்கள் அவரின் உடல் மேல் அழுது, புலம்பி, முத்தம் வைத்து, கட்டி அணைத்து, எப்படியேனும் அவரை மீண்டும் உயிர் பிழைக்கச் செய்ய, இன்னும் ஏதேதோ செய்வார்கள். ஆனால் அந்த உடலிற்கு நெருப்பு வைத்துவிட்டால், அதனருகில் சென்று யாரும் நெருப்பை கட்டியணைக்க முயலமாட்டார்கள். அவர்களின் 'சுய-பாதுகாப்பு'க் கவசம் அதை எப்படியும் தடுத்திடும்.

இங்கு வாழும் பலரை, நீங்கள் ஊசி வைத்துக் குத்தி தான் சோகமாக்க வேண்டும் என்றில்லை. அவர்களை சும்மா தனியே விட்டாலே, அவர்கள் துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள். அவர்களின் சுய-பாதுகாப்புக் கவசம் அளவுகடந்து அதிகரித்திருப்பதால், அதன் இறுக்கம் வாழ்க்கை என்ற ஒன்று நடப்பதையே தடுக்கும் வகையில் அமைந்துவிட்டது.

மயானத்தில் அமர்ந்திருக்கும் சிவன் உங்களுக்குக் கூறும் செய்தி:

நீங்கள் இறக்கிறீர்கள் என்றாலும் அது வேலை செய்யும். ஆனால் வாழ்வையே தடுத்துக் கொள்ள நினைத்தால் அது வேலை செய்யாது. வாழ்வை வாழ்கிறீர்களா அல்லது தடுக்கிறீர்களா என்பது நீங்கள் என்ன செய்தீர்கள் அல்லது செய்யவில்லை என்பதைப் பொருத்து நிர்ணயமாகவில்லை. இந்த நிமிடத்தில் எந்த அளவிற்குத் தீவிரமாக, முழுமனதாக அதில் ஈடுபடுகிறீர்கள் என்பதைப் பொருத்தே, அது தீர்மானிக்கப் படுகிறது.

உங்களுக்குள் தேவையான அளவிற்கு தீவிரம் இல்லாமல் போனது, 'பிழைப்பு' தான் உங்களுக்கு முக்கியம் என்று நீங்கள் பதித்துக் கொண்டுவிட்டதால் தான். இந்த உடலில் இரண்டு விதமான அடிப்படை சக்திகள் செயல்படுகின்றன. ஒன்று, பிழைப்பைத் தூண்டுவது. மற்றொன்று எல்லையில்லாமல் விரிவதற்கு உந்துவது. பிழைப்பைத் தூண்டும் சக்திக்கு நீங்கள் முக்கியத்துவம் கொடுத்தால், அது மிதமான தீவிரத்திலேயே உங்களைச் செலுத்தும். பிழைப்பு என்றால் பாதுகாப்பாய், ஜாக்கிரதையாய், ஆபத்து நேர்ந்திடாமல் செயல்பட வேண்டுமே! ஆனால் இதுவே எல்லையில்லாமல் விரிய நீங்கள் எண்ணிவிட்டால், உங்கள் முழு சக்தியும் ஒருநோக்காய் அதிலே பாயும்போது, வாழ்க்கை அதன் முழு தீவிரத்தில் நிகழும்.

எது நமக்குச் சரியாகப் புரியவில்லையோ, அது தான் நமக்கு பயத்தைக் கொடுக்கும். பயத்திற்குக் கட்டுப்பட்டால், பாதியோ, அல்லது அதற்கும் குறைவான வாழ்க்கை தான் வாழமுடியும். பாதி வாழ்க்கை வாழ்வதில் என்ன பயன்? அதனால் தான் வாழ்வை அதன் முழு தீவிரத்தில் உணர எண்ணிய சிவன், நாடகங்கள் ஏதும் நிகழா 'உண்மை' விளங்கும் இடமான மயானத்தில் அமர்ந்திருந்தார்.

அடுத்த பதிவில்...

சிவன் - விஷ்ணுவின் சில சுவாரஸ்யமான சந்திப்புகள்...


சிவன் - என்றுமே நிரந்தர Fashion! தொடரின் பிற பதிவுகள்

Vinod