ஈஷா இன்சைட் 2017 - முதல் நாள்

இது உண்மையைக் காணும் யுக்தி; புலன்களுக்கு புலப்படாத சக்தி! உன்னால் காணமுடிந்தால் அதுதான் வெற்றி!
ஈஷா இன்சைட் 2017 - முதல் நாள், isha insight 2017 muthal nal
 

இது உண்மையைக் காணும் யுக்தி; புலன்களுக்கு புலப்படாத சக்தி!
உன்னால் காணமுடிந்தால் அதுதான் வெற்றி!

இரண்டாம் நாள் மூன்றாம் நாள்

“இந்தியா” - சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இது ஒரு மந்திரச் சொல். உலகத்தவர் அனைவரும் பயணம் செய்ய விரும்பிய நாடு! “இந்த நாடு மட்டும் எப்படி இவ்வளவு செல்வச் செழிப்பாக இருக்கிறது?” அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி இது!

நவீன உலகின் கார்ப்பரேட் தலைவர்களுக்கு இந்த தேசத்தின் பழங்கால ஞானத்தை வழங்கி அதன்மூலம் வெற்றியைத் தேடித் தரும் நிகழ்ச்சி Insight - DNA of Success.

சிலர் காண வந்தனர், சிலர் கற்க வந்தனர், சிலர் அள்ளிச் சென்றனர். அழிக்க இயலா அந்த ஞானமும் தொழில்நுட்பமும் இன்றும் உலகத்தவரை இந்த தேசம் நோக்கி ஈர்த்துக் கொண்டுதான் இருக்கிறது.

நவீன உலகின் கார்ப்பரேட் தலைவர்களுக்கு இந்த தேசத்தின் பழங்கால ஞானத்தை வழங்கி அதன்மூலம் வெற்றியைத் தேடித் தரும் நிகழ்ச்சி Insight - DNA of Success.

ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சி பல CEO களை ஈர்த்து வருகிறது. தங்கள் நிறுவனத்தில் வருவாயை பல மடங்கு அதிகரித்து வெற்றியின் உச்சத்தைத் தொட்டவர்கள் தங்கள் வெற்றியின் ரகசியத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.

தொடர்ந்து 6வது ஆண்டாக நிகழ்ந்து வரும் இந்த இன்சைட் நிகழ்ச்சி பல்வேறு நிறுவனங்களின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு தனிப்பட்ட நிறுவனத்தில் வளர்ச்சியை ஏற்படுத்தும்போது தேசத்தில் பொருளாதாரமே வலுவடைகிறது.

திரு. சுதீப் அவர்கள் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்த 231 தொழில் நிறுவனத் தலைவர்களில் ஒருவர்.

“அழகும் ரம்யமும் கூடவே அதிர்வுகளும் நிறைந்த இந்த இடத்தின் உயிரோட்டத்தையும் மகிழ்ச்சி நிறைந்த முகங்களையும் காண்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கற்பதை ஆனந்தமாக கற்பதே இந்த இடத்தின் தனித்துவமான நிலை” என ஈஷா யோக மையத்தைக் கண்டு வியந்து போகிறார், எலக்ட்ரானிக்கா ஃபைனான்ஸ் நிறுவனத்தின் CFO திரு. சுதீப் பாட்டியா.

இன்சைட் பங்கேற்பாளர்கள் 23ம் தேதி காலை நிகழ்ச்சி நடக்கும் ஸ்பந்தா ஹாலில் நுழையும்போது தன்னார்வத் தொண்டர்கள் மிகவும் வித்தியாசமான முறையில் வரவேற்றனர். இராஜஸ்தானின் கலாச்சார இசை ஒலிக்க தன்னார்வத் தொண்டர்கள் அதற்கு நடனமாடி பங்கேற்பாளர்களை வரவேற்க அனைவரும் இன்ப அதிர்ச்சி அடைந்தனர். இராஜஸ்தானி நடையில் வண்ணமிகு உடையில் பசுமை நிறைந்த ஸ்பந்தா ஹால் உண்மையாகவே பாலைவனச் சோலைப் போல இருந்தது.

insight2017-sadhguru

“இந்நாட்டின் பாரம்பரிய தொழில் முறைகள் இந்த தேசத்தை துடிப்புமிக்க மாபெரும் தொழில் நிறுவனமாக வைத்திருந்தது. அவர்கள் பல நூற்றாண்டுகளாக படையெடுப்புகள் இராணுவ நடவடிக்கைகளைத் தாண்டி வெற்றிகரமாக தொழில் நடத்திய சமூகங்களாக இருந்திருக்கின்றனர். நமது பாரம்பரிய தொழில், ஞானம், திறமை மற்றும் தாங்கும்தன்மை போன்றவற்றை பங்கேற்பாளர்களுக்கு அளிப்பதே இவ்வருட இன்சைட் நிகழ்ச்சியின் முக்கிய அம்சம்,” என்று சத்குரு பேசும்போது கூறினார்.

insight2017-sylendra-metha

தன் மரபணுவிலேயே வியாபாரத் திறமையைக் கொண்டவரும் வியாபாரக் கல்வியிலும் சிறந்தவருமான மார்வாரி பேராசிரியர் சைலேந்திர மேத்தா, அவர்களது சமூகத்தின் பாரம்பரிய வியாபார நுணுக்கங்களை இன்றைய உலகில் நடைமுறைப்படுத்தும் வகையில் விளக்கினார். இந்த அமைப்பினை அவரவர்களது நிறுவனங்களில் பயன்படுத்துவதைப் பற்றி மாலை முழுவதும் கலந்தாய்வு நிகழ்ந்தது.

70 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனத்தை 3000 கோடி வருவாய் ஈட்டும் நிறுவனமாக மாற்றுவது எப்படி?

ஜுபிலன்ட் ஃபுட் வர்க்ஸ் நிறுவனத்தின் CEO வாக இருந்த அஜய் கௌல், தான் எவ்வாறு 70 கோடி வருமானம் ஈட்டிய டாமினோஸ் பீட்ஸா வியாபாரத்தை 3000 கோடியாக மாற்றினார் என விவரித்தார். ஒரு நேரத்தில் அந்த அறை முழுக்க தீவிரமான விவாதமும் பல யோசனைகளும் வெளிவந்த விதமாக இருந்தது.

ஷாப்பர்ஸ் ஸ்டாப் நிறுவனத்தின் துணைத் தலைவர் மற்றும் TRRAIN நிறுவனத்தின் நிறுவனரான திரு. பி.எஸ். நாகேஷ் நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தார். ஒவ்வொரு குழுவிலும் எந்த அம்சத்தை விவாதிக்க வேண்டும் என பிரித்தளித்து மிகவும் சிறப்பாக விவாதத்தைக் கொண்டு சென்றார்.

isha-insight-2017-bs-nagesh

விலைமதிப்பற்ற அனுபவங்கள், யோசனைகள், யுக்திகள், மற்றும் உள்ளுணர்வு என அற்புதமான விஷயங்கள் இங்கே பகிர்ந்து கொள்ளப்படுகின்றன.

திரு. நந்தகுமார் கடந்த இரண்டு வருடங்களாக இன்சைட் நிகழ்ச்சிக்கு வந்து கொண்டிருக்கிறார். ஒரே ஒரு மனிதரைக் கொண்ட ஒரு நிறுவனமாக இருந்த சன்டெக் பிஸினஸ் சொலுஷன்ஸை ஒரு வலுவான அமைப்பாக மாற்றினார். இவ்வருடம் தன் குழுவில் இருக்கும் 15 பேரை இந்நிகழ்ச்சிக்கு அழைத்து வந்திருக்கிறார். அடுத்த வருடம் தன் வாடிக்கையாளர்களையும் அழைத்து வர திட்டமிட்டிருக்கிறார்.

ஒரு பெண்ணாக வர்த்தக உலகில் சாதிப்பது எப்படி?

isha-insight-2017-bs-ameera-shah

ஒரு பெண்ணாக தான் சந்தித்த சோதனைகள், போராட்டங்கள், இடர்கள், மற்றும் வெகுமதிகளை விளக்கிய அமீரா ஷாவுக்கு அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பியதில் எந்த அதிசயமும் இல்லை. அவரது பேச்சின் வளமும் எளிமையான மொழியும் பங்கேற்பாளர்களை பிரம்மிப்பில் ஆழ்த்தியது.

மார்வாரி கலாச்சாரத்தின் இதயமாக இருக்கின்ற இராஜஸ்தான் உணவு வகைகளை ரசித்தபடி இன்றைய நாள் முடிந்தது.

நாளை சத்குருவின் முன்னிலையில் யோகப் பயிற்சியுடன் பங்கேற்பாளர்கள் நாளினைத் துவங்குவார்கள். இது உள்முகமான பயணம் துவங்குவதற்கான நேரம். “ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் உங்களது அறிவு சுடர்விட வேண்டும்,” என சத்குரு கூறியது ஒவ்வொருவர் மனதிலும் ஒலித்துக் கொண்டே இருந்தது. எந்த விதமான தொழில் செய்த போதிலும் ஒரு மனிதனின் தரம்தான் அவர் செய்யும் செயலின் தரத்தை நிர்ணயிக்கிறது என்பதைப் பங்கேற்பாளர்கள் புரிந்துகொண்டனர்.

“உங்களது பயணத்தில் இது ஒரு திருப்பு முனையாக இருக்கவேண்டும். இங்கிருக்கும் இந்த நேரத்தில் உங்களை முழுமையாக அளியுங்கள்!” - சத்குருவின் இந்த அதிர்வுமிக்க செய்தி பங்கேற்பாளர்களை இந்த நிகழ்வுக்கு பலவிதங்களில் தயார் செய்தது.

நாளைய தினம், இரண்டாம் நாள் - என்னென்ன நடைபெறவிருக்கிறது, யார் என்ன செய்யப் போகிறார்கள். நாளை பதிவிடுவோம், தொடர்பில் இருங்கள்!

 
 
 
  0 Comments
 
 
Login / to join the conversation1