சிறு தானியங்களை நம் அன்றாட உணவில் சேர்த்துக்கொள்வது பற்றி இன்று பரவலாக பேசப்பட்டு வந்தாலும், பலருக்கு இப்போதும்கூட சிறுதானியங்கள் குறித்த முழுமையான விவரங்களும், அவை தரும் ஆரோக்கிய நன்மைகளும் தெரியவில்லை! சிறு தானியங்கள் குறித்த ஓர் முழுமையான பதிவாக மருத்துவரின் இந்த பதிவு அமைகிறது!

டாக்டர் சாட்சி சுரேந்தர், ஈஷா ஆரோக்யா:

நவீன மருத்துவம் பயின்ற எனக்குள் எப்போதுமே இந்த எண்ணம் உண்டு. “நோய்களுக்கும் மருந்துகளுக்கும் எங்கள் கல்வி முறையில் அளிக்கப்படும் முக்கியத்துவம், ஆரோக்கியம் காக்கும் ஊட்டச்சத்து மற்றும் நோய் தடுப்புமுறைகளுக்கு வழங்கப்படுவதில்லை” என்பதுதான்.

அரிசியும் கோதுமையும் இவற்றின் நார்ச்சத்துக்கு அருகில் கூட நிற்க முடியாது. நார் அதிகம் உள்ளதால் உண்டபின் சர்க்கரையை இரத்தத்தில் மிகசீராக வெளியிடுவதால் (low Glycaemic Index Food) இவை, குறிப்பாக குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயாளிகளின் நண்பன்.

ஒரு மருத்துவராய் ஊட்டச்சத்து உணவுகள் குறித்த என் தேடல், சிறு தானியங்களிடம் எனை கொண்டு சேர்த்தது. அவற்றின் ஊட்டச்சத்து புள்ளி விவரங்களை அறிந்து, நானும் அவற்றை அடிக்கடி பயன்படுத்தத் துவங்கிய பிறகு, அவற்றை என்னிடம் மருத்துவ ஆலோசனை பெறும் அனைவருக்கும் பரிந்துரைக்கிறேன்.

இரு வருடங்களுக்கு முன், சிறு தானியங்கள் குறித்து நானும், ஈஷா அன்பர் ஓய்வு பெற்ற தமிழக சுகாதாரத் துறை தலைமை மருத்துவர், கிருஷ்ணமூர்த்தி அண்ணாவும் பேசிக் கொண்டோம். முடிவில் அண்ணா, “ஓகே - ஒகே சுரேன், முதல்ல குதிரைவாலி ரைஸ் ட்ரை பண்ணிபாக்குறேன்,” என்றார்.

“குதிரவாலியா? அப்பிடீனு ஒரு அரிசியா? சரி, வாங்கி குடுங்க சமைச்சுதான் பாப்போம்!” என அண்ணாவின் மனைவி சந்தேகத்துடன்தான் ஈஷா ஆரோக்கியாவில் வாங்கிச் சென்றார்.

மறுநாள் தொலைபேசிய அக்கா, “சுரேன், குதிரவாலி கிச்சடி செம டேஸ்ட். வரகு, சாமை, தினை எல்லாமே ட்ரை பண்ணலாம்னு இருக்கேன். டேஸ்ட்டுக்கு டேஸ்டு.. ஹெல்த்துக்கு ஹெல்த்து..” என்றார். நாளாக, நாளாக அவற்றின் ஆரோக்கிய பயனையும் அறிந்த பின், இந்த இரு வருடங்களில் தினமும் அவர்களின் உணவு மேசையில் சிறுதானியங்கள் முக்கிய இடம் பிடித்துவிட்டன. இது ஒரு சாம்பிள்தான்.

சிறுதானியங்களில் உள்ள சத்துக்கள்

Subscribe

Get weekly updates on the latest blogs via newsletters right in your mailbox.

"ஏங்க, குழந்தைக்கு தினை பாயசம் செய்யலாம்னு இருக்கேன். அரை கிலோ வாங்கிடுங்க” என மனைவியும் “உங்க கடைல வரகரிசி கிடைக்குமா?” என நுகர்வோரும் “சிறுதானிய ரெசிபிகளை கூகுளில் தேடுவதும்” என கடந்த சில வருடங்களாகவே பரவலான விளம்பரங்கள் இன்றி நம்மிடையே சிறு தானியங்கள் குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவது நல்லதுதான். நம் ஈஷா யோகா மையத்தில் கூட தினசரி உணவில் சிறுதானியங்கள் கட்டாயம் இடம் பெறுகின்றன. அப்படி அவற்றில் என்னதான் இருக்கிறது என பார்த்துவிடலாமா?

எவை சிறு தானியங்கள்?

உணவு தானியங்களில் அளவில் சிறிய விதைகளைக் கொண்ட சிறுதானியங்களில் நாம் அனைவரும் அறிந்தது ராகி (கேப்பை/கேழ்வரகு) மற்றும் கம்பு. இவை அல்லாது வரகு, சாமை, குதிரைவாலி, தினை, சோளம், பனிவரகு எனப் பலவகைகள் உள்ளன. இதில், தற்போது மஞ்சள் நிற விதைகள் கொண்டு வேகவைத்து நாம் உண்ணும் corn, சோளம் என தவறாக வழங்கப்படுகிறது. உண்மையான சிறுதானிய சோளம் வெள்ளை, பழுப்பு நிறங்களில் வட்டவடிவில் இருக்கும்.

இவை அனைத்துமே 1960க்கு முன்னர் நம் நாட்டில் பரவலாக பயிரிடப்பட்டவைதான். பசுமைப் புரட்சிக்கு பின் நெல்லும், கோதுமையும் மட்டுமே நாடு முழுதும் பயிரிடப்படும் தானியங்கள் ஆனதால் இவற்றின் பெயர் கூட நம்மில் பலருக்கும் மிகப் புதிதாக உள்ளது.

ஏன் சிறு தானியங்கள்?

அஃப் கோர்ஸ், உடலுக்கு வெறும் கலோரிகளை மட்டும் அள்ளிக் கொட்டும் சர்க்கரை சத்து மட்டும் அல்லாது தேவையான நார்ச்சத்தும், அத்தியாவசிய வைட்டமின், மினரல்களும் இவற்றில் நிறைந்திருப்பதால்தான்! (காண்க அட்டவணை)

அரிசியும் கோதுமையும் இவற்றின் நார்ச்சத்துக்கு அருகில் கூட நிற்க முடியாது. நார் அதிகம் உள்ளதால் உண்டபின் சர்க்கரையை இரத்தத்தில் மிகசீராக வெளியிடுவதால் (low Glycaemic Index Food) இவை, குறிப்பாக குதிரைவாலி அரிசி சர்க்கரை நோயாளிகளின் நண்பன்.

மேலும், அதிக நார்ச்சத்தால் அடிக்கடி உண்ண வேண்டும் எனும் தேவை குறையும். பசியை நீண்டநேரம் தாங்கும் தன்மையை அளிப்பதால் குறைந்த உடல் உழைப்பு கொண்டோர், தம் உணவின் உட்கொள்ளும் அளவை இயல்பாக குறைத்துக்கொள்ளலாம். உடற்பருமன், இருதய நோய்க்கான ரிஸ்க் கட்டாயம் குறையும்.

ராகியில், 300 மடங்கு அதிக கால்சியம் சத்து பெண்களுக்கும், வயோதிகர்களுக்கும் ஏற்றது என்றால் சாமையின் அதிக இரும்புச் சத்து தினசரி உணவில் சேர்க்கும்போது நாட்பட்ட இரத்த சோகையை வெல்லும். தினையின் அதிக புரதம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மருந்தாகும் உணவு.

இவற்றின் ஒரு கப் உடலின் பாஸ்பரஸ், மேக்னீசியம் தேவையை 20 சதம் வரை பூர்த்தி செய்வதால், வளரும் பருவத்தின் மூளை வளர்ச்சிக்கும், நடுவயதின் நரம்பு மண்டல உறுதிக்கும், கிழவயதின் ஞாபகத்திறன் மங்காதிருப்பதற்கும் மிகநல்லது.

குறைந்த அமிலத்தன்மை உள்ளதால், எளிதில் ஜீரணம் ஆகிவிடுகின்றன. வயிற்றுப்புண்ணுக்கும் மருந்தாகின்றன. ஆகவே, தினசரி உணவுக்கு பட்டை தீட்டப்பட்ட அரிசியைவிட, சிறு தானியங்கள் நம் உடல் ஆரோக்கியத்திற்கு 100 சதம் மேலானதே!

இது மட்டுமா? இவை நம் உடலுக்கு மட்டுமல்ல. நம் ஊருக்கு பயன் அளிப்பதையும் பார்க்கலாம்...

சிறு தானியங்கள் - தேசிய அடையாளம்:

சிறு தானியங்களின் பொதுவான நற்குணங்கள்:

  • சாகுபடிக்கு மிக குறைந்த நீராதாரமே போதும். வறட்சியை தாக்குபிடிக்கும் திறன் உண்டு.
  • பூச்சிக் கொல்லி ரசாயனங்கள் அறவே தேவை இல்லை. ஆகையால், மண்ணும் சரி, உண்ணும் உடலும் சரி மலடாவதில்லை.
  • இதனால், உற்பத்தி செலவும், உழவுக்குத் தேவையான மின்சார உபயோகமும் கணிசமாகக் குறையும்.
  • ஒட்டு ரக நெல், கோதுமை விதைகளை விவசாயிகள் நிறுவனங்களிடம் இருந்து வாங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால், சிறுதானியங்களின் விதைகள் விவசாயிக்கே சொந்தம். இதனால், சிறு விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படுகிறது.
  • சுழற்சி முறையில் பலவகை பயிர்களை (Bio-diversity) விளைவிப்பதால், மண் வளம் பெருகும்.

சிறு தானிய ஆராய்ச்சி மற்றும் ஆந்திர, தமிழக விவசாயிகள் மத்தியில், இவற்றின் பயன்பாட்டின் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் Earth 360 அமைப்பின் சூழியல் போராளி, நண்பர் தினேஷ், bio-diversity குறித்து மிக எளிதாக விளக்குகிறார்.

ராகியில், 300 மடங்கு அதிக கால்சியம் சத்து பெண்களுக்கும், வயோதிகர்களுக்கும் ஏற்றது என்றால் சாமையின் அதிக இரும்புச் சத்து தினசரி உணவில் சேர்க்கும்போது நாட்பட்ட இரத்த சோகையை வெல்லும். தினையின் அதிக புரதம் குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு மருந்தாகும் உணவு.

“நாம் சிறு வயதில், ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பெரியப்பா, சித்தி, அத்தை என்றெல்லாம் வெவ்வேறு பெயர்களில் அழைப்போம். ஆனால் நகரத்துக்குழந்தைகள் இப்போது அதே உறவினர்களை வெறும் அங்கிள், ஆன்ட்டி என்று சுருக்கிவிட்டதை போலத்தான், நாம் தினமும் உண்ணும் தானியங்களில் வெறும் அரிசி, கோதுமையை மட்டும் உண்டு variety யும் இழந்து அதனால் மண்ணுக்கும், உடலுக்கும் கிடைக்கும் ஆரோக்கியத்தையும் இழந்து வருகிறோம்,” என்கிறார்.

மேலும் தினேஷ், “ஒவ்வொரு, சிறுதானியமும் ஒவ்வொரு இந்திய மொழியிலும் தனித் தனிப் பெயரால் வழங்கப்படுகின்றன. நம் தேசத்தின் கலாச்சாரத்தோடும், வரலாற்றோடும் இவை பிணைந்திருப்பதையே நமக்குக் காட்டுகிறது” எனக் கூறியது யோசிக்க வைத்தது.

தற்போது, “நாம் நம் தேசிய அடையாளத்தைப் பேண வேண்டும்” என்கிற கருத்து பரவலாக வலுவாக ஒலிக்கத் துவங்கியுள்ளது. ஏன் நாம் அதை நம் உணவுதானியங்களில் இருந்து துவங்கக் கூடாது?

உடல் ஆரோக்கியமும், தேசநலனும் உங்கள் விருப்பமாக இருந்தால், சிறுதானியங்கள் குறைந்தபட்சம் வாரம் 3 நாட்களாவது உங்கள் மெனுவில் இடம் பிடிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்!

“ஓகே டாக்டர்.. ஆனா, எங்க கிடைக்கும், எப்படி சமைக்கிறது?” என கேள்வி வருகிறதா? தற்போது பெரும்பாலும் அனைத்து நகரங்களிலும், இவை குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், உங்கள் ஊரிலேயே சிறிது மெனக்கெட்டால், இயற்கை அங்காடிகளிலோ அல்லது மளிகைக் கடைகளிலோ இவற்றை பெறமுடியும். கல், குருணை நீக்கியதை உறுதி செய்துகொள்ளவும்.

இதில் வரகு, சாமை, தினை நெல்லுக்கு ஒப்பானது. அரிசி சமைக்கப்படும் முறையிலேயே இவற்றை சமைக்கலாம். வேக வைப்பது மட்டும் கொஞ்சம் கூடுதல்நேரம் தேவைப்படலாம்.

குறிப்பு: சாமை, வரகு, தினை, குதிரைவாலி முதலிய பிற சிறு தானியங்கள் அனைத்தும் ஈஷா ஆரோக்கியா மருத்துவ மையங்களில் கிடைக்கும்.