logo
logo
Drawing of Shiv, Parvati and Nandi, with mandala background.

சிவன் பார்வதியின் விசித்திரமான திருமணம்

சிவன் பார்வதியின் திருமணம் ஒரு அரச குடும்பத்து திருமணமாக நடந்தது, ஏனெனில் பார்வதி ஒரு ராணி. அப்போது அங்கு வந்தார் மாப்பிள்ளை, சிவன், நீண்ட திருகு முடியுடன்...

 

சத்குரு:


யோக கலாச்சாரத்தில் ஒரு அழகான கதை உண்டு. ஆதியோகி சிவனுக்கும், பார்வதிக்கும் இடையிலான திருமணம் ஒரு கோலாகலமான நிகழ்வு. பார்வதி ஒரு இளவரசியாக இருந்ததால், அரசர்கள், அரசியர்கள், ஆண், பெண், கடவுளர்கள் என அந்தப் பகுதியின் பிரபலங்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தார்கள். ஒவ்வொருவரும் மற்றவரை மிஞ்சும் வகையில் அழகாக தோன்றும்படி உடையணிந்து இருந்தார்கள்.

அப்போது விரிந்த கூந்தலோடு (நீண்ட திருகு முடியுடன்), உடலெங்கும் தலை முதல் பாதம் வரை சாம்பலை பூசிக்கொண்டு, ரத்தம் சொட்டும் யானையின் தோலை அணிந்துகொண்டு பயங்கரமான தோற்றத்தோடு, மணமகன் சிவன் வந்தார். முழுபோதையில் ஆனந்த கிரக்கத்தில் இருந்தார். அவருடைய பரிவாரங்கள் அனைத்தும் மனித வடிவில் இல்லாத சிதைந்த உருவங்களாக இருந்தன. அவர்கள் அனைவரும் பெரும் கூச்சலெழுப்பியபடி யாருக்கும் புரியாத மொழியில் தங்களுக்குள் பேசியபடி வந்தனர்.

மணமகனைக் கண்ட பார்வதியின் தாயார் மீனா மயக்கமடைந்தார். சிவனிடம் சென்ற பார்வதி, “நீங்கள் இப்படி இருப்பதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. நீங்கள் நீங்களாகவே இருப்பதைத்தான் நானும் விரும்புகிறேன். என்னுடைய அம்மாவுக்காகவேணும் உங்களைச் சற்று ரம்மியமாக காட்டுங்கள்” என்று மன்றாடினார்.

அதற்கு இணங்கிய சிவன் தன்னை நல்லமுறையில் அலங்கரித்துக்கொண்டு, அழகிய உருவெடுத்து, மீண்டும் திருமணத்திற்கு வந்தார். சிவனின் மாறுபட்ட உருவத்தைக் கண்டவுடன் அனைவரும் அவரை சுந்தரமூர்த்தி என்று அழைத்தனர். தாங்கள் இதுவரை மனித உருவில் பார்த்தவர்களிலேயே மிகவும் அழகானவர் என்று அதற்கு பொருள். அவர் ஒன்பது அடி உயரமானவர். சிவன் நிற்கும்போது அவர் ஒரு குதிரையின் தலை உயரத்திற்கு இருந்தார். அவர் தென் இந்தியா வந்தபோது அங்கு இருக்கும் சராசரி பெண்களைவிடவும் இருமடங்கு உயரமாக இருப்பதாக கூறினார்கள். சாதாரணமாக அங்குள்ள பெண்கள் நாலரையில் இருந்து ஐந்து அடி உயரத்தில் இருப்பார்கள். அவர் ஏறக்குறைய ஒன்பது அடி உயரத்தோடு மிகவும் அழகானவராக இருந்ததால் அனைவரும் அவரது இருப்பில் பிரமித்துப் போனார்கள்.

சிவனும் பார்வதியும்: ஒரு சந்நியாசி இளவரசியை மணந்தபோது


திருமணத்திற்காக சிவன் அமர்ந்தார். இந்தியாவில், பொதுவாக இதுபோன்ற திருமணங்களில் மணமகன் மற்றும் மணமகளின் பூர்வீகத்தைப் பற்றி பெருமையுடன் அறிவிப்பார்கள். அவர்களது வம்சாவளி, எங்கிருந்து வருகிறார்கள், அவர்களது ரத்தம் எவ்வளவு சுத்தமானது என அவர்களின் வம்ச விருக்ஷத்தை ஆராய்ந்து தெரிவிப்பார்கள்.

மணமகளின் தந்தை ஹிமாவதன், இமயமலைப் பிராந்தியத்தின் அரசன். மணமகளின் பரம்பரையைப் பற்றி மிகவும் உயர்வாக சொல்லப்பட்டது. இப்போது அவர்கள் “மணமகனைப் பற்றி என்ன சொல்கிறீர்கள்?” என்றனர்.

சிவன் அமைதியாக எதுவும் சொல்லாமல் மௌனமாக அமர்ந்து இருந்தார். அவரோடு வந்த பரிவாரங்களோ யாரும் புரிந்துகொள்ள முடியாத மொழியில் பேசுகிறவர்கள். அர்த்தமில்லாத சத்தங்களை எழுப்பிக்கொண்டு இருந்தார்கள். இதனால் அவமானப்பட்ட மணமகளின் தந்தை “பூர்வீகம் இல்லாத ஒரு மனிதனா? அவர் எப்படி என் மகளை மணப்பார்? இவர் எங்கிருந்து வருகிறார்?, இவர் தாய் தந்தை யார்?, அவருடைய பரம்பரை என்ன என்று யாருக்குமே தெரியவில்லை, இவருக்கு எப்படி என் பெண்ணை கொடுப்பது?” என்று கோபத்தோடு எழுந்தார்.

அப்போது விருந்தினராக அங்கு வந்திருந்த நாரதமுனி முன்னால் வந்து தன் ஒற்றை கம்பியுடன் இருக்கும் ஏகதாரா என்னும் இசைக் கருவியில் ”டங்க், டங்க், டங்க்” என்று இசைத்தார்.

மேலும் கோபமடைந்த அரசர் “எதற்காக ஏகதாராவை இசைக்கிறீர்கள்?” என்றார்

“இதுதான் அவரது முன்னோடி. அவருக்கு தாயுமில்லை, தந்தையுமில்லை” என்றார் நாரதர்

“டங்க்”…. அவரது அடிப்படை நாதம், அதிர்வு. ஒலி அதிர்விலிருந்து பிறந்தவர் அவர், அவருக்கு பெற்றோர் இல்லை, முன்னோர்கள் இல்லை, பரம்பரை இல்லை. அவர் சுயம்புவாக தோன்றியவர் - தானாக உருவெடுத்தவர், முன்னோர்கள் இல்லாத தன்மையிலானவர்.

அரசர் மிகவும் பயப்பட்டார். ஆனாலும் திருமணம் நடந்தது.

சிவன் பார்வதி திருமணம்: இந்தக் கதையின் குறியீடு (உட்பொருள்)


இந்தக் கதை, நாம் ஆதியோகி என்று கூறும்போது, நாம் மரியாதையான, நாகரீகமான ஒரு மனிதனைக் குறிப்பிடவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. ஆனால் வாழ்க்கையோடு நாம் ஒன்றிணைந்த ஒரு முதன்மையான உருவத்தைக் குறிப்பிடுகிறோம். அவர் முழு விழிப்புணர்வோடு, முற்றிலும் பாசாங்கு இல்லாதவராக, ஒன்றையே மீண்டும் மீண்டும் சொல்லாதவராக, எப்போதும் தானாக முன்வந்து செய்பவராக, என்றென்றும் திறமை உள்ளவராக, இயல்பான படைப்பாற்றல் உள்ளவராக இருக்கிறார். வாழ்க்கையின் முழு உருவமும் அவர்தான்.

ஆன்மீக வழிமுறையின் அடிப்படை தேவையும் அதுதான். வெறும் எண்ணங்கள், நம்பிக்கைகள், கருத்துக்களின் குவியலாக இங்கே அமரும்போது, அதாவது, வெளியிலிருந்து பெறப்பட்ட ஒரு ஞாபகக் கோலை கையில் வைத்துக்கொண்டு இருக்கும்போது, உளவியல் வழிமுறைகளின் அடிமையாகத்தான் இருக்கிறீர்கள். ஆனால் வாழ்க்கையின் ஒரு பாகமாக இங்கு அமரும்போது இந்த இருப்பின் தன்மையோடு ஒன்றிணைந்து இருக்கிறீர்கள். நீங்கள் விரும்பினால், முழு பிரபஞ்சத்தையே அணுக முடியும்.

வாழ்க்கை உங்களுக்கு அனைத்தையும் திறந்தே வைத்திருக்கிறது. இந்த இருப்பு யாருக்கும், எதற்கும் தடை போடவில்லை. “தட்டுங்கள், திறக்கப்படும்” என்று எப்போதும் சொல்லியே இருக்கிறது. நீங்கள் தட்டக்கூடத் தேவையில்லை, ஏனென்றால் அங்கு உண்மையில் கதவே இல்லை. உங்களது வாழ்வின் ஞாபகங்களையும், திரும்பத் திரும்ப செய்யும் செயலையும் சற்றே தள்ளி வைக்க உங்களுக்கு தெரிந்தால், எளிமையாக கடந்து சென்றுவிடலாம். ஞானோதயத்திற்கான பாதை திறந்தே இருக்கிறது.

    Share

Related Tags

சிவன் மற்றும் அவரது குடும்பம்சிவன் கதைகள்

Get latest blogs on Shiva

Related Content

நந்தி காதில் சொன்னால் சிவன் கேட்பாரா?