logo
logo
விஷ்ணு, விஷ்ணு கதைகள், Vishnu Stories in Tamil, Vishnu in Tamil

விஷ்ணு மற்றும் சிவனின் 3 கதைகள்

சிவன் தனது வீட்டினை விஷ்ணுவிடம் இழந்த கதை, கஜேந்திரன் என்ற அசுரனிடமிருந்து விஷ்ணு சிவனை மீட்டெடுக்க உதவிய கதை, விஷ்ணு தன் கண்ணையே சிவனுக்கு அர்ப்பணித்த கதை - ஆகிய 3 கதைகள் இங்கே...

சிவனும், விஷ்ணுவும் – பத்ரிநாத் தலத்தின் புராணம்


பத்ரிநாத் குறித்து ஒரு புராணக்கதை உள்ளது. இங்குதான் சிவனும், பார்வதியும் வாழ்ந்தனர். இமயமலைகளின் ஏறக்குறைய 10,000 அடி உயரத்தில் இருக்கும் அற்புதமான ஓர் இடம் அது. ஒருநாள், நாரதர் விஷ்ணுவிடம் சென்று கூறினார், “நீங்கள் மனிதகுலத்திற்கு ஒரு மோசமான உதாரணமாக இருக்கிறீர்கள். எப்போதும் நீங்கள் ஆதிசேஷன் மீது படுத்துக்கொண்டிருக்கிறீர்கள், மற்றும் உங்கள் மனைவி லட்சுமி இடைவிடாமல் உங்களுக்கு சேவை செய்தவாறு, உங்களைப் பாழ்படுத்திக் கொண்டுள்ளார். பூமி மீது இருக்கும் மற்ற உயிர்களுக்கு நீங்கள் ஒரு நல்ல உதாரணமாக இல்லை. படைப்பிலுள்ள மற்ற அனைத்து உயிர்களுக்காகவும், நீங்கள் பயனுள்ள நோக்கத்துடன் ஏதாவது செய்யவேண்டும்.”

இந்த விமர்சனத்திலிருந்து தப்பிக்கவும், தனது மேம்பாட்டுக்கான செயல் செய்வதற்காகவும், அவரது சாதனாவை செய்வதற்கு சரியான இடத்தைத் தேடியபடி விஷ்ணு இமயமலைகளுக்கு இறங்கி வந்தார். அவர் பத்ரிநாத்தைக் கண்டடைந்தார், ஒரு அழகிய சிறு வீடு, எப்படி இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தாரோ அதேபோன்ற எல்லா விஷயங்களுடனும், அவரது சாதனாவுக்கான சரியான இடமாக அது இருந்தது.

அவர் அந்த வீட்டிற்குள் சென்று பார்த்தார். ஆனால், அது சிவனின் இருப்பிடம் என்பதை பிறகு அவர் உணர்ந்தார் – மேலும் சிவன் ஆபத்தானவர். அவர் கோபமடைந்தால், உங்களுடையதை மட்டுமல்ல, தனது தொண்டையையே வெட்டிக்கொள்ளும் ஒரு விதமானவர். இவர் மிகவும் ஆபத்தானவர்.

ஆகவே, விஷ்ணு தன்னை ஒரு சிறு குழந்தையாக உருமாற்றிக்கொண்டு, வீட்டின் முன்பாக அமர்ந்தார். வெளியில் சற்று நடப்பதற்காக சென்றிருந்த சிவனும், பார்வதியும் வீடு திரும்பினர். அவர்கள் திரும்பி வந்தபோது, அவர்களது வீட்டின் வாயிலில் ஒரு சிறு குழந்தை அழுதுகொண்டிருந்தது. குழந்தை இதயமே வெடிப்பதைப்போல அழுதுகொண்டிருந்ததைக் கண்ட பார்வதியின் தாய்மை உணர்வுகள் மேலெழும்ப, அவள் குழந்தையை கையிலெடுக்க விரும்பினாள். சிவன் அவளைத் தடுத்து, “அந்த குழந்தையைத் தொடாதே”, என்றார். பார்வதி, “என்ன கொடுமை. நீங்கள் எப்படி இதைக் கூறமுடிகிறது?” என்று பதிலுக்குக் கேட்டாள்.

சிவன் கூறினார், “இது ஒரு நல்ல குழந்தை இல்லை. அவனாகவே நமது வீட்டு வாசலுக்கு ஏன் வந்திருக்கிறான்? சுற்றுமுற்றும் ஒருவரும் இல்லை. குழந்தையின் பெற்றோர்களின் காலடிச் சுவடுகள் பனிப்பாதையில் தென்படவில்லை. இது ஒரு குழந்தையே அல்ல.” ஆனால் பார்வதியோ, “முடியாது! என்னுள்ளே இருக்கும் தாய் இப்படி குழந்தையை விட்டுச்செல்ல அனுமதிக்கமாட்டாள்” என்று கூறி குழந்தையை வீட்டுக்குள் எடுத்துச் சென்றாள். குழந்தையும் அவளது மடி மீது சௌகரியமாக அமர்ந்துகொண்டு, சிவனை மிகுந்த களிப்புடன் பார்த்தது. இதன் விளைவை சிவன் அறிந்துகொண்டார். ஆனால் அவர், “சரி, என்ன நிகழ்கிறது என்று பார்ப்போம்” என்று கூறினார்.

பார்வதி குழந்தையை சமாதானப்படுத்தி, உணவு ஊட்டியதும், அவனை வீட்டில் உறங்கச் செய்துவிட்டு, சிவனுடன் அருகிலிருக்கும் வெந்நீர் ஊற்றுகளில் நீராடச் சென்றாள். அவர்கள் திரும்பி வந்தபோது, கதவுகள் உள்ளிருந்து பூட்டப்பட்டிருந்ததைக் கண்டனர். பார்வதி திகைத்துவிட்டாள், “கதவை யார் பூட்டியுள்ளது?” சிவன் கூறினார், “இந்தக் குழந்தையை எடுக்காதே என்று நான் உன்னிடம் கூறினேன். நீ குழந்தையை வீட்டுக்குள் கொண்டுவந்தாய், இப்போது அவன் கதவைப் பூட்டிவிட்டான்.”

பார்வதி, “நாம் என்ன செய்வது?” என்று கேட்டாள்.

சிவனுக்கு இரண்டு தேர்வுகள் இருந்தன: முதலாவது, அவருக்கு முன்னால் இருந்த அனைத்தையும் எரித்துவிடுவது. மற்றொன்று, வேறு வழியைக் கண்டுபிடித்து சென்றுவிடுவது. ஆகவே அவர் கூறினார், “நாம் வேறெங்காவது செல்வோம். ஏனென்றால் இது உன் அன்புக்குரிய குழந்தை, என்னால் அதைத் தொடமுடியாது.”

இப்படித்தான் சிவன் அவரது வீட்டைத் தொலைத்துவிட்டு, சிவனும், பார்வதியும் “சட்டவிரோதமான வேற்றுகிரகவாசிகள்” ஆகிவிட்டனர்! அவர்கள் வாழ்வதற்கான ஒரு நல்ல இடத்துக்காக சுற்றிலும் தேடி நடந்து, இறுதியில் கேதார்நாத்தில் குடியமர்ந்தனர். அவருக்கு இது நிகழும் என்று தெரியாதா என்று நீங்கள் கேட்கலாம். நீங்கள் பல விஷயங்களையும் அறிந்திருக்கலாம், இருப்பினும் அவை நிகழ்வதற்கு நீங்கள் அனுமதிக்கிறீர்கள்.

விஷ்ணு, சிவனை “மீட்டெடுத்த” தருணம்

ஒருவரின் பெரும் ஏக்கத்திற்கு, குழந்தையைப்போல பதில்வினையாற்றும் சிவனுடைய பாரபட்சமற்ற கருணையை விவரிக்கும் பல கதைகள் யோகப் பாரம்பரியத்தில் உண்டு. ஒரு காலத்தில், கஜேந்திரன் என்றழைக்கப்பட்ட அசுரன் ஒருவன் இருந்தான். கஜேந்திரன் பல கடும் தவங்கள் செய்து, சிவனிடமிருந்து ஒரு வரம் பெற்றான். அதாவது அவன் எப்போது அழைத்தாலும் சிவன் அவனுடன் இருக்கவேண்டும். இந்த வரத்தைப் பெற்றுக்கொண்ட கஜேந்திரன், தனது வாழ்வின் ஒவ்வொரு சிறிய விஷயத்துக்கும், சிவனை அழைத்துக்கொண்டிருந்ததைக் கண்ட மூவுலகின் மிகக் குறும்புத்தனமான முனிவரான நாரதர், கஜேந்திரனுடன் சற்று வேடிக்கையான ஒரு விளையாட்டினை நடத்தினார்.

அவர் கஜேந்திரனிடம் கூறினார், “நீ ஏன் சிவனை அவ்வப்போது அழைத்துக்கொண்டிருக்கிறாய்? அவர் உன்னுடைய ஒவ்வொரு அழைப்பையும் ஏற்றுக்கொண்டிருக்கிறார். அவர் உனக்குள்ளேயே சென்று, எல்லா நேரமும் அங்கே தங்குவதால், சிவன் எப்போதும் உன்னுடையவராக இருப்பார், இதனை நீ ஏன் அவரிடம் கேட்கக்கூடாது?” அது ஒரு நல்ல யோசனை என்று கஜேந்திரன் எண்ணியதால், அதற்காக அவன் சிவனை வழிபட்டான். சிவன் அவனுக்கு முன்பு தோன்றியதும் அவன், “நீங்கள் எனக்குள் தங்கியிருக்க வேண்டும். நீங்கள் வேறு எங்கும் செல்லக்கூடாது”, என்று கேட்டான். சிவன், குழந்தை போன்ற அவரது வரமளிக்கும் தன்மையின் காரணத்தால், அவன் கேட்டபடியே ஒரு லிங்க வடிவில் கஜேந்திரனுக்குள் புகுந்து, அங்கேயே தங்கிவிட்டார்.

காலம் கடந்தது, ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சிவன் இல்லாமையை உணர்ந்தது. அவர் எங்கே என்பது ஒருவருக்கும் தெரியவில்லை. எல்லா தேவர்களும், கணங்களும் சிவனைத் தேடத் தொடங்கினர். நீண்ட தேடலுக்குப் பிறகு, அவர் எங்கிருக்கிறார் என்று ஒருவரும் கண்டுபிடிக்க இயலாதபோது, அவர்கள் தீர்வு காண்பதற்காக விஷ்ணுவிடம் சென்றனர். விஷ்ணு சூழலைக் கண்டுணர்ந்து, “அவர் கஜேந்திரனுக்குள் இருக்கிறார்,” என்று கூறினார். சிவனைத் தனக்குள் சுமந்திருப்பதால் கஜேந்திரன் அழிவற்றவனாகிவிட்ட காரணத்தால், கஜேந்திரனிடம் இருந்து சிவனை எப்படி வெளியில் கொண்டுவர முடியும் என்று தேவர்கள் விஷ்ணுவைக் கேட்டனர்.

வழக்கம்போல், விஷ்ணு சரியான ஒரு உபாயத்தை வழங்கினார். சிவபக்தர்களாக ஆடை தரித்த தேவர்கள், கஜேந்திரனுடைய அரசவைக்கு சமீபமாக வந்து, சிவனுடைய பெருமைகளை பெரும்பக்தியுடன் பாடத் தொடங்கினர். சிவனின் மகா பக்தனாக இருந்த கஜேந்திரன் இந்த மக்களை அவனது அரசவைக்குள் வந்து பாடவும், ஆடவும் வரவேற்றான். சிவனின் பக்தர்களாக உடையணிந்த தேவர்களின் கூட்டம், பெருகும் உணர்ச்சியுடனும், மகத்தான பக்தியுணர்வுடனும் சிவனுக்காக பாட்டிசைத்து, வழிபட்டனர். இதை கேட்டுக்கொண்டிருந்த, கஜேந்திரனுக்குள்ளே அமர்ந்திருந்த சிவனால் அங்கு தங்கியிருக்க இயலவில்லை, தேவர்களின் பக்திக்காக பதிலாற்றவேண்டியிருந்தது. ஆகவே சிவன் கஜேந்திரனைக் கிழித்துக்கொண்டு, அவனிடமிருந்து வெளியில் வந்தார்!

சிவன் மீதான விஷ்ணுவின் பக்தி

சிவன், கடவுள்கள் மற்றும் இராட்சசர்கள், தேவர்கள் மற்றும் அசுரர்கள் ஆகிய இருதரப்பினராலும் வணங்கப்படுகிறார் – உயர்நிலை மற்றும் கீழ்நிலையில் உள்ளவர்கள் – அனைவருக்கும் அவர்தான் முதற்கடவுள். விஷ்ணுவே அவரை வழிபடுவது வழக்கம். விஷ்ணு எப்படி சிவனின் பக்தனாக இருந்தார் என்பதை விவரிப்பதற்கு மிக அழகான கதை ஒன்று உள்ளது.

ஒருமுறை விஷ்ணு, சிவனுக்கு 1008 தாமரைகளை அர்ப்பணிப்பதாக உறுதியளித்தார். அவர் தாமரை மலர்களைத் தேடிச்சென்றதில், உலகம் முழுவதும் தேடியபிறகும், அவர் 1007 தாமரை மலர்களை தான் கண்டெடுத்தார். ஒரு மலர் மட்டும் கிடைக்கவில்லை. அவர் 1007 மலர்களையும் சிவனுக்கு முன்பாக சமர்ப்பித்தார். ஒரு மலர் விடுபட்டிருந்ததால், சிவன் கண்களைத் திறக்கவில்லை, அவர் வெறுமனே புன்னகைத்தார். அப்போது விஷ்ணு, “நான் கமலக்கண்ணனாக அறியப்படுகிறேன், அதாவது தாமரைக் கண்களைக்கொண்ட கடவுள். என் கண்கள் தாமரையைப்போல் அழகுடையவை. ஆகவே என் கண்களில் ஒன்றை அர்ப்பணிப்பேன்”, என்று கூறிவிட்டு, உடனே தனது வலது கண்ணைப் பறித்தெடுத்து, லிங்கத்தின் மீது வைத்தார். இந்த விதமான அர்ப்பணிப்பால் மகிழ்ந்துபோன சிவன், புகழ்வாய்ந்த சுதர்சன சக்கரத்தை விஷ்ணுவுக்கு வழங்கினார்.



குறிப்பு: ஆதியோகி சிவனைப்பற்றிய மேலும் அதிகமான சுவாரஸ்யம் மிகுந்த கதைகளை வாசிக்க இங்கே கிளிக் செய்யவும்.

    Share

Related Tags

சிவன் கதைகள்

Get latest blogs on Shiva

Related Content

சிவன் ஹீரோவா வில்லனா?