இந்த தொடரில், ஒவ்வொரு மாதமும் ஈஷா பிரம்மச்சாரிகள் அல்லது சந்நியாசிகளில் ஒருவர் தனது சொந்த பின்புலம், பார்வைகள் மற்றும் இந்த புனிதமான “தெய்வீகப் பாதை"யில் பயணிப்பதன் அனுபவங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.”

யோகாவின் அறிமுகம்

சுவாமி வசுநந்தா: யோகா பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால், இன்று... வகுப்பில் சேறும்போது, யோகா பற்றிய புகைப்படங்களை பார்த்தது என் நினைவிற்கு வந்தது. அப்போது “இதையெல்லாம் என்னால் செய்ய முடியுமா? இதெல்லாம் எனக்குத் தேவைதானா?” என்று தோன்றியது. என்றாலும் என் சகோதரியின் மகன் இதிலிருந்து நழுவ எனக்கு வாய்ப்பளிக்கவில்லை. இப்படித்தான் எனது முதல் யோகா வகுப்பு ஆரம்பமானது - சத்குருவுடன்! அதற்குப்பின் எல்லாம் மாறிப்போனது.

சூன்ய தியானத்திற்கு சத்குரு எங்களுக்கு தீட்சை அளித்தபோது, அந்த பீஜ மந்திரத்தின் ஒலியில் அந்த அறையே ரீங்கறித்தது. அந்த அதிர்வில் நான் என்னையே மறந்துபோனேன். அந்த வகுப்பின் கடைசி நாளன்று, கோவையில் உள்ள சத்குரு ஸ்ரீபிரம்மா அவர்களின் சேவாசிரமத்தில் சந்தித்தோம். அவ்விடம் நான் தங்கியிருந்த இடத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில்தான் இருந்தது என்றாலும், அதற்குமுன் ஒருமுறை கூட நான் அங்கு சென்றதில்லை. அந்த ஆசிரமத்தில் சத்குரு ஸ்ரீபிரம்மா அவர்களின் புகைப்படத்தைப் பார்த்தபோது, “பார்ப்பதற்கு இவர் நம் சத்குரு போலவே இருக்கிறாரே,” என்று நினைத்தேன். அந்த வகுப்பு என் மீது மிக ஆழமானதொரு தாக்கத்தை ஏற்படுத்தியது. அதைவிட அதிகமாக என்னைக் கவர்ந்த ஒரு விஷயம், தன்னார்வத் தொண்டர்கள் தங்களை அர்ப்பணித்த விதம். அவர்களில் ஒருவனாக ஆக ஆசைப்பட்டேன். அதனால் கோவையைச் சுற்றி வகுப்பு எங்கு நடந்தாலும், தீட்சை நாளன்று அங்கு தன்னார்வத் தொண்டு செய்யச் சென்றுவிடுவேன். இப்படி ஆரம்பித்ததுதான். வெகுவிரைவில் கோவையில் நடந்த ஈஷாவின் பல செயல்பாடுகளிலும் பங்கெடுக்க துவங்கி, ஒவ்வொரு வாரமும் ஞாயிறன்று ஆசிரமத்திற்குச் செல்ல ஆரம்பித்தேன்.

தன்னார்வத் தொண்டும் சத்குருவின் அருகில் இருக்கும் வாய்ப்பும்

1995 மே மாதத்தில் ஆசிரமத்தில் முதல்முறையாக நடைபெற்ற சம்யமா வகுப்பிற்கு தன்னார்வத் தொண்டு செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 200க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களுக்குத் தேவையானதை செய்துகொடுக்க நாங்கள் 11 பேர்தான் இருந்தோம். வகுப்பிற்குத் தேவையான விதத்தில் ஹாலை தயார்செய்ய, சுத்தம் செய்ய, சமைக்க, காவல் காக்க... எல்லாவற்றையும் நாங்கள் 11 பேர் பார்த்துக் கொண்டோம். தற்போதைய 2வது செக்யூரிட்டி கேட்டில் இருந்து முக்கோண கட்டிடம் வரை, பெரிய பெரிய பாத்திரங்களில் உணவை வைத்து, அதைக் கையில் சுமந்துகொண்டு நடந்தே செல்வோம். எல்லாவற்றையும் நாங்களே செய்வது மிகவும் கடினமாக இருந்தாலும், அதைச் செய்வது எனக்கு ஆனந்தமாக இருந்தது. அதுவரை நான் சம்யமா வகுப்பில் கலந்து கொண்டதில்லை என்பதால், எனக்கு அது இன்னும் மர்மமாக, என்னவென்று புரியாத புதிராக இருந்தது. ஆசிரமம் முழுவதையும் ஒரு ஆழமான, இனம்புரியாத அமைதி சூழ்ந்திருக்கும். ஆனால், நடுநடுவே மனிதர்கள் அலறும் சப்தமும், அவர்கள் எழுப்பிய விலங்கு பறவைகளின் சப்தமும், தரையில் உருளும் சப்தமும் கேட்கும். முதல் இரண்டு நாட்களுக்குப் பிறகு, நிலவொளியில் நள்ளிரவில் தியானம் செய்ய அவர்கள் வெளியில் வந்தார்கள். அதில் நானும் பங்கேற்றபோது எனக்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. அதன்பிறகு சம்யமாவில் கலந்துகொள்ள எனக்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தது.

ஒருமுறை கரூரில் நடந்த வகுப்பிற்கு தன்னார்வத் தொண்டு செய்து கொண்டிருந்தேன். அங்கு சத்குரு தங்கியிருந்த தன்னார்வத் தொண்டரின் வீட்டருகே சமணர்களின் குகை ஒன்று இருந்தது. அந்த குகை இன்றும்கூட குறிப்பிட்டதொரு சக்தி தீவிரத்தில், ஆன்மீக சாதனா செய்வதற்கு மிகவும் ஏற்ற இடமாக இருப்பது பற்றி சத்குரு பலமுறை பகிர்ந்திருந்தார். வகுப்பு முடிந்தபின் சத்குரு என்னையும் உடனிருந்த மற்றொரு தன்னார்வத் தொண்டரையும் அழைத்து, மலைமீது இருந்த அந்த குகைக்குச் சென்று அதில் யோகப் பயிற்சி செய்யச் சொன்னார். “நீங்களும் எங்களுடன் வாருங்கள்,” என்று சத்குருவிடம் விண்ணப்பித்தேன். அதற்கு அவர், “நான் பயிற்சி செய்வதை விட்டுவிட்டேனே பா,” என்று சிரித்துக்கொண்டே சொல்லிவிட்டு கிளம்பினார். அவரில்லாமல் போவதற்கு எனக்கு மனம் ஒப்பவில்லை. அதனால் அந்த வாய்ப்பை விட்டுவிட்டேன். அதற்குப்பின் இன்றுவரை அந்த குகைக்குச் செல்ல எனக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலசமயம் போகாமல் விட்டது பற்றி வருத்தம் கொள்வேன், “சத்குரு சொன்னதை நான் ஏன் கேட்கவில்லை?” என்று.

தன்னார்வத் தொண்டு செய்யும்போது எனக்கு ஏற்பட்ட மற்றுமொரு ஆழமான அனுபவம், தியானலிங்கத்திற்கான ஆவுடையார் கல்லை கரூரில் இருந்து கொண்டு வந்தபோது ஏற்பட்டது. சிங்காநல்லூர் அலுவலகத்தில் அந்த கல்லிற்கு விஜி மா ஆரத்தி எடுத்ததும், அதை ஆசிரமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் சென்றோம். அந்த ஊர்வலத்தில் நானும் கலந்துகொண்டேன். அங்கிருந்த ஒவ்வொருவருக்கும் ஆர்வமும் ஆனந்தமும் அபரிமிதமாக இருந்தது. அந்த ஊர்வலம் பெரும் கொண்டாட்டமாக, மாபெரும் திருவிழாவாகவே மாறியது. தன்னார்வத் தொண்டர்கள் முகத்தில் சாயம் பூசிக்கொண்டு, தலையில் ரிப்பன் கட்டிக்கொண்டு, வழிநெடுக கொட்டு முழக்கோடு நடனமாடி மிக உற்சாகமாக வந்து கொண்டிருந்தனர். ஆவுடையார் கல் வைக்கப்பட்டிருந்த லாரியின் பின்னே நான் நின்றிருந்தாலும், அந்த உற்சாகமான இசையில், அங்கிருந்த கொண்டாட்டமான சூழ்நிலையில் நானும் இனம்புரியாத சந்தோஷத்தில் ஆர்ப்பரித்தேன். அதன்பின் ஆசிரமம் செல்லும் வழியில் அந்தக் குறுகிய பாலம்! லாரியைவிட சில அங்குலமே விரிவான அந்தப் பாலத்தில், இம்மியளவு திசை மாறினாலும் லாரி கீழே கவிழ்ந்துவிடும் என்ற சூழ்நிலையில், லாரி டிரைவர் லாரியை ஓட்டமாட்டேன் என்று நின்றது... அங்கு சத்குரு வந்ததும் அந்த சூழ்நிலை அடியோடு மாறியது... இமைக்கொட்டாமல் அனைவரும் பார்த்துக் கொண்டிருக்க, எவ்வித அசம்பாவிதமோ, இடைஞ்சலோ இன்றி அந்த லாரி பாலத்தைக் கடந்தது... என அந்த அனுபவம் என்றும் மறக்க முடியாத ஒன்று!

ஜனவரி 23, 1997 அன்று மாலை ஆசிரமத்தில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. சிலப் பொருட்களை வாங்கிக்கொண்டு உடனே ஆசிரமம் வரவேண்டும் என்றார்கள். நானும் மற்றும் ஒரு தன்னார்வத் தொண்டரும் அவர்கள் கேட்ட பொருட்களை வாங்கிக்கொண்டு ஆசிரமத்திற்கு விரைந்தோம். ஆசிரமத்திற்குச் சென்றபின்தான், அப்பொருட்கள் விஜி மா-வின் கடைசி காரியத்திற்கு என்பதை அறிந்தேன். வாங்கி வந்த பொருட்களை அங்கிருந்த பிரம்மச்சாரியின் கைகளில் ஒப்படைத்துவிட்டு, விஜி மா-வை கடைசி முறையாக தரிசிக்க நின்றிருந்த வரிசையில் நானும் நின்றேன். மெதுமெதுவாக முன்னே சென்று, விஜி மா-வின் பாதத்தை தொட்டுக் கும்பிட குனிந்தபோது, அங்கு நின்றிருந்த சத்குருவின் கண்களை என் கண்கள் சந்தித்தன. இன்றும்கூட அந்த நொடி, சத்குருவின் அந்தப் பார்வையை என்னால் மறக்கமுடியாது. அந்தப் பார்வையில் இருந்த ஆழம், கூர்மை... அதை என்னால் விவரிக்க முடியவில்லை. அன்றிரவு ஆசிரமத்திலேயே தங்கிவிட்டு தகனம் முடிந்தபின் மறுநாள் காலை கிளம்பினோம்.

பிரம்மச்சரியம்

இந்த சில ஆண்டுகளில் சத்குருவிடம் “நான் முழுநேரத் தொண்டனாக ஆசிரமம் வந்துவிடவா?” என்று 3 முறை கேட்டிருந்தேன். ஒவ்வொரு முறையும் அவர், “சரி” என்று சொல்லியும், என் மனம் தெளியவில்லை. ஒரு பக்கம், சத்குரு வழங்கும் இந்த ஆன்மீகப் பாதையில் என்னை முழுமையாய் ஈடுபடுத்திக்கொள்ள ஏக்கம் இருந்தாலும், மறுபக்கம், ஆன்மீகப் பாதை பற்றிய தெளிவான புரிதலோ, தெளிவோ எனக்கு இல்லை என்பதால் அதை மேற்கொள்ளத் தயக்கம் மேலோங்கியது. ஆசிரமத்தில் இருந்த பிரம்மச்சாரிகளின் கடும் உழைப்பைப் பார்த்து வியந்திருக்கிறேன். “என்னால் இதுபோல் இருக்கமுடியுமா?” என்ற கேள்வி வேறு என்னை அரித்தது. இதற்கெல்லாம் தெளிவோ, விளக்கமோ கிடைக்காமல் பலகாலம் குழம்பியிருக்கிறேன். அப்போதுதான் எனக்கு ஒன்று விளங்கியது. இன்னும் எத்தனை நாட்கள் யோசித்தாலும் இதுபற்றிய தெளிவு எனக்கு வரப்போவதில்லை என்பதுதான் அது. தன்னார்வத் தொண்டு செய்யும்போதும், சத்குருவின் அருகில் இருக்கும்போதும் எனக்குள் நடப்பவற்றை என்னால் விளக்கவோ விவரிக்கவோ முடியவில்லை. ஆனால் அதேசமயத்தில், என்னவென்றே புரியாத ஒன்றிற்கு என்னை முழுமையாய் அர்ப்பணிப்பதன் மடமையை என் தர்க்க அறிவு சுட்டிக் காட்டியதை என்னால் அசட்டையாக விடவும் முடியவில்லை. ஒரு வழியாக, 1997ல் முழுநேரத் தன்னார்வத் தொண்டனாக நான் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்தேன். 2000ல் சத்குரு எனக்கு பிரம்மச்சரிய தீட்சை வழங்கினார். அந்த தீட்சை நடந்தபின் எனக்குள் ஒரு புது சுதந்திரத்தை நான் உணர்ந்தேன்.

ஒன்றும் தெரியாமல் நான் ஏற்ற பொறுப்புகள்

முழுநேரத் தொண்டனாக நான் ஆசிரமத்திற்கு வந்தபின் எனது முதல் வேலை, தியானலிங்க கூரைக்குத் தேவையான செங்கல் தயார் செய்வதை மேற்பார்வையிடுவது. நான் ஒரு இயற்பியல் பட்டதாரி. ஆசிரமம் வருவதற்கு முன், என் சகோதரரின் “எழுது பொருள் தயாரிப்பு,” நிறுவனத்தில் உதவியாளராய் பணிபுரிந்து வந்தேன். கட்டிடக் கலைக்கும் எனக்கும் சிறிதளவும்கூட சம்பந்தம் இருக்கவில்லை. ஆனால் இப்பணி என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. இது எப்பேற்பட்ட மகத்தான பணி என்பதை நான் உணர்ந்திருந்ததால், கட்டிடக்கலை பற்றி தெரியாமல் இப்பணியை ஏற்க எனக்கு பயமாய் இருந்தது. ஆனால், இங்கு எல்லாமே இப்படித்தானே நடக்கிறது! ஒன்றைச் செய்யவேண்டும். அதைப்பற்றி எதுவும் தெரியாது, ஆனாலும் அதைச் செய்யவேண்டும். அதேநேரம், தயங்காமல் அதைச் செய்ய ஆரம்பித்தால், பார்ப்பவர்கள் அதிசயிக்கும் அளவிற்கு அது மிகச் சிறப்பாக நடந்துவிடும். அதேபோல், இதுவும் மிக எளிதாய், இயல்பாய், பிரமாதமாய் நடந்தது. 3 மாதங்களில் 2 லட்சம் செங்கற்களை தயார் செய்தோம்! அந்நேரத்தில் எல்லா நாளும் மழைக்காலம்போல் மழை விடாது பெய்து கொண்டிருந்தது. அதனால், இந்த செங்கற்களை மழையிலிருந்து பாதுகாத்து காய வைப்பதற்காகவே 5 கொட்டகைகளை அமைத்தோம். அந்த செங்கற்களை முறையாக அடுக்கி காய வைப்பதே பிரமிப்பாக இருக்கும். அதுமட்டுமல்ல, அந்த செங்கற்களை நெருப்பில் சுடுவதற்கு தற்காலிக செங்கற்சூளைகள் வேறு அமைத்தோம். இப்படி தேவைக்கேற்ப நாம் புதிது புதிதாய் முயற்சிகள் மேற்கொண்டது எனக்கு வித்தியாசமாக இருந்தது. அந்த அனுபவங்கள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அப்படி நாம் உருவாக்கிய செங்கற்களில் பெரும்பாலானவை தியானலிங்கக் கூரை கட்ட பயன்பட்டது. மீதமிருந்தவை, முக்கோண கட்டிடம் கட்ட பயன்படுத்தப்பட்டது என்று நினைக்கிறேன்.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

முன்பெல்லாம் முக்கோண கட்டிடத்தில்தான் சமையல் வேலை நடந்துகொண்டிருந்தது. ஸ்பந்தா ஹால் கட்டிய பிறகு, அதையொட்டி இருந்த (இப்போது) பழைய பிக்ஷா ஹாலிற்கு சமையலறையை மாற்றினார்கள். அப்போது சமையல் என் பொறுப்பானது. எனக்கு சமையல் பற்றி எதுவும் தெரியாது. வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது அவ்வப்போது ஏதோ சமைத்த அனுபவத்தின் துணையோடு, அனைவருக்கும் உணவு வழங்குவதை “சமாளித்து” கொண்டிருந்தேன். நான் சமைத்தது சிலருக்குப் பிடித்தது, சிலருக்குப் பிடிக்கவில்லை. ஆனால், என்னால் முடிந்தவரை நல்ல முயற்சி எடுத்தேன். ஒரு சமயம், 2000 பேருக்கு நாங்கள் சமைக்கும் சூழ்நிலை ஏற்பட்டது. அதையும் எப்படியோ நல்லவிதமாக செய்து முடித்தபோது வானில் மிதப்பது போன்ற ஆனந்தம் ஏற்பட்டது. கடந்த மஹாசிவராத்திரி அன்று (2017) 1 லட்சம் பேருக்கு மேல் உணவளித்தோம் என்று கேள்விப்பட்டபோது அசந்துபோனேன்! இதற்கு நம் அக்ஷயா குழு எந்தளவிற்கு பிரயத்தனப் பட்டிருப்பார்கள் என்பதை என்னால் உணரமுடிந்தது.

ஞானமடைந்த நிலையில் ஒரு நாள் நான் சத்குருவை சந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன்.

“புகார்கள் எதுவும் வேண்டாம்”

சமையல் பொறுப்பை பார்த்துக் கொண்டிருந்தபோது, சத்குருவை அவ்வப்போது உணவருந்த அழைப்போம். எங்கள் வேண்டுதலுக்கு இணங்கி, நாங்கள் சமைத்த உணவை உண்பதற்கு சத்குரு வந்த தருணங்கள் எனக்கு மிகவும் பிடித்தமான நினைவுகள். இதற்குப்பின் என்னை சிங்காநல்லூர் அலுவலகத்தின் சமையலறை பராமரிப்பாளராக அனுப்பினார்கள். அங்கு காய் வாங்குவது, பாத்திரம் கழுவுவது, சமையல் முடிந்தபின் தரையைத் துடைப்பது போன்ற வேலைகளை செய்து கொண்டிருந்தேன். ஒரு முறை ஒரு பிரச்சினைக்காக சத்குருவிடம் முறையிடலாம் என்று அவரிடம் சென்றேன். வாய்திறந்து என் பிரச்சினையை நான் கூறும்முன், “புகார்கள் எதுவும் வேண்டாம்,” என்று கூறிவிட்டார். அதை அவர் சொன்ன விதத்தில் எனக்குள் மிக ஆழமாக ஒன்று பதிந்தது, என் தனிப்பட்ட பிரச்சினைகளை நானே சமாளிக்க வேண்டும். எங்களுக்குள் ஏற்படும் மனஸ்தாபங்களையும் பிரச்சினைகளையும் தீர்ப்பதற்கு அவரை இழுக்காமல், அவர் இங்கு என்ன செய்ய வந்திருக்கிறாரோ அதை அவர் செய்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்று. அதன்பிறகு எந்தப் பிரச்சினையை கையாள்வதற்கும் நான் சத்குருவிடம் சென்றதில்லை. சிங்காநல்லூர் சமையலறையை நான் பார்த்துக் கொண்டபோது கிடைத்த பெரும் பேறு, சத்குரு அவ்வப்போது அங்கு உண்ண வந்தது!

வாழ்க்கைத் தடம் மாறிய நாள்

​​​​path-of-the-divine-sw-vasunanda-pic1

2004ல் மீண்டும் ஆசிரமத்திற்கு குடிபெயர்ந்தேன். இம்முறை ஆசிரமத்தின் பாதுகாப்பு என் பொறுப்பானது. 2வது செக்யூரிட்டி கேட்டில் எங்கள் அலுவலகம் இருக்கும். இங்குதான், என் வாழ்நாளின் அடுத்த 14 வருடங்களை முற்றிலுமாய் கைபற்றிய அந்த சிறுவர் சிறுமிகளை முதன்முதலில் சந்தித்தேன். இன்றும்கூட நான் அவர்கள் பிடியில்தான் இருக்கிறேன்!

மாலை 5 மணி இருக்கும். சில கிராமத்து சிறுமிகள் என்னிடம் வந்து, “நாங்கள் சிறிது நேரம் ஓட்டி விளையாட உங்களிடம் சைக்கிள் உள்ளதா?” என்று கேட்டார்கள். அவர்கள் கேட்டது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அவர்களை உற்று கவனித்த பிறகுதான், அவர்கள் ஏழைக் குழந்தைகள் என்றும், சைக்கிள் ஓட்டும் சந்தோஷத்தை உணரவே அவர்கள் சைக்கிள் கேட்கிறார்கள் என்றும் புரிந்தது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக என்னிடம் சைக்கிள் இல்லை, ஆசிரமத்திலும் வேறு சைக்கிள் இருக்கவில்லை. அப்படியே அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அவர்கள் அருகில் இருந்த “தானிக்கண்டி” மலைகிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறிந்தேன். மற்றுமொரு ஆச்சரியமான தகவல், அவர்கள் தினமும் மாலையில் ஆசிரமத்திற்கு வந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள், அதுமட்டுமல்ல, இங்கிருந்த பல பிரம்மச்சாரிகளின் பெயரை அவர்கள் அறிந்திருந்தார்கள்! பேச்சு தொடர்ந்தது. “நீ எந்த வகுப்பில் படிக்கிறாய்?” என்று ஒரு சிறுமியைக் கேட்டேன். “எட்டாவது” என்று அவள் பெருமையோடு கூற, மேலும் விளையாடும் பொருட்டு, சில ஆங்கில வார்த்தைகளைக் கூறி அச்சிறுமியை எழுதச் சொன்னேன். அவள் தயங்கினாள். காரணம், சில ஆங்கில எழுத்துக்களைக்கூட அவளால் சரியாய் உச்சரிக்க முடியவில்லை. இது தெரிந்தபோது நான் அதிர்ந்து போனேன். அங்கிருந்த மற்ற குழந்தைகளிடம் பேசியபோது, அவர்களும் இதே நிலையில்தான் இருக்கிறார்கள் என்பது புரிந்தது. இது என் மனதை அழுத்தியது. அக்குழந்தைகளுக்கு நிச்சயம் ஏதோவொன்று செய்யவேண்டும் என்று தோன்றியது. அதனால் அடுத்தநாள் முதல், மாலை உணவு உண்ண வரும்போது ஒரு மணி நேரம் முன்பாகவே வரச் சொன்னேன். அவர்களுக்கு ஆங்கிலம் மற்றும் கணிதம் நானே கற்றுக்கொடுக்க முடிவு செய்தேன். அடுத்தநாள் மாலை ஆங்கிலம் கற்கும் ஆவலோடு அவர்கள் உற்சாகமாக ஒரு மணிநேரம் முன்பாகவே வந்தார்கள். அவர்களிடம் இவ்வளவு ஆர்வம் இருக்கும் என்பதை நான் எதிர்பார்த்திருக்கவில்லை.

கல்விப் பாதை

path-of-the-divine-sw-vasunanda-with-kids

மொத்தம் 25 குழந்தைகள் வந்திருந்தார்கள் - 4 வயது முதல் 14 வயது வரை! அக்குழந்தைகள் துறுதுறுவென்று, ஆனந்தமாக, சப்தமாக ஒன்றோடு ஒன்று விவாதித்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் இருக்க, என்னால் அவர்களுக்கு பாடம் எடுக்க முடியவில்லை. அதனால், “6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் மட்டும் நாளை வந்தால் போதும்,” என்றேன். இதைக் கேட்டு சில குழந்தைகள் மனம் வருந்தின. ஆனால் அத்தனை பேரையும் ஒருசேர சமாளிப்பது, சமாளிப்பது மட்டுமல்ல அதற்கிடையில் பாடமும் கற்றுக்கொடுக்க வேண்டும் என்பது என்னால் நிச்சயம் முடியாது! அதனால் மறுநாள் முதல், 2வது செக்யூரிட்டி கேட் அருகே இருந்த அறையில் தினமும் மாலை சிறுவர்களுக்கான வகுப்பு நடக்க ஆரம்பித்தது. மெதுமெதுவாக சுற்றியிருந்த மற்ற பழங்குடி மக்கள் கிராமங்களில் இருந்தும் இவ்வகுப்பிற்கு குழந்தைகள் வரத் துவங்கினர்.

ஈஷா வித்யா

2006ல் சத்குரு ஈஷா வித்யா பள்ளித் திட்டத்தை அறிவித்தார். எனக்கு இது ஆச்சரியமாக இருந்தது. “இந்தளவிற்கு பொருளும், நேரமும், முயற்சியும் தேவைப்படும் திட்டத்தை மேற்கொள்ளும் அளவிற்கு அவசியம் இருப்பதாக தெரியவில்லையே? தேவையான அளவிற்கு அரசாங்கப் பள்ளிகள் இருக்கிறது. அங்கே கற்றுக் கொடுக்கும் முறையில் இருக்கும் குறைகளை சரிசெய்ய, இவர்களுக்கு தனிப்பட்ட டியூஷன் ஏற்பாடுகள் செய்தால் போதாதா?” என்றும்கூட நினைத்தேன். அதன்பின் ஈஷா வித்யா பள்ளி திறந்தபோது அதை நேரில் பார்க்கச் சென்றேன். அப்பள்ளியின் கட்டமைப்பு, அங்கிருக்கும் அடிப்படை வசதிகள், ஆசிரியர்கள், பாடத் திட்டம், பாடம் சொல்லும் முறை எல்லாம் என்னை வெகுவாய்க் கவர்ந்தது. இங்கு படிக்கும் மாணவர்களுக்குள் இந்தச் சூழ்நிலை எப்பேற்பட்ட மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை என்னால் உணரமுடிந்தது. எனது யோசனையான, “அரசாங்கப் பள்ளியுடன் சேர்த்து சிறிதளவு தனிப்பட்ட டியூஷன்,” ஏற்படுத்தும் மாற்றத்தைவிட, இந்த ஈஷா வித்யா பள்ளி எத்தனை பிரமாதமான ஒரு வாய்ப்பாக உள்ளது என்பதை நான் கண்கூடாகப் பார்த்தேன். நகரத்தில் வளரும் குழந்தைகளின் சிந்திக்கும், செயல்படும் திறனிற்கு ஈடாக இவர்களும் இருப்பார்கள். இந்த சூழ்நிலை அவர்களை அதற்கு தயார்செய்யும் என்பதை உணர்ந்து ஆனந்தமானேன். இந்தக் குழந்தைகளுக்கு இப்படியொரு பிரமாதமான வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்த சத்குருவிற்கு, என்னுள் சிரம்தாழ்த்தி வணங்கினேன்.

1ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பள்ளியில் சேர்க்கை இருக்கும். அதற்கு எளிதான ஒரு நுழைவுத்தேர்வு எழுதி, குழந்தைகள் தேர்ச்சி பெற்றாலே போதும் என்றார்கள். அதனால் சுற்றியிருந்த கிராமங்களுக்கு எல்லாம் சென்று இதுபற்றி விவரித்து, கிட்டத்தட்ட 60 குழந்தைகளை இப்பள்ளிக்கு விண்ணப்பிக்கச் செய்தேன். ஆனால் அதில் ஒருவர்கூட தேர்ச்சி பெறவில்லை. அதனால் எங்கள் அணுகுமுறையை மாற்றி, குழந்தைகளை எல்.கே.ஜியில் இருந்தே இப்பள்ளியில் படிக்கச் செய்வோம் என்று முடிவெடுத்து, மீண்டும் ஊர் ஊராகச் சென்று, 3 வயதுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புமாறு அக்குழந்தைகளின் பெற்றோரிடம் வேண்டினோம் (அவ்வூர்களில் 3 வயதில் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பமாட்டார்கள்). இப்படி கிட்டத்தட்ட 100 குழந்தைகளை ஈஷா வித்யா பள்ளியில் சேர்த்தோம், முழு உதவித் தொகையுடன்! படிப்புக் கட்டணம், பள்ளி வாகனக் கட்டணம் எதுவும் கிடையாது. சீருடை, புத்தகம், மற்ற எழுது பொருட்கள் எல்லாமே கொடுத்தார்கள். 2015ல் ஈஷா வித்யா பள்ளி மாணவர்கள் முதல்முறையாக 10ம் வகுப்பிற்கான தேர்வை எழுதினார்கள். அதில் அனைவரும் தேர்ச்சி பெற்று, மாணவர்களின் ஒட்டுமொத்த மதிப்பெண் விகிதம் 89.6%! இதில் சில குழந்தைகள் இன்று மருத்துவக் கல்லூரியிலும், பொறியியல் கல்லூரியிலும் படித்து வருகிறார்கள். சத்குருவின் பார்வையும், அருளும் ஏற்படுத்திய மாற்றம் இது.

இலவசக் கல்வி கிடைத்தாலும் சோதனை

path-of-the-divine-sw-vasunanda-pic2

ஈஷா வித்யா பள்ளிகளில் சேர்ந்த குழந்தைகள் சில, ஒரு வருடத்தில் பள்ளியை விட்டு நின்ற நிலையும்கூட ஏற்பட்டிருக்கிறது. இதற்கு பல காரணங்கள் உண்டு. பெற்றோர்கள் இல்லாமல் போனது (குழந்தைகளை தனியே விட்டுவிட்டு தம் வாழ்வை பார்த்துக்கொண்டு பெற்றோர்கள் போன சூழ்நிலை), குடிப்பழக்கத்திற்கு உள்ளான தந்தை, மனதளவில் பாதிக்கப்பட்ட தாய் அல்லது தந்தை என இக்குழந்தைகளின் வீட்டுச் சூழ்நிலை காதுகொடுத்துக் கேட்பதற்கும் கூட தாங்கமுடியாததாக இருந்தது. இது என்னை பெரிதும் பாதித்தது. இதுபோன்ற குழந்தைகளுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்ற துடிப்பு எனக்குள் மேலோங்கியது. எப்படி எப்படியோ முயற்சி செய்து, தேவையான உதவித் தொகை திரட்டி, ஈஷாவின் தன்னார்வத் தொண்டர்கள் உதவியோடு இதுபோல் இருந்த 13 சிறுமிகளை கோவையில் உள்ள குடியிருப்பு வசதி கொண்ட பி.எஸ்.எஸ்.ஜி பள்ளியில் சேர்த்தோம். இப்படி நாம் சேர்த்த 13 சிறுமிகளில் 11 பேர், யாரிடமும் சொல்லாமல் முதல் வருடத்திற்குள்ளாகவே அப்பள்ளியில் இருந்து நின்று, திரும்ப அவர்கள் கிராமத்திற்கே சென்றுவிட்டனர். எனக்கு இது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. பட்ட கஷ்டம் அத்தனையும் வீணானதே என்ற மன உளைச்சல் ஒருபுறம், இவர்களுக்காகத்தானே இத்தனை பாடுபட்டோம், அதுகூட புரியாமல் தங்கள் வாழ்வை இப்படி நாசம் செய்துகொள்கிறார்களே என்று அவர்களின் போக்கை ஏற்கமுடியாத வலி மறுபுறம். இதற்குப்பின் இந்தப் பழங்குடி கிராமங்களில் இருக்கும் இதுபோன்ற சிறுமிகளுக்கு எவ்வித முயற்சியும் எடுக்க மனம் ஒப்பவில்லை. “இவர்களை படிக்க வைக்க முயற்சி செய்வது பொருள் நஷ்டம் மட்டுமல்ல, நேர விரயமும் கூட,” என்று சற்றே விலகி நின்றேன். இதற்கிடையில் ஒருநாள், இவர்களில் ஒரு சிறுமியை வழியில் சந்தித்தேன். அந்தக் குடியிருப்புப் பள்ளியில் தொடர்ந்து படித்த இருவரில் இப்பெண்ணும் ஒருவர். அந்தப் பெண்ணிடம் ஏற்பட்டிருந்த மாற்றம், அவள் பேசிய விதம், நடந்துகொண்ட விதம் அனைத்தையும் பார்த்து அசந்துபோனேன். எப்படிப்பட்ட மாற்றம்! இப்பெண்ணைப் பார்த்ததில், அவளிடம் ஏற்பட்டிருந்த மாற்றத்தைப் பார்த்ததில், இம்முயற்சியை கைவிடக்கூடாது என்ற முடிவிற்கு வந்தேன். “கிடைத்த வாய்ப்பை எத்தனை பேர் உதறிவிட்டு திரும்பிவந்தால் என்ன? அதைப் பயன்படுத்தி ஒரு சிலரேனும் தங்கள் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொண்டால் போதும்,” என்று தோன்றியது. அதனால் சுற்றியிருந்த கிராமங்களில் வீட்டு சூழ்நிலை சரியில்லாமல் தவித்த பெண்பிள்ளைகளை, குடியிருப்புப் பள்ளிகளில் சேர்க்கும் முயற்சியை மீண்டும் கையில் எடுத்தோம்.

படிப்பை உதறிவிட்டு அச்சிறுமிகள் திரும்பி வரக் காரணம், அவர்களின் தனிமைதான் என்பதை அறிந்தோம். அதனால் இம்முறை, ஒவ்வொரு கிராமத்தில் இருந்தும் 2-3 பெண்பிள்ளைகளை ஒரே இடத்தில் சேர்த்தோம். முதன்முதலாய் இம்முயற்சியை நாங்கள் மேற்கொண்டபோது, அவர்களுக்கு இருந்த தயக்கம், பயத்தைத் தாண்டி, தைரியத்தோடும், விடாமுயற்சியோடும் படித்த அந்த இரு பெண்களும் நம் பிரதிநிதிகளாக ஆனார்கள். சுற்றியிருந்த பழங்குடி கிராமங்களில் இருக்கும் சிறுமிகள் மேற்கொண்டு படிப்பதற்கு இவர்கள் ஊக்கசக்தியாக மாறினார்கள். குடியிருப்புப் பள்ளியின் சூழ்நிலைக்கு பழகமுடியாமல் தவித்த சிறுமிகளுக்கு தேவையான பின்புலமாக செயல்பட்டார்கள். இப்போது இதுபோல் 30 மாணவிகள், நம் அறக்கட்டளை வழங்கும் முழு உதவித்தொகையோடு கோவையில் படித்து வருகிறார்கள். பத்து வருடங்களுக்கு முன்பு, நம் ஆசிரமத்தை சுற்றியிருக்கும் 20 கிராமங்களிலும் மொத்தம் 2-3 பட்டதாரிகள்தான் இருந்தார்கள். ஆனால், இப்போது ஒவ்வொரு வருடமும் சிலர் பட்டப்படிப்பு முடித்து வெளிவருகிறார்கள். குடியிருப்புப் பள்ளியில் தொடர்ந்து படித்த அந்த இரு பெண்களில் ஒருவர், போன வருடம் அவரது ஆசிரியர் பட்டப்படிப்பை முடித்து, இப்போது ஈஷா வித்யா பள்ளியில் ஒரு ஆசிரியையாக பணியாற்றி வருகிறார். இப்பிள்ளைகளை நினைத்தாலே எனக்குப் பெருமையாக உள்ளது.

போராட்டம் தாண்டிய வாழ்க்கை

ஆசிரமத்தை சுற்றியிருக்கும் கிராம மக்கள், எங்களை அவர்களின் ஒரு அங்கமாகவே ஏற்றுக்கொண்டதை நினைக்கும்போது பெருமிதமாக உள்ளது. அவர்கள் வாழ்வில் என்ன கஷ்டம் ஏற்பட்டாலும் தயங்காது எங்களை அழைக்கிறார்கள். ஆரோக்கியப் பிரச்சினை, விபத்து, தண்ணீர் பற்றாக்குறை, விழா ஏற்பாடு செய்வது, அவ்வளவு ஏன்... குடும்பப் பிரச்சினைகள் தீர்ப்பதற்கும்கூட நம்மை அழைக்கிறார்கள். அந்தளவிற்கு அவர்களுள் ஒருவராகவே நம்மை நினைக்கிறார்கள். சில வருடங்களுக்கு முன்பு, 20 வயதிற்கும் குறைவான ஒரு பெண் விஷம் குடித்து இறக்கும் நிலையில் இருப்பதாக எனக்கு அழைப்பு வந்தது. விரைந்து சென்று அப்பெண்ணை மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றோம். தற்கொலைக்கு முயன்றவரை மருத்துவமனையில் அனுமதிப்பதில் சட்டப் பிரச்சினை இருந்ததால், உள்ளே அனுமதிக்க மறுத்தார்கள். எப்படியோ எல்லாவற்றையும் சமாளித்து, அப்பெண்ணின் உயிரை காப்பாற்றியும் விட்டோம். பின்னர் விசாரித்த போதுதான், ஏதோ குடும்பப் பிரச்சினை காரணமாக அவள் இம்முடிவை எடுத்தாள் என்பது தெரியவந்தது. தேவையான புத்திமதிகள் கூறி, பின் ஆசிரமத்தில் அவருக்கு ஒரு வேலைக்கும் ஏற்பாடு செய்தோம். சமீபத்தில் இதுபோல் நடந்த மற்றுமொரு பெண்ணிற்கு, ஆதியோகி அருகே ஒரு கடை போட்டுக் கொடுத்து, அவளுடைய வாழ்வாதாரத்திற்கு வழிசெய்தோம். அத்தியாவசியத் தேவைகளுக்கும் கூட அடுத்தவரை சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லாமல், தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ளும் சுதந்திரம் கிடைப்பதை இப்பெண்கள் பெரும் வரமாக நினைக்கிறார்கள். அப்பெண்ணின் கடையை நான் தாண்டிச் செல்லும்போதெல்லாம், ஏதோ ஒருவகையில் தன் சந்தோஷத்தை அவள் வெளிப்படுத்துவாள். கை ஆட்டுவது, ஓடிவந்து அவள் வாழ்வில் நடக்கும் விஷயங்களை என்னிடம் சொல்வது என்று சந்தோஷமும் பூரிப்பும் நிறைந்த அவளது முகத்தை பார்க்கும்போது என் மனம் லேசாகிவிடும்.

மறக்கமுடியாத பயணம்

என்னால் மறக்கமுடியாத நாட்கள் என்றால், சத்குருவுடன் மங்களூருவுக்குச் சென்ற பயணம்தான். அந்தப் பயணம் முழுவதும் அத்தனை உற்சாகமாக, ஆனந்தமாக, அதேநேரம் சாகசத்திற்கு குறைவின்றி இருந்தது. இன்று அதைப்பற்றி நினைத்தாலும் “மீண்டும் அதுபோல் ஒரு வாய்ப்பு கிடைக்காதா?” என்ற ஏக்கம் பிறக்கிறது. அதில் ஒருநாள் நாங்கள் வெகுதூரம் நடந்து செல்லும்போது, வழியில் ஒரு ஆற்றை கடக்க வேண்டியிருந்தது. ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக்கொண்டிருந்தது. மேலும் பயணத்தை தொடர வேண்டுமென்றால், அந்த ஆற்றைக் கடந்து செல்வதுதான் ஒரே வழி. ஆற்றில் நீரின் வேகம் மிக அதிகமாக இருந்தது. நீச்சலும் தெரியாது, சொல்லிக்கொள்ளும் அளவிற்கு நான் பெரிய சாகசப் பிரியனும் கிடையாது. இந்தக் கட்டுப்பாடற்ற வெள்ள ஓட்டத்தைக் கடந்து அக்கரைக்கு செல்வதெல்லாம் நான் நினைத்துக்கூட பார்க்கமுடியாத ஒன்று. சிறு வயதில் இருந்தே இதுபோன்ற நடைப்பயணம், மலையேற்றம், வேறு சாகசங்கள் எதுவும் நான் செய்ததில்லை. இப்போதோ, அடித்து இழுத்துச் செல்லும் இந்த ஆற்று வெள்ளத்தை, அதுவும் நடந்தே கடக்கவேண்டும் என்றால்... “எனக்கு மிகமிக பயமாக இருந்தது,” என்று சொல்வதும்கூட குறைவுதான்.

முதலில் சத்குருவும், நீச்சல் தெரிந்த பிரம்மச்சாரிகளும் ஒரு நீளமான கயிறை எடுத்துக் கொண்டு அக்கரைக்கு நீந்திச் சென்றனர். பின், அக்கரையில் இருந்து இக்கரைக்கு கயிற்றைக் கட்டினர். நீச்சல் தெரியாதவர்கள் கயிறை பிடித்துக் கொண்டு ஆற்றை நடந்து கடக்கலாம் என்று முடிவுசெய்தார்கள். ஒவ்வொருவராக நடந்து சென்றார்கள். என் முறை வந்து நான் ஆற்றில் கால்வைத்தபோது, என் மூச்சே நின்றுவிடும் போலானது. எனினும் வேறு வழியில்லை என்பதால், கயிற்றை பிடித்துக் கொண்டு மெதுவாக நடக்க ஆரம்பித்தேன். ஆற்றுநீர் சிலசமயம் என் தோள் வரை வந்தது, சில சமயம் என் கால் தரையைத் தொடவில்லை. எப்படியோ மெதுமெதுவாக, கயிற்றை மட்டும் விட்டுவிடாமல் ஆற்றைக் கடந்தேன். அக்கரைக்குச் சென்று சேர்ந்தபோது வாழ்வில் ஏதோ பெரிதாய் ஒன்றை சாதித்த சந்தோஷம் வந்தது.

அந்தப் பயணத்தின்போது, முருகப்பெருமான் தன் உடலை நீத்த குமாரபர்வதம் மலைக்கும் சென்றோம். அதற்கு முந்தைய நாள் பேசும்போதே, மலைமீது யாரும் தனித்தனியாக செல்லக் கூடாது, சிறு குழுக்களாகவே மலை ஏறவேண்டும் என்று சத்குரு கூறியிருந்தார். வழியில் ராஜநாகங்கள், புலிகளை எதிர்கொள்ளும் சூழ்நிலை ஏற்படலாம் என்றும் அவர் எங்களை எச்சரித்தார் (எங்களை அச்சுறுத்தி, நாங்கள் விழிப்போடு இருப்பதற்காகக்கூட அவர் இதனை சொல்லியிருக்கக்கூடும்). சூரிய உதயத்திற்கு முன் காலை 5 மணிக்கே மலையேற்றம் ஆரம்பிக்கலாம் என்று எங்கள் குழுவில் முடிவுசெய்தோம். மிகவும் கவனத்தோடு ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து, 11 மணியளவில் மலை உச்சியை அடைந்தோம். அங்கே சிறிது நேரம் இருந்துவிட்டு, மாலை 5 மணிக்கெல்லாம் கீழிறங்கிவிட்டோம். வந்தபின் பெருமூச்சு விட்டேன். வழியில் நாங்கள் பார்த்த ஒரேவொரு முயலைத் தவிர, வேறு எவ்வித திடுக்கிடும் சந்திப்போ சம்பவமோ (ராஜநாகம், புலி ஆகியவற்றுடன்) ஏற்படவில்லை!

இருட்டான பாதைக்கு வந்த வெளிச்சம்

நான் முன்பே சொன்னதுபோல், தேவையான புரிதலோ, தெளிவோ இல்லாமல்தான் இந்தப் பிரம்மச்சரிய பாதையில் பயணிக்கத் துவங்கினேன். சத்குருவிற்கு அருகில் இருக்கவும், ஒரு தன்னார்வத் தொண்டராக என்னை முழுமையாய் அர்ப்பணிக்கவும்தான் இப்பாதையை நான் தேர்வு செய்தேன். அதனால்தானோ என்னவோ, யோகப் பயிற்சிகள் செய்வதிலும், ஆன்மீக சாதனாவிலும் அத்தனை ஈடுபாடு இல்லாமல் இருந்தேன். நான் ஈடுபட்டிருந்த செயல்கள்தான் முக்கியம் என்று அதில் என்னை முழுமையாய் செலுத்தினேன். இந்த செயல்களில் ஈடுபடும்போது, அவ்வப்போது எனக்குள் தடுமாற்றம் ஏற்படும், போராட்டங்கள் நிகழும். ஆனால் இதெல்லாம் வெளியில் ஏதோவொன்று சரியாய் நிகழாததினால்தான் என்று நினைத்தேன். சென்ற வருடம் மீண்டும் சம்யமாவில் கலந்துகொண்டு, அடுத்துவந்த சம்யமா சாதனாவிலும் கலந்துகொண்டேன். “சங்கா”வின் உதவியோடு கடந்த ஒரு வருடத்தில் என் பயிற்சியை நிலைப்படுத்திவிட்டேன். இப்போது பயிற்சி செய்வதால் எனக்குள் ஏற்படும் வித்தியாசத்தை என்னால் மிகத் தெளிவாக உணரமுடிகிறது. யோகப்பயிற்சிகள், ஆன்மீக சாதனா அனைத்தையும் நான் முறையாகச் செய்யும் நாளிற்கும், அவற்றை செய்யாமல் நான் தவிர்க்கும் நாளிற்கும் இடையே இருக்கும் வித்தியாசம் மிகப்பெரிதாக உள்ளது.

உறுதியோடு சாதனா செய்ய ஆரம்பித்ததில் இருந்து, “இந்த ஆன்மீகப்பாதை பற்றிய தெளிவு எனக்கு இல்லை,” என்ற நிலை மாறிவிட்டது. இப்பாதையின் அழகும், இது எதை நோக்கிச் செல்கிறது என்ற தெளிவும் எனக்குள் பிறந்துள்ளது. அதுமட்டுமல்ல, முன்பிருந்ததைவிட நான் சத்குருவுடன் இன்னும் நெருக்கமாக இருப்பதுபோல் எனக்குள் உணர்கிறேன். ஞானமடைந்த நிலையில் ஒரு நாள் நான் சத்குருவை சந்திக்கவேண்டும் என்றும் விரும்புகிறேன். இதுபோன்ற ஒரு ஏக்கத்தை எனக்குள் ஏற்படுத்தியதற்காக நான் “சங்கா”விற்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறேன்.

“இப்பாதையிலே பல போராட்டங்களும்,  
தடைகளும் இருந்தாலும், ஒரு சப்தம்
என்னை இதிலேயே நிலைக்கச் செய்கிறது. அது -  சம்போ!”