logo
logo
Mahadev Tamil Meaning, மஹாதேவனான சிவன்

மஹாதேவனான சிவன்

ஆதியோகி சிவன், ஏன் எல்லா தெய்வங்களுக்கும் மேலானவர், மஹாதேவன் என அழைக்கப்படுகிறார் என்பதை அறிந்துகொள்வோம்

சத்குரு: சில நாட்களுக்கு முன்பு யாரோ என்னிடம் கேட்டார்கள், நான் ஆதியோகி சிவனின் ரசிகரா என்று. ரசிகர் மன்றம் என்பது மக்களின் உணர்வுகள் யாரோ ஒருவருடன் பின்னிப் பிணைந்துவிடும்போது தொடங்குகிறது. நான் நிச்சயமாக அவரது ரசிகர் அல்ல. பின் வேறு என்ன? உண்மையானது வேறு ஒன்று. அதை உங்களுக்கு காரண காரியத்துடன் விளக்குகிறேன்.

எந்தவொரு தலைமுறையிலும், ஒரு தனிமனிதன் அந்த தலைமுறைக்கு அல்லது வரும் தலைமுறைகளுக்கு அவர் செய்த பங்களிப்பிற்காகவே மதிப்பிடப்படுகிறார். இந்த பூமியில் பல அற்புதமான மனிதர்கள் பல வழிகளில் மற்றவர்களின் வாழ்க்கைக்கு பங்களிப்பு செய்துள்ளனர். யாரோ ஒருவர் அன்பின் அலையைக் கொண்டுவந்தார், யாரோ ஒருவர் தியானத்தின் அலையைக் கொண்டுவந்தார், வேறு யாரோ பொருளாதார நல்வாழ்வின் அலையைக் கொண்டுவந்தார் - காலத்தின் தேவைக்கு ஏற்ப.

இறுதி விடுதலையை அடைவதற்கான முறையை, வழியை - ஒன்று மட்டுமல்ல, சாத்தியமான ஒவ்வொரு வழியையும் வழங்கியதால் சிவன் என்று அழைக்கப்பட்டார், அதாவது ஒன்றிலிருந்து ஒன்றுமில்லாததற்கு நகர்வது.

உதாரணமாக, மகாத்மா காந்தி - அவருக்கு எல்லா மரியாதையும் - இது அவரை குறைத்து மதிப்பிடுவதற்காக அல்ல - சுதந்திரத்திற்கு முந்தைய காலம் என்பதால், அவரது முறைகள், அவரது பாணி, மற்றும் அவர் செயல்பட்ட விதம் அவரை ஒரு குறிப்பிட்ட நிலைக்கு உயர்த்தியது. அவர் சரியான மனிதராக இருந்தார் மற்றும் அந்த காலத்திற்கு அற்புதமான விஷயங்களைச் செய்தார் - ஆனால் அவர் எப்போதும் பொருத்தமானவராக இருக்கமாட்டார். அல்லது மார்ட்டின் லூதர் கிங், அந்த காலங்களில், பாகுபாடு இருந்ததால், அவர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவராக இருந்தார், ஆனால் சமூகத்தில் அத்தகைய பிரச்சனைகள் இல்லாமல் இருந்திருந்தால், அவர் வேறு எந்த நபரைப் போலவும் இருந்திருப்பார்.

வரலாற்றில் பின்னோக்கிச் சென்றால், பல மகான்கள் இருந்திருக்கிறார்கள், ஆனால் அவர்கள் பெரும்பாலும் அந்த காலத்தின் பிரச்சனைகள், அந்த காலத்தின் தேவை, அல்லது அந்த காலத்தின் ஒரு குறிப்பிட்ட குறைபாடு காரணமாகவே முக்கியத்துவம் பெற்றனர். கௌதம புத்தரைப் பார்த்தால், சமூகம் சடங்கு முறைகளில் மிகவும் சிக்கிக்கொண்டிருந்ததால், அவர் சடங்குகள் இல்லாத ஆன்மீக முறையுடன் வந்தபோது, அது உடனடியாக வெற்றி பெற்றது. இது சடங்குகள் அதிகம் இல்லாத சமூகமாக இருந்திருந்தால், அது எந்த வகையிலும் புதிதாக இருந்திருக்காது, அது அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் இருந்திருக்காது.

பல வழிகளில், கிருஷ்ணர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர். அந்த சமூகத்தில் போராட்டம் இல்லாமல் இருந்திருந்தால், பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் இடையே சண்டை இல்லாமல் இருந்திருந்தால், அவர் உள்ளூரில் மட்டுமே செல்வாக்கு பெற்றிருந்திருப்பார். அவர் அவ்வளவு பெரியவராக ஆகியிருக்க மாட்டார். அல்லது ராமர், அவரது மனைவி கடத்தப்பட்டிருக்காவிட்டால், அவர் வெறும் மற்றொரு அரசராக மட்டுமே இருந்திருப்பார், ஒருவேளை மிகவும் நல்ல அரசராக நினைவுகூறப்பட்டிருப்பார், அல்லது சிறிது காலத்திற்குப் பிறகு மக்களால் மறக்கப்பட்டிருப்பார். முழு போரும், இலங்கை எரிக்கப்பட்டதும் நடந்திருக்காவிட்டால், அவரது வாழ்க்கை நமக்கு முக்கியத்துவமானதாக இருந்திருக்காது.

சிவனை மஹாதேவன் என்று அழைக்கக் காரணம் என்ன?

ஆதியோகி அல்லது சிவனின் முக்கியத்துவம் இதுதான் - அத்தகைய எந்த நிகழ்வும் நடக்கவில்லை. எந்த போரும் இல்லை, எந்த போராட்டமும் இல்லை. அவர் அந்த நாளின் தேவைகளுக்கு ஏற்ப செயல்படவில்லை. எல்லா காலங்களுக்கும் பொருந்தும் வகையில் மனித விழிப்புணர்வை வளர்க்க கருவிகளையும் முறைகளையும் வழங்கினார். மக்கள் உணவு, அன்பு அல்லது அமைதி இல்லாமல் இருக்கும்போது, அவர்களுக்கு தேவையானதை நீங்கள் வழங்கினால், நீங்கள் அந்த நாளின் முக்கியம் வாய்ந்த ஒன்றாக மாறலாம். ஆனால் அத்தகைய குறைபாடு இல்லாதபோது, ஒரு மனிதனுக்கு இறுதியில் பொருத்தமானது என்னவென்றால், அவன் எப்படி தன்னை மேம்படுத்திக்கொள்வது என்பதுதான்.

நாம் மஹாதேவன் என்ற பட்டத்தை அவருக்கு மட்டுமே கொடுத்தோம், ஏனெனில் அதன் பின்னால் உள்ள நுண்ணறிவு, தொலைநோக்குப் பார்வை மற்றும் ஞானம் மிஞ்ச முடியாதவை. நீங்கள் எங்கு பிறந்தீர்கள், எந்த மதம், சாதி அல்லது நம்பிக்கை, நீங்கள் ஆணா பெண்ணா என்பது முக்கியமல்ல - இந்த முறைகளை என்றென்றும் பயன்படுத்த முடியும். மக்கள் அவரை மறந்தாலும் கூட, அவர்கள் அதே முறைகளைப் பயன்படுத்த வேண்டியிருக்கும், ஏனெனில் மனித உடல் எனும் இயந்திரத்தில் எதையும் அவர் ஆராயாமல் விடவில்லை. அவர் ஒரு போதனையை கொடுக்கவில்லை. அந்த காலத்திற்கான தீர்வை அவர் கொடுக்கவில்லை. அத்தகைய பிரச்சனைகளுடன் மக்கள் அவரிடம் வந்தபோது, அவர் வெறுமனே கண்களை மூடி அக்கறையற்று இருந்தார்.

மனித இயல்பினை உணர்தலை பொருத்தவரை, ஒவ்வொரு வகையான மனிதனுக்குமான வழியை கண்டுபிடிப்பதில், இது ஒரு நிலையான பங்களிப்பு; அது அந்த காலத்துக்கு ஏற்ற அல்லது அந்த காலத்துக்கான பங்களிப்பு அல்ல. படைத்தல் என்றால், ஒன்றுமில்லாதது முடிச்சுகள் போடப்பெற்று ஏதோ ஒன்றானது.  அவர் படைப்பை கட்டவிழ்த்து படைத்தல் அற்ற நிலைக்கு போகும் வழியை கண்டறிந்தார்.

ஆதியோகி ஏன் சிவன் என அழைக்கப்படுகிறார்?

இதனால்தான் நாம் அவருக்கு "சி-வா" என்ற பெயரைக் கொடுத்தோம் - அதாவது "இல்லாதது". "இல்லாதது" ஏதோ ஒன்றாக மாறியபோது அல்லது "இருப்பாக" ஆனபோது, அந்தப் பரிமாணத்தை நாம் பிரம்மா என்று அழைத்தோம். இறுதி விடுதலையை அடைவதற்கான முறையை, வழியை - ஒன்று மட்டுமல்ல, சாத்தியமான ஒவ்வொரு வழியையும் வழங்கியதால் சிவன் என்று அழைக்கப்பட்டார், அதாவது ஒன்றிலிருந்து ஒன்றுமில்லாததற்கு நகர்வது.

சிவன் என்பது ஒரு பெயர் அல்ல, அது ஒரு விளக்கம். யாரோ ஒருவர் டாக்டர், வழக்கறிஞர் அல்லது பொறியாளர் என்று சொல்வது போல, சிவன் வாழ்க்கையை கலைத்துவிடுபவர் என்கிறோம். இது வாழ்க்கையின் அழிப்பாளர் என சற்று தவறாக புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் ஒரு வகையில் அது சரி. "அழிப்பாளர்" என்ற சொல்லைப் பயன்படுத்தும்போது, மக்கள் அதை எதிர்மறையாக புரிந்துகொள்கிறார்கள். யாராவது "விடுவிப்பவர்" என்று சொல்லியிருந்தால், அது நேர்மறையாக புரிந்துகொள்ளப்பட்டிருக்கும். மெதுவாக, "கலைத்துவிடுபவர்" "அழிப்பாளர்" ஆகிவிட்டது, மக்கள் அவர் எதிர்மறையானவர் என நினைக்கத் தொடங்கினர். அவரை என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள், அவர் கவலைப்படமாட்டார்- இதுதான் நுண்ணறிவின் இயல்பு.

உங்கள் நுண்ணறிவு ஒரு குறிப்பிட்ட உயரத்திற்கு உயர்ந்தால், உங்களுக்கு எந்த நெறிமுறைகளும் தேவைப்படாது. நுண்ணறிவு குறைவாக இருக்கும்போது மட்டுமே, என்ன செய்யக்கூடாது என்று மக்களிடம் சொல்ல வேண்டும். யாருடைய நுண்ணறிவு உயர்ந்துள்ளதோ, அவர்களிடம் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல வேண்டியதில்லை. என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று அவர் ஒரு வார்த்தை கூட உச்சரிக்கவில்லை. யோக முறையின் யம மற்றும் நியமம் பதஞ்சலியின் உருவாக்கம், ஆதியோகியினுடையது அல்ல. பதஞ்சலி மிகவும் பிற்காலத்தில் வந்தார்.

பதஞ்சலி நமக்கு முக்கியமானவராக இருப்பதற்குக் காரணமே, யோகா மிக அதிகமான கிளைகளாக பிரிந்து, நகைப்புக்குரிய அளவிற்கு சென்றிருந்ததுதான். 25, 30 ஆண்டுகளுக்கு முன்பு, மருத்துவ பரிசோதனைக்கு ஒரே மருத்துவர் போதுமானவராக இருந்தார். இன்று 12 முதல் 15 மருத்துவர்கள் தேவைப்படுகிறார்கள் - எலும்புக்கு ஒருவர், தசைக்கு ஒருவர், இரத்தத்திற்கு ஒருவர், இதயத்திற்கு ஒருவர், கண்ணுக்கு ஒருவர் - இது மேலும் தொடரும்.

இன்னும் நூறு ஆண்டுகளில், அதிக சிறப்புத்துவம் காரணமாக ஒரு மருத்துவப் பரிசோதனைக்கு 150 மருத்துவர்கள் தேவைப்படலாம். அப்போது நீங்கள் செல்ல விரும்பமாட்டீர்கள், ஏனெனில் 150 சந்திப்புகளை அமைத்து, அவற்றை முடித்து, 150 கருத்துக்களை கணக்கிட்டால் அது பயனற்றதாக இருக்கும். பின்னர் யாரோ ஒருவர் இவை அனைத்தையும் ஒருங்கிணைத்து குடும்ப மருத்துவராக மாற்றுவதைப் பற்றி பேசுவார். இதைத்தான் பதஞ்சலி செய்தார்.

அந்த காலத்தில் சுமார் 1800 யோகா பிரிவுகள் இருந்ததாக கூறுகிறார்கள். முழு செயல்முறையையும் கடக்க வேண்டுமெனில், நீங்கள் 1800 பள்ளிகளுக்குச் சென்று 1800 வெவ்வேறு வகையான யோகாக்களை செய்திருக்க வேண்டும். இது நடைமுறைக்கு சாத்தியமற்றதாகவும் நகைப்புக்குரியதாகவும் மாறியது. எனவே பதஞ்சலி வந்து அனைத்தையும் 200 சூத்திரங்களாக தொகுத்து, யோகாவின் எட்டு அங்கங்களை மட்டுமே பயிற்சி செய்யும்படி செய்தார். இத்தகைய சூழ்நிலை இல்லாமல் இருந்திருந்தால், பதஞ்சலி நமக்கு முக்கியமானவராக இருந்திருக்க மாட்டார். ஆதியோகி அல்லது சிவனின் விஷயத்தில் இது பொருந்தாது, ஏனெனில் எந்த வாழ்க்கை சூழ்நிலையிலும் அவர் எப்போதும் பொருத்தமானவராக இருக்கிறார். அதனால்தான் அவர் மஹாதேவன்.

    Share

Related Tags

Get latest blogs on Shiva