logo
logo
Adiyogi

சக்திவாய்ந்த சிவன் மந்திரம் & மந்திரத்தின் சக்தி

மந்திரம் எப்படி ஒரு சாவிபோல் செயல்பட்டு, வாழ்வின் புது பரிமாணங்களைத் திறக்கிறது என்பதையும், சக்திவாய்ந்த சிவன் மந்திரம் உச்சரிப்பதால் நடக்கும் மாற்றத்தை ஒரு ஞானயோகி உணர்ந்த கதையையும் சத்குரு விளக்குகிறார்.

சத்குரு:

மந்திரத்தின் சக்தி

ஒட்டுமொத்த பிரபஞ்சமும் சக்திகளின் அதிர்வுதான் என்பதை எந்த சந்தேகத்துக்கும் இடமின்றி இன்றைய நவீன விஞ்ஞானம் உங்களுக்கு நிரூபிக்கின்றது. எங்கே ஒரு அதிர்வு உள்ளதோ அங்கே நிச்சயம் ஒரு ஒலி உள்ளது. ஆகவே, பிரபஞ்சம் முழுவதும் வெறும் ஒலிதான் என்று நாம் யோகமரபில் கூறுகிறோம், இது நாதப் பிரம்மம் என்றழைக்கப்படுகிறது. ஒட்டுமொத்த படைப்பும் எண்ணற்ற பல ஒலிகளின் கலவையாகத்தான் உள்ளது. ஒலிகளால் நெய்யப்பட்ட முடிவற்ற வலைப்பின்னல்களுள், ஒரு சில ஒலிகள் மட்டும் திறவுகோல்களாக இருக்கின்றன. இந்த முக்கியமான ஒலிகள் மந்திரங்கள் என்று குறிப்பிடப்படுகின்றன.

இந்த மந்திரங்கள் சாவி போல் செயல்படக்கூடியவை. உதாரணமாக, நீங்கள் ஒரு அறைக்குள் வைத்துப் பூட்டப்பட்ட நிலையில், உங்களது வாழ்க்கை முழுவதும் இந்த அறையிலேயே வாழ்ந்திருக்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு ஒரு சாவி கிடைத்தால், சாவித்துவாரத்தைக் கண்டுபிடித்து சாவியைப் பொருத்தித் திருகினால், இது உங்களுக்காக முற்றிலும் புதிய ஒரு உலகத்தைத் திறக்கும். அதை எங்கே பொருத்துவது என்பதை நீங்கள் அறிந்திருக்கவில்லை என்றால், சாவியை தரையிலோ அல்லது உத்தரத்திலோ நீங்கள் பொருத்தினால், அது உங்களை எங்கும் கொண்டு சேர்க்காது. ஒரு சாவி என்பது மிகவும் சிறிய ஒரு உலோகம்தான், ஆனால் அதை எங்கே பொருத்தி, எப்படித் திருகுவது என்பதை நீங்கள் அறிந்தால், படைப்பின் முற்றிலும் வித்தியாசமான ஒரு பரிமாணத்தை அது உங்களுக்காகத் திறந்துவிட முடியும்.

ஆகவே இந்த தெய்வீகத்தை அறிந்துகொள்ளவும் உணர்ந்துகொள்ளவும் வேண்டுமென்றால், நமது சக்திகள் உயர்நிலை சாத்தியங்களுக்கு முன்னேறவேண்டும், அதாவது நமக்குள் சூட்சுமமான பரிமாணங்களுக்கு நமது சக்திகளை நகர்த்த வேண்டும். மகாசிவராத்திரியின்போது, பூமியின் வடக்கு அரைக்கோளத்தில், மிக தனித்துவமான ஒரு செயல்முறை இயற்கையாகவே நிகழ்கிறது. ஒவ்வொரு மனித உடலிலும் சக்திகள் இயல்பாகவே மேல்நோக்கி உந்தப்படுவதை ஒருவர் உணரமுடியும். சக்தியின் இந்த இயல்பான மேல்நோக்கிய உந்துதலைப் பயன்படுத்திக்கொள்வதற்கு, ஒருவர் தன் முதுகுத்தண்டை நேராக வைத்திருக்கவேண்டும்.

உயிரியலாளர்கள் எப்போதும் குறிப்பிடுவதுபோல, விலங்கினத்தின் முதுகெலும்பானது கிடைமட்டத்திலிருந்து செங்குத்து நிலைக்கு நகர்ந்தது பரிணாம வளர்ச்சி செயல்முறையின் ஒரு மிகப்பெரிய படிநிலை. உங்களது புத்திசாலித்தனம் மலர்ச்சி அடைந்தது அதற்குப் பிறகுதான். ஆகவே, மகாசிவராத்திரி இரவில் ஒருவர் தனது முதுகெலும்பை நேராக வைத்திருக்க விருப்பத்துடன் இருந்தால், உங்களை விழிப்புடன் வைத்திருக்க எங்களால் செய்யமுடிந்த எல்லாவற்றையும் நாங்கள் செய்வோம். சக்திகளின் இந்த இயல்பான மேல்நோக்கிய உந்துதலைப் பயன்படுத்திக்கொள்வதன் வாயிலாக, சரியான மந்திர உட்சாடணைகள், தியானம் மற்றும் ஒட்டுமொத்த சூழலுடன், ஒருவர் தெய்வீகத்திற்கு நெருக்கமாகச் செல்ல முடியும்.

சக்திவாய்ந்த சிவன் மந்திரம்

மனதில் காரண அறிவு மேலோங்கியிருக்கும் மக்கள், வெறும் மந்திரம் உச்சரிப்பதால் என்ன நிகழ்ந்துவிடப் போகிறது என்றுதான் இயல்பாகவே யோசிப்பார்கள். யோகமரபில் அற்புதமான கதை ஒன்று உண்டு. மகத்தான பல சாதனைகள் படைத்திருந்த ஒரு யோகி, ஒருநாள் சிவனிடம் சென்று, “தங்கள் பக்தர்கள் அனைவரும் ஏன் இந்த மந்திரங்களை எப்போதும் உரக்க உச்சரித்துக்கொண்டே இருக்கிறார்கள்? அவர்கள் என்னதான் செய்கிறார்கள்? இந்த முட்டாள்தனத்தை நிறுத்துமாறு தாங்கள் சொல்லமாட்டீர்களா?”, என்று வினவினார்.

சிவன் அவரைப் பார்த்து, “நீங்கள் ஒன்று செய்யுங்கள்”, என்றபடி அங்கே மண்ணில் ஊர்ந்து சென்றுகொண்டிருந்த ஒரு புழுவைச் சுட்டிக்காட்டி, “இந்தப் புழுவுக்கு அருகில் சென்று, ‘ஷிவ ஷம்போ’ என்ற மந்திரத்தை உச்சரியுங்கள். என்ன நிகழ்கிறது என்று பார்க்கலாம்”, என்றார். அந்த ஞானயோகியும் அலட்சியத்துடனும் அவநம்பிக்கையுடனும் சம்மதித்தார். பிறகு அந்தப் புழுவை நெருங்கி, “ஷிவ ஷம்போ”, என்று கூறினார். புழு அப்படியே இறந்துவிழுந்தது. “இது என்ன? ஒரு மந்திரத்தைக் கூறுவதாலேயே புழு இறந்து போவதா?”, என்று யோகி அதிர்ச்சியடைந்தார். பிறகு புன்னகையுடன் சிவன் அங்கே சிறகடித்துப் பறந்துகொண்டிருந்த ஒரு பட்டாம்பூச்சியைச் சுட்டிக்காட்டி, “அந்த பட்டாம்பூச்சிமீது கவனம்குவித்து ‘ஷிவ ஷம்போ’ என்று கூறுங்கள்”, என்றார். ஞானயோகியோ, “இல்லை, நான் பட்டாம்பூச்சியைக் கொல்ல விரும்பவில்லை”, என்று மறுத்தார். “சொல்லிப்பாருங்கள்”, என்ற சிவனின் வார்த்தைக்குப் பணிந்து, ஞானயோகி பட்டாம்பூச்சியைப் பார்த்து, “ஷிவ ஷம்போ”, என்றார். பட்டாம்பூச்சி இறந்து விழுந்தது. பேரதிர்ச்சி அடைந்தார் ஞானயோகி. “மந்திரத்தின் விளைவு இதுதான் என்றால், இதை உச்சரிக்க எதற்காக விரும்புகிறார்கள்?!” புன்னகை மாறாத சிவன், அந்தக்காட்டில் துள்ளிக்குதித்து விளையாடிக்கொண்டிருந்த ஒரு அழகான மானைக் கண்டார். மானைக் காட்டி, “மானின் மீது கவனம் குவித்து, ‘ஷிவ ஷம்போ’ என்று கூறுங்கள்”, என்றார். “இல்லை, நான் மானையும் கொல்ல விரும்பவில்லை”, என்று ஞானயோகி மறுத்தார். சிவன், “பரவாயில்லை, கூறுங்கள்”, என்றார். ஞானயோகியும், ‘ஷிவ ஷம்போ’ என்று கூற, மான் இறந்து விழுந்தது – இதைக் கண்ட யோகி மிகவும் கலக்கமடைந்தார். “இந்த மந்திரத்தின் நோக்கம்தான் என்ன? இது எல்லாவற்றையும் கொல்ல மட்டுமே செய்கிறது.”

அந்த நேரத்தில், ஒரு தாய் சற்றுமுன் பிறந்த தனது பச்சிழம் குழந்தையுடன் சிவனின் ஆசிகளை நாடி வந்தார். சிவன் ஞானயோகியைப் பார்த்து, “இந்தக் குழந்தைக்கும் மந்திரத்தை உச்சரியுங்களேன்?”, என்றார். ஞானயோகி, “இல்லை, அப்படியெல்லாம் நான் செய்ய விரும்பவில்லை. இக்குழந்தையை நான் கொல்ல விரும்பவில்லை”, என்றார். சிவன் “சொல்லித்தான் பாருங்களேன்”, என்று தூண்டினார். ஞானயோகியும் குழந்தையை மிகுந்த அச்சத்துடன் நெருங்கி, “ஷிவ ஷம்போ”, எனக்கூற, அக்கணமே எழுந்து அமர்ந்த குழந்தை, “நான் ஒரு சாதாரண புழுவாக இருந்தேன், ஒரே மந்திரத்தால் நீங்கள் என்னை பட்டாம்பூச்சியாக உருமாற்றினீர்கள். இன்னொரு மந்திரத்தினால், நீங்கள் என்னை ஒரு மானாக்கினீர்கள். மேலும் ஒரு மந்திரத்தால், நீங்கள் என்னை ஒரு மனிதராக்கிவிட்டீர்கள். இன்னும் ஒரே ஒரு முறை உச்சரியுங்கள், நான் தெய்வீகத்தை அடைய விரும்புகிறேன்.” என்றது.

– சத்குருவின் உரையிலிருந்து, மஹாசிவராத்திரி 2010

குறிப்பு: சிவன் பாடல்கள் மற்றும் சிவன் மந்திரங்களை கேட்க, டவுன்லோட் செய்ய இந்த இணையப் பக்கத்திற்கு செல்லவும்.

    Share

Related Tags

ஆதியோகி

Get latest blogs on Shiva

Related Content

சிவன் மிகச் சிறந்தவர் என்பதற்கான 5 காரணங்கள்