பெண்மையின் மேன்மையை, அழகிய தன்மையை பாராட்டியும் சீராட்டியும் போற்றியும் வழிபட்டும் வருகிறது பாரத கலாச்சாரம். தெய்வீகத்தின் பெண் வடிவை, தகதகவென ஜொலிக்கும் அந்தப் பேரழகினை, முன்டாசுக்கவி பாரதி கவிதையாக வடித்திருக்கிறான். "சந்திரன் ஒளியில் அவளைக் கண்டேன்" என்று அவள் அழகில் மதிமயங்குகிறான். அவனின் கிறக்கத்தை, பக்தியில் விளைந்த பித்தினை இசையாய் வார்த்தெடுத்து, பாடலாய்
லிங்கபைரவி தேவிக்கு அர்ப்பணிக்கிறது சவுன்ட்ஸ் ஆப் ஈஷா.

தெய்வீகத் தன்மையின் பெண்மை சொரூபமாய் விளங்குகிறாள் லிங்கபைரவி. வெள்ளயங்கிரி மலை அடிவாரத்தில் முக்கோண வடிவாய், முத்தார அழகாய் எழுந்து நிற்கிறாள் தேவி. வேறெங்கும் இல்லாத வகையில் இங்கு தேவி லிங்கமாய் உருவெடுத்து நிற்பது தனி சிறப்பு. இறுகிய பாதரசம் உள்கருவாய் இருக்க, அதில் சத்குரு அபரிமிதமான சக்தியை செரிவூட்ட, பிரபஞ்சத்தின் பிரமாதங்களை பிரதிபலித்து அருள் பாலிக்கிறாள் தேவி. லிங்கபைரவி, பெண்மையின் உச்சக்கட்ட வெளிப்பாடு, சக்தி பிரவாகம்.

பாடல் வரிகள் உங்களுக்காக...

சந்திர னொளியில் அவளைக் கண்டேன்
சரணமென்று புகுந்து கொண்டேன்
இந்திரியங்களை வென்று விட்டேன்
எனதெ னாசையைக் கொன்று விட்டேன்

பயனெண்ணாமல் உழைக்கச் சொன்னாள்
பக்தி செய்து பிழைக்கச் சொன்னாள்
துயரிலாதெனைச் செய்து விட்டாள்
துன்பமென்பதைக் கொய்து விட்டாள்

மீன்கள் செய்யும் ஒளியைச் செய்தாள்
வீசி நிற்கும் வளியைச் செய்தாள்
வான்கணுள்ள வெளியைச் செய்தாள்
வாழி நெஞ்சிற் களியைச் செய்தாள்

- சுப்ரமண்ய பாரதி