சிறுநீரக பிரச்சனைகள் - காரணங்களும் தீர்வுகளும்
மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானது கழிவு நீக்கம். சிறுநீரக மண்டலம் நமது உடற்கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்படச் செய்தால் மட்டுமே வாழ்வை நாம் முழுமையாய் அனுபவித்து வாழ முடியும். சிறுநீரக மண்டலம் குறித்து இங்கே பகிரப்படும் விளக்கங்களும், பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாகும்!
மனிதன் உயிர் வாழ அத்தியாவசியமானது கழிவு நீக்கம். சிறுநீரக மண்டலம் நமது உடற்கழிவுகளை வெளியேற்றும் பணியை திறம்படச் செய்தால் மட்டுமே வாழ்வை நாம் முழுமையாய் அனுபவித்து வாழ முடியும். சிறுநீரக மண்டலம் குறித்து இங்கே பகிரப்படும் விளக்கங்களும், பிரச்சனைகளுக்கான தீர்வுகளும் உங்களுக்கு நிச்சயம் பயனுள்ளதாகும்!
டாக்டர்.பவானி பாலகிருஷ்ணன்:
சிறுநீர் உருவாக மற்றும் வெளியேற காரணமாக இருக்கும் இரண்டு சிறுநீரகங்கள், யூரட்டர் எனப்படும் குழாய்கள், ப்ளாடர், இவற்றை கட்டுப்படுத்தும் தசைகள், நரம்புகள் இவற்றை சிறுநீரக மண்டலம் என்கிறோம். சிறுநீரக மண்டலமானது, நுரையீரல், சருமம், குடல் இவற்றுடன் சேர்ந்து உடலில் உள்ள நீர் மற்றும் தாதுப்பொருட்களை சமன் செய்கிறது.
18 வயதிற்கு மேற்பட்டவர் சுமாராக ஒரு நாளில் ஒன்றரை லிட்டர் சிறுநீர் கழிக்கின்றார். ஆனால் பருகும் தண்ணீர் மற்றும் பானங்களைப் பொறுத்தும், வியர்வை மற்றும் மூச்சுக் காற்றில் வெளியேற்றும் நீரைப் பொறுத்தும் இந்த அளவு வேறுபடலாம். சிலவகையான மருந்துகளாலும் வெளியேறும் சிறுநீரின் அளவு மாறுகிறது.
சர்க்கரை நோய், இரத்தக் கொதிப்பு, குடும்பத்தில் ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் மற்றும் 60 வயதிற்குமேல் உள்ளவர்களுக்கு சிறுநீரக மண்டலத்தில் நோய் வரும் வாய்ப்பு அதிகம். சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சினை இருந்தால் தாமதிக்காமல் மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது.
சிறுநீரக மண்டலம் எவ்வாறு செயல்படுகிறது?
Subscribe
ஜீரண மண்டலம் உணவிலிருந்து அதற்குத் தேவையான சத்தை எடுத்துக் கொண்டபின், கழிவுப் பொருட்களை இரத்தத்திலும் குடலிலும் விட்டுவிடுகிறது.
இரத்தம் சிறுநீரகங்களுக்கு சென்றவுடன் அங்கு கழிவுப்பொருட்கள் வடிகட்டப்பட்டு நீருடன் யூரட்டர்கள் மூலம் சிறுநீராக ப்ளாடருக்கு வந்து சேருகிறது. இந்த நிலைக்கு மேல் சிறுநீர் பிரச்சினைகள் வராமல் தடுப்பதில் தசை மற்றும் நரம்புகள் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன.
ப்ளாடரில் இருந்து யுரத்ரா என்னும் துவாரம் மூலமாக சிறுநீர் உடலிலிருந்து வெளியேற்றப்படுகிறது. சிறுநீர் வெளியில் ஒழுகாத வண்ணம் தசைகள் பாதுகாக்கும். எப்பொழுது சிறுநீர் கழிக்க வேண்டும் என்பதை ப்ளாடரிலிருக்கும் நரம்புகள் நமக்கு உணர்த்தும்.
ஒருவரின் ப்ளாடர் சரிவர செயல்படுமானால் 600 முதல் 800 மிலி வரை சிறுநீரை பிடித்து வைத்திருக்க முடியும். இருப்பினும் 150 முதல் 300 மிலி சிறுநீர் பிளாடரில் சேர்ந்தவுடனேயே சிறுநீர் கழிக்கும் உந்துதல் ஏற்படுகிறது.
எதனால் சிறுநீரக மண்டலத்தில் பிரச்சினைகள் ஏற்படுகின்றன?
வயதாகுதல், சிறுநீரக மண்டலத்தில் வியாதிகள் இருத்தல் மற்றும் அடிபடுதல் ஆகியவற்றால்தான் பொதுவாக பிரச்சினைகள் ஏற்படும்.
வயதாக ஆக சிறுநீரகங்களிலும் மாற்றம் ஏற்படுவதால், சிறுநீரகத்தால் திறம்பட கழிவுகளை அகற்ற முடிவதில்லை.
வயதான நிலையில், யூரட்டர், ப்ளாடர் மற்றும் யூரத்திராவில் உள்ள தசைகளும் இடுப்புத் தசைகளும் தங்கள் வலுவை இழக்கக்கூடும். எனவே சிறுநீரை திறம்பட கட்டுப்படுத்த முடியாமலோ அல்லது சரிவர அகற்ற முடியாமலோ போய்விடும். இதனால் தேவையற்ற நேரத்தில் சிறுநீர் ஒழுகல் ஏற்படும். அடிக்கடி தொற்றும் ஏற்படலாம்.
எந்தவிதமான மருத்துவரை அணுக வேண்டும்?
பொதுநல மருத்துவரை அணுகலாம். நெஃராலஜிஸ்ட், சிறுநீரகங்களில் ஏற்படும் வியாதிகளை கையாள்வார். யூராலஜிஸ்ட் சிறுநீரக மண்டலம் மற்றும் பிறப்புறுப்புகளில் ஏற்படும் பிரச்சினைகளை சரி செய்வார். பெண்கள் சிறப்பு மருத்துவர் பெண்களின் சிறுநீரக மண்டலத்தில் ஏற்படும் சில பிரச்சினைகளை சரிசெய்ய முடியும்.
சர்க்கரை நோயால் ஏற்படும் சிறுநீரக பிரச்சினைகளை எவ்வாறு சமாளிப்பது?
- இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும்.
- இரத்த அழுத்தமும் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும்.
- சிறுநீரகங்களுக்கு ஏற்படும் பாதிப்பை சிலவகையான மருந்துகளால் தடுக்க முடியும். இது குறித்து மருத்துவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ளவும்.
- உங்கள் உடல் பிரச்சினைகளுக்கேற்ப சரியான உணவுகளை உட்கொள்ளவும். உணவு நிபுணர் (Dietician) ஆலோசனை பெறுவது நல்லது.
- வருடத்திற்கு ஒரு முறையேனும் மருத்துவரின் ஆலோசனைப்படி சிறுநீர் மற்றும் இரத்தப் பரிசோதனை செய்துக் கொள்ளவும்.
- வலி மாத்திரைகள் அடிக்கடி உட்கொள்ள வேண்டி இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பேரில் உட்கொள்ளவும்.
- சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் தொந்தரவு இருந்தால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகவும்.
யோகா எவ்வாறு உதவுகிறது?
ஆசனப் பயிற்சிகள், பிராணாயாமப் பயிற்சிகள் மற்றும் தியானம் போன்றவை செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருந்தால் இடுப்பு தசைகளையும், சிறுநீரக மண்டலத் தசைகளில் ஏற்படும் தொய்வை தடுக்கவும் கட்டுப்படுத்தவும் முடியும். இதனால் சிறுநீர் ஒழுகல் போன்ற பிரச்சினைகளை பெருமளவில் கட்டுப்படுத்த முடியும்.
ஆரம்ப நிலை பிராஸ்ட்ரேட் கேன்ஸர் உள்ளவர்கள் யோகப் பயிற்சி மற்றும் சைவ உணவு ஆகியவற்றால் மரபணு மற்றும் புற்றுநோய் அணுக்களில் குறுகிய காலத்திலேயே மாற்றம் ஏற்படுத்த முடிந்ததாக ஓர் ஆய்வறிக்கை கூறுகிறது.