logo
logo

112-அடி ஆதியோகி பற்றி நீங்கள் அறியாத 12 விஷயங்கள்

1. கின்னஸ் உலக சாதனை

112-அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை, உலகிலேயே “மிகப் பெரிய மார்பளவு உருவம்”, என்று கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தில் இடம் பெற்ற பெருமையுடையது. முதல் யோகியாகிய ஆதியோகிக்காக உருவாக்கப்பட்ட இந்த உருவச்சின்னம் 150 அடி நீளமும் 25 அடி அகலமும் கொண்டதாக, 500 டன் எஃகு கொண்டு உருவானது.

2. ஆதியோகி திவ்ய தரிசனம்

முப்பரிமாண லேசர் காட்சி மூலம் வானை ஒளிமயமாக்குகிறார் ஆதியோகி. இந்தக் காட்சியில் ஆதியோகி எவ்வாறு மனித குலத்துக்கு யோக அறிவியலை வழங்கினார் என்பது சித்தரிக்கப்படுகிறது. இந்த தரிசனத்தை வார இறுதி நாட்களில் மற்றும் பௌர்ணமி அமாவாசை நாட்களிலும், மற்ற சுபதினங்களிலும் இரவு 8 மணி முதல் 8:15 மணி வரை காணலாம்.

3. ஆதியோகிக்கு வஸ்த்திர அர்ப்பணிப்பு

பக்தர்கள் ஆதியோகியைச் சுற்றிலுமுள்ள 621 திரிசூலங்களில் கருப்புத் துணியைக் கட்டி அவருக்கு வஸ்த்திர அர்ப்பணிப்பு செய்யலாம்.

4. ஆதியோகி பிரதட்சணம்

தியானலிங்கம் மற்றும் ஆதியோகியின் 2 கி.மீ. சுற்றுவட்டப் பாதை ஆதியோகி பிரதட்சணம் ஆகும். ஒருவரின் உச்சபட்ச விடுதலைக்கான முயற்சியைத் தீவிரமாக்கக்கூடிய ஆதியோகியின் அருளை உள்வாங்கும் விதமாக சத்குரு இதை உருவாக்கியுள்ளார். ஒரு குறிப்பிட்ட முத்திரையைப் பிடித்துக்கொண்டு, ஒரு குறிப்பிட்ட மந்திரத்தை உச்சரித்த வண்ணம் செய்யப்படும் இந்த பிரதட்சணம் ஈஷா யோக மையத்தில் உள்ள பல சக்தியூட்டப்பட்ட இடங்களின் சக்தியை கிரகிப்பதற்கான ஒரு வழியாக இருக்கிறது.

5. யோகேஷ்வர லிங்க அர்ப்பணிப்பு

யோகேஷ்வர லிங்கத்தின் சக்திக்கு திறந்த நிலையில் இருப்பதற்காக, பக்தர்கள் லிங்கத்துக்கு தண்ணீர் மற்றும் வேப்பிலைகளை அர்ப்பணித்து வணங்கலாம்.

6. பௌர்ணமி இசைக் கச்சேரி

ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆதியோகி சிலை நள்ளிரவு வரை திறந்திருக்கிறது. இரவு 10:30 மணியில் இருந்து 11:30 மணி வரை சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா குழுவினரால், ஆதியோகிக்கு இசை நிகழ்ச்சி அர்ப்பணிக்கப்படுகிறது.

7. அமாவாசை

ஒவ்வொரு அமாவாசை அன்றும் யோகேஷ்வர லிங்கத்துக்கு, அருகாமையில் உள்ள கிராம மக்களால் பாரம்பரிய முறையிலான அர்ப்பணிப்புகள் வழங்கப்படுகிறது. பிரசாதம் விநியோகித்த பிறகு, பாரம்பரிய இசையும், நடனமும் அர்ப்பணிக்கப்படுகிறது. குடும்பத்தோடு கலந்துகொள்ள வேண்டிய அரிய நிகழ்ச்சி இது.

8. சத்குருவின் நோக்கம்

இன்றைக்குக் காட்சியளிக்கும் ஆதியோகியின் முகத்தை வடிவமைப்பதற்கு, இரண்டரை வருடங்களும், டஜன் கணக்கில் மீண்டும் மீண்டும் வடிவமைப்பில் திருத்தமும் செய்யத் தேவைப்பட்டது. ஆதியோகியின் முகம் எவ்வாறு வடிவமைக்கப்பட வேண்டும் என்பதைக் குறித்து சத்குருவின் மனதில் ஒரு நோக்கம் இருந்தது. அந்த நோக்கத்திற்குச் சற்றும் குறைவான வேறு எதற்கும் சத்குரு சம்மதிக்கவில்லை. இப்பொழுது, நம் கண் முன்னே என்ன ஒரு பிரமிக்கவைக்கும் விளைவு!

9. ஆதியோகியின் விலைமதிப்பற்ற உடைமைகள்

யோகேஷ்வர லிங்கத்தைச் சுற்றிலும் செம்பினாலான ஓடுகளைக் கொண்டு தரை அமைக்கப்பட்டுள்ளது. அந்த ஓடுகளில் அழகிய நுணுக்கமான சிற்ப வேலைப்பாடுகள் மூலம் யோகக் கலாச்சாரத்தில் விவரிக்கப்படும் ஆதியோகியின் விலைமதிப்பற்ற உடைமைகள் செதுக்கப்பட்டுள்ளன. காதணிகள், அவரது சடாமுடியினை அலங்கரிக்கும் மெல்லிய பிறை நிலவு, ருத்ராட்ச மணி, ஒரு வேப்பிலை, உடுக்கை, எருது, கோடாரி மற்றும் கண்டாமணி என்று அவரது உடைமைகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.

10. “பன்மொழி” லிங்கம்

யோகேஷ்வர லிங்கத்தைக் கூர்ந்து நோக்கினால் “சம்போ” என்னும் உச்சாடனை தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு தென்னிந்திய மொழிகளில் பொறிக்கப்பட்டிருப்பதை அறியலாம்.

11. சப்தரிஷி சிற்பங்கள்

யோகேஷ்வர லிங்கத்தைப் பற்றிய ஒரு குறிப்பிடத்தக்க அம்சம், அங்கு கருப்புநிற கற்சுவரில் அமைந்துள்ள சப்தரிஷிகளின் சிற்பங்கள் ஆகும். இவை சத்குருவால் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்தப் புனிதமான கற்சுவரை எவரும் தங்களின் கரங்களால் தொடுவதில்லை – அதைச் சுத்தம் செய்பவர்களால்கூட தொடப்படுவதில்லை.

12. ருத்ராட்ச மணி அர்ப்பணிப்பு

ஆதியோகியின் கழுத்தில், 1,00,008 ருத்ராட்ச மணிகள் கொண்ட, உலகிலேயே மிக நீளமான ருத்ராட்ச மாலை அணிவிக்கப்பட்டுள்ளது. ஆதியோகியின் தெய்வீக சக்தியை பன்னிரண்டு மாதங்களுக்கு ருத்ராட்சங்கள் உள்வாங்குகின்றன. ஒவ்வொரு மஹாசிவராத்திரி நன்னாள் இரவிலும் அந்த ருத்ராட்ச மணிகள் பக்தர்களுக்குப் பிரசாதமாக வழங்கப்படுகின்றன.

மஹாசிவராத்திரியின்போது, சத்குரு வழங்கும் நல்வாழ்வுக்கான சக்தியையும், சாத்தியங்களையும் பெற்றுக்கொள்வது என்பது கிடைத்தற்கரிய ஒன்று. ஒரு மனிதரது ஆன்மீக வளர்ச்சிக்கும், நல்வாழ்வுக்கும் இயற்கையின் ஆற்றலை உபயோகித்துக்கொள்வதற்கு ஒரு தனித்துவமான வாய்ப்பினை மஹாசிவராத்திரி வழங்குகிறது. ஈஷா யோக மையத்தில் ஆதியோகியின் முன்னிலையில் இரவு முழுவதும் நீடிக்கும் உற்சாகமான கொண்டாட்டமானது, ஒரு தீவிரமான ஆன்மீக அனுபவம் வெளிப்படுவதற்கான உயரிய சூழலாக இருக்கிறது.

We hope to see you there!

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

சிவ அஷ்டகம்