நம் வாழ்வாதாரமாக இருக்கும் நீர் நாளுக்கு நாள் பூமியில் குறைந்து கொண்டே இருக்க, அதை நிலத்தடியில் இருந்து உறிஞ்ச போர்வெல் இயந்திரங்களை பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு தண்ணீர் பிரச்சனை எதிர்காலத்தில் பூதாகரமாக வெடிக்காமல் இருக்க நாம் என்ன செய்ய வேண்டும்? எடுத்துரைக்கிறது இக்கட்டுரை...


அக்னி நட்சத்திரம் தொடங்கவிருக்கும் வேளையில், இந்த வெயிற்காலம் நிழலுக்காக மட்டுமல்ல தண்ணீருக்காகவும் நம்மை ஏங்க வைத்துள்ளது. தமிழகத்தின் தென்பகுதிகள் மிகவும் வறட்சியடைந்து வருகின்றன. அடுத்துவரும் காலங்களில், தமிழகம் முழுக்க வறட்சி தாக்கவிருக்கிறது. 'இப்ப மட்டும் என்ன வாழுது' என யாரோ தூரத்தில் பேசிக்கொள்வது கேட்கத்தான் செய்கிறது. நிலத்தடி நீரென்பது இனிமேல் கானல் நீராகிவிடுமோ என்றே எண்ணத் தோன்றுகிறது.

டைவ் அடித்து கிணற்றில் போட்ட குளியலும், கரை புரண்ட ஆற்று வெள்ளத்தில் மீன் பிடித்த நாட்களும் இனிமேல் வெறும் நினைவுகள் மட்டும்தானா?! மழை பொய்த்துப் போகிறது. வெயிலின் தாக்கமோ கேட்கவே வேண்டாம்! மாறிவரும் இயற்கைச் சூழலும் ஒழுங்கில்லாப் பருவ மாற்றமும் விவசாயத்திற்கு முடிவுரை எழுதுகிறது.

பாட்டிலில் கிடைப்பதா தண்ணீர்?

மாதம் மும்மாரி பெய்யுமாம்; பருவம் முப்போகம் விளையுமாம் அந்தக் காலத்தில். இப்போதோ குடிக்கும் தண்ணீரைக் கூட விலைக்கு வாங்க வேண்டிய அவலம் இயல்பாகிப்போனது. நிலத்தடியிலும் கிணற்றடியிலும் தண்ணீர் என்ற காலம் போய், டேங்கர் லாரிகளிலும் ப்ளாஸ்டிக் பாட்டில்களிலுமே தண்ணீர் ஊற்றேடுக்கும் எனக் குழந்தைகள் எண்ணிக் கொள்கின்றன.

1

நதியாய்ப் பாய்ந்ததால்,
செழித்தேன்!
அலையாய் மோதியதால்,
நனைந்தேன்!
தாகம் தணித்ததால்,
இனித்தேன்!
பதமாய் ஈரப்பதமாய் பரவியதால்,
சிலிர்த்தேன்!
செங்குருதியாய் நகர்ந்ததால்,
ஜீவித்தேன்!
இப்போது,
பாட்டில்களில் அடைக்கப்படுவதால்,
மதிப்பு பெறுகிறேன்!

தண்ணீரை மதிக்காத மனித குலத்தைச் சாடும் இந்தக் கவிதையில் சொல்வதுபோல், தண்ணீரின் அருமையை இதுவரை மனிதன் அறியவில்லை என்பதே உண்மை!.

மரம் இருந்தால் மார்க்கம் உண்டு!

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.
No Spam. Cancel Anytime.

விஞ்ஞானிகள் கூற்றுப்படி பூமி தோன்றி 470 கோடி வருடங்கள் ஆகின்றன. முதல் உயிர் தோன்றியது 100 கோடி வருடங்களுக்கு முன்னால் என்பதும் அவர்களின் ஆய்வறிக்கை.

தண்ணீரில் தோன்றிய முதல் உயிர், தாவரம். அது முதலில் தண்ணீரில் வாழக்கூடியதாகவும், பின்னர் நிலத்தில் வாழக்கூடியதாகவுமாக, புல்லாகி, பூண்டாகி, செடியாகி, கொடியாகி, இறுதியில் மரமாகப் பரிணமித்திருக்கிறது. தாவர இனத்தின் பரிணாம உச்சம், மரம்!

ஒரு மரம் பூமிக்கு மேலே எப்படிக் குடை பிடிக்கிறதோ அதைப் போலவே வேர்களும் பூமிக்குக் கீழே குடை விரிக்கின்றன. தண்ணீரைச் சேமிக்க நாம் மேல்நிலைத் தொட்டியைக் கட்டுவதுபோல, மரங்கள் பூமிக்குக் கீழே கீழ்நிலைத் தொட்டியைக் கட்டியுள்ளன. தண்ணீர் அந்த வேர்த் தொட்டியில் சேமிக்கப்படுகிறது. நிலத்துக்குக் கீழே நீரைச் சேகரிக்கவும், சுத்தமான மழை நீரை மண்ணுக்கு வழங்கவுமாக, மரங்களால் ஏற்படும் மறைமுக நன்மைகள் இவை.

பூமியில் உள்ள நீர்நிலைகள் ஆவியாகி, மேகமாகும். மேகங்களைக் காற்று தள்ளிச்செல்லும். அது மறுபடியும் எங்கேயாவது குளிர்ச்சியாகும்போது, மேக நீர்த்திவலைகள் மழையாய் பொழியும். மேகக் கூட்டம் குளிர்ச்சியடைவது மரக்கூட்டம் அதிகமாய் பரவி உள்ள இடங்களில்தான்.

கார்பன்-டை-ஆக்ஸைடு என்னும் கரிக்காற்றை உள்வாங்கி, மற்ற உயிரினங்களுக்கான ஆக்ஸிஜனை வெளிவிடும் மரங்களை வெட்டத்தொடங்கியது மனித சமூகம் செய்த முதல் தவறு எனச் சொல்லலாம். தேவைக்கு ஏற்ப வெட்டிவிட்டு புதிய மரங்களை நட்டிருந்தால் இப்போது நிச்சயம் இந்நிலை ஏற்பட்டிருக்காது.

ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்

தமிழகத்தின் பசுமைப் பரப்பை அதிகரிப்பதற்காக, சத்குரு அவர்களின் வழிகாட்டுதலில் ஈஷா அறக்கட்டளை, ஈஷா பசுமைக் கரங்கள் என்ற திட்டத்தின் மூலம் பல மகத்தான செயல்களை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் ஈஷா பசுமைக் கரங்கள், மண்ணிற்குத் தகுந்த மரக்கன்றுகளை மிகக் குறைந்த விலையில் (1 மரக்கன்று - ரூ.5/-) வழங்கி வருகிறது. ஈஷாவின் வேளாண் வல்லுனர்கள், மரக்கன்றுகள் நடுவதற்கு ஆலோசனைகளையும் மரம் வளர்பதற்குத் தேவையான வழிமுறைகளையும் கூறி வழிகாட்டுகின்றனர்.

தமிழகமெங்கும் 50கி.மீ. சுற்றளவிற்கு ஒன்றென, மொத்தம் 85 நாற்றுப் பண்ணைகளை 'ஈஷா பசுமைக் கரங்கள் திட்டம்' அமைத்துள்ளது. எதிர்வரும் மழைக்காலத்தில் இன்னும் அதிகமான மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய ஈஷா தன்னார்வத் தொண்டர்கள் திட்டமிட்டுள்ளனர். ஈஷாவுடன் இணைந்து, ஆகவேண்டிய செயல்களை இப்போதாவது செய்யத் துவங்கினால், அடுத்த கோடையின் உக்கிரத்தை நம்மால் நிச்சயம் தணிக்க முடியும்!

உங்கள் ஊருக்கு அருகிலுள்ள ஈஷா நாற்றுப் பண்ணைகளில் மரக்கன்றுகளைப் பெறுவதற்கும், ஈஷா பசுமைக் கரங்களின் பிற செயல்பாடுகள் குறித்து மேலும் தகவல்களைப் பெறுவதற்கும் கீழ்க்கண்ட எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

தொ. பே. 94425 90062