பூச்சிகள் பற்றி புதுப்புது விஷயங்கள், அறிவோம் வாருங்கள்! -பாகம் 3

நன்மை செய்யும் பூச்சிகள் எவை, தீமை செய்யும் பூச்சிகள் எவை என்பதை மட்டுமல்லாமல், அவற்றின் செயல்பாடுகள், இனப்பெருக்கம், வகை பிரித்து கண்டறிவது எப்படி என்பன போன்ற பல்வேறு தகவல்களை உள்ளடக்கியதாக இந்த பதிவு அமைகிறது!

பயிரை தாக்கும் பூச்சிகள் (Agricultural pests)

நமது புரிதலுக்காக பயிரை தாக்கும் பூச்சிகளை, "தீமை செய்யும் பூச்சிகள்" என்று வகைப்படுத்திக் கொள்ளலாம். இவற்றின் உணவுப்பழக்கம், உடல் அமைப்பு, இனப்பெருக்கம் செய்யும் விதம் போன்றவற்றின் அடிப்படையில் பல வகைகளாக நாம் அடையாளப்படுத்தலாம். 

1. இலையை சாப்பிடும் பூச்சிகள்

இதில் புழுக்களும், பூச்சிகளும் அடங்கும். இதன் வாய் வெட்டும் தன்மையுடன் இருக்கும். உதாரணம் வெட்டுகிளி, பச்சைக்காய் புழுக்கள், ஒரு சில தரைவண்டுகள், காண்டாமிருக வண்டுகள்.

2. சாறு உறிஞ்சும் பூச்சிகள்

அசுவினி, வெள்ளை ஈ, மாவுபூச்சி, தத்துப்பூச்சி, இலைப்பேன், செதில்பூச்சி போன்றவை சாறு உறிஞ்சும் பூச்சிகளாகும். இத்தகைய பூச்சிகளுக்கு இரண்டு குழல்கள் இருக்கும், ஒன்று எச்சிலை உமிழ்வதற்கும், மற்றொன்று சாறை உறிஞ்சுவதற்கும் பயன்படுகிறது.

3. தண்டு மற்றும் வேர்ப்பகுதியை தாக்கும் புழுக்கள்

கரும்பு இடைக்கணுப்புழு, நெல்லின் குருத்துபுழு, பருத்தியின் காய்புழு போன்றவை இந்த ரகத்தில் சேர்ந்தவை.

அசுவினி

அசுவினிப்பூச்சிகள் சாறு உறுஞ்சும் வகையைச் சேர்ந்தவை. வெள்ளை அல்லது மஞ்சள் நிறத்தில் இலைகளின் மேல் படர்ந்திருக்கும், வகைக்கு ஏற்ப நிறத்தில் சிறிய மாற்றமிருக்கும். ஒவ்வொரு பயிரிலும் ஒவ்வொரு வண்ணத்தில் இருக்கும். பொதுவாக இவைகளுக்கு இறக்கை கிடையாது. எனினும் இருக்கும் இடத்தை விட்டு வேறு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று அவை நினைத்தால் இறக்கை முளைக்கும்.

பொறி வண்டு லார்வா - அசுவினி

வேர் அசுவினி

அசுவினி இனப்பெருக்கம்

இப்பூச்சிகள் முட்டையிடுவதற்கு பதிலாக குட்டிபோட்டு இனப்பெருக்கம் செய்பவை. அசுவினியின் வாழ்நாள் 21 நாட்கள், பெண் பூச்சிகள் பிறந்து 7 நாள் ஆன உடனே ஆண் துணை இன்றியே குட்டி போடத் துவங்கிவிடும். ஒரு நாளில் 40 குஞ்சுகளைப் போடும். பிறந்த குஞ்சுகளும் 7வது நாளில் இருந்து இனப்பெருக்கம் செய்யும் திறனை அடைந்துவிடும். 7வது நாளில் தொடங்கி இறக்கும் வரை குஞ்சுகள் போடும், இவ்வாறு பூச்சிகளின் இனப்பெருக்கம் 40 மடங்காக பெருகுவதால் சில நாட்களிலேயே பூச்சிகளின் எண்ணிக்கை கோடியை தாண்டும் வாய்ப்பு உள்ளது.

ஆனால் இயற்கையில் இவ்விதம் நடப்பதில்லை. அசுவினியின் அபரிமிதமான இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் இயற்கையே பொறிவண்டு போன்ற இறைவிழுங்கிப் பூச்சிகளை உருவாக்கியுள்ளது. பொறிவண்டுகள் அசுவினியை உண்டு அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்துகிறது. மேலும் மழை பொழியும் போதும் இந்த பூச்சி பெரிதளவில் கட்டுப்படுத்தபடுகிறது.

வேர்ப்பகுதியைத் தாக்கும் அசுவினிகளும் உண்டு. உதாரணமாக வாழையில் அசுவினிகள் வேர்க் கிழங்கில் காணப்படுகிறது.

அசுவினி வெளியேற்றும் சர்க்கரை திரவம்

அசுவினிகள் சர்க்கரை போன்ற திரவத்தை வெளியேற்றுகின்றன, இவை கருப்பு எறும்புகளுக்கு உணவாகிறது. எனவே அசுவினியை சுற்றிச்சுற்றி எறும்புகள் மேய்ந்து கொண்டு இருக்கும். எனவே அசுவினியை பொறிவண்டுகள் தாக்கினால், பொறிவண்டை எறும்புகள் தாக்கும். ஆனால் இத்தகைய தாக்குதலை எல்லா சூழ்நிலைகளிலும் காண இயலாது.

நெல்பயிரை தாக்கும் பூச்சிகள்

ஆணைக்கொம்பன் ஈ, தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி), இலைப்பேன், பச்சைத் தத்துப்பூச்சி, குருத்து ஈ (கொப்புள ஈ), மாவுப்பூச்சி, படைப்புழு, இலைசுருட்டுப் புழு, கதிர் நாவாய் பூச்சி, புகையான் (பழுப்பு தத்துப்பூச்சி), கூண்டுப் புழு (இலை மடக்கு புழு) மற்றும் நெல் ஸ்கிப்பர்

ஆணைக்கொம்பன் ஈ

ஆணைக்கொம்பன் ஈ

முட்டையில் இருந்து வெளிவரும் லார்வாக்கள் நெல் பயிர்களின் தூர்களை துளைத்து, நடுக் குறுத்தை தாக்குகிறது. அந்தத் தூர் வெங்காயக் குறுத்து போன்று உள்ளே ஓட்டையுடன் காணப்படும். குறுத்து ஊதுபத்தி போல் உருண்டையாக மாறிவிடும். இதில் இருந்து கதிர்கள் வெளிவராது.


தண்டுத்துளைப்பான் (குருத்துப் பூச்சி)

தண்டு துளைப்பான்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

அது அந்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. அந்துப்பூச்சிகள் வெண்மை அல்லது இளமஞ்சள் நிறத்தில் கருப்புப் புள்ளிகளுடன் இருக்கும். நாற்றங்காலில் அல்லது நாற்று நட்டு சில நாட்களில் இலைகளின் நுனியில் முடையிடுகின்றன. முட்டையில் இருந்து வரும் புழுக்கள் குறுத்தை அடைந்து இளங்குறுத்துக்களை உண்கின்றன.

கட்டுப்படுத்தும் முறை

ட்ரைகோகிராமா ஒட்டுண்ணிகள் இப்புழுக்களை கட்டுப்படுத்தக் கூடியவை. பயிர்களின் இலைகளில் காணப்படும் முட்டைக் குவியல் உள்ள இலைகளைக் களைதல், நாற்றங்காலில் 15வது நாளில் ஒருமுறை வேப்பங்கொட்டை கரைசல் அடிப்பது பாதுகாப்பானது. குறுத்து புழுவினால் நன்மையும் உண்டு! குறுத்துப்புழுவினால் தாக்கப்பட்ட பயிர் அதிகமாக தூர் வெடிக்கும்.

புகையான்

புகையான்

புகையான் என்பது தத்துப்பூச்சி வகையைச் சேர்ந்தது. பயிர்கள் நெருக்கமாக இருக்கும்போது இதன் தாக்குதல் அதிகம் இருக்கும். பயிர்கள் வட்ட வட்டமாக கருகுவது இதன் அறிகுறியாகும்.

நன்மை செய்யும் பூச்சிகள் பற்றிய புரிதல் (Agricultural pests)

விலங்குகளில் எப்படி சிங்கம் ஒரு மானை அடித்து உண்கிறதோ அவ்வாறே சில அசைவப் பூச்சிகள் மற்ற பூச்சிகளை பிடித்து உண்கிறது. இப்படிப்பட்ட அசைவப்பூச்சிகள் விவசாயிகளுக்கு நண்பனாக செயல்படுவதால் அவை நன்மை செய்யும் பூச்சிகள் என்று கூறப்படுகிறது. இவை பயிர்களைத் தாக்கும் பல்வேறு பூச்சிகளை உண்கின்றன.

இறையை நேரிடியாக கொன்று உண்டால் அவை இறைவிழுங்கிகள் எனப்படுகிறது. ஒரு சில பூச்சிகள் மற்ற பூச்சிகளின் புழுக்கள் மீது முட்டையிட்டு அவற்றை அழிக்கிறது, இப்படிப்பட்டவை ஒட்டுண்ணிகள் எனப்படுகிறது.

இறைவிழுங்கிகள்

இறை விழுங்கிப் பூச்சிகள்

இவற்றின் வாழ்நாள் 30 முதல் 50 நாட்கள் வரை இருக்கும். இவை நேரடியாக எதிரிப்பூச்சியை பிடித்து உண்ணும், அதற்கேற்ப பலமான வாய், இறக்கை போன்றவற்றை பெற்றிருக்கும், சுறுசுறுப்பானவை, அதனுடைய உணவுப்பூச்சிகளை விட பெரிய வடிவில் இருக்கும். பலவகையான பூச்சிகளை பிடித்து உண்ணும், அதிகபட்சமாக 50 வகையான பூச்சிகளை பிடித்து உண்ணக்கூடியவை. அதன் உணவு பூச்சியின் முட்டை, புழு, பூச்சி என எல்லா பருவத்திலும் தாக்கி உண்ணும்.

பொறிவண்டு

பொறி வண்டு

அசுவினியை அழிப்பதில் பொறி வண்டுகள் முக்கிய பங்காற்றுகின்றன. இயற்கை விவசாயம் செய்யப்படும் பண்ணைகளில் பொறிவண்டுகளை சாதாரணமாகக் காணமுடியும்.

பொறிவண்டுகள் அரைத் துவரம் பரும்பு அளவில் இருக்கும். இதன் முதுகுப்புறம் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள் என பல வண்ணங்களில் இருக்கும், சில வகைகளில் புள்ளிகள் காணப்படும், சில வகைகளில் புள்ளிகள் இல்லாமலும் காணப்படும்.

அசுவினிப் பூச்சிகளின் கூட்டத்திற்கு நடுவே தாய் பொறிவண்டு முட்டையை இடுகிறது.

பொறிவண்டின் இளம் புழு பருவத்தில் அசுவினியின் சாற்றை உறிஞ்சி குடிக்கிறது, சற்று வளர்ந்த புழு அசுவினியை பிடித்துத் திண்கிறது. இளம் புழுவில் இருந்து பொறிவண்டாக மாறும் வரை 300 அசுவினியை பிடித்து திண்கிறது. இதனால் அசுவினிப் பூச்சிகளின் எண்ணிக்கை பெருமளவு கட்டுப்படுத்தப் படுகிறது.

எச்சரிக்கை -போலி பொறி வண்டுகளும் உண்டு. போலி பொறிவண்டுகள் தீமை செய்யும் வகையைச் சார்ந்தது. இதன் லார்வாக்கள் மற்றும் வளர்ந்த பொறிவண்டுகள் இரண்டும் இலைகளை தின்னக்கூடியவை.

நன்மை செய்யக் கூடிய பொறிவண்டின் முதுகில் இருக்கும் புள்ளிகளின் எண்ணிக்கை 10-12 வரை இருக்கும். புள்ளிகளின் எண்ணிக்கை 12க்கு மேல் இருந்தால் அது போலி பொறிவண்டு. சில நேரங்களில் போலி பொறிவண்டுகளின் முதுகின் மீது நுண்ணிய இழைகள் இருக்கும்.

போலி பொறி வண்டு

போலி பொறி வண்டு

அசுவினி ஈ

இந்த ஈ புழு பருவமாக இருக்கும் போது அசுவினி, மாவுப்பூச்சி மற்றும் செதில் பூச்சிகளை துளைத்து அதன் சாற்றை குடிக்கிறது.

செங்குளவி

குளவி

செங்குளவி

பச்சை காய்புழுக்களை குளவிகள் பிடித்து வந்து அதன் கூட்டுக்குள் போட்டு அந்த புழுவின் மீது தனது முட்டைகளை இட்டுவிடும். முட்டையிலிருந்து வெளிவரும் புழுக்களுக்கு பச்சைகாய்புழுதான் அதற்கு பிரியாணி. இந்த புழுக்கள் கூட்டிலேயே முழுவளர்ச்சி அடைந்து வளர்ந்த குளவியாக வெளிவருகிறது.

நீள் கொம்பு வெட்டுக்கிளி

நீள் கொம்பு வெட்டுக்கிளி

இந்த வெட்டுக்கிளியின் தோற்றம் மற்ற வெட்டுகிளியை போன்று முரட்டுத்தனமாக இல்லாமல் மென்மையாக இருக்கும், அதன் உணர் இழை வெட்டுக்கிளியின் உடல் நீளத்தை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். இது காய்புழு மற்றும் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் இளம் புழுக்களை திண்ணக்கூடியது

தொழுவெட்டுக்கிளி

தொழு வெட்டுக்கிளி, கும்பிடு பூச்சி, பெருமாள் பூச்சி

இந்த பூச்சியை பெருமாள் பூச்சி அல்லது கும்பிடு பூச்சி என்றும் அழைக்கின்றனர், இந்த பூச்சியை இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் பார்ப்பது அரிது, இயற்கை விவசாயம் செய்யும் நிலங்களில் மட்டுமே பார்க்க இயலும்.

தட்டான் (தும்பி)

தும்பி

தும்பியும் பூச்சிகளை தின்றே உயிர் வாழ்கிறது, தண்ணீர் உள்ள நெல்வயலில் தும்பிகள் முட்டையிட்டுகின்றன, பின் அதில் வளரும் இளம் புழுக்கள், தண்ணீரில் உள்ள பூச்சி புழுக்களை உண்டு வளர்ந்து கூட்டு புழுக்களாக மாறி நெற்பயிரின் அடிப்பாகத்தில் ஒட்டிக் கொண்டு இருக்கும். வளர்ந்த தும்பிகள் பயிரில் உள்ள பூச்சிகளை பிடித்து திண்ணும்.

கொலைகார நாவாய் பூச்சி

நாவாய் பூச்சி

நாவாய் பூச்சிகளில் நன்மை செய்பவை மற்றும் தீமை செய்பவை என்று இரண்டும் உண்டு. கொலைகார நாவாய் பூச்சிகள் புழுக்கள் மற்றும் முட்டைகளை உண்டு வாழக்கூடியவை. காய்புழுக்களை கட்டுப்படுத்துவதில் இந்த வகை நாவாய்பூச்சிகள் பெரும்பங்கு வகிக்கிறது. இந்த பூச்சியை இனப்பெருக்கம் செய்து வயலில் விடும் தொழில் நுட்பத்தை வேளாண்பல்கலைக் கழகங்களை அணுகி தெரிந்து கொள்ள முடியும்.

தரைவண்டுகள்

ஓபியோனியா தரைவண்டு

தரைவண்டுகளில் சில வகைகள் நன்மை செய்யக்கூடியவையாகவும், சில வகைகள் தீமை செய்யக்கூடியதாகவும் இருக்கின்றன. உதாரணமாக ஒபியோனியா என்ற தரை வண்டு புகையான், தத்துப்பூச்சிகள், இலை மடக்குப்புழு போன்ற நெற் பயிரைத் தாக்கும் பூச்சிகளை கட்டுப்படுத்தக் கூடியது.

சிலந்திகள்

நன்மை செய்யும் சிலந்திகள்

சிலந்திகள் வயல்வெளிகள், தோட்டங்கள், வீடுகள் என அனைத்து இடங்களிலும் காணப்படுகிறது. ஒரு சில சிலந்திகள் வலை கட்டாமலேயே நேரடியாக பூச்சிகளை பிடித்துத் திண்ணக்கூடியவை, நன்மை செய்யும் பூச்சிகளில் சிலந்திகள் மிக முக்கியமானவை சிலந்திகள். இவை பூச்சி இனங்களை சார்ந்தது அல்ல என்பதை அவைகளுக்கு உள்ள எட்டு கால்களே உறுதிப்படுத்திவிடும். பூச்சிகளின் சில பன்புகளை ஒத்திருப்பதாலும் பூச்சிகளின் வாழ்விடத்திலேயே சேர்ந்து வாழ்வதாலும் சிலந்திகள் ஒரு பூச்சியைப் போன்றே கருதப்படுகிறது.

இவை ஆயிரக்கணக்கில் முட்டையிடக்கூடியது எனினும் முட்டையில் இருந்து வெளிவரும் குச்சுகளில் இரண்டிலிருந்து மூன்று சதவீதம் மட்டுமே பெரிய சிலந்தியாக வளர்கிறது. மேலும் இவை தன் இனத்தையே உண்ணக்கூடியவை. (Cannibalism)

சிலந்திகளைப் பற்றிய ஒரு தகவல்

பயிற்சிக்கு தேவையான ஆயத்தப்பணிகளை செய்வதற்காக பயிற்சி நடப்பதற்கு ஒரு மாதம் முன்பே கதிராமங்களத்திற்கு சென்றிருந்தோம், அப்போது நெல்வயல்களை பார்வையிட்டபோது, நன்கு வளர்ந்த பயிரின் நுனியெல்லாம் கொத்து கொத்தாக வளைந்து சாய்ந்திருந்தது, அதைப் பார்த்ததும் அவை ஏதோ பூச்சிகளால் தாக்கப்பட்டுள்ளது போல தோன்றியது, ஆனால் அருகில் சென்று பார்க்கும் போது பயிரின் நுனியை மடித்து ஆர்ப் சிலந்திகள் (Orb spiders) வலை கட்டியிருந்ததை காண முடிந்தது.

ஒரு வலையில் ஒரு சிலந்தியும் நான்கைந்து முட்டைக்கூடுகளும் காணமுடிந்தது. 10 சதுர மீட்டருக்குள் 20 சிலந்தி என்ற எண்ணிக்கையில் இருந்தது. பொதுவாக சீமைக்கருவேல மரங்களில் காணப்படும் இந்த வகை சிலந்திகளை வயலில் கண்டது அரிதானது. மேலும் இவ்வளவு சிலந்திகள் இரசாயன விவசாயம் செய்யும் நிலங்களில் காணஇயலாது. இயற்கை விவசாயம் செய்யும் பண்ணை என்பதால் காணமுடிகிறது, மேலும் மற்ற சில இடங்களில் நீள் தாடை சிலந்திகளையும் காணமுடிந்தது.


பூச்சிகளை தொடர்ந்து கவனிப்போம்...