logo
logo

நடராஜரின் நடனம் கூறும் பிரபஞ்ச இரகசியம்?

சத்குரு: கடவுள்கள் நடனமாடவேண்டியுள்ள ஒரே இடம், இந்தியா. அவர்களால் நடனமாடமுடியவில்லையென்றால், கடவுளாகவே அவர்கள் இருக்கமுடியாது! இது ஏனென்றால், படைப்பின் அற்புதம் ஒரு நாட்டியம்போல் இருக்கிறது என்பதுதான் அதற்கு உங்களால் கொடுக்க முடிகிற மிக நெருக்கமான உவமானம். இன்றைக்கு, நவீன இயற்பியலாளர்கள் இத்தகைய வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றனர் – படைப்பானது ஒரு நாட்டியத்தில் இருப்பதாகத் தோன்றுவதாக அவர்கள் கூறுகின்றனர். நீங்கள் ஒரு நாட்டியத்தை மேலோட்டமாகக் கவனித்தால், அங்கே நிகழ்ந்துகொண்டிருப்பதற்கு எந்த ஒரு காரணரீதியான இசைவும் இல்லாததாகத் தோன்றுகிறது. ஆனால் நீங்கள் கூர்ந்து பார்த்தால், அந்த ஒட்டுமொத்த செயல்முறைக்கும் மிக ஆழமான ஒரு கட்டமைப்பு இருக்கிறது.

உதாரணமாக, இந்திய சாஸ்த்ரீய நாட்டியத்தில், நடனமாடுபவர் மனம்போனபோக்கில் கைகளையும், கால்களையும் அசைப்பதாகவே தோன்றக்கூடும். ஆனால் நீங்கள் உன்னிப்பாகக் கவனித்தால், நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் மிக ஆழமான ஒரு இசைவு இருக்கிறது. அந்த இசைவு இல்லாமலிருந்தால், நீங்கள் நடனத்தை அனுபவிக்கமாட்டீர்கள். காற்றில் கைகளையும் கால்களையும் வீசிக்கொண்டு வெளிப்பார்வைக்கு தர்க்கத்துக்குப் புறம்பான விஷயங்களைச் செய்யும் நிலையில், நீங்கள் விளக்க முற்படும் ஒவ்வொன்றுக்கும் முழுமையான இசைவு கொள்வதற்கு வருடக்கணக்கான பயிற்சியும், சாதகமும் தேவைப்படுகிறது. நாட்டியத்திற்கு அந்த வடிவியல் ரசிக பாவனை இருக்குமேயானால், பார்வையாளர்கள் நாட்டியத்தின் கதையையோ அல்லது அது எதைப்பற்றியது என்பதையோ அறியவில்லையென்றாலும், ஒரு குறிப்பிட்ட விதமாக அது அவர்கள் மீது தாக்கத்தினை ஏற்படுத்தும். ஒரு வித்தியாசமான பரிமாணத்தில் இதுவே இசைக்கும் பொருந்தும்.

இயற்பியலாளர்களும் இந்த முடிவுக்குத்தான் வருகின்றனர். படைப்பானது முற்றிலும் குறிப்பிட்ட நோக்கமின்றி, தற்செயலானதாகத் தோன்றினாலும், நெருக்கமாகக் கவனித்தால், ஒவ்வொன்றும் ஏதோ ஒரு விதத்தில் ஒத்திருப்பதாகத் தோன்றுகிறது. இன்னமும் அவர்களால் புரிந்துணரமுடியாதவாறு, ஒவ்வொன்றுக்கும் ஏதோ விதத்தில் இசைவு காணப்படுகிறது. தனிப்பட்ட உயிருக்கும், படைப்பின் பேருருவாக்கத்துக்கும் இடையில் இசைவு இருப்பதுதான் யோகா சாத்தியப்படுவதற்கான ஒரே காரணமாக இருக்கிறது. அங்கே இசைவு இல்லாமலிருந்தால், நீங்கள் ஒன்றுபட முடியாது. இசைவு இல்லையென்றால் ஒருமைக்கான சாத்தியம் இருக்காது.

பிண்டமும், பிரபஞ்சமும்


கடந்த சில வருடங்களாக அறிவியலில் முன்வைக்கப்படும் வாதங்களுள் நிர்மாணக் கோட்பாடு (Constructal theory) என்பதும் ஒன்று. அவர்கள் கூறுவது என்னவென்றால், நீங்கள் ஒரு அணுவையோ, ஒரு மனிதனையோ, ஒரு யானையையோ அல்லது பிரபஞ்சத்தையோ எதனை எடுத்துக்கொண்டாலும் – அடிப்படையான வடிவமைப்பு ஒன்றாகவே உள்ளது. படைப்பின் நுட்பம் மேம்பாடு அடைவதில் வடிவமைப்பின் சிக்கல் மட்டும் அதிகரிக்கிறது.

யோகத்தில் இதை நாம் எப்போதும் கூறிவந்துள்ளோம். பிண்டமும், பிரபஞ்சமும் ஒரே வடிவமைப்பு கொண்டவை. யோகப் பயிற்சிகள் இதிலிருந்தே தொடங்கியுள்ளன. அண்டம், பிண்டம் மற்றும் பிரம்மாண்டம் – இந்த வாழ்வு, ஒரு தனி நபர் மற்றும் பிரபஞ்சத்தை உருவாக்கும் மூலப்பொருள் – ஆகியன ஒரே பொருளின் மூன்று வெளிப்பாடுகளாக இருப்பதை நாம் கூறினோம். அவைகள் அனைத்தும் ஒரே ஒத்திசைவில் உள்ளன. மேலும் அது ஒரே வடிவமைப்பில் இருக்கும் காரணத்தால், நீங்கள் ஒன்றை மற்றதிற்குள் அடக்கமுடியும். நீங்கள் ஒரு வாழைப்பழத்தைச் சாப்பிட்டு, அதை ஒரு மனிதனாக்க முடியும், ஏனென்றால் அது ஒரே வடிவமைப்பில் உள்ளது.

ஆகவே, பிரபஞ்சம் இயங்கும் விதம் ஒரு நாட்டியமாக இருக்கிறது என்பதுதான் அதற்கு நீங்கள் கொடுக்கக்கூடிய அருகாமை ஒப்புவமையாகவும், நெருக்கமான விளக்கமாகவும் உள்ளது. ஏனென்றால் அவையனைத்தும் நோக்கமின்றி இருப்பதாகத் தோன்றுகிறது, ஆனால் அதற்குப் பின்னால் கச்சிதமான ஒருங்கிணைப்பும், ஒத்திசைவும் இருக்கிறது. ஆனால் ஒருங்கிணைப்பு குறித்த பெரும்பாலான மக்களின் கருத்து மிகவும் அறிவுரீதியாகவும் மற்றும் பகுத்தறிதலாகவும் உள்ளது. உதாரணத்திற்கு, கச்சிதமாகப் பராமரிக்கப்பட்ட அழகான தோட்டத்தையும், ஒரு காட்டையும் எடுத்துக்கொள்ளலாம்.

எல்லாமே ஒரு ஒழுங்கு முறையுடன் இருப்பது தோட்டம் எனப்படுகிறது. எந்த ஒழுங்கும் இல்லாதது ஒரு காடு எனப்படுகிறது. ஆனால் தோட்டத்தை மூன்று மாதங்களுக்கு நீங்கள் கவனிக்கவில்லையென்றால், அது குலைந்துவிடும். ஆனால் உங்களது கவனிப்பு இல்லாமலேயே ஒரு காடு இலட்சக்கணக்கான வருடங்கள் நீடிக்க முடியும். ஆகவே மேலான ஒருங்கிணைப்பாக எதை நீங்கள் கருதுவீர்கள்?

நடராஜன் – பிரபஞ்ச நாட்டியக்காரன்


ஆகவே, படைப்பு ஒரு நாட்டியமாக இருக்கும் காரணத்தால், இறைமையை ஒரு நடனசபாபதி என்று நாம் கூறினோம். அவன் ஒரு நாட்டியக்காரன் இல்லையென்றால், இந்த நாட்டியத்தை எப்படி அவனால் நிகழச் செய்ய முடியும்? சிவனை நடராஜன் என்று நாம் கூறும்போது, ஒரு தனிமனிதர் நடனமாடிக்கொண்டிருப்பதாக நாம் சொல்வது கிடையாது. நடராஜனின் சித்தரிப்பில், அவரைச் சுற்றிலும் ஒரு வட்டம் இருப்பதை நீங்கள் கவனித்திருப்பீர்கள். எப்போதுமே வட்டம் என்பது பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறது ஏனென்றால் எந்த ஒன்று நகரும்போதும், படைப்பில் நிகழும் வெகு இயல்பான வடிவம் ஒரு வட்டமாகவே உள்ளது. தானாகவே நிகழும் எதுவும் ஒரு வட்டம் அல்லது ஒரு நீள் வட்டம் (ellipsoid)– சற்றே மாறுபட்ட ஒரு வட்டம் – ஏனென்றால் ஒரு வட்டம் என்பது குறைந்தபட்ச எதிர்விசை கொண்ட வடிவம். இந்த பூமிக்கிரகம், சந்திரன், சூரியன் இவையனைத்தும் வட்டங்களே.

இந்தக் காரணத்தினால்தான் நடராஜரைச் சுற்றிலுமுள்ள வட்டம் பிரபஞ்சத்தின் குறியீடாக இருக்கிறது. அப்படித்தான் அவர் எப்போதும் விவரிக்கப்படுகிறார். இது பிரபஞ்சத்தின் பரப்பில் ஒரு தனிமனிதர் நாட்டியமாடிக்கொண்டிருப்பதைப் பற்றியதல்ல. பிரபஞ்சம் ஒரு நாட்டியத்தில் இருக்கிறது என்பதுடன் ஒரு குறிப்பிட்ட புத்திசாலித்தனத்தால் நடனமானது வழிகாட்டப்படுகிறது என்று நாம் கூறுகிறோம்.

நாம் தனிமனிதர்களாக இருக்கும் காரணத்தாலும், எல்லாவற்றையும் தனித்தனியான உயிர்களாக நாம் புரிந்துகொள்வதாலும், நமக்கே உரிய புரிதலுக்காக அதை நடராஜர் என்று தனிப்பட்ட தன்மையில் காண்கிறோம். “ஷிவா” என்ற வார்த்தைக்கு “எது இல்லாததோ அது” அல்லது “ஒன்றுமற்றது” என்பதுதான் பொருள். அது ஒன்றுமற்றது, அது வெற்று வெளி, ஆனால் அது நடனமாடிக்கொண்டிருக்கிறது. அது நாட்டியமாடிக்கொண்டிருக்கும் காரணத்தினால், அனைத்தும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

நடனமாகிவிடுங்கள்!


உங்களால் நடனத்தைப் புரிந்துகொள்ள முடியாது. ஏனென்றால் நீங்கள் புரிந்துகொள்ளும் ஒவ்வொரு விஷயமும் ஒரு தவறான முடிவாகத்தான் இருக்கும். ஆனால் நடனத்தின் அழகியலை நீங்கள் உணரமுடியும் அல்லது நீங்கள் நடனமாகிவிடமுடியும். தேவையான கவனம் செலுத்துவதன் மூலம், நடனத்தின் அழகை நீங்கள் உணர்ந்தால், நீங்கள் தேடுதல் உடையவர் என்று நாம் கூறுகிறோம். சமூக நிலையில், நீங்கள் பலவாறாக அழைக்கப்படலாம் - விஞ்ஞானி என அழைக்கப்படலாம் – ஆனால் அப்போதும், நீங்கள் தேடுதல் உடைய ஒருவர்தான். அது என்னவென்று அறிந்துகொள்ள விரும்புவதால், நீங்கள் கவனம் செலுத்துகிறீர்கள். நீங்களே நடனமாகிவிட்டால், இறைத்தன்மை கொண்டவராகிறீர்கள், நீங்கள் ஒரு யோகியாகிறீர்கள். என்னவாக வேண்டும் என்பது உங்களின் தேர்வு.

    Share

Related Tags

சிவ தத்துவம்மறைஞானம்

Get latest blogs on Shiva

Related Content

சிவன் மிகச் சிறந்தவர் என்பதற்கான 5 காரணங்கள்