logo
logo
தமிழ்
தமிழ்

ஆதியோகியை அறிந்துகொள்ள முயல்பவர்களுக்கு... ஓர் அறிமுகம்!

பொதுவாக ஒருவரை அறிமுகம் செய்கையில் ‘இவர் சாது, இவர் கோபக்காரர், இவர் நல்லவர், கெட்டவர்!’ என குணாதிசியங்கள் மற்றும் நடவடிக்கைகளைப் பொறுத்து அவரை வரையறுத்து கூறுவர்! ஆனால் ஆதியோகி சிவனோ வரையறைக்குள் அடங்காதவர் என்பதை உணர்த்தும் சில பதிவுகளைத் தாங்கிபடி இந்தக் கட்டுரை அமைகிறது!

பாரம்பரியமும் பரம்பரையும் இன்றி; காரணமின்றி காரியமின்றி இங்கு வந்தவன். புதினங்கள், புராணங்கள் யாவிலும் அவன் பெயரே. தோன்றிய காலம் தெரியாமல், தோற்றமும் புரியாமல் ஆனால் தொன்று தொட்டு தொழுதது இவனையே.

நாகரிகத்திற்கும் நியமங்களுக்கும் மதங்களுக்கும் முதலானவன், முதன்மையானவன். இயற்கையின் வரையறைகளையும் அகச்சிறைகளையும் தகர்த்தவன். படைத்தவன், படைப்பவன்.

ஆதியானவன், அந்தமானவன். கடவுள் என்பார்கள், மஹாதேவன் அவன்.

நரதோல்களும் நாகங்களும் நிலவும் அவனது ஆடை ஆபரணங்கள். சாம்பலோ அவனது வாசனை திரவியங்கள். கடவுள் என்றால் இப்படியோ, கடவுள்களில் இவன் மட்டுமே இப்படி.

மலைவாசமும் கடும் தியானமும், ஆனந்த பரவசமும், ருத்ர தாண்டவமும் அவன் வழக்கங்கள். தேவரும் அசுரரும், உயிர்களும், ஜடங்களும் - இவர்களுடன் அவன் பழக்கங்கள். உமையவள் அவனது சரிபாகம், வேற்றுலக கணங்களுடன் நெருங்கிய சகவாசம்.

உலகிற்கு அவனளித்தது யோக விஞ்ஞானம். ஆதியோகியும் ஆதிகுருவும் ஆனவன். பல பெயர்கள் அவன் கூற்றுக்கு. சிவன் என்ற ஒற்றைச்சொல் போதும் அவன் பதத்திற்கு. காலத்தால் அழியாக் காலமவன். அழிப்பவன், அறியாமைக்கு அவன் சிவன்.

இப்படிப்பட்டவரை கண்டபின், அவரை மறுக்க இயலாமல் ஆயினர் சிலர், மறக்க முடியாமல் இருந்தனர் சிலர்.

மனித வடிவத்தை பயன்படுத்தும் விதத்தில் இவர் தேர்ந்திருந்தார். வெவ்வேறு வடிவத்தில் அவ்வப்போது தன்னை வெளிப்படுத்திக் கொண்டார். இதனால், அவரை சுயம்பு என்றழைக்கிறோம். பெரும்பாலும், சுந்தர வடிவில் மிகச்சிறந்த கட்டமைப்பான உடலுடன் அவர் தோன்றினார். இதுவரை யாரும் கண்டிராத இந்த மனிதர், மாதக்கணக்கில் அசைவில்லாமல் அமர்ந்திருப்பார்.

அவரிருக்கும் நிலையைக் கண்டு அதிசயித்து, மறுக்க முடியாமல் அவன்பால் ஈர்க்கப்பட்டனர் சப்தரிஷிகள். அந்நிலையினை அடைய ஆர்வங்கொண்டார்கள். அவரை அணுகி விண்ணப்பித்தனர். சில தயார்நிலை பயிற்சிகளை இடைவிடாது செய்துவந்தனர்.

84 வருடங்களுக்குப் பின், ஆதியோகி ஆதிகுருவாக, அவர்களுக்கு ஞானம் பரிமாறினார். மனித உடலிலுள்ள ஏழு பரிமாணங்களை அடிப்படையாகக் கொண்டு, அவர்களுக்கு ஏழு விதங்களில் யோக விஞ்ஞானத்தைக் கற்றுத் தந்தார். வார்த்தைகளால் அல்ல, நேரடி பரிமாற்றமாய்.

மனித அமைப்பைப் பற்றிய எதையும் அவர் விட்டு வைக்கவில்லை. அனைத்து நுணுக்கங்களைக் கொண்டு, பரிபூரணமாக இந்த விஞ்ஞானம் அவர்களுக்குக் கற்றுத் தரப்பட்டது. இதற்கு ஒரு சூரிய மண்டல சுழற்சியான பன்னிரெண்டே கால் வருட நேரம் ஆனது. பின் சப்தரிஷிகள் மூலம், இந்த யோக விஞ்ஞானம் உலகின் பல இடங்களுக்கு சென்றது. ஒரு மனிதன் விரும்பினால், தன் உடல், மனம், உணர்வு போன்ற இயற்கை அவனுக்கு விதித்த கட்டுப்பாடுகளை கடந்து வாழமுடியும் என்பதை ஆதியோகி வழங்கிய யோகவிஞ்ஞானம் எடுத்துக் காட்டுவதோடு, அதற்கு கருவியாகவும் விளங்குகிறது.

ஆதியோகியின் இந்த பங்களிப்பு மனித பரிமாணத்திலும், விழிப்புணர்விலும் ஒரு மிகப்பெரிய தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தியது. மனித பரிணாம வளர்ச்சியில் இது மிகப்பெரிய மைல் கல். இது இல்லை என்றால், நமக்கும் புழுப்பூச்சிகளுக்கும் வித்தியாசம், உருவத்தில் மட்டுமே இருந்திருக்கும்!

அவனை மறக்க முடியாமல், சதியாகவும் பின் பார்வதியாகவும் பிறந்து, அவன் நினைவுடனேயே வாழ்ந்து, கடும்தவம் பல புரிந்து, அவனை மணம் புரிந்தாள்.

பார்வதி ஆதியோகியின் முதல் சீடர். அவளுக்கு மிக இணக்கமான விதத்தில், தன்னுடைய பாகமாகவே இணைத்து தன் ஞானத்தைப் பரிமாறினார். எந்த நிலையிலும் எவ்வித தடையின்றி இருந்ததால் எளிதாக இவ்வாறு அவளுக்கு நிகழ்ந்தது.

சதியை மணந்த உடன், மணவாழ்க்கையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார். அவர்களுக்கிடையே மலர்ந்த காதல், மனித வரலாற்றிலேயே மிகவும் நெருக்கமானதாகவும், தீவிரத்துடனும் விளங்கியது. சமூக சூழ்நிலைக் காரணமாக, தன் தந்தை சிவனைப் பற்றி அவதூறான வார்த்தைகளைக் கூறியதால், அதனை தாங்க முடியாமல், யாக நெருப்பில் விழுந்து தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். பாதி எறிந்த சதியின் உடலை தூக்கிக்கொண்டு அதைப் புதைக்கவும் மனமில்லாமல், எரிக்கவும் மனமில்லாமல், தீராத துன்பத்தில் அவள் சடலத்தை அப்படியே தூக்கிக் கொண்டு, பித்தனாக எங்கும் சுற்றித் திரிந்தான்.

அன்பென்றால் அவனே உச்சக்கட்டம்! கோபமென்றால், அவனைப் போல் யாரும் இல்லை. கண்மூடித்தனமான, பாகுபாடற்ற கருணை. மிகத்தேர்ந்த ஆசான், ஆதிகுருவானவன். இப்படி என்னவெல்லாம் நாம் நினைக்க முடியுமோ அவ்வனைத்திலும் உச்சம் என்றால், தீவிரம் என்றால், அது அவனே. அவனே முழு தீவிரம்!

அவனை மறுத்தாலும், மறைத்தாலும், மறந்தாலும் அவன் என்றும் விடுவதில்லை, இவர்களை. இவர்களும் அவனை விட்டுக்கொடுக்கவே மாட்டார்கள். இவர்கள் சிவனின் பக்தர்கள். பக்தர் என்ற வார்த்தைக் குறைவே இவர்களைக் குறிக்க!

சிவனுக்கு எப்படி வரையறைகளும், விதிகளும் இல்லையோ, அப்படித்தான் இவர்களுக்கும். அவர்களின் பக்தியின் வெளிப்பாடுகளோ பல விதங்கள், பல ரகங்கள். நம் காரண அறிவினால் கட்டிப்போட இயலாது இவர்களின் தன்மையை.

பக்தர்கள் என்றால் பூஜை செய்பவரையும், வழிபடுபவரையும்தான் அவ்வாறு ஏற்றுக் கொள்வோம். இவர்களிலோ, ஒருவர் கல்லெறிந்தார், கண் கொடுத்தார், திருடினார், கோவில் கட்டினார், கொலை செய்தார், தன் உயிரையே மாய்த்துக் கொண்டார், அரசராக இருந்தார், அசுரராக இருந்தார். இவர்களின் ஒவ்வொரு இதயத் துடிப்பும் சிவனாக இருந்தது. சிவன் அவர்களின் உயிர்மூச்சு.

இன்னும் பெயர் தெரியாத பல அன்பர்களுக்கு தாயுமானவனாக, தந்தையாக, அண்ணனாக, தம்பியாக, காதலனாக, கணவனாக, குருவாக இணை பிரியாது உடனிருந்தான். அவர்களுக்கு சிவன் என்றால் கோயிலிலும், மலைகளிலும் இருப்பவன் அல்ல. அவன் அவர்களின் ஒரு பாகமாகவே விளங்கினான்.

அவன் இவ்வுலகிற்கு வந்ததிலிருந்து அவனுடனேயே இருப்பவர்கள் பூதகணங்கள். அவர்கள் அவனுடைய வேற்றுலக நண்பர்கள். அவனுக்கு எப்போதும் மிக நெருக்கமாக இருப்பவர்கள் அவர்களே. அவர்கள் அவனிடம் எங்களுக்கு ஞானம் வேண்டும் என்று கேட்டபோது, அதெல்லாம் உங்களுக்கு தேவையில்லை, என்னுடனே குடித்துவிட்டு ஆடிப் பாடி இருங்கள் போதும், என்றான்.

இப்படி வாழ்வின் அனைத்து பரிமாணங்களாகவும் அவன், அவற்றை உணர்த்தும் பாத்திரங்களாக அவனது வாழ்வு. நீங்கள் அவனை எப்படிப் பார்த்தாலும், எத்தனை விதத்தில் பார்த்தாலும், எத்தனை முறைப் பார்த்தாலும், அதைவிட சற்று அதிகமாகவே, புதிராகவே அவன் என்றும் தோன்றுவான். அவன் இன்னும் வாழ்ந்துக் கொண்டிருப்பவனா? வாசகர்களுக்கு... நீங்கள் உயிரோடு இருக்கிறீர்களா? என்பது போன்றது, இந்த கேள்வி! அவனது வாழ்க்கை ஒரு வரலாறு அல்ல; அது தொடரும் நிகழ்வுகள்; எவ்வளவு காலமோ? யார் விடை கூறுவது!

    Share

Get latest blogs on Shiva

Related Content

எதற்காக இவற்றை அணிகிறான் சிவன்?