விதை மஞ்சள், கரும்பு & செவ்வாழை... இயற்கை விவசாய நுட்பங்கள்!
ஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் கோபி வட்டத்தில் கீழ்வாணி கிராமத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி திரு.கணேஷ் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவரும் இவரது அனுபவங்களை கள்ளிப்பட்டி கலைவாணியின் வெள்ளந்தி பேச்சுகளுடன் படித்து மகிழலாம்!
பூமித் தாயின் புன்னகை! -இயற்கை வழி விவசாயம்-பகுதி 6
ஈஷா விவசாயக்குழு ஈரோடு மாவட்டம் கோபி வட்டத்தில் கீழ்வாணி கிராமத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி திரு.கணேஷ் அவர்களை அவரது பண்ணையில் சந்தித்தது. கடந்த 5 ஆண்டுகளாக இயற்கை விவசாயம் செய்துவரும் இவரது அனுபவங்களை கள்ளிப்பட்டி கலைவாணியின் வெள்ளந்தி பேச்சுகளுடன் படித்து மகிழலாம்!
விதை மஞ்சள்...
கணேஷ் அவர்களின் பண்ணையில் 25 சென்ட் நிலத்தில் விதை மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது. இவரது நிலத்தில் ‘ஈரோடு விரலி’ என்ற சம்பா ரக மஞ்சள் பயிர்கள் 70 நாளில் இரண்டரை அடி உயரத்தில் செழிப்பாக வளர்ந்துள்ளது. மஞ்சள் பயிரில் வரிசைக்கு வரிசை ஒன்றரை அடி இடைவெளியும், செடிக்குச் செடி ஒரு அடி இடைவெளியும் விடப்பட்டுள்ளது.
மஞ்சள் வரிசைகளுக்கு இடையே ஊடுபயிராக வெங்காயம் பயிர்செய்யப்பட்டு அறுவடை செய்யப்பட்டுள்ளது. மேலும், சேனை, மக்காச்சோளம், சித்தகத்தி, செங்கீரை, வெண்டை, ஆமணக்கு போன்றவை பயிர் செய்யப்பட்டுள்ளது. அடியுரமாக தொழு உரம் மட்டுமே போடப்பட்டுள்ளது.
“ஏனுங்க நம்ம கீழ்வாணிக்கார அண்ணா நல்ல வெகரமாத்தாங் செஞ்சிருக்காப்டிங்க! நவீன விவசாயம்கிற போர்ல பக்கத்தால பக்கத்தால நருவசா பயிர்கள நட்டு வச்சுப்போட்டா, பொறவு வௌச்சல் எங்கெருந்துங்கண்ணா வரும்? நீங்களே சொல்லுங்க... செடிகளும் மனுசங்கள மாதிரி தானுங்க! இடைவெளி இருந்தாதானுங்க நல்லா வளருமுங்க! அதோட ஊடுபயிரும் நட்டு நல்ல வருமானம் பாக்கலாமுங்க!”
செலவை குறைக்கும் மூடாக்கு
மஞ்சள் பயிர் முழுவதற்கும் கரும்பு சோகையினால் மூடாக்கு செய்யப்பட்டுள்ளது. ட்ரிப் மூலம் தண்ணீர் பாய்ச்சுவதால் நெருக்கமாக மூடாக்கு செய்யப்பட்டுள்ளது. இதனால் களைகள் முளைப்பது இல்லை, களை எடுக்கும் செலவும் இல்லை. தண்ணீர் கொடுத்து 7 நாட்கள் ஆகியும் பயிர் வாடாமல் செழிப்பாக உள்ளது.
எலிகள் ட்ரிப்பை சேதப்படுத்தினால் ஜீவாமிர்தத்துடன் கோமியத்தை சற்று அதிகம் சேர்த்துக்கொள்ளலாம். தண்ணீருடன் பெருங்காயக் கரைசலையும் கலந்து விடலாம் இதனால் எலித்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம்.
Subscribe
“அட கெரகம் புடிச்ச இந்த எலிக அப்பப்போ நம்ம பொறுமய சோதிக்குமுங்க... எங்க பண்ணையிலயும் இதே ரவுசுதானுங்கண்ணா! நம்ம கணேஷ் அண்ணா சொல்ற ஐடியாவ என்ற பண்ணையிலயும் செயல்படுத்தப்போறேனுங்க!”
தண்ணீரை வாய்க்கால் மூலம் பாசனம் செய்பவர்கள் பட்டத்திற்கு மட்டும் மூடாக்கு செய்துகொள்ளலாம், வாய்க்காலில் மூடாக்கு தேவையில்லை. மூடாக்குக்கு உள்ளேயே தண்ணீர் ஊறி சென்றுவிடும்.
மகசூல்
ஒரு ஏக்கர் மஞ்சள் பயிரிலிருந்து வேகவைத்து காயவைத்து பதப்படுத்திய மஞ்சள் 4 டன் வரை கிடைக்கும் என்றும், கடந்த ஆண்டு ஒன்றேகால் ஏக்கர் நிலத்தில் பச்சை மஞ்சள் 26 டன் மகசூலாக கிடைத்துள்ளதாகவும் திரு.கணேஷ் தெரிவிக்கிறார்.
சேமித்து வைக்கும்போது மஞ்சள் அழுகல் நோய் (Rhizome storage rot) ஏற்படும் வாய்ப்புள்ளது. இதை கட்டுப்படுத்துவதற்கு அறுவடை செய்யப்பட்ட மஞ்சளில் சூடோமோனால், ட்ரைகோடெர்மா விரிடி போன்ற நுண்ணுயிர் ஊட்டங்களை விதைக்கிழங்கின் மேல் தூவிவிடுவதால் விதைக்கிழங்கு அழுகல் நோயிலிருந்து பாதுகாக்கப்படுகிறது.
“சொத்து போல விதைய பேணணும், கத்துகிட்ட கலைய மதிக்கணும்’னு என்ற அப்பத்தா அடிக்கடி சொல்லுவாப்டிங்கோ. அதுமாறி இந்த மஞ்சள் விதைய நம்ம அண்ணா கண்ணுங்கருத்துமா பாத்துக்கணும்னு டிப்ஸ் குடுக்குறாப்டி!”
ஒப்பீடு
கணேஷ் அவர்களின் தோட்டத்திற்கு அருகில் உள்ள தோட்டத்தில் இரசாயன விவசாய முறையில் மஞ்சள் பயிர் செய்யப்பட்டுள்ளது. 90 நாள் வயதுடைய அந்த மஞ்சள் பயிர்கள், இவரது 70 நாள் வயதுடைய இயற்கை விவசாய மஞ்சள் பயிர்களைவிட உயரம் குறைவாகவும், இலைகள் வெளிரியும் காணப்படுகிறது. இது இயற்கை விவசாயத்தின் மேன்மையை உணர்த்தும் சாட்சியாக உள்ளது.
இயற்கை விவசாயத்தில் விளையும் மஞ்சளில் குர்குமின் (Curcumin) அளவு சற்று அதிகம் உள்ளது. (குர்குமின் என்பது மஞ்சளில் உள்ள, நம் உடலுக்கு நன்மை செய்யக்கூடிய மருந்துபொருளாகும்)
“பொறவு இருக்காதுங்களா... இயற்கை விவசாயத்துல வளர்ற பயிர் கிட்டத்தாலகூட கெமிக்கல் விவசாய பயிருக வரமுடியாதுங்கண்ணா... என்ற வூட்டு பண்ணையில வந்து ஒருநாளைக்கு பாருங்க... அட கள்ளிப்பட்டிக்கு நானே பஸ் டிக்கெட்டு போட்டு கூட்டுப்போறேனுங்க! வந்து பாருங்க அப்பதானுங்க புரியும்?!”
கரும்பு
இரண்டு ஏக்கரில் நடப்பட்டுள்ள கரும்பு வரிசைக்கு வரிசை ஆறரை அடி இடைவெளியுடன் உள்ளது. கரும்புக்கு கரும்பு இரண்டு அடி இடைவெளியுள்ளது. ட்ரிப் மூன்றரை அடி இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளது.
ஊடுபயிராக தட்டை, பச்சைப்பயறு, உளுந்து, ஆமணக்கு, சித்தகத்தி, சேனை, செங்கீரை போன்றவை பயிரிடப்பட்டுள்ளன. இவை அறுவடைக்கு வந்தவுடன் அடுத்ததாக வேறு ஊடுபயிர் செய்து கொள்ள முடியும். அந்த அளவுக்கு இடைவெளி உள்ளது.
பாலேக்கர் அய்யா கரும்பில் சோகை உறிக்கக்கூடாது என்று கூறுவார், அவர் கூறியபடி 8 x 8 என்ற அளவில் கரும்பு பயிர் செய்தால் சோகை உறிக்கவேண்டாம், இடைவெளி அதிகம் உள்ளதால் சூரியஒளி நன்கு கிடைக்கும், ஆனால் இடைவெளி குறைத்து பயிர் செய்யும் போது சோகை உறிப்பது அவசியம், சோகை உறிக்கவில்லை என்றால் கரும்பு பருக்காது, மேலும் செவ்வழுகல் நோய் ஏற்படும் என்று கூறுகிறார்.
“பறிக்காத சோலையும் உறிக்காத சோகையும் அழகாத்தான் இருக்கும்னு சொல்லுவாப்டி எங்க பெரிய வூட்டு ஆத்தா! அதுமாறி கரும்புல இடைவெளி இருந்தா சோகை உறிக்குற வேல மிச்சமுங்கண்ணா!”
செவ்வாழை
அரை ஏக்கரில் மூன்றாவது கட்டையாக செவ்வாழை பயிர் வளர்ந்துள்ளது. செவ்வாழையில் கிழங்கு அழுகல் நோயைக் கட்டுப்படுத்த சூடோமோனாஸ் இரண்டு கிலோவும், டிரேகோடெர்மா விரிடி இரண்டு கிலோவும் பயன்படுத்தியுள்ளார். இரண்டையும் கலக்காமல் தனித்தனியாகவே பயன்படுத்த வேண்டும் அப்போது நல்ல பலன் கிடைக்கும்.
தனது தோட்டத்தில் விளையும் மஞ்சளை விதைக்கிழங்காகவே விற்பனை செய்வதாகவும், அந்தியூர் மற்றும் பவானி விவசாயிகள் தன்னிடம் விதைக்கிழங்கை வாங்கிச்செல்வதாகவும் கூறும் திரு. கணேஷ் அவர்கள், தேவைப்படுவோர் சித்திரை மாதத்தில் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறுகிறார்.
தொடர்புக்கு: 9715098822