"நதிகளை மீட்போம்" இயக்கம்: மிஸ்டு கால் கொடுத்தது முதல் இன்றுவரை என்ன செய்துள்ளது?
‘நதிகளை மீட்க மிஸ்டு கால் கொடுங்க!’ என்ற வேண்டுகோள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தது. "நதிகளை மீட்போம்" இயக்கம் இப்போது என்ன செய்துகொண்டிருக்கிறது?
அழிந்துவரும் இந்திய நதிகளை மீட்பதற்கு சத்குருவின் வழிகாட்டுதலில் ‘நதிகளை மீட்போம்’ (Rally For Rivers) இயக்கத்தின் பேரணி சுமார் 16 கோடி இந்திய மக்களின் ஆதரவைப் பெற்று ஒரு மாபெரும் சுற்றுச்சூழலுக்கான இயக்கமாக உருவெடுத்துள்ளது! இந்தியாவின் 16 மாநிலங்கள் வழியாக நடைபெற்ற இந்தப் பேரணியில் 16 மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்த முதல்வர்கள் பங்கேற்றனர். அவர்கள் அனைவரும் கட்சி பாகுபாடின்றி நதிகளை மீட்க வேண்டும் என்ற ஒரு பொதுவான நோக்குடன் தங்களின் ஆதரவை தெரிவித்தனர்.
அரசியல் தலைவர்கள், உயர்மட்ட ஆட்சியாளர்கள், விவசாய பல்கலைக் கழகங்கள், விவசாய தலைவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், அறிவியலாளர்கள், சினிமா பிரபலங்கள், விளையாட்டு நட்சத்திரங்கள், கலைஞர்கள், பெரு நிறுவனங்களின் தலைவர்கள், வணிகத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் என பல்வேறு துறையினர்கள் ஒன்றாக இந்த இயக்கத்திற்கு ஒன்றிணைத்து ஆதரவளித்து, இதனை மாபெரும் வெற்றியடையச் செய்துள்ளார்கள்.
"நதிகளை மீட்போம் இயக்கத்தில் தனிப்பட்ட மிஸ்டு கால்கள் மற்றும் நேரடி பங்கேற்புகளின் எண்ணிக்கை 16.05 கோடியை தாண்டியது. உங்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்." – சத்குரு
சாலை வழிப் பேரணி முடிந்தபின் என்ன நிகழ்ந்தது? - Rally For Rivers
பிரதமர் அலுவலகம் மேற்கொண்ட பணிகள்…
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘நதிகளை மீட்போம்’ பேரணி சத்குரு அவர்களால் கடந்த செப்டம்பர் 3ம் தேதியன்று கோவையில் துவங்கி தேசம் முழுக்க 16 மாநிலங்கள் வழியாக பயணித்து காந்தி ஜெயந்தியன்று புதுடெல்லியில் நிறைவுற்றது! நதிகளை மீட்டு புத்துயிரூட்டுவதற்கான திட்ட வரைவு கொள்கைகளை மாண்புமிகு பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்களிடம் சத்குரு ஒப்படைத்தார்.
இதனையடுத்து பிரதமர் அலுவலகம் மத்திய அரசின் NITI Aayog அமைப்பின் கீழ் ஒரு குழு அமைத்துள்ளதை உறுதி செய்தது. 'நதிகளை மீட்போம்' இயக்கத்தின் பரிந்துரைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து, நதிகளுக்குப் புத்துயிரூட்டுவதற்கான செயல்திட்டத்தை உருவாக்குவதற்காக இந்த உயர்மட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. நீர்வளத் துறை, சுற்றுச்சூழல், வேளாண்மை, ஊரக வளர்ச்சித்துறை, குடிநீர் மற்றும் சுகாதாரத்துறை மற்றும் கிராமப்புற மேம்பாடு என இது தொடர்பான ஆறு துறைகளைச் சார்ந்த அமைச்சகங்களிலிருந்து செயலாளர்கள் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழு மற்ற வல்லுநர்களுடன் ஈஷா வழங்கியுள்ள வரைவு திட்டங்களை கலந்தாலோசித்து அவர்களின் பரிந்துரைகளை கடந்த 2018 பிப்ரவரியில் பிரதமர் அலுவலகத்திடம் ஒப்படைத்துள்ளது.
நதிகளை மீட்போம் இயக்கம் சார்பாக, இயக்கத்தின் செயல்திட்டங்களைத் அடுத்தகட்ட நிலைகளுக்கு கொண்டுசெல்வது குறித்து மத்திய அரசுடன் கலந்தாலோசிக்கும் வகையில் ஒரு உயர்மட்ட குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் சத்குருவுடன் நீதிபதி அரிஜித் பசாயத், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி; திருமதி கிரண் மஜும்தார் ஷா, நிர்வாகி மற்றும் இயக்குனர்-பயோகான்; திரு.ரவி சிங், சர்வதேச இயற்கை நிதியின் பொது செயலாளர் மற்றும் நதிநீர் மேம்பாடு மற்றும் கங்கை நதி தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மேலாண்மை அதிகாரியாக இருந்து டிசம்பர் 2016ல் ஒய்வுபெற்ற திரு.சசி சேகர் ஐஏஎஸ்; மற்றும் விவசாயத் துறையில் சிறுபான்மை விவசாயிகளின் சங்கத்தில் நிர்வாகியாக இருந்து ஓய்வுபெற்ற திரு.பர்வேஷ் ஷர்மா-ஐஏஎஸ் ஆகியோர் இக்குழுவில் உறுப்பினர்களாக உள்ளனர்.
இக்குழுவில் சமீபத்தில் ISROன் முன்னாள் தலைவர் திரு.A.S.கிரண்குமார் அவர்கள் இணைந்துள்ளார். மேலும், டாடா ஸ்டீல் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய ஸ்டீல் தயாரிப்பாளர்களில் ஒன்றாக முன்னேறச் செய்த அனுபவமிக்க திரு.B.முத்துராமன் அவர்களும் இக்குழுவில் இணைந்துள்ளார். இவர்களை சத்குரு தனது ட்விட்டர் பதிவின்மூலம் வரவேற்றுள்ளார்.
இந்த வாரியம் அரசாங்கத்துடன் வெவ்வேறு நிலைகளிலும் மற்றும் தொழிற்சாலைகள், விவசாயிகள், தன்னார்வத் தொண்டர்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து செயலாற்றும்.
6 மாநிலங்களோடு புரிந்துணர்வு ஒப்பந்தம்… நதிகளை மீட்க!
நதிகளை மீட்போம் திட்டப் பரிந்துரைகளை செயல்படுத்தும் வகையில் ஒரு புரிந்துணர்வு (MoU) ஒப்பந்தத்தில் ஈஷாவுடன் மஹாராஷ்டிரா, கர்நாடகா, குஜராத், பஞ்சாப், சத்திஷ்கர் மற்றும் அஸ்ஸாம் ஆகிய 6 மாநிலங்கள் கையொப்பமிட்டுள்ளன. மஹாராஷ்டிராவில் இதற்கான செயல்திட்டம் முதன்முறையாக மாநில அரசுடன் இணைந்து துவங்கப்பட்டுள்ளது!
நீர்வளத்துறை மற்றும் கங்கை நதி புத்துயிராக்க திட்ட அமைச்சகம் சுமார் 10 கோடி மரங்களை கங்கை நதி பகுதிகளில் நடுவதற்கு திட்டமிட்டுள்ளது!
கர்நாடக அரசாங்கம் தங்கள் மாநிலத்தில் நதிக் கரையோரங்களில் சுமார் 25 கோடி மரக்கன்றுகளை நடுவதற்கு ஒரு சிறப்பு திட்டத்தை வகுத்து செயல்படுகிறது.
Subscribe
மகாராஷ்டிர அரசாங்கம் கூடுதலாக 50 கோடி மரங்களை தங்கள் மாநிலத்தில் நதிக்கரை ஓரங்களில் நடுவதற்கு ஒரு சிறப்பு கவனத்தை எடுத்து செயல்படுத்தி வருகிறது!
மஹாராஷ்டிராவில் முதல் முன்னோட்ட திட்டம்!
கடந்த 2017 ஜூலை 1ம் தேதி மகாராஷ்டிர மாநில அரசுடன் செய்யப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் முன்னோட்டத் திட்டமானது, யவத்மால் மாவட்டம் மற்றும் பூனே மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்திற்கான பகுதிகளை தேர்ந்தெடுப்பதற்கென, கடந்த 2017 நவம்பர் மாதத்திலிருந்து அம்மாநில அரசு அதிகாரிகளுடனும், துறைசார்ந்த அனுபவம் வாய்ந்த நிபுணர்களுடனும், வேளாண்துறை வல்லுநர்களுடனும், தோட்டக்கலைத்துறை நபர்கள், நீர்மேலாண்மை, நிலவியல் மற்றும் நிலத்தடிநீர் அறிவியல் போன்ற துறைசார்ந்த வல்லுநர்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டுள்ளது. இதன்படி மகாராஷ்டிராவில் 2 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- மேற்கு மகாராஷ்டிராவில் உள்ள பூனே மாவட்டத்தில் பீமா நதிக்கரையோரத்தில் சுமார் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கான செயல்திட்டம்
- கிழக்கு மகாராஷ்டிராவில் உள்ள யவத்மால் மாவட்டத்தில் வகதி நதிக்கரையோரத்தில் சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்திற்கான செயல்திட்டம்
நதிகளை மீட்பதற்கு முற்றிலும் புதுமையான அணுகுமுறைகள்!
நதிகள் சாகாமல் தடுப்பதற்கு ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களிலிருந்து ஈஷா முன்னெடுக்கும் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தின் செயல்திட்டங்கள் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. இந்தப் புதிய அணுகுமுறை கீழ்க்கண்ட அம்சங்களின் தொகுப்பாக உள்ளது!
- தமிழ்நாட்டில் கடந்த பத்து வருடங்களாக பசுமைப் பரப்பை அதிகரிக்கும் நோக்கில் மரக்கன்றுகளை நடும் செயல்திட்டத்தில் ஈடுபட்டு வரும் பசுமைக் கரங்கள் திட்டத்தின் அனுபவம் வாய்ந்த தன்னார்வத் தொண்டர்களின் அனுபவமும் இதில் துணையாக இருக்கிறது!
- இதன் செயல்திட்டம் நதிகளை நிலையை ஆழமாக ஆராய்கிறது!
- நதிகளின் முக்கிய பங்குதாரர்களான விவசாயிகள், காடுகளில் வாழக்கூடிய பழங்குடிகள் என பல்வேறு தரப்பினரையும் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது!
- நதிக் கரையோரங்களில் மரங்களை நடுவதன் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பெருக்குவதோடு, அதன்மூலமாக நதிகளின் நீர்வளத்தைப் பெருக்கும் விதமாக இந்த செயல்திட்டத்தின் அணுகுமுறை அமைகிறது!
'நதிகளை மீட்போம்' பேரணியைத் தொடர்ந்து, ஈஷா அறக்கட்டளை தற்பொழுது ஒரு விரிவான செயல்திட்ட வரைவை "DPR-DetailedProjectreport" தயார் செய்துகொண்டிருக்கிறது. இதில் வேளாண் பருவநிலை, மரங்களின் தேர்வு, சமூக நுண்நீர்ப் பாசனமுறையின் சாத்தியங்கள், தட்ப வெட்பத்திற்கேற்ப நிலைமாறும் உத்திகள், சந்தைப்படுத்துதலுக்கான திட்டம் மற்றும் எதிர்கால விளைச்சல்களின் விற்பனைத் திட்டங்கள் போன்ற பலவாறான செயல்திட்டங்கள் இந்த அறிக்கையில் கோடிட்டுக்காட்டப்படும். அடிப்படையில் இந்தத் திட்டங்களை விவசாய உற்பத்தியாளர் அமைப்பைக் (Farmer Producer Organizations(FPOs)) கொண்டு செயல்படுத்த உள்ளது.
ஈஷா அறக்கட்டளை இந்த செயல்திட்ட அறிக்கையின் சுருங்கிய வடிவத்தை மகாராஷ்ட்டிர அரசாங்கத்திடம் மார்ச் 7ம் தேதியன்று அளித்துள்ளது. மே மாத முடிவுக்குள் விரிவான திட்டத்தை ஒப்புதலுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளது. ஒப்புதல்பெற்றவுடனே களத்தில் இறங்கி செயல்களை நிறைவேற்றத் தொடங்க வேண்டியதுதான்!
கர்நாடகாவில் பணிகள் துவங்கப்பட்டன!
நதிகளை மீட்போம் இயக்கம் கர்நாடக அரசாங்கத்துடன் இணைந்து காவிரி நதிநீர் பகுதிகளில் தமது சில திட்டங்களை ஒரு சிறு முன்னோட்டத் திட்டமாக செயல்படுத்த பேச்சுவார்த்தை நடத்தியது. இதைத்தொடர்ந்து இப்பொழுது இந்த முன்னோடிக்கான தகுந்த இடத்தை தேர்வுசெய்ய ஆய்வு நடந்து கொண்டிருக்கிறது. தேர்வு செய்தவுடன், மகாராஷ்டிராவில் செய்ததுபோல் செயல்திட்டத்தை உருவாக்கும் பணியையும், கர்நாடக அரசாங்கத்திடம் அதன் ஒப்புதல் பெறும் பணியும் நடைபெறும்.
கர்நாடக வங்கி நதிகளை மீட்கத் தேவையான செயல்திட்டங்களுக்கு தங்கள் முழு ஒத்துழைப்பை மீட்புக் குழுவிற்கும் அரசாங்கத்திற்கும் முழுவதுமாக தர முன்வந்துள்ளது. இதன் தொடக்கமாக நதிகளை மீட்போம் இயக்க செயற்குழுவின் முன்னோடி திட்டத்திற்கு தேவையான நிதியுதவியை தர ஒப்புதல் தந்துள்ளது. இதைத்தொடர்ந்து, மற்ற 4 மாநிலங்களில் ஈஷா அறக்கட்டளை நதிகளை மீட்போம் இயக்கத்தின் கலந்தாய்வுகள் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளில் துணைநின்று இத்திட்டம் வெற்றிபெற ஒத்துழைக்கும்..
சத்குருவின் அழைப்பை ஏற்று அணிதிரண்ட இளைஞர் படை!
இப்பேரணியின்போது, சத்குரு இந்த இயக்கத்திற்கு கைகொடுக்குமாறு பாரத இளைஞர்களுக்கு எழுச்சியூட்டும் வகையில் அறைகூவல் விடுத்தார். அகில இந்தியாவிலிருந்தும் சுமார் 6500 இளைஞர்கள் முழுநேரமாகவும் பகுதிநேரமாகவும் அர்ப்பணிப்பதாக தங்களை பதிவுசெய்துள்ளார்கள்.
சில தொலைபேசி மற்றும் நேர்முக பேட்டிகளுக்குப் பின் 100 தன்னார்வத் தொண்டர்கள் தேர்வுசெய்யப்பட்டு, ஈஷா ஆசிரமத்திற்கு ஜனவரி 2018ல் அழைக்கப்பட்டனர். சத்குரு இவர்களை நதி வீரர்கள் என்று அழைக்கிறார். சமூகத்தின் பல்வேறு தளங்களிலிருந்தும் வந்துள்ள இந்த நதி வீரர்கள், நன்கு படித்து பட்டம்பெற்று, உயர்வான பல்வேறு பணிகளில் இருந்தவர்களாவர். விவசாயிகளின் நல்வாழ்விற்காகவும், வருங்கால தலைமுறையினரின் நலன்காக்கவும் தங்கள் சொந்த வேலைகளை விட்டுவிட்டு முழுவதுமாக இந்த இயக்கத்திற்காக தங்களை அர்ப்பணித்துள்ளனர்.
பெரும்பாலும் இந்த நதி வீரர்கள் 20லிருந்து 30வயதுக்கு உட்பட்டவர்கள். இந்தியாவின் 15 வெவ்வேறு மாநிலங்களிலிருந்து வந்துள்ள துடிப்பான, தீவிரமான இளைஞர்களான இவர்கள், சத்குருவின் நதிகளை மீட்போம் திட்டத்தில் கலந்துகொண்டு சுற்றுச்சூழலை மாற்றும் இந்த திட்டத்தில் முழுமையாகவும் தீவிரமாகவும் ஈடுபட தயாராக உள்ளார்கள்.
அடுத்துவரும் 3வருடங்களுக்கு சத்குருவின் கவவை உண்மையாக்குவதற்கு தங்களை முழுமையாக அர்ப்பணிக்க ஆயத்தமாக இருக்கிறார்கள்.
நதி வீரர்கள் இப்போது என்ன செய்கிறார்கள்?
நதி வீரர்களுக்கென ஒரு 3 வார ஒருங்கிணைப்பு பயிற்சிமுகாம் ஈஷா யோக மையத்தில் நடைபெற்றது! அதனைத் தொடர்ந்து இத்திட்டத்தின் தொழில்நுட்ப அம்சங்களை பற்றி அறியும் வண்ணம் பல பயிற்சி முகாம்கள் நடைபெற்றது. இந்த தன்னார்வத் தொண்டர்கள் அனைவரும் பல்வேறு துறைகளிலிருந்து பல்வேறு பகுதிகளிலிருந்து வந்துள்ளதால், அவர்களுக்கு இத்திட்டத்தை பற்றிய புரிதலும் அறிவும் ஏற்படும் வகையில் திட்டத்தின் பல்வேறு முக்கிய அம்சங்களும் விளக்கப்படுகின்றன.
இந்த நோக்கத்தில் இவர்கள் தேசிய அளவில் இயங்கிவரும் பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களுடன் அறிமுகப்படுத்தப்படுகிறார்கள். மண் அறிவியல், வேளாண்மை, தோட்டக்கலை, கூட்டு நுண்நீர் பாசனம், நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த கிராம மேம்பாடு, அரசு செயல்பாடுகள், திட்டவரைவு உருவாக்கம், வேளாண் உற்பத்தியாளர் நிறுவனம், வேளாண் பொருட்களை சந்தைப்படுத்துதல், சமூக காடுகள் மற்றும் வனச்சட்ட விதிமுறைகள், இயற்கை வேளாண்மை, மரப்பயிர் வேளாண்மை, நிலத்தடிநீர் அறிவியல் போன்ற பல்வேறு துறைசார்ந்த நிபுணர்களை இவ்வியக்கத்திற்காக நாம் அழைத்து இதில் பங்கேற்கச் செய்துள்ளோம்! இந்த நிபுணர்கள் தங்கள் துறைகளில் தங்களுக்கு இருக்கும் அனுபவங்களை வழங்குகிறார்கள்.
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் ஆகியவை தங்களது பங்களிப்பை சில அம்சங்களில் வழங்கியுள்ளன. இந்தப் பயிற்சி முகாம்களின் முதற்கட்ட நிகழ்ச்சிகள் ஏப்ரல் 30ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், பயிற்சிபெற்ற நதி வீரர்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 6 மாநிலங்களில் தங்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர்.
சத்குருவுடன் ஐ.நா. சபையின் சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் உரையாடல்!
Global Landscapes Forum (GLF) என்பது முறையான நிலவள பயன்பாடு தொடர்பான உலகின் மாபெரும் கருத்தரங்கமாகும். இதில் ஐ,நா. சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் எரிக் சோலெம் அவர்கள் கடந்த டிசம்பர் 19 அன்று சத்குருவுடன் கலந்துரையாடினார். ஜெர்மனியில் பான் நகரில் நிகழ்ந்த உலகளாவிய நிலவமைப்பு மாநாட்டில் (GLF – 2017), நீராதாரம் பற்றாக்குறையாகும் அபாயத்தை சுட்டிக்காட்டி, பாரதத்தின் நதிகளைக் காப்பதற்காக மேற்கொள்ளப்பட வேண்டிய உடனடி முன்னெடுப்புகள் பற்றியும் சத்குரு பேசினார்.
‘நதிகளை மீட்போம்’ இயக்கமானது உலக அளவில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சுற்றுச்சூழல் நடவடிக்கைகளில் ஒரு முன்னுதாரணமாக அமைவது குறித்து இந்தக் கலந்துரையாடலின் களம் அமைந்தது.
அப்போது எரிக் சோலெம் அவர்கள் ‘நதிகளை மீட்போம்’ இயக்கம் பற்றி கூறியது:
“நாம் ‘நதிகளை மீட்போம்’ இயக்கத்தைப் பின்பற்றி, காடுகள் அழிப்பைத் தடுத்து, வறண்ட நிலங்களை பசுமையாக்கினால், பருவநிலை சீர்கேட்டிற்கான ஒரு பங்குதாரர் என்ற நிலையிலிருந்து நாம் பருவநிலைக்கான தீர்வாக மாறமுடியும்.” -எரிக் சோலெம்
ஆசிரியர் குறிப்பு:
- வறண்டுவரும் நதிகளைக் மீட்க நதி வீரர்களாக தங்களை இணைத்துக்கொள்ள விருப்பமுள்ளவர்கள் அனைவருக்கும் அதற்கான வாய்ப்பு இப்போதும் காத்திருக்கிறது! நதி வீரர்கள் குறித்து மேலதிக தகவல் பெறவும், நதிவீரர்களாக உங்களைப் பதிவு செய்யவும் கீழ்க்கண்ட தொடர்புகளைப் பயன்படுத்தலாம். இ-மெயில்: volunteer.rfr@ishaoutreach.org
- நதிகளை மீட்போம் இயக்கம் தொடர்ந்து மேற்கொள்ளும் பல்வேறு முன்னெடுப்புகளைப் பற்றிய மேலும் பல தகவல்களை தெரிந்துகொள்ள அதன் முகநூல் மற்றும் இணையதளத்திற்கு வருகை தரவும்.
- இந்தியா முழுவதும் நடைபெற்ற "நதிகளை மீட்போம்" பேரணி நிகழ்வுகளின் வீடியோ தொகுப்பு இங்கே.
- "நதிகளை மீட்போம்" இயக்கத்தின் செயல்பாடுகள் குறித்து டைம்ஸ் ஆப் இந்தியா மற்றும் பல நாளேடுகளில் வெளியான செய்திகளின் தொகுப்பு இங்கே. இங்கே.