சிவனின் ஏழு தன்மைகள் என்னென்ன?

article சிவன் பற்றி
சிவனின் அடிப்படையான ஏழு வடிவங்கள் பற்றி கூறி, அதனை அடிப்படையாகக் கொண்டு தியானலிங்கம் அமைக்கப்பட்டுள்ளதையும், மனித உடலின் ஏழு சக்கரங்கள் அமைந்திருப்பதையும் சத்குரு இங்கே விளக்குகிறார்! சிவனின் ஏழு தன்மைகள் என்னென்ன?

நமது பாரம்பரியத்தில், சிவனின் வடிவங்கள் பொதுவாக அனைவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விதத்தில் உருவாக்கப்பட்டுள்ளன. சிவன் நல்ல மனிதன் அல்ல. கருநாகம் அவன் கழுத்தினில், மண்டை ஓடுகளினாலான மாலை, இப்படி அவனை கற்பனை செய்து பார்ப்பதுகூட கடினம். ஆனால், ரம்யமான ஒளிவீசும் அவன் இருப்பிலிருந்து யாரும் விலக இயலாது. தப்ப வழியன்றி அவனது ஈர்ப்பு, அதே சமயம், அருகில் நெருங்க முடியாத கோரம், இப்படி ஒன்றுக்கொன்று எதிர்மறையாக இருக்கும் தன்மைகளையும், வடிவங்களையும் கொண்டு கடவுளையோ, சிவனையோ, தெய்வீகத்தையோ விவரித்தது, அவற்றை நம் காரண அறிவால் அல்லாமல், அதை தாண்டிய நிலையில் உள்வாங்கிக்கொள்ள வேண்டும் என்பதை உணர்த்துவதற்கே.

சிவன் எண்ணிலடங்கா பல வடிவங்களும், பரிமாணங்களும் கொண்டவன். அடிப்படையாக இவற்றை ஏழுவிதமான தன்மைகளாகப் பிரிக்கலாம். இந்த ஏழு தன்மைகளைக் கொண்டுத்தான் தியானலிங்கம் உருவாக்கப்பட்டது.

கடவுளர்களின் தலைவன் – ஈஷ்வரா. கருணை பாலிக்கும் இஷ்ட தெய்வம் – ஷம்போ. எளிய, இளகிய தன்மையுடைய சாம்பலேஸ்வரா அல்லது போலா. வேதங்கள் கற்றறிந்த ஆசான் – தட்சிணாமூர்த்தி. கலைகளுக்கெல்லாம் தலைமையானவன் – நடராஜன் அல்லது நடேசன். தந்திரிகளை தகர்த்தெறியும் உக்கிரமான காலபைரவன் அல்லது மஹாகாலன். காதல் தரும் சர்வலட்சணமான பேரழகன் – சோமசுந்தரன். நிலவைவிட அழகானவன் என்று அதற்குப் பொருள்.

சிவனின், இந்த ஏழு அடிப்படையான வடிவங்களிலிருந்துதான், எண்ணிலடங்கா வெளிபாடுகள் உருவாகின. பாரம்பரியமாக, இந்த ஏழுத் தன்மைகளையே, மனித உடலிலுள்ள ஏழு சக்கரங்களாக, ஏழு லோகமாக அல்லது ஏழு உலகமாக அழைக்கின்றனர். தியானலிங்கத்தின் ஏழு சக்கரங்களும் பிரபஞ்சத்தின் இந்த ஏழு தன்மைகளைக் கொண்டுள்ளன.