logo
logo

சிவனும், சக்தியும்: 54 சக்தி பீடங்கள் எவ்விதம் தோன்றின?

சிவனை, சதியின் தந்தை அவமதித்ததற்குப் பிறகு சதி எப்படி தன்னையே எரித்துக்கொண்டாள் என்றும், அதனால் மனம் தளர்ந்த சிவன் சதியின் அழுகிய நிலையிலான உடலை எப்படி சுமந்து சென்றார் என்ற கதையைக் குறித்தும் சத்குரு விவரிக்கிறார். பல இடங்களிலும் சதியின் இறந்த உடல் பாகங்கள் விழுந்து, 54 சக்தி பீடங்களின் பிறப்புக்குக் காரணமாக இருந்தன.

சத்குரு: சிவன் அழிப்பவர் என்று நாம் கூறும்போது, அது உலகத்தை அழிப்பதைப் பற்றி அல்ல, அது உங்களுடைய உலகத்தை அழிப்பதைப் பற்றியது. உங்களது உலகம் என்பது முக்கியமாக, அது கடந்தகால அனுபவங்கள் மற்றும் பதிவுகளின் தொகுப்பாக இருக்கிறது. உங்கள் உலகம் கடந்தகாலத்தினால் உருவாக்கப்படுவது. கடந்தகாலம் என்பது இறந்துபோன ஒன்று. அது ஒரு மாயையாக மட்டுமே இருக்கும் நிலையில், உங்கள் எண்ணப்போக்கின் காரணமாக நிகழ்காலத்துக்குள் படர்ந்து கொண்டிருப்பதுடன், உங்கள் ஆசைகளின் வாயிலாக எதிர்காலத்துக்குள்ளும் வளர்ந்து நீள்கிறது.

எண்ணம் இல்லாதிருந்தால், நிகழ்காலத்தில் கடந்தகாலம் என்பதே இருக்காது. எண்ணம் ஒரு மாயை மற்றும் ஆசை இரட்டிப்பு மாயை, ஏனென்றால் ஆசையானது எதிர்காலத்துக்குள் இடைவிடாமல் தன்னை நீட்டித்துக்கொண்டே இருக்கிறது. கடந்தகாலத்தில் நீங்கள் அறிந்திருந்தது என்னவாக இருந்தாலும், அதைக் காட்டிலும் மேலானது என்று நீங்கள் நினைக்கும் ஏதோ ஒன்றுக்காக நீங்கள் ஆசைப்படுகிறீர்கள். படைப்பின் மேன்மையை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், இங்கே இருக்கும் தற்போதைய நிகழ்கணத்தின் மூலமாக மட்டுமே அது சாத்தியம். இது ஒன்றுதான் அதற்கான வாயிலாக இருக்கிறது. மாறாக, கடந்தகாலத்தை உள்ளே கொண்டுவந்தால், நீங்கள் மாயத் தோற்றங்களைக் காண்கிறீர்கள். இல்லாததைப் பயன்படுத்தி, எதிர்காலத்தின் மற்றொரு மாயையை நீங்கள் உருவாக்கினால், உங்களுடைய வாழ்வின் அனுபவத்தில் நிதர்சனம் முற்றிலுமாக அழிந்துவிடும் அளவுக்கு, இப்போது மாயை அவ்வளவு முழுமையாக இருக்கிறது.

சதிக்கு சிவனை மணமுடிப்பதற்கு ஒரு சதித்திட்டம்


சிவன் அசைவின்மையிலிருந்து நாட்டியத்துக்கும், நாட்டியத்திலிருந்து அசைவின்மைக்கும் மாறி மாறி நிலைகொள்ளத் தொடங்கியதாக, யோகப் பாரம்பரியத்தில் கதை நகர்கிறது. மற்ற அனைவரும், மூவுலகங்களின் கந்தர்வர்கள், யக்ஷர்கள் மற்றும் தேவாதி தேவர்களும் அவரை ஆச்சரியத்திலும், ஆர்வத்திலும் கவனிக்கத் தொடங்கினர். இந்த உச்சநிலை ஆட்டம் மற்றும் முற்றிலுமான அசைவின்மையை அவர்கள் கண்டு ஆனந்தித்தனர், ஆனால் சிவனுடைய இந்த அனுபவத்தின் இயல்பைக் குறித்து அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. இந்த அனுபவத்தை உணர்ந்து பார்க்க அவர்கள் விரும்பினர்.

அவரைக் கண்டு ஆச்சரியம் கொண்ட அவர்கள், பிறகு ஆர்வம் அடைந்தனர். ஆர்வத்தினால், அவர்கள் அவருக்குச் சற்று நெருக்கமாக வந்தனர், ஆனால் அவரது தாண்டவத்தின் தீவிரத்தையோ அல்லது அவரது அசைவின்மையின் தீவிரத்தையோ அவர்களால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.

சிவனின் இந்த அனுபவத்தை அவர்களும் புரிந்துகொண்டு அனுபவிப்பதற்காக, அவர்கள் திட்டம் தீட்டத் தொடங்கினர். இதற்காக அவர்கள் கூட்டிய ஒரு மாநாடு, மெதுவாக ஒரு சதியாலோசனையாக மாறியது. எப்படியாவது அவரை மணம் புரிந்துகொள்ளச் செய்வது என்று அவர்கள் முடிவு செய்தனர். “அவரது பரவச அனுபவத்துக்கும், அளப்பரிய தன்மைக்கும், அதேநேரம் மரணத்துக்கு இணையான அவரது அசைவின்மைக்கும் அடிப்படையாக இருப்பது என்ன என்பதை அறிந்துகொண்டு, நம்மிடம் தெரிவிக்கக்கூடிய ஒருவர் நம் தரப்பிலிருந்து அங்கே செல்லவேண்டும். சிவன் தீவிரத்தின் இரண்டு நிலைகளையும் அனுபவிப்பதாகத் தோன்றுகிறது. அதை அவரிடமிருந்து அறிந்துகொள்வதற்கு நம் தரப்பு நபர் ஒருவர் அவருக்கு அருகாமையில் இருக்கவேண்டும்,” என்று முடிவானது.

பல விஷயங்கள் நிகழ்ந்தன – மந்திர ஆலோசனையின் ஒட்டுமொத்த விபரங்களுக்குள்ளும் நான் செல்லமாட்டேன், ஏனென்றால் அது ஒரு மிகப் பெரிய திட்டம். சிவனின் உள்தன்மையை அறிந்துகொள்ள தேவைப்படும் ஒரு பிரம்மாண்டமான திட்டத்தை அவர்கள் வகுத்து, அதன்படி நிறைவேற்றினர். அதன் விளைவாக, சிவனுக்கு, சதியை திருமணம் செய்வித்தனர். அதற்கிணங்கிய சிவன், முழுமையாக ஈடுபாடு கொண்டவராக இருந்ததுடன் சதியின் மீது அளவில்லா பற்றும் கொண்டவரானார்.

சதியின் தந்தை சிவனை அவமதிக்கிறார்


சதியை தனது வாழ்வின் ஒரு பாகமாக இருப்பதற்கு சிவன் அனுமதித்தார். ஆனால் சதியின் தந்தை தட்சன் சிவனை வெறுத்தார். ஏனென்றால் சிவன் ஒரு அரசனாக இல்லாமல், நல்ல ஆடைகள் உடுத்தாமல், சாம்பலை உடலெங்கும் பூசியவராக, மண்டையோட்டில் உணவருந்துபவராக இருக்கிறார். மேலும், எல்லாவித பூதங்களும், கணங்களும், பித்தர்களும் அவருடைய நண்பர்களாக உள்ளனர். அவர் எப்போதும் தியானத்தில் அல்லது பித்தேறியவராக இருக்கிறார். கண்களை மூடிய நிலையில் அவர் இருக்கிறார் அல்லது அவர் பித்தம் தலைக்கேறிய ஒரு நடனத்தில் இருக்கிறார். சிவன், தட்சன் கர்வப்படக்கூடிய அல்லது பெருமையுடன் பார்க்கக்கூடிய ஒரு மருமகன் இல்லை.

சில காலம் கழித்து, தட்சன் ஒரு பெரும் சடங்கு நிகழ்த்த விரும்பி, அதற்காக வருமாறு ஒவ்வொரு அரசருக்கும், ஒவ்வொரு கடவுளுக்கும் மற்றும் ஒவ்வொரு யட்சருக்கும் அழைப்பு விடுத்தான். ஆனால் சிவனை மட்டும் அழைக்கவில்லை. சிவனும், சதியும் காட்டில் அமர்ந்துகொண்டிருக்க, சதி, சிவனுக்கு அருகில் அமர்ந்து, காட்டிலிருந்து கிடைத்த கனிகளை அன்பு மிகுதியில் ஊட்டிக்கொண்டிருந்தாள், ஏனெனில் அவர்கள் அதைத்தான் உணவாக எடுத்துக்கொண்டிருந்தனர். அவர்களுக்கு வீடும், சமைத்து உண்பதற்குத் தேவையான ஏற்பாடுகளும் இல்லை, எனவே அவர்கள் பழங்களையும், சிவனுக்கு அர்ப்பணிப்பாக வந்தவைகளையும் மட்டும் சாப்பிட்டனர்.

அப்போது காட்டின் வழியே, அழகான தேர்கள், எல்லா அரச மாந்தர்கள், கடவுளர்கள் மற்றும் பெண் கடவுள்களும் முழுமையாக அலங்கரிக்கப்பட்ட கோலத்துடன் எங்கோ சென்றுகொண்டிருந்ததை, சதி பார்த்தாள். பிறகு அவள் சிவனிடம், “இது என்ன? எல்லாரும் எங்கே சென்றுகொண்டிருக்கின்றனர்?” என்று வினவினாள். “அது ஒன்றும் பெரிதல்ல. அவர்கள் எங்கே சென்றுகொண்டிருக்கின்றனரோ அங்கே நாம் செல்லத் தேவையில்லை,” என்று சிவன் கூறினார். ஆனால் சதிக்கு ஆர்வம் அதிகரித்தது. “எல்லோரும் எங்கேதான் செல்கின்றனர்? பாருங்கள், அவர்கள் எப்படி ஆடை அணிந்திருக்கின்றனர்? என்ன நிகழ்ந்துகொண்டிருக்கிறது?” என்றாள். சிவன் கூறினார், “அதைப் பொருட்படுத்த வேண்டாம், நாம் இங்கே நன்றாக இருக்கிறோம். நீ மகிழ்ச்சி இல்லாமல் இருக்கிறாயா? இல்லை அல்லவா? நீ மகிழ்ச்சியாக இருக்கிறாய். அவர்களைப் பற்றி கவலைப்படாதே.” ஏனென்றால் என்ன நிகழ்ந்துகொண்டிருந்தது என்பதை அவர் அறிவார்.

ஆனால் அவளது ஆர்வமும், பெண்தன்மையின் உத்வேகமும் அங்கே அமர்ந்து, மரத்தின் கனிகளை மட்டும் அனுபவித்துக் கொண்டிருக்க அவளை அனுமதிக்கவில்லை. அவள் சற்று முன்னே நடந்து, அங்கு சென்றுகொண்டிருந்த தேர்களுள் ஒன்றை நிறுத்தி, “நீங்கள் அனைவரும் எங்கே சென்றுகொண்டிருக்கிறீர்கள்?” என்று கேட்டாள். “உனக்கு தெரியாதா? உனது தந்தையார் ஒரு மாபெரும் யாகம் – ஒரு வேள்வி – நடத்துகிறார். எங்கள் அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார். நீ வரவில்லையா?” என்று கேட்டுச் சென்றனர். அவளும், அவளது கணவரும் அழைக்கப்படாதது தெரியவந்தபோது, அவள் முற்றிலும் தன்னை இழந்தாள். தாம் அவமதிக்கப்பட்டதாக அவள் உணர்ந்தாள். இது சிவனுக்கு இழைக்கப்படும் அநியாயம் என்று அவள் எண்ணினாள். சிவனிடம் சென்று, “என் தந்தையிடம் நான் செல்கிறேன். ஏன் அவர் இப்படி செய்தார்?” என்று முறையிட்டாள். “எனக்கு அது ஒரு பொருட்டே இல்லை. நீ ஏன் உணர்ச்சிவசப்படுகிறாய்? நாம் இங்கு நலமுடன் இருக்கிறோம். நாம் ஏன் அவரது வேள்விக்குச் செல்லவேண்டும்?" என்றார் சிவன்.

ஆனால், தங்களுக்கு அழைப்பு விடுக்காத இந்த அவமதிப்பினால், சதி மிகவும் வெகுண்டு, மனம் வருந்தினாள். “இல்லை, நான் செல்லவேண்டும். இதில் ஏதோ தவறு ஏற்பட்டிருக்க வேண்டும். ஒருவேளை அழைப்பிதழ் தொலைந்திருக்கக்கூடும். இது இப்படி இருக்கமுடியாது. அவர்கள் எப்படி உங்களையும், என்னையும் அழைக்காமல் இருக்கமுடியும்? நான் அவரது மகள். அவர் இதைச் செய்திருக்க மாட்டார் என்பதில் நான் நிச்சயமாக இருக்கிறேன். என் தந்தை அப்படிப்பட்டவர் அல்ல” என்றாள். சிவன், “போகாதே” என்றார். ஆனால் சதி அதைக் காதில் வாங்காமல் சென்றாள்.

வேள்வித் தீயில் சதி தன்னையே எரித்துக்கொள்கிறாள்


சடங்கு நிகழும் இடத்திற்கு சதி சென்றபோது, அங்கே அவளது தந்தைவழி, தாய்வழி சகோதரிகளும், மற்றும் அறிமுகமற்ற அனைவரும் அலங்கார அணிகலன்களுடன் இருந்தனர். ஆனால் அவளோ மலைகளில் அணிந்திருக்கும் எளிமையான உடைகளில் வந்திருந்தாள். ஆகவே அங்கு குழுமியிருந்தவர்கள் அவளைப் பார்த்து கேலி பேசி, சிரித்தனர். மேலும் அவர்கள், “எங்கே உன் சாம்பல் பூசிய கணவன்? எத்தனை நாட்கள் வாரப்படவில்லை என்று யாருக்குமே தெரியாத சடைமுடி கொண்ட அந்த மனிதன் எங்கே?” என்று கேட்டனர்.

தங்களுக்கு ஏதோ தவறுதலாகத்தான் அழைப்பு வரவில்லை என்று இன்னமும் நம்பிக்கொண்டிருந்த சதி, அந்த கேலிப்பேச்சுக்களை அலட்சியம் செய்துவிட்டு, அவளது தந்தையை சந்திக்கச் சென்றாள். அவரை அவள் கண்டபோது, தட்சன் மிகுந்த கோபத்தில் இருந்தான். ஆனால் சதி, “நீங்கள் எப்படி சிவனை அழைக்காமல் இருக்கலாம்?” என்று கேட்டாள். அப்போது தட்சன், தன்னால் இயன்ற எல்லா வழிகளிலும் சிவனை ஏசியதுடன் நில்லாமல், “என் வீட்டுக்குள் ஒருபோதும் நான் அவனைப் படியேற விடமாட்டேன்,” என்றும் கூறினான்.

இதை எதிர்பாராத சதி ஏமாற்றமடைந்து, வருந்தினாள். வேள்வித்தீ எரிந்துகொண்டிருந்தது. அந்தக் கணமே அதற்குள் நடந்து, அவள் தன்னையே எரித்துக்கொண்டாள். அவளைப் பின்தொடர்ந்து வந்திருந்த நந்தியும், மற்ற சிலரும் இந்த நிகழ்வைக் கண்டு, மிகுந்த அச்சத்துடன், சிவனிடம் திரும்ப ஓடிவந்தனர், தட்சனால் அவமதிக்கப்பட்டதால், சதி வேள்வித்தீயில் தன்னையே எரித்துக்கொண்டாள் என்ற செய்தியை சிவனிடம் கூறினர்.

சிவன் வீரபத்திரனை உருவாக்குகிறார்


இதைக் கேட்ட சிவன் ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு அசைவின்மையில் அமர்ந்திருந்தார். பிறகு அவர் அக்னிப்பிழம்பாக மாறினார். அதே நிலையில் வெகுண்டு எழுந்த சிவன், தனது சடை முடியிலிருந்து ஒரு முடியை வேரோடு பிடுங்கி, அவருக்கு அருகாமையில் இருந்த ஒரு பாறை மீது ஓங்கி அடித்தார். அதிலிருந்து மிகவும் சக்திவாய்ந்த மனிதனாக வீரபத்திரனை உருவாக்கினார். அவர் வீரபத்திரனிடம், “போ, அங்கு சென்று வேள்வியை அழித்துவிடு. அதிலிருந்து ஒருவருக்கும், தட்சன் உள்ளிட்ட எவருக்கும் எதுவும் கிடைக்கக்கூடாது. இந்த வேள்வியில் ஈடுபட்ட அனைவரும், எந்த ஒருவரும் மிஞ்சாத வகையில் அவர்களை அழித்துவிடு,” என்று ஆணையிட்டார். வீரபத்திரன் கடுங்கோபத்துடன் சென்று, வேள்வியையே குப்பைமேடாக்கி, அவனுக்குக் குறுக்கே வந்த எவரையும் விடாமல், அனைவரையும் வெட்டி வீழ்த்தியதுடன், எல்லாவற்றுக்கும் மேல், தட்சனை கழிவிலேற்றிக் கொன்றான்.

சக்தி பீடங்களின் பிறப்பு


பிறகு அங்கு வந்த சிவன், சதியின் பாதி எரிந்த உடலைத் தன் கைகளில் எடுத்தார். அவரது துயரம் வார்த்தைகளில் அடங்காததாக இருந்தது. அவளைத் தன் தோள் மீது போட்டுக்கொண்டு, நடக்கலானார். பெருங்கோபத்துடனும், ஆற்றொணாத் துயரத்திலும் நடந்தார். அவர் சதியின் உடலைக் கீழே கிடத்தவோ அல்லது நெருப்புக்கு அவளது உடலை இரையாக்கவோ அல்லது அவளைப் புதைக்கவோ இல்லை. அவர் வெறுமனே நடந்துகொண்டிருந்தார். அவர் நடந்துகொண்டே இருக்கும்போது, சதியின் உடல் அழுகத் தொடங்கி, பல பாகங்களாகி, ஒவ்வொன்றும் 54 வெவ்வேறு இடங்களில் கீழே விழுந்தது. அவளது உடலின் ஒவ்வொரு பாகமாக மண்மீது விழ நேர்கையில், அதற்கான சக்தியின் தன்மை அங்கே உருவாக்கப்பட்டது. இவைகளே இந்தியாவின் முக்கியமான தேவி கோவில்களாக இருக்கின்றன.

அவற்றுள் மூன்று இரகசியமாக இருப்பதாக நம்பப்படுகிறது. அவைகள் எங்கே இருக்கின்றன என்பது ஒரு சிலரைத் தவிர, வேறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் 51 கோவில்களை அனைவரும் அறிந்திருக்கின்றனர்.

    Share

Related Tags

சிவனும் பார்வதியும்சிவன் மற்றும் அவரது குடும்பம்

Get latest blogs on Shiva

Related Content

எதற்காக இவற்றை அணிகிறான் சிவன்?