கேள்வி: சத்குரு, சிவனுடைய சவத்தின் நெஞ்சின்மேல் காளி நிற்பதுபோல் சில ஓவியங்களை நான் கண்டதுண்டு. இக்காட்சியின் மகத்துவம் என்ன?
சத்குரு: பெண்தன்மையின் பரிமாணத்தை சார்ந்த சக்தி எப்படி இயங்குகிறது என்பதை சித்தரிக்க ஒரு கதை உள்ளது. ஒருமுறை உலகில் பல்வேறு அரக்கர்கள் பூமியை ஆட்டிப்படைக்கத் துவங்கினர். பல்வேறு தீய சக்திகள் உலகை ஆட்கொள்ளத் துவங்குகின்றன. அதனால் காளி உக்கிரமடைகிறாள். அவள் கட்டுக்கடங்காமல் உக்கிரமாக வலம்வந்தாள், எவரும் தடுக்கமுடியாதபடி இருந்தாள், எல்லாவற்றையும் வெட்டி வீழ்த்தினாள்.
அவள் உக்கிரம் தனியவில்லை. அது காரண காரியம் தாண்டி, அந்த சூழ்நிலைக்கு தேவைப்பட்டதைத் தாண்டி, அனைத்து வரம்புகளையும் மீறிச்சென்றது. அவள் உக்கிரம் தீவிரமடைந்து தனியமுடியாமல் தொடர்ந்து அவள் வெட்டி வீழ்த்தியபடி இருந்ததால், எவரும் அவளை தடுத்து நிறுத்துவதற்குத் துணியவில்லை. மக்கள் சிவனை அணுகி, "அவள் இப்படி செய்கிறாளே, அவள் உன்னுடையவள், அவளைக் கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள்" என்று கேட்டனர்.
சிவனுக்கு காளியைத் தெரியும் என்பதால் அவளை அணுகினார். ஆக்ரோஷமின்றி அணுகினார், போர்க்கால உணர்வுடன் போகவில்லை, சாதாரணமாகச் சென்றார். ஆனால் காளியின் சக்தி மிகவும் உக்கிரமாக இருந்ததால் அது சிவனையே சாய்த்துவிட்டது. சிவன் மீது ஏறி நிற்கும்போதுதான் காளி தன் செயலை உணர்ந்தாள். பின் சற்று நிதானமாகி மீண்டும் சிவனுக்குள் உயிர் புகுத்தினாள்.
இந்த குறிப்பிட்ட நிகழ்வை அடிப்படையாகக் கொண்டு பல்வேறு தாந்திரீக செயல்முறைகள் உள்ளன. தாந்திரீகர்கள் தங்கள் தலையையே எடுத்து அதை அவர்கள் கையில் ஏந்தியபடி நடப்பதை சித்தரிக்கும் பல்வேறு காட்சிகளையும் ஓவியங்களையும் நீங்கள் பார்த்திருக்கலாம். அல்லது தேவி தன் தலையை எடுத்து அவளது கையில் ஏந்தி நடப்பது போன்ற குறியீட்டை கண்டிருக்கலாம். பல்வேறு தாந்திரீக செயல்முறைகளில் மக்கள் தங்கள் தலையை தாமே வெட்டி மீண்டும் பொருத்திக்கொள்ளும் செயல்முறைகள் உண்டு. சில சடங்குகள் மூலமாக இப்படி செய்யமுடியும்.
இன்று தாந்திரீகம் என்றாலே கட்டுக்கடங்காமல் வரம்புகளின்றி உடலுறவு கொள்தல் என்ற கருத்து இருக்கிறது. தாந்திரீகம் பற்றி பத்திரிகைகளிலும் புத்தகங்களிலும் மட்டுமே வாசித்த அமெரிக்கர்கள் பெரும்பாலான தாந்திரீக புத்தகங்களை எழுதியுள்ளதால் ஏற்பட்டுள்ள நிலையிது. தாந்திரீகம் என்றால் வரம்புகளற்ற உடலுறவு இல்லை. தாந்திரீகம் என்றால் அதீத ஒழுக்கம். தாந்திரீகம் என்றால் ஒரு தொழில்நுட்பம், ஒரு வழிமுறை, உயிரை கட்டவிழ்த்து மீண்டும் உருவாக்கக்கூடிய திறமை. தாந்திரீகம் என்றால் உங்கள் உயிரை முழுவதுமாக கட்டவிழ்த்து மீண்டும் உருவாக்கும் அளவிற்கு உங்கள்மீது நீங்களே ஆளுமை உருவாக்கிக்கொள்வது.
நீங்கள் உயிர்மீது எந்த அளவு ஆளுமை உருவாக்கமுடியும் என்றால், வாழ்வும் சாவும் முழுமையாக உங்கள் கைகளில் இருக்கச்செய்ய முடியும், உங்கள் உயிரை கட்டவிழ்த்து மீண்டும் உருவாக்கிக்கொள்ள முடியும். உங்களால் தெய்வீகத்தைக்கூட கொன்று மறு உருவாக்கம் செய்திட முடியும். இது வேறு எவருக்கோ நீங்கள் எதையும் சாதித்துக் காட்ட விரும்பும் சாகசமல்ல. இது உயிர்மேல் நீங்கள் அந்த அளவு ஆளுமை உருவாக்க விரும்புவதால் வருவது.
உங்கள் உயிர்மேல் ஓரளவு ஆளுமை இல்லாவிட்டால் உங்களால் எதுவும் செய்யமுடியாது. அனைவருக்கும் உயிர்மேல் ஓரளவு ஆளுமை உண்டு. இல்லாவிட்டால் உங்களால் என்ன செய்யமுடியும்? எந்த அளவு உங்களுக்கு ஆளுமை உள்ளது என்பதுதான் நீங்கள் எந்த அளவு செயலாற்ற முடிகிறது என்பதை நிர்ணயிக்கிறது.
சிவன்மேல் காளி நிற்பதுபோல் சித்தரிப்பது, ஒருவர் உயிர் செயல்முறை மீது முழுமையான ஆளுமையுடன் இருப்பதைக் குறிக்கிறது. கடவுளையே கொன்று அவருக்கே மீண்டும் உயிர்கொடுக்கும் அளவு ஆளுமையுடன் இருப்பது. இது மிகவும் டாம்பீகமாகத் தெரிகிறது, இல்லையா? தாந்திரீகத்தின் தொழில்நுட்பம் அத்தகையது.