வெற்றிலை செய்யும் வைத்தியம்!

நமது தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு என தனி இடம் எப்போதும் உண்டு! அப்படிப்பட்ட வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே உமையாள் பாட்டியின் வாயிலாகத் தெரிந்துகொள்ளுங்கள்!
 

கொல்லைப்புற இரகசியம் - பகுதி 14

நமது தமிழ்க் கலாச்சாரத்தில் வெற்றிலைக்கு என தனி இடம் எப்போதும் உண்டு! அப்படிப்பட்ட வெற்றிலைக்கு மருத்துவ குணமும் உண்டு என்பது உங்களில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. இதோ இங்கே உமையாள் பாட்டியின் வாயிலாகத் தெரிந்துகொள்ளுங்கள்!

உமையாள் பாட்டியின் வீட்டுத் திண்ணையில் தண்ணீர் தெளிக்கப்பட்ட நிலையில் வெற்றிலை தளிர்கள் கட்டுகளிலிருந்து என்னை எட்டிப்பார்ப்பதுபோல் அவ்வளவு அழகாக காட்சியளித்தன.

பொதுவா வெற்றிலை வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு.

“என்ன விசேஷம் இன்னைக்கு… கட்டுக்கட்டா வெற்றிலை வாங்கி வைச்சிருக்கு பாட்டி?!” எனக்கு நானே கேள்வி கேட்டபடி உமையாள் பாட்டியை சுற்றும் முற்றும் தேடினேன். எனக்கு பதில் சொல்வதற்காகவே வந்தாற்போல இருந்தது பாட்டியின் வருகை. நான் தலைவாசல் பக்கம் தேட, பாட்டி புறவாசல் வழியாக அங்கே வந்து நின்றிருந்தாள்.

“என்னப்பா… பாத்தியா இங்க, வெற்றிலையெல்லாம் ரெடி! பொண்ணு யாருன்னு சொன்னா கையோட பேசி முடிச்சிடலாம்!” குறும்பாகக் கேட்டாள் பாட்டி.

“ம்… அதுக்குன்னு ஒரு நேரம் வரும், அப்போ சொல்றேன் பாட்டி! இப்ப இந்த வெற்றிலையெல்லாம் எதுக்குன்னு எனக்குக் கொஞ்சம் சொல்றீங்களா?!”

“இதெல்லாம் நான் வைத்தியத்துக்காக வாங்கி வெச்சிருக்கேன்.”

“வெற்றிலையில வைத்தியமா?! சூப்பர்… கொஞ்சம் வெவரமா சொல்லுங்க பாட்டி!”

அங்கிருந்த வெற்றிலைக்கட்டில் ஒரு கொழுந்து வெற்றிலையை லாவகமாக உருவி வாயில்போட்டு மென்றபடி சொல்லலானாள் பாட்டி.

“வெற்றிலையில சாதாரண வெற்றிலை, கம்மாறு வெற்றிலை, கற்பூர வெற்றிலைனு 3 வகை இருக்கு. கற்பூர வெற்றிலை கற்பூர மணத்தோட சிறுகாரத்தோட இருக்கும். கம்மாறு வெற்றிலை கருமையா நல்ல காரத்தோட இருக்கும்.

பொதுவா வெற்றிலை வயிறு சம்மந்தமான-ஜீரண மண்டல கோளாறுகளுக்கு நல்ல தீர்வு. மலச்சிக்கல் போன்ற பிரச்சனைக்கும் நல்ல மருந்தா இருக்கு. வெற்றிலைச் சாறோட (15 மி.லி) இஞ்சிச் சாறு (15 மி.லி) சேத்து நுரையீரல் சம்பந்தமான நோய்களுக்காக கொடுத்து வந்தா நல்ல பலன் இருக்கும். வெற்றிலைச்சாறோட கடுகளவு சுண்ணாம்பு கலந்து (சுண்ணாம்பின் அளவு அதிகமானால் தோலில் எரிச்சல் உண்டாகும் என்பதை கவனத்தில் கொள்க) குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல்) தொண்டக் குழியில போட்டா இருமல், சுவாசப் பிரச்சனைகள் நீங்கும். தீப்பட்ட புண் மேல வெற்றிலைய இடிச்சு கட்டி வெச்சா புண் அழற்சி குறையும். தலை வலி, மூட்டு வலி இருக்கும்போது வெற்றிலைச் சாற்ற தடவினா வலி நீங்கும்.”

“பாட்டி… பாட்டி…! நிறுத்துங்க! வெற்றிலை போட்டா நாக்கு சிவப்பாகும்னு மட்டும்தான் எனக்குத் தெரியும். ஆனா. நீங்கபாட்டுக்கு அடுக்கிகிட்டே போறீங்களே! உண்மையிலேயே இதுல இவ்வளவு மருத்துவ குணம் இருக்கா?!”

“அட இருப்பா… உனக்காகவே ஸ்பெஷலா ஒரு டிப்ஸ் இருக்கு!”

“என்ன பாட்டி அது?!”

“நீதான் நல்லா பாடுவியே… இந்த வெற்றிலை வேரை வாயில போட்டு அப்பப்போ சுவைச்சு வந்தா குரல் வளம் பெருகும். ட்ரை பண்ணு!”

“கண்டிப்பா பாட்டி! உங்க வெற்றிலை கட்டுலயிருந்து நானும் கொஞ்சம் வெற்றிலை எடுத்துக்கறேன்.”

பாட்டியின் அனுமதியோடு வெற்றிலையை எடுத்து வந்த எனக்கு வெற்றிலையை போடும் முறையையும் பாட்டி சொல்லிக்கொடுக்க தவறவில்லை. காம்பு, நுனி, நடு நரம்பு ஆகியவற்றை நீக்கிவிட்டுத்தான் வெற்றிலையை போட வேண்டுமாம்!

“வெற்றிலை போடுவெதெல்லாம் சரிதான்… ஆனால் வெற்றிலையைப் போட்டு எச்சிலை கண்ட இடத்தில் துப்பாமல் இருப்பது மிகவும் முக்கியமானது” என்று பாட்டி கூறிய அறிவுரை இன்னும் காதில் கேட்டுக்கொண்டிருக்கிறது.

குறிப்பு:

  • தினமும் ஒரு வெற்றிலையை மென்றுவந்தால் வாய் துர்நாற்றம் நீங்கும்.
  • மலச்சிக்கல் தீர: 30 மி.லி. அளவு வெற்றிலைச் சாற்றை வெறும் வயிற்றில் குடிக்கலாம் (அ) வெற்றிலையை இடித்து இரவு நீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் அந்நீரை குடித்து வரலாம்.
  • 6 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வயிறு பொருமல் மற்றும் மலக்கட்டு பிரச்சனைகள் நீங்க, வெற்றிலைக் காம்பை விளக்கெண்ணெயில் நனைத்து கீழ்வாயில் வைக்கலாம்.
  • 2-3 வெற்றிலையுடன் 4-5 மிளகுகள் சேர்த்து இடித்து தண்ணீரில் கலந்து கொடுக்க சிறுவர்களுக்கு செரியாமை பிரச்சனை தீரும்.
  • வெற்றிலையை நல்லெண்ணெயில் நனைத்து விளக்கில் வாட்டி மார்பின் மீது போட்டால் குழந்தைகளுக்கு (6 வயதிற்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டும்) உண்டாகும் இருமல், மூச்சு முட்டல், கடின சுவாசம் ஆகியவை தீரும்.
  • குழந்தை பெற்ற பெண்களுக்கு பால் சுரக்கவும், பால் கட்டியினால் உண்டாகும் மார்பக வீக்கத்தைக் கரைக்கவும் வெற்றிலையை தணலில் வாட்டி அடுக்கடுக்காக வைத்து மார்பகத்தில் கட்டலாம்.

கொல்லைப்புற இரகசியம் தொடரின் பிற பதிவுகள்

 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1