சுற்றுச்சூழலைக் காக்க ஆளுக்கொரு சைக்கிள் !
சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சைக்கிளும் (மிதிவண்டி) ரீசைக்கிளும் (மறுசுழற்சி) எப்படி உதவும் என்பதை விளையாட்டாகவும் கவிதையாகவும் கலைநயமிக்க பொருட்கள் மூலமாகவும் ஈஷா ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் சுற்றுசூழல் தினமான நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக உணர்த்தினர். அந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்த சில வரிகள் இங்கே!
சுற்றுச்சூழலைக் காப்பதற்காக சைக்கிளும் (மிதிவண்டி) ரீசைக்கிளும் (மறுசுழற்சி) எப்படி உதவும் என்பதை விளையாட்டாகவும் கவிதையாகவும் கலைநயமிக்க பொருட்கள் மூலமாகவும் ஈஷா ஆசிரமவாசிகளும் தன்னார்வத் தொண்டர்களும் சுற்றுசூழல் தினமான நேற்று பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக உணர்த்தினர். அந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் குறித்த சில வரிகள் இங்கே!
'சுற்றுச்சூழல் தினம்' இது குறிப்பிட்ட இனத்தவருக்கோ மதத்தவருக்கோ உரியது அல்ல, இது உயிர் வாழும் அனைவரும் கடைபிடிக்க வேண்டிய தினம். சுவாசிக்கும் அனைத்து மனிதனும் கவனிக்க வேண்டிய ஒரு தினம். அப்படியானால், விலங்குகளும் பறவைகளும் புழு-பூச்சிகளும் இந்த தினத்தை அனுசரிக்க தேவையில்லையா?! ஆம், தேவையில்லை! அவை இயற்கையின் கட்டுப்பாட்டுக்குள் இயற்கையை சிதைக்காமல் அதன் பாதையில் செல்கின்றன. ஆனால், மனிதன் மட்டும்தான் எந்தெந்த வழிகளில் இயற்கையை சூறையாட முடியுமோ அந்த வழிகளையெல்லாம் அறிந்துள்ளான். மனிதனுக்கு தனக்கு வேண்டியது எவ்வளவு என்பதும்கூட பல சமயங்களில் புரிவதில்லை. இந்த பூமி இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு இருந்து வரும் சந்ததிகளுக்கு வாழ்வாதாரமாக அமைய வேண்டும் என்ற மனப்பான்மை மனிதனுக்கு இருப்பதாய் தெரியவில்லை.
மண்ணும் நீரும் காற்றும் மனிதனிடம் சிக்கி சீர்கெட்டு வருவதோடு, பின்விளைவுகளைச் சுமந்துகொண்டு அவனுக்கு எமனாகவும் காத்திருக்கின்றன. வாய்க்குள் நுழையாத ஏதேதோ பெயர்களில் நோய்கள்; புது புது வைரஸ்கள்; காற்றிலும் நீரிலும் பரவும் இதுபோன்ற உயிர்க்கொல்லி நுண்ணுயிர்களால் இறக்கும் குழந்தைகள் மற்றும் பெரியவர்களின் விகிதம் நாளுக்கு நாள் அதிகரித்தவண்ணம் உள்ளது. இனியாவது நாம் விழிப்புணர்வு பெறவில்லையென்றால், எதிர்கால சந்ததிகள் ஆரோக்கியம் என்பதையும் நல்வாழ்வு என்பதையும் ஏடுகளில் எழுத்துக்களாக மட்டுமே படித்துக்கொண்டிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை!
ஜூன் 5ல் ஈஷாவில்...
உலக சுற்றுச்சூழல் தினமான ஜூன் 5ஆம் தேதியன்று, ஈஷா யோகா மையத்தில் சுற்றுசூழல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பலவித நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல், ஒரு கொண்டாட்டமாக விளையாட்டுகளுடனும் கலைநிகழ்ச்சிகளாகவும் நடைபெற்றன.
Subscribe
காலையில், ஈஷா ஹோம் ஸ்கூல் பள்ளி மாணவர்களுடன் ஈஷா தன்னார்வத் தொண்டர்களும் பிரம்மச்சாரிகளும் இணைந்து மையத்திலிருந்து மலையோர கிராமமான செம்மேடு வரை சைக்கிள் பேரணியை மேற்கொண்டனர். மோட்டார் வாகனங்களை உபயோகிப்பதால் உண்டாகும் புகையை தவிர்ப்பதை வலியுறுத்தி, இந்த சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது. புகை கக்கும் வாகனங்களைத் தவிர்த்து சைக்கிளில் செல்வதே சுற்றுசூழலுக்கு உகந்தது என்பதை மாணவர்களும் பொதுமக்களும் உணர்ந்துகொள்வதற்காக இந்தப் பேரணி நிகழ்த்தப்பட்டது. பேரணியின் முடிவில் 200 மரக்கன்றுகள் கிராம மக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. குழந்தைகளுக்கு இனிப்பும் வழங்கப்பட்டன. சுற்றுச்சூழல் விழிப்புணர்வு குறித்த உரையும் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தினரால் நடத்தப்பட்டது.
மாலை நேரத்தில் அரங்கேறிய நிகழ்ச்சிகள்...
மாலையில் ஈஷா ஆசிரமவாசிகள் சுற்றுசூழல் தினத்தை விளையாட்டுகள் மற்றும் கலை நிகழ்ச்சிகளோடு கொண்டாடினர். மாவிலை, வாழை இலை, தென்னங்கீற்று என மரங்களின் இலைகளின் பெயர்களில் 15 குழுக்களாகப் பிரிந்திருந்த அவர்கள், சைக்கிள் ரிலே ரேஸ் போட்டியில் உற்சாகமாகக் கலந்துகொண்டனர். பின்னர், ஆசிரம வளாகத்தில் உள்ள தோட்டத்தை தூய்மைப்படுத்தியதோடு, உழுது பாத்திகட்டி செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். விவசாயத்தின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காகவும் இயற்கை விவசாயத்தை வலியுறுத்தியும் இப்பணியில் அவர்கள் ஈடுபட்டனர். மேலும் மண்ணுடன் ஆழமான தொடர்பு ஏற்படுத்திக் கொள்வதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் விதமாகவும் இந்நிகழ்ச்சி அமைந்தது.
இரவு 8 மணி வாக்கில் ஸ்பந்தா ஹாலில் நிகழ்ந்த நிகழ்ச்சியில், பங்கேற்பாளர்கள் வீணான பொருட்களிலிருந்து மறுசுழற்சி முறையில் தங்களால் உருவாக்கப்பட்டிருந்த பொருட்களை காட்சிப்படுத்தினர். சுற்றுசூழல் பாதுகாப்பை எடுத்துக்கூறும் வகையில் கவிதைகளை அவர்கள் ஒவ்வொருவரும் எழுதிக்கொண்டு வந்திருந்தது குறிப்பிடத்தக்கது. பின்னர், ஒவ்வொரு குழுவும் 3 நிமிட மேடை நாடகத்தை அரங்கேற்றினர். தங்கள் கற்பனை திறனை மேம்படுத்தும் வகையிலும் சுற்றுசூழலை பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்துவதாகவும் நாடகங்களை சுவையாக அமைத்திருந்தது பாராட்டும் வகையில் இருந்தது.
மறுசுழற்சியில் உருவாக்கப்பட்டிருந்த கலையம்சம் மிக்க பொருட்களுக்கும் சிறந்த கவிதைகளுக்கும் பாராட்டுகள் பரிசுகளும் வழங்கப்பட்டன. ஒவ்வொரு குழுவின் பங்கேற்பிற்கும் தகுந்தவாறு மதிப்பெண்களும் வழங்கப்பட்டிருந்தன. அதிக மதிப்பெண்களைப் பெற்ற குழுவினருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து உலக சுற்றுசூழல் தினத்தன்று சத்குரு வழங்கிய செய்தி ஒளிபரப்பப்பட்டது.
உங்கள் கால்தடத்தின் கார்பனைக் களையுங்கள்!
நிகழ்ச்சியில் ஈஷா பசுமைக் கரங்கள் திட்டத்தின் நோக்கத்தை விரிவாக விளக்கிய பசுமைக்கரங்களின் தன்னார்வத் தொண்டர், மரங்கள் சுற்றுச்சூழலுக்கு எந்த அளவிற்கு முக்கியமானது என்பதை பங்கேற்பாளர்களுக்கு தெளிவாக்கினார்.
தற்போது உள்ள நிலவரப்படி கணக்கிட்டால், நாம் எடுத்துக்கொள்ளும் ஆக்ஸிஜனுக்கு ஈடுசெய்து நாம் விட்டுச் செல்லும் 'கார்பன்' கால் தடங்களைக் குறைக்கும் விதமாக ஒவ்வொருவரும் குறைந்தது 5 மரக்கன்றுகளாவது நடவேண்டும்.
பொதுவாக, ஒரு வளர்ச்சியடைந்த மரம், நான்கு பேர் கொண்ட குடும்பத்திற்கு தேவையான 260 பவுன்ட் அளவு ஆக்ஸிஜனை உற்பத்தி செய்கின்றது. ஈஷா பசுமைக் கரங்கள் உங்களுக்காக மரங்களை நடவும் வளர்க்கவும் செய்கிறது. உங்கள் மரம் வளரக் கூடிய இடத்தையும் வளர்க்கும் விவசாயியின் பெயரையும் நீங்கள் அறிந்துகொள்ள முடியும்.
ரூ.100ஐ நன்கொடை வழங்குங்கள்; உங்கள் மரம் வளர்வதைக் காணுங்கள்!
(நடப்பட்ட பின் மரங்களைப் பேணுதல் மற்றும் 2 வருடங்களுக்கு மரம் மண்ணில் உறுதியாகும் வரை மறுநடவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்)
எந்த ஊரில் எந்த இடத்தில் உங்கள் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பதை இணையதளம் மூலமாக நீங்கள் காண முடியும்.
http://giveisha.org/pgh என்ற இணையதளத்தில் இணைவதன் மூலமோ அல்லது காசோலை மூலமாகவோ அல்லது வேறு வழிகளிலோ நன்கொடையை வழங்கலாம்!
மேலும் விவரங்களுக்கு: +919442590081;
மின்னஞ்சல்: info@projectgreenhands.org