logo
logo

சிவனின் நீல நிறத் தொண்டை

ஆதியோகியான சிவன் பல பெயர்களால் அழைக்கப்படுகிறார். அதில் நீலகண்டன் அல்லது நீல நிறத் தொண்டை கொண்டவர் என்பதும் உண்டு. சிவனின் நீல நிறத் தொண்டைக்குப் பின்னால் உள்ள குறியீடை சத்குரு இங்கு விளக்குகிறார்.

கேள்வி: சிவனின் நீல நிறக் கழுத்திற்கான குறியீடு என்ன?

சத்குரு: யோகப் புராணத்தில் ஒரு கதை இருக்கிறது. தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே தொடர்ந்து மோதல் இருந்து வந்தது. மீண்டும் மீண்டும் மோதல்கள் ஏற்பட்டு பலர் கொல்லப்பட்டபோது, ​​அவர்கள் இருவருமே இணைந்து சமுத்திரத்தில் மறைத்து வைக்கபட்டுள்ள அமிர்தத்தை வெளியே கொண்டு வந்து, இருவரும் பகிர்ந்து கொண்டால் பிறகு அழிவில்லாதவர்களாகி மகிழ்ச்சியாக சண்டையிட முடியும் என்று முடிவு செய்தனர். போர் ஒரு பயங்கரமான வணிகம், ஏனென்றால் அது அதிகமான மரணங்களை ஏற்படுத்துகிறது. மரணம் மட்டும் சரியாக கையாளப்பட்டால், பிறகு போர் என்பது ஒரு அற்புதமான விஷயம்.

அவர்கள் ஒரு ஒப்பந்தத்தில் இணைந்து சமுத்திரத்தைக் கடைய முடிவு செய்தனர். அவர்கள் மேரு என்ற ஒரு குறிப்பிட்ட சிகரத்தை வெளியே இழுத்து, ஒரு பெரிய பாம்பைக் கயிறாகப் பயன்படுத்தி அதைக் கடைந்தார்கள் என்று புராணம் கூறுகிறது. ஆரம்பத்தில், அவர்கள் கடையத் தொடங்கியபோது, ​​அம்ருதம் அல்லது வாழ்க்கையின் அமுதத்திற்குப் பதிலாக, சமுத்திரத்தின் அடிப்பகுதியில் இருந்து ஒரு கொடிய விஷம் வெளியேறியது. இது ஹலாஹல் என்று அழைக்கப்பட்டது. இந்த கொடிய விஷம் பெரிய அளவில் வந்தது. எல்லா கடவுள்களும் பயந்தார்கள், இந்த அளவுக்கு விஷம் வெளியேறினால், அது உலகம் முழுவதையும் அழித்துவிடும். மேலும் இதைக் கையாளக்கூடியவர்கள் யாருமே இல்லை.

வழக்கம் போல், இதைப் பற்றி யாரும் எதுவும் செய்யத் தயாராக இல்லாதபோது, ​​சிவன்தான் இதற்கு சரியான தீர்வு என்று அவர்கள் நினைத்தார்கள். அவர்கள் சிவனை வரச் சொல்லி, மகத்தான அளவில் வெளியேறும் விஷத்தைக் காட்டி "இது பரவினால், உயிரை அழித்துவிடும். நீங்கள் ஏதாவது செய்ய வேண்டும்" என்றார்கள். வழக்கம் போல், தனது சொந்த நலனில் எந்த கவலையும் இல்லாமல், அவர் வெறுமனே விஷத்தை குடித்தார். அவருடைய மனைவி பார்வதி இதைப் பார்த்தாள், அவள் போய் அவரின் கழுத்தை (தொண்டையைப்) பிடித்துக் கொண்டாள், எனவே அந்த விஷம் அவரது தொண்டையிலேயே நின்று அவரது கழுத்து முழுவதும் நீல நிறமாக மாறியது.

பாரபட்சம் என்னும் விஷம் மற்றும் சிவனின் நீலக் கழுத்து அடையாளம்


இது மிகவும் குறிப்பிடத்தக்க கதை. ஒவ்வொரு மனிதனுக்கும் இது உண்மை. ஒவ்வொரு மனிதனையும் நீங்கள் ஆழமாக துளைத்து பார்த்தால், ஒரே ஒரு விஷயம் தான் இருக்கும், அது எப்போதும் விரிவடைந்துகொண்டே செல்லும் வாழ்க்கை. அவர்கள் அதனுடன் தங்களை அடையாளப் படுத்திக்கொண்டால், அவர்களின் மனமும் உணர்ச்சிகளும் கூட அப்படியேதான் செயல்படும். நீங்கள் அவற்றை மேல்மட்டத்தில் தொட்டால், இது ஒரு பெண், இது ஒரு ஆண், இது ஒரு அமெரிக்கன், இது ஒரு இந்தியன் அப்படி போய்க் கொண்டே இருக்கும். இந்த பாரபட்சம் என்பது ஒரு விஷம். அவர்கள் மேற்பரப்பில் கடைந்த போது, ​​உலகின் விஷம் வெளியே வந்தது. விஷத்தை யாரும் தொட விரும்பாததால் அனைவரும் விஷத்தை கண்டு ஓடிவிட்டனர். சிவன் உலகின் விஷத்தை குடித்தார், அது அவரது தொண்டையில் நின்றது. அது உள்ளே சென்றிருந்தால், அவர் விஷமாகியிருப்பார். ஆனால் அது அவர் தொண்டையில் நின்றுவிட்டது, அதனால் அவர் அதை எப்போது வேண்டுமானாலும் உமிழ்ந்து கொள்ளலாம் என்னும் நிலையில் இருந்தது. அது உங்கள் தொண்டையில் இருந்தால், அதை உமிழ்ந்து விடலாம். அது உங்கள் உடலில் நுழைந்தால், பிறகு அதை வெளியே எடுக்க முடியாது. இப்போது, உங்கள் தேசம், பாலினம், குடும்பம், மரபணு அடையாளங்கள், இன அடையாளங்கள், மதம் ஆகியவை உங்கள் தொண்டையில் நிற்கவில்லை. அவை உங்கள் உடலில் உள்ள ஒவ்வொரு செல்களுக்கும் சென்றுவிட்டன. விஷயம் என்னவென்றால், அதையெல்லாம் மேலே வரும்படி செய்ய வேண்டும், அப்படி அவையெல்லாம் மேலெழுந்து வரும் போது பிறகு நீங்கள் அதை உமிழ்ந்துவிட்டு இங்கே உயிரின் ஒரு பகுதியாக வாழலாம்.

இதுதான் சிவனின் நீலக் கழுத்திற்கான குறியீடாகும். அவர் இந்த உலகின் விஷங்களை தனது தொண்டையில் வைத்துக் கொண்டார். அதை வெளியே எடுக்க நேரும்போது அதை உமிழ்வதற்கு தயாராக இருந்தார். அது அவரது உடலுக்குள் சென்றிருந்தால், அதை வெளியே எடுக்க வழியேயில்லை. ஒரு விதத்தில் முழுமையான ஆன்மீக செயல்முறையுமே இப்படி கடைந்து வெளியில் எடுப்பதுதான். அப்போதுதான் உங்கள் பாரபட்சம் அனைத்தும் மேலெழுந்து வந்துவிடும். பிறகு ஒரு நாள் நாம் உங்களை அதை உமிழ்ந்து விடும்படி செய்வோம். அது ஆழத்தில் இருந்தால், அதை எப்படி வெளியே எடுப்பது? உங்கள் பாரபட்சங்களில் ஒன்றை நான் வெளியே எடுக்க முயற்சித்தால், உங்கள் அனுபவத்தில், உங்களது உயிரையே வெளியே எடுப்பது போல் உணர்வீர்கள். உங்கள் பாலினம், குழந்தைகள், பெற்றோர்கள் அல்லது தேசத்துடன் கூடிய உங்களது அடையாளங்களை நான் எடுக்க முயற்சித்தால், உங்கள் உயிர் வெளியேற்றப்படுவது போல் உணர்வீர்கள். இல்லை, பாரபட்சம் என்னும் விஷம் மட்டுமே வெளியே எடுக்கப்படுகிறது. எனவே பாரபட்சம் என்னும் விஷத்தை உமிழ வேண்டிய நேரம் இது.

ஆசிரியரின் குறிப்பு: சிவனின் பல்வேறு வடிவங்களால் திகைத்து நிற்கிறீர்களா? சிவனின் பல்வேறு வடிவங்கள் மற்றும் அவை எதைக் குறிக்கின்றன என்பதைப் பற்றி படிக்க இங்கே கிளிக் செய்யவும்.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

கூப்பிட்டால் ஓடிவரும் தொண்டனும் சிவனே!