சுவாமி தேவபாஹூ, 1997 ஆம் ஆண்டில் ஆசிரமத்திற்கு முழு நேரமாக வந்தவர். 1998 ஆம் ஆண்டு பிரம்மச்சரிய தீட்சை பெற்றவர். ஒரு தேர்ச்சி பெற்ற Marine Radio Officer அவர்.

“நான் பிரம்மச்சரிய தீட்சை பெற்றதிலிருந்து, எனைச் சுற்றி என்ன நடந்தாலும் எனக்குள் எப்போதுமே ஆனந்தம் நிலைத்திருக்கிறது. 3-4 நிமிடங்களுக்கு மேல் நான் கலக்கத்தோடு இருப்பதில்லை,” என்கிறார் தன் நிலைப்பாட்டில் சற்றே உறுதியான, அதே சமயம் தனது மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட சுவாமி தேவபாஹூ.

ஈஷாவின் சூப்பர் செஃப் (super chef) என அன்புடன் அழைக்கப்படுபவர். கையில் கிடைக்கும் வெகு சில பொருட்களைக் கொண்டே, மிகச் சிரமமான சூழ்நிலைகளிலும் கூட இன்சுவை விருந்தளிக்கக் கூடிய திறன் வாய்த்தவர். 2016ஆம் ஆண்டு, இவர் இரண்டாவது முறை சத்குருவுடன் கைலாய யாத்திரை மேற்கொண்டிருந்த போது, சூடான, சுவையான இட்லிகளை செய்து கொடுத்து, மொத்த குழுவினரையும் தன் கை பக்குவத்தால் கட்டிப் போட்டவர்.

இவரது திறமையை பல்வேறு தருணங்களில் சத்குருவும் பாராட்டி இருக்கிறார், அங்கீகரித்து இருக்கிறார். கடல் மட்டத்திலிருந்து 15,000 அடி உயரம் கொண்ட திலிச்சோ பேஸ்கேம்பிலிருந்து சத்குரு அவர்கள் இணையதளத்தில் நேரடியாக எழுதிய கட்டுரையில், “வெப்பம் மிகவும் குறைந்திருக்கிறது. எலும்பை துளைக்கும் அளவிற்கு குளிர்காற்று வீசிக் கொண்டிருக்கிறது. ஆனால், ஆசீர்வதிக்கப்பட்ட நம் சுவாமி, கடல்மட்டத்திலிருந்து 15,000 அடி உயரத்தில், நாவூறச் செய்யும் பிசிபேளாபாத் சமைத்துக் கொண்டிருக்கிறார். மைசூரில் பிறந்த எனக்கு பிசிபேளாபாத் செய்யும் மந்திர வித்தைகளும் தெரியும். அது வெகுளிகளின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தையும் நான் அறிவேன்,” என்று சொல்லியிருந்தார்.

கைலாயத்தின் அருள்நிழலில், சக்திவாய்ந்த ஒரு ப்ராஸசுடன் சத்குரு தீட்சை வழங்கிக் கொண்டிருக்கும் வேளையிலும், சுவாமி அந்த வாய்ப்பு தன்னை கடந்து போவதை விரும்பி ஏற்கிறார். அதே வேளையில், மிக விரிவான, ருசியான தீட்சை உணவு தயாராகிறது. புளிக்குழம்பு, சாம்பார், சாதம், பொறியல், இனிப்புப் பண்டம், ரசம் என விரிகிறது அப்பட்டியல். சத்குருவுடன் கடந்த 3 ஆண்டுகளாக கைலாயத்திற்கு பயணம் மேற்கொண்டிருந்த வேளைகளில், எந்தவொரு சத்சங்கத்திலும் அவர் தென்பட்டதில்லை. “எப்படி சுவாமி இதுகுறித்து வருத்தப்படாமல் இருக்கிறார்!” என்று பங்கேற்பாளர்களும் ஆச்சர்யப்படுவதுண்டு.

“சத்குரு தான் எனது கைலாயம்,” என்று சொல்லியும் சொல்லாமலும் பதில் வருகிறது சுவாமியிடமிருந்து...

முதல் பிரசாதம்

சுவாமி தேவபாஹூ: நான் வளர்ந்துவந்த காலத்தில் என்னிடம் வழக்கத்திற்கு மாறான இரண்டு விஷயங்கள் இருந்தன.

ஒன்று - ஒன்பது வயதிலிருந்தே, “குரு” என்கிற வார்த்தை எனக்குள் எதையோ செய்தது. குரு என்கிற அந்தச் சொல், எந்த அர்த்தத்தில் சொல்லப்பட்டிருந்தாலும், என் கவனத்தை ஈர்க்கத் தவறியதில்லை. தொலைக்காட்சிகளில், மஹாபாரதத்திலும், இராமாயணத்திலும் நான் கண்ட குருமார்கள் என் மீது பலத்த தாக்கம் ஏற்படுத்தினார்கள். நான் பார்த்த அந்த குருமார்களை போன்ற ஆற்றல் கொண்ட குரு இன்றைய தலைமுறையில் இருக்க வாய்ப்பில்லை என்கிற நம்பிக்கையில்தான் நான் வளர்ந்தேன்.

இரண்டாவது - திருச்சியிலுள்ள மலைக்கோவிலுக்கு பின்புறமுள்ள பாறையில் எப்போதும் தனிமையில் 4 மணி நேரம் வரைகூட அமர்ந்திருப்பேன். அதிக யோசனைகள் இல்லாமல், சும்மாவே அமர்ந்திருப்பேன், எதிரே தென்படும் சாலையினை பார்த்துக் கொண்டிருப்பேன்.

இவர் எப்படி ஒரு குருவாக இருக்க முடியும்? என்ற சிந்தனை எனக்குள் தோன்றியது. மனைவி, மகள் இருக்கிறார்கள், கார் ஓட்டுகிறார் - சாதாரண மனிதரைப்போன்ற தோற்றம் என்று நினைத்தேன். குரு என்றால், காவி உடை உடுத்தி, சாமியாரைப் போன்ற ஒரு தோற்றத்தில் இருப்பார் என்பது என் முடிவு.

இவையிரண்டையும் தவிர்த்துவிட்டு பார்த்தால், வெகு இயல்பான வாழ்க்கைதான் என்னுடையது. சுலபமாய் பழகுவது, கொஞ்சம் முரட்டுத்தனம், விளையாட்டுத்தனம், மிகத் துடுக்கான ஒரு இளைஞனாகத்தான் இருந்தேன். Marine Radio Officer’s பயிற்சி முடித்த பின், இடையில், ஒரு அரிசி ஆலையில் கணக்காளர் பணியில் இணைந்தேன். இரண்டாம் தலைமுறையை சேர்ந்த மூன்று சகோதரர்களால் அந்த ஆலை நிர்வகிக்கப்பட்டு வந்தது. அவர்களது தந்தையும், மூன்று மகன்களும், குடும்பத்தை சேர்ந்த இன்னும் சிலரும் ஈஷா தியான அன்பர்கள். காலையில், அவ்வப்போது, “கா, கா, கா,” என்கிற வினோதமான சத்தத்தை நான் கேட்டதுண்டு. “இது என்ன மாதிரியான யோகா,” என்று ஆச்சர்யப்பட்டதுண்டு. ஒருநாள், அவர்களை ஆசிர்வதிப்பதற்காக அவர்களது இல்லத்திற்கு வரும் அவர்களது குருவினை வரவேற்கும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு என்னை அழைத்தனர். “தங்களை ஆசிர்வதிக்க தங்கள் இல்லங்களுக்கு வர மாட்டாரா என ஏங்கும் பலர் இருக்க, நம் இல்லத்திற்கு அவர் வர சம்மதித்திருக்கிறார்,” என்று உற்சாகமாகச் சொன்னார் உரிமையாளரின் மகன்களில் ஒருவர். அப்போதுதான் முதல் தடவையாக நான் சத்குருவைப் பார்த்தேன்.

சத்குரு வேட்டியும் அங்கவஸ்திரமும் உடுத்தியிருந்தார். அவரது டாட்டா சியரா கார் முழுவதும் சூட்கேசுகள் நிரம்பியிருந்தன. விஜி அம்மாவும் ராதேவும் அவருடன் இருந்தனர். இவர் எப்படி ஒரு குருவாக இருக்க முடியும்? என்ற சிந்தனை எனக்குள் தோன்றியது. மனைவி, மகள் இருக்கிறார்கள், கார் ஓட்டுகிறார் - சாதாரண மனிதரைப்போன்ற தோற்றம் என்று நினைத்தேன். குரு என்றால், காவி உடை உடுத்தி, சாமியாரைப் போன்ற ஒரு தோற்றத்தில் இருப்பார் என்பது என் முடிவு. அதனால், அவரிடம் ஆசி வாங்க கூடியிருந்த கூட்டத்திலிருந்து விலகி, அதிக ஆர்வம் இல்லாமல் அங்கு நின்று கொண்டிருந்தேன். அந்த குடும்பம் அவருக்கு பாதபூஜை செய்தபின், நானும் சத்குருவை கும்பிடச் சென்றேன். நான் கடைசியாக சென்றதால், அவரைச் சுற்றி அதிக இடம் இருக்கவில்லை, அதனால் என் நெற்றியை அவர் பாதங்களில் பதிக்கும்படி ஆனது. பாதபூஜையின் போது, அவர் பாதங்களில் இடப்பட்டிருந்த சந்தனம் என் நெற்றி முழுவதும் அப்பியிருந்ததை நான் எழுந்தபோதுதான் கவனித்தேன். அந்த நேரத்தில் பொருத்தமில்லாமல் தெரிந்தாலும், இன்று திரும்பிப் பார்க்கும்போது, அதுவே சத்குரு எனக்குக் கொடுத்த முதல் பிரசாதம் என உணர்கிறேன்.

பிரம்மச்சரிய தீ

நெற்குவியல் மீது ஏறி சறுக்கி விளையாடுவது நான் ரசித்து விளையாடிய ஒரு விளையாட்டு. ஒருநாள், சந்தோஷமாக சறுக்கி விளையாடிக் கொண்டிருக்கையில், நான் ஈஷா யோகா வகுப்பில் சேரத் தயாரா என்று முதலாளி மகன்களில் ஒருவர் என்னிடம் கேட்டார். “உன்னுடைய படபடப்பை சற்று குறைக்கும்,” என்று சொன்னார். வகுப்புக் கட்டணத்தை அவரே செலுத்தி, வேலை விடுமுறைக்கும் சம்பளம் கொடுத்து, மோட்டார் பைக் கொடுத்து 13 நாட்களுக்கு அனுப்பி வைத்தார். நானும் மகிழ்ச்சியாக ஒப்புக் கொண்டேன். அதன்பின், என் வாழ்க்கை நிரந்தரமாய் மாறிப்போனது.

“விருப்பமாய் இருத்தல், அவ்வளவுதான்.” என்றார் புன்னகையுடன். அன்றிலிருந்து என் வாழ்வின் நோக்கம் பிரம்மச்சரியம் எடுப்பதாய் இருந்தது.

வகுப்பு நடக்க நடக்க, எனக்குள் உற்சாகம் பொங்குவதை உணர்ந்தேன். வெடித்துக் கிளம்பும் என் சக்திநிலையின் வெளிப்பாடாய், என் சந்தோஷத்தை வெளிப்படுத்துவதற்கு, தினமும், வகுப்பில் மைக்கினை பிடித்து, என் அனுபவங்களை மிக உற்சாகமாக பகிர்ந்து கொள்வேன். வகுப்பின் கடைசி நாளன்று, மகத்தான ஏதோவொன்று நடந்தது. குருபூஜைக்கு பின் கட்டுக்கடங்காமல் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. எங்கள் ஆசிரியரும் ஒரு பிரம்மச்சாரிதான். வகுப்பு முடிந்தபின், எங்கள் அனைவருக்கும் அவர் மலர்கள் வழங்கினார். அந்த மலரை நான் வாங்கச் சென்றபோது, நெடுஞ்சாண் கிடையாக விழுந்து அவரை வணங்கினேன். என்னை எழுப்பிய அவர், என்னைக் கட்டிப்பிடித்துக்கொண்டார். வழிந்தோடிய என் கண்ணீர் அவரது குர்தாவினை முழுவதுமாக நனைத்தது. அதுவரை, துடிப்பான, கலகலப்பான ஒரு இளைஞனாக என்னைப் பார்த்த பிற பங்கேற்பாளர்கள், அந்த நிலையில் என்னைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தார்கள்.

அந்த பிரம்மச்சாரியின் சக்திநிலை, அவரது தன்மை, என்னுள் பலத்த தாக்கத்தினை ஏற்படுத்தியது. அவருடன் வந்திருந்த மற்றொரு ஆசிரியரிடம், “அவரைப் போல் ஆகவேண்டும் என்றால் நான் என்ன செய்யவேண்டும்?” என்று கேட்டேன். “பிரம்மச்சரியமா?” என்று என்னிடம் திரும்பக் கேட்டார். அப்படியென்றால் என்னவென்று தெரியாத நிலையிலும் “ஆமாம்” என்று பதில் அளித்தேன். “விருப்பமாய் இருத்தல், அவ்வளவுதான்.” என்றார் புன்னகையுடன். அன்றிலிருந்து என் வாழ்வின் நோக்கம் பிரம்மச்சரியம் எடுப்பதாய் இருந்தது.

பயிற்சிக்கு என்னை முழுவதுமாக கொடுத்தேன். கிரியா பயிற்சி செய்ய ஒண்ணேகால் மணி நேரம் எடுக்கும். ஆனால், முன்பிருந்ததைவிட என் வேலையில் செயல்திறன் மிக்கவனாய் மாறினேன். இதனால், என் உரிமையாளர் ஏமாறும் வகையில், நெற்குவியிலில் சறுக்கி விளையாட எனக்கு அதிக நேரம் கிடைத்தது. இந்த விளையாட்டுப் போக்கான மனப்பான்மை எனக்குள் குறையாமல் போனாலும், வகுப்புக்குப்பின் எனக்குள் ஏற்பட்ட ஆழமான மாற்றங்களை யாரும் காணத்தவறவில்லை.

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
சத்குரு, “உங்களுக்கும் எனக்கும் இரத்த சம்பந்தம் எதுவும் இல்லை, ஆனால் உயிர் சம்பந்தம் இருக்கிறது. அதனால், சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்,” என்றார்.

ஒரு மாதத்திற்குள், விஜி அம்மாவின் ஆராதனை சத்சங்கத்தில் கலந்துகொள்ள நான் ஆசிரமத்திற்கு வந்திருந்தேன். அவர் சமாதி அடைந்த பதினோறாவது நாளில் ஆராதனை நடந்தது. என் வாழ்வில் அவரை நான் இரண்டு தடவை மட்டுமே பார்த்திருக்கிறேன் - ஒன்று அரிசி மில்லில், மற்றொரு முறை என்னுடைய ஈஷா யோகா நிகழ்ச்சி தீட்சை நாளன்று. பலரும் விஜி அம்மா குறித்து பகிர்ந்துகொண்டனர். சத்சங்கம் முடிவதற்குள், சத்குரு, “உங்களுக்கும் எனக்கும் இரத்த சம்பந்தம் எதுவும் இல்லை, ஆனால் உயிர் சம்பந்தம் இருக்கிறது. அதனால், சாப்பிட்டுவிட்டு செல்லுங்கள்,” என்றார். அவ்வார்த்தைகள் எனக்குள் மிக ஆழமாகச் சென்றன. பாதையில் உறுதியோடு நடை போடுவதற்கு தேவையான பலத்தினை எனக்கு அது கொடுத்தது.

மார்ச் மாதத்தில் சத்குருவுடன் பாவ-ஸ்பந்தனா வகுப்பினை செய்தேன். ஏதோவொரு ப்ராசஸ் துவங்கியவுடன் நான் ஆடுவேன், அழுவேன் - ஒவ்வொரு நாளும், பெரும்பாலான ப்ராசஸ்களில் இது நடந்தது. முதல் நாளன்று தன்னார்வத் தொண்டர்கள் என்னை ஓரிடத்தில் உட்கார வைக்க முயற்சித்தனர், அதன்பின், என்னை என் போக்கில் விட்டுவிட்டனர். சத்குரு நான் ஆடவும், நான் இருக்கும் விதத்திலேயே இருப்பதற்கும் அனுமதித்தார் என்பதை பின்னர் தெரிந்துகொண்டேன்.

பாவ-ஸ்பந்தனாவிற்கு பின், நான் ஆசிரியர் பயிற்சியில் சேரலாமா என்பதை கேட்க, சத்குருவிடம் அவரைச் சந்திக்க நேரம் கேட்டிருந்தேன். “உனக்கு ஆசிரியர் பயிற்சி வேண்டாம், உனக்கு வேறொரு வேலையை வைத்திருக்கிறேன்,” என்றார். அந்த வேலை என்ன என்பது இன்றுவரை எனக்கு தெரியவில்லை. அந்தச் சந்திப்பின்போது, பிரம்மச்சரியம் எடுப்பது குறித்து கேட்பதற்கும் நான் முடிவு செய்திருந்தேன். ஆரம்பத்தில் என்னை ஊக்கப்படுத்தாதவர், இறுதியாக, “சரி” என்று எனக்கு சந்தோஷமான சம்மதம் கொடுத்து தலையசைத்தார். ஒரே மாதத்தில் நான் ஆசிரமத்திற்கு முழுநேரமாய் வந்து சேர்ந்தேன். அடுத்த ஆண்டு, அதாவது, 1998ஆம் ஆண்டு, எனக்கு பிரம்மச்சரிய தீட்சை வழங்கப்பட்டது.

குருவின் அன்பு

தீட்சை நாள், என் வாழ்வின் மறக்க முடியாத நாட்களில் ஒன்று. அந்த நாளிற்காகத் தானே நான் அத்தனை நாட்கள் காத்திருந்தேன். தீட்சைக்கு பின், இன்று சந்திரகுண்டம் இருக்கும் இடத்தில், வாழை இலை விருந்திற்காக நாங்கள் அமர்த்தப்பட்டோம். அன்று மஹாசிவராத்திரி, வாடிக்கையான தக்காளி சாதமும் சக்கரை பொங்கலும் பரிமாறப்பட்டது. நான் சத்குருவிற்கு இடப்புறம் அமர்ந்திருந்தேன். திருப்பூரைச் சேர்ந்த பொன்னுசாமி அண்ணா சத்குருவிற்கு சக்கரை பொங்கல் பரிமாறியபோது, “விஜி அம்மா இன்று இருந்திருந்தால், அவர் கைகளாலேயே இந்த இனிப்பினை நமக்கு பரிமாறி இருப்பார் இல்லையா,” என்ற எண்ணம் எனக்குள் எழுந்தது. சத்குருவிடமிருந்து நகர்ந்து, என்னை நோக்கி வந்த பொன்னுசாமி அண்ணாவிடம், “அவருக்கு சக்கரை பொங்கல் போட வேண்டாம்,” என்றார் சத்குரு. அண்ணாவிற்கும் எனக்கும் இது புதிராய் இருந்தது, சத்குருவை இருவரும் விசித்திரமாய் பார்த்தோம். தன் இலையிலிருந்த சக்கரை பொங்கலை அள்ளி என் இலையில் வைத்தார் சத்குரு. என் கன்னங்களில் கண்ணீர் துளிகள் உருண்டோடின.

தன் இலையிலிருந்த சக்கரை பொங்கலை அள்ளி என் இலையில் வைத்தார் சத்குரு. என் கன்னங்களில் கண்ணீர் துளிகள் உருண்டோடின.

அதே நாளில், சத்குருவுடன் ஆசிரமத்தின் பல்வேறு இடங்களில் எங்களையும் புகைப்படம் எடுக்கும் பணி நம் வீடியோ சிவா அண்ணாவிற்கு வழங்கப்பட்டிருந்தது. சத்குருவிற்கு பக்கத்தில் நிற்கவேண்டும் என்கிற ஆசை எனக்குள் மேலோங்கியது. ஆனால், அவரை என்னால் நெருங்க முடியவில்லை. கடைசி புகைப்படம் எடுப்பதற்கு விஜி அம்மாவின் சமாதிக்கு சென்றோம். எப்படியாவது புகுந்து போய் சத்குருவிற்குப் பக்கத்தில் நிற்க வேண்டும் என்று எனக்குள் நான் முடிவுசெய்து கொண்டேன். ஆனால், நடந்த ஏதோவொரு செயலால் திசைதிருப்பப்பட்டேன். அவர் அருகே இருந்த இடங்கள் நிறைந்தன. நொறுங்கிய இதயத்துடன், ஓரத்தில் நின்றுகொண்டேன். அண்ணா தன் காமிரா அமைப்பை சரிபார்த்துக் கொண்டிருந்தார். அவர் புகைப்படம் எடுக்கவிருந்த அந்த நேரத்தில், சத்குரு அவரை நிறுத்தச் சொன்னார். என்னைக் கூப்பிட்டு அவர் முன் உட்காரச் சொன்னார். என் குருவைப் பற்றியும் அவரது அன்பு குறித்தும் இதற்கும் மேல் நான் ஏதாவது சொல்ல வேண்டுமா!

மறக்க இயலா சில தருணங்கள்

OnThePathofTheDivine-SwDevabahu-isha-blog-article-swami-devabahu-with-sadhguru-consecration

ஆசிரமத்திற்குள் வந்துவிட்ட சில மாதங்களுக்குள், தியானலிங்க கட்டிடப் பணிக்கு தேவையான பொருட்களையும் ஆசிரமத்திற்கு தேவையான பொருட்களையும் கொள்முதல் செய்யும் பணி எனக்கு கொடுக்கப்பட்டது. பொருட்கள் வாங்க, டாட்டா மொபைல் ஜீப் எனக்கு கொடுக்கப்பட்டது. ஒரே நாளில், கோவைக்கு 4 தடவைகூட நான் போய் வரவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கிறது. பணத்தை மிச்சமாக்க, அந்த வாகனம் முழுக்க நிரம்பியிருந்த பொருட்களை நாங்களே ஏற்றி இறக்கி விடுவோம். தியானலிங்க வளைகூரை கட்டப்பட்டபோது ஏற்பட்ட கடினமான சூழ்நிலைகளையும் போராட்டங்களையும் அந்த தீவிரத்தையும் எங்களில் யாராலும் மறக்க முடியாது.

இந்தச் சம்பவம் என் நினைவில் இருக்கிறது... தியானலிங்கத்தின் நுழைவாசல் வளைவு கிட்டத்தட்ட முடியவிருந்த சமயம், அந்த வளைவின் இரு பக்கங்களையும் சேர்க்கவிருந்த அந்த கடைசி கல் வேறு வடிவத்திலும் அளவிலும் இருக்கவேண்டும் என்பதை நாங்கள் உணர்ந்தோம். ஆனால், எங்களிடம் அப்படியொரு கல் இருக்கவில்லை. குவாரி நிர்வாகியை உடனடியாக அழைத்து, கல்லை வெட்டச் சொன்னோம். சுவாமி தேவசத்வாவும் நானும் சேர்ந்து குவாரிக்கு சென்று அந்தப் பணி நேரத்தில் நடப்பதை உறுதிசெய்து கொள்வதற்காக கிளம்பினோம். கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அருகில் இருக்கும் குன்னத்தூர் செல்வதற்கு இரவு பத்து மணிக்கு கிளம்பினோம். காலை நான்கு மணிக்கு அந்த கல்லினை பெறும் வரை அவ்விடத்திலேயே காத்திருந்தோம்.

“அனாஹதா” என சொல்லியபோது, கிட்டத்தட்ட அவர் கவிழ்ந்து விழுவதுபோல் இருந்தது. சுதாரித்து மீண்டும் தன் கால்களில் திடமாக நின்று கொண்டார். கடைசி மூன்று சக்கரங்களை அவர் பூட்டியபோது, தாங்கமுடியாத வலியில் அவர் இருப்பதைப் போல் இருந்தது. இறுதியில், கடைசி சக்கரத்தை பூட்டியபின் சரிந்து விழுந்தார் சத்குரு.

இன்றும்கூட நேற்று நடந்ததைப் போல் என் நினைவில் நிற்கும் ஒரு நிகழ்ச்சி - தியானலிங்க பிரதிஷ்டை. தியானலிங்க பிரதிஷ்டையின் இறுதிகட்டப் பணி முடியப்போன அந்த கடைசி 15 நாட்களில், என்ன நடக்கப் போகிறது என்பதை தெரியாமல், எதிலும் நிலைகொள்ளாமலேயே நாங்கள் இருந்தோம். ஒவ்வொரு நாளும் அந்த நாளில் சூழ்நிலைகள் சாதகமாய் இருக்கிறதா என்பதை சத்குரு பார்த்துக்கொண்டே இருந்தார். எப்போது பிரதிஷ்டை நடக்கும் என்பதை நாங்கள் அறியாததால், எங்களது தினசரி வேலைகளை நாங்கள் தொடர்ந்து செய்து வந்தோம்.

ஜுன் 24, 1999 - ஆசிரமத்திற்கு தேவையான பொருட்களை வாங்க நான் கோவைக்கு போயிருந்தேன். எப்போதும் செய்வதைப் போலவே, மாலை 5.15 மணிக்கு ஆசிரமத்தை அழைத்து வேறு ஏதேனும் பொருள் தேவைப்படுகிறதா என்பதை கேட்டு தெரிந்துகொள்ள அழைத்தேன். போனை எடுத்த மா கம்பீரி, “இன்றிரவு பிரதிஷ்டை நடைபெறுவதற்கான சாத்தியங்கள் மிக அதிகம். 6 மணிக்கு சத்குரு பிரம்மச்சாரிகளை சந்திக்கிறார். உங்களால் வர முடிந்தால் வந்து சேருங்கள்,” என்றார். நான் ஆர்.எஸ் புரத்திலுள்ள டி.பி ரோட்டில் இருந்தேன். அந்த சந்திப்பினை தவறவிடக் கூடாது என்பதால் மிகமிக வேகமாக வண்டியோட்டிக் கொண்டு வந்து, 35 நிமிடங்களில் ஆசிரமத்தை அடைந்தேன். கைவல்ய குடிலிற்கு அருகில் வண்டியை நிறுத்தி விட்டு, சிவாலயா மரத்திற்கு கீழ் நடைபெறவிருந்த அந்த சந்திப்பிற்காக பிற பிரம்மச்சாரிகளுடன் சேர்ந்து கொண்டேன்.

ஒரு சில நிமிடங்களுக்கு பின் மெல்ல உள்ளே வந்த சத்குரு, வெள்ளை குர்தாவும், ஜீன்சும் அணிந்திருந்தார். “இன்று பிரதிஷ்டைக்கு சாதகமான ஒரு நாளாக தெரிகிறது,” என்றார். அதன்பின், வளைகூரைக்குள் (dome) எவ்வாறு இருக்கவேண்டும் என்பது பற்றிய குறிப்புகளை வழங்கிவிட்டு அனைவருக்கும் மல்லிகைப்பூ வழங்கினார். 30 நிமிடங்களுக்கு பின், சிவாலயா மரத்திற்கு கீழ் கல்லிலிருந்து எழுந்த சத்குரு, மெல்ல சூன்யா குடிலிற்கு நடந்து சென்றார். லீனிங் ட்ரி என நாம் அழைக்கும் அந்த சாய்ந்த மரத்திற்கு பின் சென்ற சத்குரு மெல்ல எங்கள் பார்வையிலிருந்து அகன்றார்.

பிரதிஷ்டையினை நிறைவு செய்வதற்காக, கடைசிகட்ட முயற்சியாய், தானும் லிங்கத்துடன் கலக்கவேண்டிய சூழல் ஏற்படலாம் என்று சத்குரு சொல்லியிருந்தார். அதனை நினைத்தபோதே எங்களில் பலர் விம்மிக் கொண்டிருந்தோம். ஆனால், செய்வதற்கு பணி நிறைய இருந்தது. பிரதிஷ்டையின்போது நாங்கள் என்ன செய்யவேண்டும் என்று பொறுப்புகள் பிரித்துக் கொடுக்கப்பட்டிருந்தன.

பிரதிஷ்டையின்போது, சத்குரு அவர்கள் நிலைகுலைந்து விழலாம், அவரை வீட்டிற்கு தூக்கிச் செல்லும் தேவை ஏற்படலாம் என்று எங்களில் சிலருக்கு தெரிந்திருந்தது. அந்தப் பொறுப்பு எனக்கு வழங்கப்பட்டது. அதனால், வளைகூரைக்கு வெளியே வாகனத்தை தயார்நிலையில் வைத்தபடி, நான் பாரதி அக்காவிற்கு அருகில் அமர்ந்தேன், சத்குருவை பார்த்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக!

மாலை 6 மணிக்கு கௌபீனமும் சால்வையும் உடுத்தியவராய் சத்குரு சூன்யா குடிலை விட்டு வெளியே வந்தார். இருபுறமும் இரு பிரம்மச்சாரிகள் தீப்பந்தம் ஏந்த, சத்குரு அவர்களுக்கு இடையே நடந்து வந்துகொண்டிருந்தார். முதலில் விஜி அம்மாவின் சமாதிக்கு சென்ற சத்குரு, அங்கு சில ப்ராசஸ்களை செய்தார். அவர் வளைகூரை நோக்கி வருவதை நான் பார்த்தவுடன் உள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன். உள்ளே இருட்டாக இருந்தது. ஆவுடையாரும் லிங்கமும் மட்டும் லேசான வெளிச்சத்தில் தெரிந்தன.

அவர் அருகில் சென்றவுடன், தன் கைகளை உயர்த்தி என் தோள்களை பிடித்து எழ முயற்சித்தார். அவரது அந்தத் தொடுதல், மின்சாரத்தை விட வீரியமாக இருந்தது. நான் கட்டுக்கடங்காமல் நடுங்கத் துவங்கினேன்.

உள்ளே வந்த சத்குரு, எந்தவித உதவியும் இல்லாமல் அப்படியே குதித்து ஆவுடையாரின் மீது ஏறினார். தண்ணீர் கேட்டார். எந்த பாத்திரமும் என் கண்களில் படாததால் என்ன செய்வது என்று எனக்கு தெரியவில்லை. அதே சமயத்தில், ஜலசீமாவில் தன் கைகளால் நீரினை அள்ளிய மற்றொரு பிரம்மச்சாரி, அதனை சத்குருவிடம் நீட்டினார். தன் சக்கரங்களின் மீது அந்த நீரைப் பூசிக்கொண்ட சத்குரு ப்ராசஸினை துவங்கினார். மேல் சக்கரத்திலிருந்து துவங்கிய சத்குரு, ஒவ்வொரு சக்கரமாக பூட்டியபின், அதன் பெயரையும் உரக்க உச்சரித்தார். “அனாஹதா” என சொல்லியபோது, கிட்டத்தட்ட அவர் கவிழ்ந்து விழுவதுபோல் இருந்தது. சுதாரித்து மீண்டும் தன் கால்களில் திடமாக நின்று கொண்டார். கடைசி மூன்று சக்கரங்களை அவர் பூட்டியபோது, தாங்கமுடியாத வலியில் அவர் இருப்பதைப் போல் இருந்தது. இறுதியில், கடைசி சக்கரத்தை பூட்டியபின் சரிந்து விழுந்தார் சத்குரு.

உடனடியாக அவரிடம் சென்றிருக்க வேண்டிய சூழ்நிலையில் இருந்த நான், பார்த்த காட்சியால் உரைந்து போயிருந்தேன். அங்கு ஆவுடையாரின் மேல், கண்களை மூடியவராய் சரிந்துப் போயிருந்தார் சத்குரு. சில கணங்கள் அவரை அப்படியே உற்றுப் பார்த்தபடி நான் நின்றிருந்தேன். அந்தச் சமயத்தில், அவர் கைகளால் சில சமிக்ஞைகள் செய்வதை நாங்கள் பார்த்தோம். அதனைப் புரிந்துகொண்ட பாரதி அக்கா, சத்குருவை வீட்டிற்கு அழைத்துச் செல்ல சொல்லி என்னிடம் ஜாடை காட்டினார். அப்போதுதான் நான் என் சுயநினைவிற்கு வந்தேன். விரைந்து அவரை தூக்கினோம். அவரை நாங்கள் தூக்கிச் சென்றபோது, அவரது கண்கள் மூடியே இருந்தன, அவரிடம் இருந்து சில ஓசைகள் எழுந்தன. அவர் சொல்ல இயலா வலியில் இருப்பதை நான் உணர்ந்து கொண்டேன்.

டிரைவர் இருக்கைக்கு அருகே இருக்கும் சீட்டில் அவரை அமர வைத்தபின், நான் ஓட்டுநர் இருக்கைக்கு சென்றேன். அவர் என் தோள் மீது சாய்ந்தபடி இருக்க, அவரை நான் சூன்யா குடிலிற்கு வண்டியில் ஓட்டிச் சென்றேன். அவரை வீட்டிற்குள் அழைத்துச் செல்ல நாங்கள் முயற்சித்தபோது, என் சட்டை கியர் ராடில் சிக்கிக் கொண்டது. அவரது தோளினை என் இரு கைகளில் ஏந்தியிருந்ததால், சட்டையை விலக்க கைகளை எடுக்க முடியவில்லை. ஒரே வேகத்தில் சட்டையை கிழித்துக் கொண்டு சென்றேன். அவர் வீட்டில், அவரது அறை நோக்கி சென்றோம், ஆனால், சத்குரு தியானலிங்க பிரதிஷ்டை தயாரிப்புகள் நடந்த ஷ்ரைனிற்கு அழைத்துச் செல்லும்படி எங்களிடம் சைகை செய்தார். அங்கு அவரை தரையில் கிடத்தினோம். தரையில் இட்டவுடன் உருண்டு புரள ஆரம்பித்தார் சத்குரு. அவரை அந்த நிலையில் என்னால் பார்க்கவே முடியவில்லை. கண்களில் கண்ணீர் உருண்டோட அங்கிருந்து வெளியேறினேன்.

பிரதிஷ்டை முடிந்த மூன்றாவது நாளில், சத்குருவை சிவாலயா மரத்திற்கு அழைத்து வரும் பொறுப்பு என்னிடம் ஒப்படைக்கப்பட்டது. அவரது அறைக்குள் நான் நுழைகையில், அவர் நாற்காலியில் அமர்ந்திருந்ததை பார்த்தபோதுதான் நான் நிம்மதி அடைந்தேன். அங்கு வேறு யாருமே இல்லை, உட்கார்ந்திருந்தார். அவர் அருகில் சென்றவுடன், தன் கைகளை உயர்த்தி என் தோள்களை பிடித்து எழ முயற்சித்தார். அவரது அந்தத் தொடுதல், மின்சாரத்தை விட வீரியமாக இருந்தது. நான் கட்டுக்கடங்காமல் நடுங்கத் துவங்கினேன். அதனை புரிந்து கொண்டவர் தன் கைகளைக் கீழே தாழ்த்திக் கொண்டார். அவரது இடுப்பைப் பிடித்து அவரை நடத்தி, சியரா காருக்கு கூட்டி வந்தேன். நான் டிரைவர் சீட்டில் அமர்ந்து, வாகனத்தை கிளப்பவிருந்த நேரத்தில், சத்குரு அந்த காரை நான் ஓட்டுவதில் இருந்த ஒவ்வொரு அசைவையும் கவனித்ததில் எனக்குள் பெருமகிழ்ச்சி ஏற்பட்டது. தனது காரின் பயணி இருக்கையில் சத்குரு உட்கார்ந்தது அதுவே முதல் தடவையாக இருந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

அந்த நாளிற்கு பின், நான் மௌனத்தில் சென்றேன். ஏழு நாட்களுக்கு பிறகு, சேலத்திற்கு ஒரு சந்திப்பிற்காக அவர் புறப்படுகையில் அவரைப் பார்க்க நேர்ந்தது. மெல்ல நடந்தார். பார்ப்பதற்கு களைப்பாகவும், நம்ப முடியாத அளவிற்கு வயதாகிப் போனது போலவும் தெரிந்தார். வெறும் பத்தே நாட்களில் அவரது தாடியில் நரைகூடிப் போனது. ஆனால், அவர் நம்முடன் உயிரோடு இருக்கிறாரே என்கிற நிம்மதி பரவியது!

வேடிக்கையான நாட்கள்

நான் ஆசிரமத்திற்கு வந்துசேர்ந்த முதல் சில நாட்களில், ஒரு பிரம்மச்சாரினி என்னிடம் துடைப்பத்தை கொடுத்து, உணவு உண்ணும் அறையை கூட்டிப் பெருக்கச் சொன்னார். அதிர்ச்சியுடன் அவரை பார்த்தவன், “என்ன, கூட்டுவதா? பெண்கள்தான் இதுபோன்ற வேலைகளை செய்வார்கள், ஆண்கள் அல்ல,” என நினைத்துக் கொண்டேன். ஆனால், வேறு வாய்ப்பே இல்லாததால், அந்த இடத்தை கூட்டினேன். ஆனால், கூடிய விரைவிலேயே இந்த இனப் பாகுபாடு என்னிலிருந்து காணாமல் போனது. ஒவ்வொருவரும் ஒருவருக்கு ஒருவர் உறுதுணையாய், ஒருவருடன் ஒருவர் பூசலிட்டுக் கொண்டு, விளையாட்டாய் கைகலப்புகள் செய்துகொண்டு, ஒரு குடும்பமாய் வாழத் துவங்கினோம். ஒருசிலர் மீது நான் செய்த நையாண்டிக் குறும்புகள் இன்றும் என் நினைவை விட்டு அகலவில்லை. நான் மட்டும் இதுபோன்ற சேட்டைகளுக்கு அகப்படாமல் இல்லை, நிறையவே திரும்பக் கிடைத்தது.

அடுத்த 3 மாதங்களுக்கு, முன்னிருந்த அதே வேகத்துடன், தண்ணீர் நிரப்பிய மெஷினை போட்டுக் கொண்டிருந்தார், அந்த சுவாமி. அவருக்கு நான் செய்த குசும்பு தெரிய வந்தபோது என்ன ஆகியிருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை!

பிரதிஷ்டை முடிந்த சில ஆண்டுகளில், கணக்குப் பணியை பார்த்துக் கொள்வதற்காக நான் சிங்காநல்லூர் அலுவலகத்திற்கு மாறினேன். அங்கு தங்கியிருந்த ஒரு சுவாமி, தங்குமிடத்திற்குள் கொசு நுழையக்கூடாது என்பதில் குறியாய் இருந்தார். ஒவ்வொரு நாளும், ஒரு குறிப்பிட்ட நேரத்தில், ஒரு சடங்குபோல், கொசுவிரட்டியை அவர் போட்டுவிடுவார். அந்த கொசுவிரட்டி அப்படியொன்றும் வேலை செய்யவில்லை. கொசுக்கடி வாங்கிக் கொண்டுதான் இருந்தோம். ஒருநாள், கொசு மருந்து குறைய குறைய எல்லா மெஷின்களிலும் தண்ணீரை ஊற்றி வைத்துவிட்டு, ஸ்விட்சு போர்ட்டுடன் இணைத்து வைத்துவிட்டேன். அடுத்த 3 மாதங்களுக்கு, முன்னிருந்த அதே வேகத்துடன், தண்ணீர் நிரப்பிய மெஷினை போட்டுக் கொண்டிருந்தார், அந்த சுவாமி. அவருக்கு நான் செய்த குசும்பு தெரிய வந்தபோது என்ன ஆகியிருக்கும் என்று நான் உங்களுக்கு சொல்லத் தேவையில்லை!

மற்றொரு முறை நான் வாங்கிக்கொள்ளும் நிலையில் இருந்தேன். நான் கொள்முதல் (purchases) துறையை பார்த்துக் கொண்டிருந்த நேரம் அது. புறப்படுவதற்கு கால தாமதம் ஆகிவிட்டால் நான் சிங்காநல்லூர் அலுவலகத்திலேயே தங்கிவிடுவது வழக்கம். அந்த காலகட்டத்தில், சமையல் பொறுப்பு ஏற்றிருந்த சுவாமி தேவசத்வா, நான் எவ்வளவு தாமதமாக வந்தாலும் குறைந்தது ஒரு உப்புமாவையாவது எனக்கு சமைத்துப் போட்டு விடுவார். அதைப்போன்ற ஒரு இரவிற்கு பின், மறுநாள் காலையில் சுவாமி என்னிடம், “காலை உணவிற்கு உனக்கு பிடித்த ஐட்டம் ஏதாவது நான் சமைக்கட்டுமா?” என்று கேட்டார். “இல்லை, சாமி. நீங்கள் விரும்பியதை சமையுங்கள்,” என்று நான் சொன்னேன். ஆனால், அவர் விடாபிடியாய் என்னிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டே இருந்தார்.

கடைசியாக, நான் எதையோ ஒன்றை அவரிடம் சொன்னேன். சில மணி நேரங்களுக்கு பின் உணவு உண்ணும் அறைக்கு நான் விரும்பிய அந்த உணவை எல்லாம் சுவைக்கலாம் என்று சென்றபோது, உருளைக் கிழங்கு போட்ட உப்புமாவை பார்த்து சற்றே குறுகித்தான் போனேன். “ஒருவேளை சுவாமி பிஸியாக இருந்திருப்பார் போல,” என்று நினைத்துக் கொண்டு, மெல்ல தட்டில் பரிமாறிக் கொண்டு, உள்ளெழுச்சிப் பாடலை சொல்லிவிட்டு, முதல் கவளத்தை உண்டேன்... உருளைக் கிழங்கு பச்சையாக இருந்தது, வேக வைக்கப்படவில்லை. அடுத்த அரை மணி நேரம், அதிலிருந்த கிழங்கு பொறுக்குவதிலும், கிழங்கில் ஒட்டியிருக்கும் உப்புமாவை பிரித்து எடுத்து வயிற்றை நிரப்புவதிலுமே நேரம் போனது. மீண்டும் ஒருமுறை இதே தந்திர வலையில் நான் மாட்டிக்கொண்டேன் இதுபோல், ஒருவரை ஒருவர் குறும்புகள் செய்து விளையாடிய பல சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.

பஞ்சபூத ஆராதனையிலிருந்து கைலாயம் வரை

2006ஆம் ஆண்டில், 4 ஆண்டுகள் மௌனத்தில் சத்குரு என்னை இருக்கச் செய்தார். நான் மௌனத்திலிருந்து வெளிவந்த அந்த நாளன்று, முதன்முதல் பஞ்சபூத ஆராதனையை நடத்துவது தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்க, சத்குருவுடனான ஒரு சந்திப்பில் இணைய எனக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. ஒரு கட்டத்தில், “யார் இதனை பார்த்துக் கொள்வார்கள்?” என்று சத்குரு சுவாமி நந்திகேஷாவிடம் கேட்டார். சுவாமி என்னைக் காட்டினார். என்னால் இந்த வேலையை கவனித்துக்கொள்ள முடியுமா என்கிற கேள்வியுடன், “உங்களால் பார்த்துக்கொள்ள முடியுமா சுவாமி?” என்று கேட்டார். நான் தலை ஆட்டினேன். அவர் என்ன குறிப்புகளைக் கொடுத்தாரோ அது முழுவதுமாய் கடைபிடிக்கப்படுவதை நான் கடைசி வரை உறுதிசெய்து கொண்டு, என் முழு திறனிற்கு பணிசெய்தேன். மூன்று வருட கோவில் பணிக்கு பின், 2013ஆம் ஆண்டில் நான் அக்ஷயாவிற்கு (நம் சமையல் துறை) மாறினேன், அதன்பின், 2015 ஆண்டில் கார்பென்ட்ரிக்கு வந்தேன்.

onthepathofthedivine-swDevabahu-kitchen

2015ஆம் ஆண்டு, கைலாய யாத்திரையில் சத்குருவுடன் செல்லும் குழுவிற்கான சமையல் பணியினை என்னைப் பார்த்துக்கொள்ள சொல்லி மா கம்பீரி சொன்னார். நாங்கள் ப்ராகாவில் (நேபாள்) இருந்தபோது, சத்குருவிற்கு சமையல் பிடித்திருந்ததாகவும், அடுத்த சில நாட்களில் மலைகளின் மேல் ஏற ஏற இதே தரத்தினை காப்பாற்ற முடியுமா என சத்குரு கேட்டதாக சொன்னார்கள். “அடுத்த 15 நாட்கள் நான் உயிருடன் இருந்தால், இதைவிட அதிகத் தரத்துடன் கொடுக்க முடியாமல் போனாலும், இதே தரத்தினை நிச்சயம் காப்பாற்றுவேன்,” என்று எனக்குள் நான் உறுதியெடுத்துக் கொண்டேன். மொத்த கிச்சன் குழுவும் இதனை நடத்திக்காட்ட கடுமையாக உழைத்தனர்.

OnThePathofTheDivine-SwDevabahu-isha-blog-article-swami-devabahu-cooking

யாத்ராவின் கடைசி நாளன்று நடைபெற்ற கடைசி வகுப்பில், சமையலை சத்குரு புகழ்ந்தது பற்றி கேள்விப்பட்டதில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. சமையல் குழுவால் அந்த சத்சங்கத்தில் கலந்துகொள்ள முடியவில்லை என்பதை அறிந்த சத்குரு, எனக்கு செய்தி சொல்லி அனுப்பினார். “இந்த யாத்திரையில் பல்வேறு விஷயங்கள் நடந்துள்ளன. சில சமயங்களில் அவை சிறப்பாய் இல்லாமல் போயிருக்கலாம். ஆனால், எப்போதுமே சாப்பாடு நன்றாக இருந்தது. சுவாமிக்கும் அவரது குழுவினருக்கும் எனது ஆசிகள்,” மறுமுறை என் கண்களில் கண்ணீர் வழிந்தோடியது.

சத்குருவே தாய், தந்தை, நண்பர் - எல்லாமுமே அவர்தான். நாம் அனைவரும் சேர்ந்து வளர, பிரதிஷ்டை செய்யப்பட்ட, சக்திவாய்ந்த இடத்தை வழங்கிய சத்குருவிற்கு, என் நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை.

கடந்த வருடம், அவர் இணையதளத்தில் நேரடியாக எழுதுகையில், “நம்முடைய ஆசிர்வதிக்கப்பட்ட சுவாமி,” என குறிப்பிட்டிருந்தார் என்பதை கேள்விப்பட்டபோது, இந்த சுவாமியால் பஞ்சபூத ஆராதனையை பார்த்துக்கொள்ள முடியுமா என்கிற தயக்கத்துடன் என்னை சத்குரு பார்த்த அந்த நாளினை நினைத்து என் கண்கள் மறுமுறை நனைந்தன. என்னால் இந்தப் பொறுப்பினை ஏற்க முடியுமா என கேட்ட அதே சத்குரு, “என்னை ஆசிர்வதிக்கப்பட்ட சுவாமி,” எனச் சொன்னது எனது வளர்ச்சியை அங்கீகரிப்பதாய் நான் நினைக்கிறேன்.

சத்குருவே தாய், தந்தை, நண்பர் - எல்லாமுமே அவர்தான். நாம் அனைவரும் சேர்ந்து வளர, பிரதிஷ்டை செய்யப்பட்ட, சக்திவாய்ந்த இடத்தை வழங்கிய சத்குருவிற்கு, என் நன்றியை எப்படி வெளிப்படுத்துவது என்று எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு சூழ்நிலையிலும் நான் தொடர்பு கொள்ளும் ஒவ்வொரு மனிதரும் - சேவாதார், தன்னார்வத் தொண்டர்கள், ஆசிரமவாசிகள் மற்றும் பிரம்மச்சாரிகள் - என ஒவ்வொருவரும் என் வளர்ச்சியில் பங்கு வகித்திருக்கிறார்கள்.

இறுதி மூச்சு

இரண்டு வருடங்களுக்கு முன், பிரம்மச்சாரிகள் சாதனாவின் அங்கமாக, ஒரு நாள் காயந்த ஸ்தானத்திற்கு போயிருந்தேன். எனக்குள் இறப்பு பற்றி சூட்சும நிலையிலான ஒரு பயம் இருந்தது. “இறந்த உடல்கள் எரிவதை நான் எவ்வாறு பார்ப்பேன்?” என்று போகிற வழியில் யோசித்துக் கொண்டிருந்தேன். அது எப்படி நடந்தது என்று தெரியவில்லை, அந்த நாளிற்கு பிறகு, அந்த பயம் அடியோடு காணாமல் போனது. உயிருடன் இருப்பவருக்கும், உயிரில்லாதவருக்கும் இருக்கும் வித்தியாசமே மூச்சுதான்.- இறந்தவருக்கு மூச்சு முடிந்துவிட்டது, அவ்வளவுதான். அந்த நாளிலிருந்து, ஒவ்வொரு மூச்சையும் ஆனந்தத்துடன் சுவாசிக்கிறேன், கடைசி மூச்சிற்காக காத்திருக்கிறேன்.