1. மற்றவர்களுக்கு உதவுவதில் சிறுவனின் ஆர்வம்

blog_alternate_img

 

நரசீபுரம் பஞ்சாயத்தில் காலை முதல் தங்களின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்த 8 வயது சிறுவனைக் கண்ட நம் தன்னார்வலர்களுக்கு அது ஒரு இனிமையான ஆச்சர்ய அனுபவமாக இருந்தது. அவன் சிறுவனாய் இருந்தாலும் தன் சமூக மக்களுக்காக அக்கறை கொண்ட பெரிய உள்ளத்தைக் கொண்டிருந்தான். அன்றாடம் வழங்கப்படும் உணவு விநியோகத்திலும், கிராம மக்களுக்கு உதவுவதிலும், நம் தன்னார்வலர்களோடு சேர்ந்து செயல்பட அவனும் விரும்பினான். முதலில் அவனது பெற்றோர்கள் சிறிது தயங்கினாலும் நம் தன்னார்வலர்கள் அளித்த நம்பிக்கையும் உறுதியும் அவர்களை சமாதானம்கொள்ளச் செய்தது. உடனே அந்த சிறுவன் கையுறையும் முகக்கவசமும் அணிந்துகொண்டு உணவு விநியோகிக்க, கிராமத்தில் விழிப்புணர்வு உருவாக்க நம் தன்னார்வலர்களோடு சேர்ந்து கொண்டான்.

2. விழிப்புணர்வு பிரச்சார சாம்பியன்

blog_alternate_img

 

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

வைரஸின் ஆபத்தைப் பற்றி அறிவிக்கும் விழிப்புணர்வு பிரச்சாரங்களில் கிராமப்புற குழந்தைகள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தனர். பூலுவப்பட்டி நகர பஞ்சாயத்தை சேர்ந்த 8 வயது சிறுமி கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு சிற்றேட்டை உரத்த குரலில் வாசிக்க, அதை அங்கிருந்த பல கிராம மக்கள் மெய்மறந்து கவனத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர். ஆரோக்கியம் சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த எல்லா வழிமுறைகளையும் அந்த சிறுமி உரக்க வாசித்து முடித்தபோது விழிப்புணர்வு பிரச்சாரத்தின் சாம்பியனாக அந்த சிறுமி அனைவரின் உள்ளங்களையும் வெற்றிகொண்டாள். தன் சமூக மக்களிடம் அவள் காட்டும் அக்கறையின் மூலம் நாளைய நம்பிக்கையாய் அவள் திகழ்கிறாள்.

3. கண் சிமிட்டிய சிறுவனின் ஒரு புது டெக்னிக்

blog_alternate_img

 

பேரூர் கிராமத்தில் ஒரு ஐந்து வயது சிறுவனும் அவன் தங்கையும் நிலவேம்பு கசாயம் பெறுவதற்கு நம் தன்னார்வலர்களை அணுகினர். அந்த சிறுவன் எந்த குறையும் சொல்லாமல் கசப்பான அந்த கசாயத்தை குடித்து முடித்தான். ஆனால், சிறிது கணங்கள் கழித்து அவன் சுவாமி சங்கல்பாவை பார்த்து கண் சிமிட்டிக் கூறினான், "இது கசாயம் என்று அவளிடம் கூறாதீர்கள், அவள் குடிக்கமாட்டாள். இது கடும் தேநீர் என்று கூறுங்கள்". சுவாமி ஆச்சர்யப்படும் வகையில் அந்த யோசனை வேலை செய்தது. அந்த சிறுவனின் மூன்று வயது தங்கை தேநீர் என்று எண்ணி கசாயத்தை குடித்து முடித்தாள். அதன் கசப்பை உணர்ந்து அந்த சிறுமி முகம் சுழித்தாலும் உடனே அந்த சிறுவன் அந்த கசாயத்தின் பலன்களைப் பற்றி தன் தங்கைக்கு எடுத்து கூறி அவளை சமாதானம் செய்தான்.

4. அன்பின் பரிமாற்றம்

blog_alternate_img

 

தீத்திபாளையத்தில் நம் தன்னார்வலர்கள் நிலவேம்பு கசாயத்தை விநியோகித்துக் கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அவர்களிடம் ஓடி வந்தான். அந்த கசாயத்துக்கு பணம் கொடுக்க வேண்டும் போல என்று எண்ணிய அந்த சிறுவன், இருபது ரூபாயை எடுத்து அவர்களிடம் நீட்டினான். அந்த கசாயம் விற்பனைக்கு அல்ல என்றும், நோய்த்தொற்றிலிருந்து மக்களை காப்பதற்காக விநியோகிக்கப்படுகிறது என்றும், அவனிடம் தன்னார்வலர்கள் பொறுமையாக விளக்கினர். மேலும், அவன் குடும்பத்தாருக்கும் அதை அவன் பெற்றுச் செல்லலாம் என்று அவர்கள் கூறியபோது, அவன் முகம் மகிழ்ச்சியில் மலர்ந்தது. ஒரு குவளை கசாயத்தை அருந்திய பின்னர் தன் பெற்றோருக்கும் இரண்டு குவளைகளில் கசாயம் பெற்றுச் சென்றான் அந்த சிறுவன்.

வாழ்க்கை பல்வேறாக தடைப்பட்டிருந்தாலும், இங்கிருக்கும் கிராமங்களில் உள்ள குழந்தைகள்தான் நம்பிக்கை ஒளி. அவர்களின் பரிவான செயல்கள் நாளையை பற்றிய நம்பிக்கையை வளர்க்கிறது. இந்த குழந்தைகள் நம்பிக்கையையும் நேர்மறையான எண்ணங்களையும் பரப்பி தங்களை சுற்றியுள்ளவரின் மனநிலையை உயர்த்துகிறார்கள்.

ஈஷா மேற்கொள்ளும் முயற்சிகளைப் பற்றி மேலும் அறிய: Isha.co/BeatTheVirus