ieco
ieco

சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

article சிவன் பற்றி
நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்... Shivan ethanai peyargal ethanai mugangal | சிவன் – எத்தனை பெயர்கள்? எத்தனை முகங்கள்?

நம் இந்தியக் கலாச்சாரத்தில், சிவனுக்கு நாம் பல வடிவங்கள், பெயர்கள் கொடுத்து வழிபட்டு வருகிறோம். அவற்றின் அம்சங்கள் என்ன என்பதை சத்குரு இங்கே விளக்குகிறார்…

சத்குரு:

அறியாமையின் உச்சம் தொட்ட போலேநாத்!

bholenath

சிவனை நாம் போலேநாத் என்றும் அழைக்கிறோம். போலேநாத் என்றால் அறியாதவன் என்று அர்த்தம். அவன் அறியாமையின் கடவுள். கடவுளை ஒன்றும் தெரியாதவன் என அழைப்பது உங்களுக்கு பிடிக்காது என்று எனக்கு தெரியும். அவன் அனைத்தும் தெரிந்தவனாய் இருக்க வேண்டும் என்பது உங்கள் எதிர்பார்ப்பு. அவன் ஞானேஷ்வரனாகவும் இருக்கிறான். ஆனால், ஞானேஷ்வரன் என்பது அவனுடைய மிகச் சிறிய ஒரு அம்சம். இந்தப் பிரபஞ்சத்தில் பரந்து விரிந்த பெரும்பான்மையான பகுதி வெறுமையுடையதாய் இருக்கிறது, அதனாலேயே அவனை இருளின் கடவுள், வெறுமையானவன், அறியாமையின் கடவுள் என்று அழைக்கிறோம்.

நீங்கள் அறியாதவற்றை ஆராய்ந்தால்தான் அறிவு கிடைக்கும், இல்லையா? உங்களுக்கு தெரிந்ததை தோண்டிப் பார்த்தால், புதிதாய் ஏதோவொன்று பிறப்பதற்கான சாத்தியம் குறைவு. செய்ததையே மறுசுழற்சி செய்துகொண்டிருப்பீர்கள். அறியாதவற்றை ஆராயும்போது அறிதல் பிறக்கும். முடிவில்லா அறிவினை இருளிலிருந்து நம்மால் பெறமுடியும்.

நடன மேடையும் உடைந்துபோகும்

nataraja

நடராஜர் – நடனத்தின் இறைவனாய் விளங்குபவன். அணுதகர்ப்பு போன்ற நிகழ்வுகள் நிகழும் சுவிட்சர்லாந்தில் உள்ள CERN மையத்திற்கு நான் சென்றபோது, அங்கே நுழைவாயிலில் நடராஜர் சிலை உள்ளதைக் கண்டேன். அவர்கள் மேற்கொண்டுள்ள திட்டத்தோடு அடையாளப்படுத்தக் கூடிய ஒரு வடிவத்தை மனித கலாச்சாரத்தில் அவர்கள் காணாததால், நடராஜர் சிலையை ஸ்தாபித்துள்ளனர். நடராஜர் – படைத்தலின் எழுச்சியை குறிக்கிறார்; பிரபஞ்சத்தின் நிச்சலனத்திலிருந்து தன்னை சுயமாய் உருவாக்கிக் கொண்ட படைத்தலின் நடனம் அது.

அதனால், அவ்விடத்தில் “பைரவி யாத்னா” என இன்று அழைக்கப்படும் ஒரு செயல்முறையை சிவன் உருவாக்கினார். விழிப்புணர்வில் வாழ்ந்தவர்களுக்கும், பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் வாழ்பவர்களுக்கும் அவர்களது வாழ்வின் கடைசி 40 நொடிகள் முற்றிலும் வித்தியாசமான அனுபவமாய் இருக்கும். விபத்திலோ, வயோதிகத்தாலோ, கொலையினாலோ, தற்கொலையினாலோ ஒருவர் இறக்க நேரிடும்போது கடைசி 40 நொடிகள் மிக வேகமாய் கழியும். ஒருவர் தன் வாழ்நாள் முழுதும் விழிப்புணர்வில்லாமல் வாழ்ந்திருக்கலாம், பல ஜென்மங்கள் விழிப்புணர்வு தொடாத நிலையில் இருந்திருக்கலாம், அறியாமையில் விசும்பி இருக்கலாம், ஆனால், அந்த கடைசி 40 நொடிகளில், குறிப்பிடும்படியான விழிப்புணர்வு நிலையில் இருந்துவிட்டால், அத்தனை கர்மங்களையும் ஒருசேர கழித்து, கரைந்துவிடலாம். அதனால், இன்று, காசியிலுள்ள மணிகர்ணிகா படித்துறைக்கு அருகே, காலபைரவர் முன்னிலையில் பைரவி யாத்னா நடைபெறுகிறது.

தமிழ் மொழி மரணம் எய்தியவரை மிக அழகாக, “காலமாகிவிட்டார்” என்று சொல்கிறது. ஏனெனில், உயிர் என்று நீங்கள் சொல்லும் அம்சத்திற்கும், இறப்பிற்கும், காலத்திற்கும் தொடர்பு இருக்கிறது. உங்கள் வாழ்வின் அடிப்படையும், உங்கள் இறப்பின் அடிப்படையும் காலமே.

அர்த்தநாரீஷ்வரன்

ardhanari2

பொதுவாக சிவன், உச்சகட்ட ஆண்தன்மையின் அடையாளம். ஆனாலும், அவனது அர்த்தநாரீஷ்வர ரூபத்தில், சரி பாதி பெண். ஒருவருக்குள் ஆண்தன்மையும் பெண்தன்மையும் ஒன்றிணைந்தால் அவர் நிலையான பரவசத்தில் இருப்பார். அதையே புற-வழியில் முயன்றால் அது நிலைப்பதில்லை. அதனால் ஏற்படும் துன்பங்கள் அனைத்தும் ஒரு முடிவில்லா நாடகமே.

ஆண்தன்மை, பெண்தன்மை என்று சொல்லும்போது நாம் ஆணையோ பெண்ணையோ குறிப்பிடவில்லை. ஒரு ஆணும் பெண்ணும் இணைவதற்கான ஏக்கம் அல்ல இது. வாழ்வின் இருவேறு பரிமாணங்கள் இணைவதற்கான ஏக்கம் இது. உள்நிலையில் இதனை உங்களால் வெற்றிகொள்ள முடிந்தால், வெளிசூழ்நிலை நூறு சதவிகிதம் உங்கள் தேர்வுப்படி நிகழும். இல்லாதபட்சத்தில், வெளிசூழ்நிலை நிர்பந்தத்தின் பெயரிலேயே நடைபெறும்.

நீங்கள் உங்களது உச்சபட்ச சாத்தியத்திற்கு வளர்ந்தால், நீங்கள் பாதி ஆணாகவும் பாதி பெண்ணாகவும் இருப்பீர்கள் என்பதையே இது சித்தரிக்கிறது. அரவாணி அல்ல. ஒரு முழுமையான ஆண், ஒரு முழுமையான பெண். நீங்கள் இப்படி இருக்கும்போது மட்டுமே பரிபூரண உயிராக இருப்பீர்கள்.

காலபைரவர்

kalabhairava-1

சிவனது அகோர ரூபம் காலபைரவர். அவர் காலத்தை அழிக்கும் நிலையில் இருக்கிறார், அதனை கடந்தவர் என்பதால் அவர் காலபைரவர். பொருள்தன்மை சார்ந்த அனைத்தும் கால, நேரம் என்ற கட்டுபாடுகளுக்குள் மட்டுமே வாழ்கின்றன. காலத்தை அழித்தால், அனைத்தும் முடிந்துவிடும்.

சிவன், “பைரவி யாத்னா” செய்வதற்காக பொருத்தமான வேடம் தரித்து காலபைரவராய் மாறினார். மரணம் நம்மை தொடும் தறுவாயில், பல ஜென்மங்கள் அதிதீவிரமாய், பயங்கர வலியுடன், வேதனையுடன் சில மைக்ரோ விநாடிகளுக்குள் நிகழும். அதன்பின், கடந்த காலம் குறித்த எந்தவொரு அம்சமும் உங்களுக்குள் நிலைக்காது. உங்கள் “மென்பொருளை” அழிப்பது வலிதரும் விஷயம். இது மரணம் நடக்கும் தறுவாயில் நடப்பதால், இதுகுறித்து உங்களுக்கு தேர்வு செய்யும் வாய்ப்பு கிடையாது. ஆனால், அந்த வேதனையை எவ்வளவு குறைக்க முடியுமோ அவ்வளவுக்கு குறைக்கிறான். இதுபோன்ற ஒரு விஷயம் அதிதீவிரமாய் நிகழ்ந்தால்தான் வேலைசெய்யும். மென்மையாய் இருந்தால் என்றென்றும் நிகழ்ந்துகொண்டே இருக்கும்.

ஆதியோகி

adiyogi-udhvegam-thoondum-uruvam-1050x700

யோக பாரம்பரியத்தில், சிவனை கடவுளாக வழிபடுவதில்லை. அவன் ஆதியோகி, அதாவது முதல் யோகி, ஆதிகுரு – முதல் குரு. இவனிடமிருந்துதான் யோக அறிவியல் தோன்றியது. தட்சிணாயன காலத்தில் வரும் முதல் பௌர்ணமி “குரு பௌர்ணமி” என அழைக்கப்படுகிறது. இந்நாளில்தான், ஆதியோகி ஆதிகுருவாய் மாறி, சப்தரிஷி என அழைக்கப்படும் தன் ஏழு சீடர்களுக்கு யோக அறிவியலை வழங்கத் துவங்கினார்.

இது அனைத்து மதங்களுக்கும் முன்னோடியாய் இருக்கிறது. மக்கள் பிரிவினைவாதத்தால் மனிதர்களைப் பிரிப்பதற்கு முன்னரே அவன் வளரவும் மாற்றம் காணவும் தேவையான அத்தனை கருவிகளும் அவனுக்கு வழங்கப்பட்டன. அந்தத் தொழில்நுட்பத்தின் நவீன நுட்பங்களும், அதன் நயமும் நம்பமுடியாததாய் உள்ளது. அந்த காலத்து மக்கள் அத்தனை நயமானவர்களாய் இருந்தார்களா என நீங்கள் கேட்பது, பொருந்தா கேள்வியாய் இருக்கும், ஏனெனில், இது எந்தவொரு கலாச்சாரத்திலிருந்தும், எண்ண ஓட்டத்திலிருந்தும் வரவில்லை. இது உள்ஞானத்திலிருந்து தோன்றியது. அவனுள் இருந்து வெளிப்பட்டது. அவன் சொன்னதில் ஒரு விஷயத்தைக்கூட உங்களால் இன்று மாற்ற முடியாது, காரணம், அதனை அத்தனை புத்திசாலித்தனமாக, அழகாக அவன் சொல்லி இருக்கிறான். அவன் சொன்னது என்ன எனப் புரிந்துகொள்வதில் உங்கள் ஆயுளையே நீங்கள் செலவு செய்யலாம்.

திரயம்பகா

isha_shiva_info 3rdeye

பொருள்தன்மை அல்லாத ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள நினைத்தால், உள்முகமாய் திரும்புவதுதான் ஒரே வழி. உள்முகமாய் திரும்ப ஒரு கண் இருந்தால், அதனைத்தான் மூன்றாவது கண் என்கிறோம். நெற்றியில் புடைத்துக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பை நாம் மூன்றாவது கண் எனச் சொல்வதில்லை.

வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது. முன்னர், ஈஷா யோக மையத்தின் அறிகுறி – ஒரு வட்டம், அதற்குள் ஒரு முக்கோணம், அதன் நடுவே மற்றொரு வெள்ளை வட்டம். இதுவே ஈஷா யோக மையத்தின் அறிகுறியாய் பல வருடங்கள் இருந்தது. இந்நாட்களில், நம் மக்கள் அதன் பயன்பாட்டை மெல்ல குறைத்துவிட்டனர். புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம், உள்முக பயணத்தை வழங்குகிறது. ஈஷா யோக மையம், மக்களை உள்முக பயணமாய் அழைத்துச் செல்வதால் இந்த அறிகுறியை வைத்திருந்தோம்.

அனைவரது வாழ்விலும் மூன்றாவது கண் – அனுபவ உண்மையாய் ஆவதில்லை, ஒரு சாத்தியமாய் மட்டுமே இருக்கிறது. அது நமக்கு அனுபவப்பூர்வமான உண்மையாக வேண்டுமென்றால், அதை மெல்ல மெல்ல வளர்க்க வேண்டும். அதற்காக பயிற்சிகள் செய்ய வேண்டும். ஈஷா யோக மையத்தில் சம்யமா போன்ற உயர் வகுப்புகளில் பங்கேற்பாளர்கள் 8 மணி நேரம் மிகச் சுலபமாய் கண்மூடி அமர முடிகிறது. மூன்றாவது கண் தூண்டப்படாமல் இது சாத்தியமில்லை.

நாம் சிவன் என அழைப்பது உச்சகட்ட கிரகிப்புத் திறனை. இந்த அர்த்தத்தில்தான் ஈஷா யோக மையம் மஹாசிவராத்திரியை கொண்டாடுகிறது. மக்களின் கிரகிப்புத்திறனை குறைந்தபட்சம் ஒரு துளியாவது உயர்த்த முடியும் என்கிற எண்ணத்தில்தான் இதனை அணுகுகிறோம். இதுவே சிவன், இதுவே யோகா. இது மதமல்ல, உள்நிலையிலான புரட்சி இது.

வெறுமனே கண்விழித்திருக்கும் ஒருநாளாக இல்லாமல் அதிதீவிர விழிப்புணர்வும், உயிரோட்டமும் உங்களுக்குள் ஊற்றெடுக்கும் நாளாக இது அமைந்திட வேண்டும். இயற்கையே வழங்கும் இந்த இணையில்லா வரத்தை நீங்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். ‘ஷிவா’ எனும் சொல்லின் வீரியத்தையும், இணையில்லா தீவிரத்தையும், அழகையும், பேரானந்தத்தையும் நீங்கள் உணர்வீர்களாக!

photocredit: oalsaker @ flickr

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!