logo
logo
தமிழ்
தமிழ்
பசுபதிநாத் கோவில், Pashupatinath Temple in Nepal

நேபாளத்தில் உள்ள பசுபதிநாத் கோவிலின் தனிச்சிறப்பு என்ன?

நேபாளத்தின் வரலாறு, பசுபதிநாத் கோவிலின் மகத்துவம், தந்த்ரா வழிமுறையின் தனித்துவம், பாண்டவர்கள் பாவம்போக்க சிவனைத்தேடிய நிகழ்வு, கோரக்நாத்தி மரபு போன்ற பல்வேறு அம்சங்கள் குறித்து சத்குரு வெளிப்படுத்திய ஆழமிக்க பார்வைகளின் ஒரு தொகுப்பாக இந்த கட்டுரை அமைகிறது.

பன்னிரண்டாயிரம் ஆண்டுகள் பழமையும் சரித்திரமும்…

சத்குரு: 12,000 ஆண்டுகளுக்கு மேலாக இந்த உயிர்ப்பான வரலாறு அல்லது பாரம்பரியம் இருந்துள்ளது. கடந்த 12,000 ஆண்டுகளில், ஒருநாள் கூட இடைவெளி இல்லாமல், இந்தியாவில் இருந்து மக்கள் கைலாயத்திற்கு யாத்திரை சென்று வந்துள்ளார்கள். உங்களைப் போல விமானத்தில் பறந்து வந்துவிட்டு, கூடாரத்தின் கீழ் உட்கார்ந்து, இப்போது வாகனங்களில் நீங்கள் பயணிப்பது போல அப்போது இருக்கவில்லை. நீங்கள் கற்பனை செய்து பார்க்கவேண்டும், சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, கோயம்புத்தூரில் இருந்து, காலில் பூட்ஸ் இல்லாமல், குளிர்தாங்கும் கனத்த ஜாக்கெட் இல்லாமல், கூடாரம் இல்லாமல், பதப்படுத்தப்பட்ட உணவுகள் இல்லாமல், ஒரு பையில் மாவும் சிறிது பருப்பும் எடுத்துக்கொண்டு, வெறுங்காலில் இப்படி அவர்கள் பயணம் செய்தார்கள்.

நீங்கள் இதை சிந்தித்துப் பார்க்கவேண்டும். தென்னிந்திய மக்களை இதற்கு உந்தியது எதுவாக இருந்திருக்கும்? தென்னிந்திய மக்களுக்கு குளிர் என்றால் தெரியாது, எப்போதும் தாயின் கருவறையில் இருப்பதுபோல கதகதப்பான சூழலில் இருக்கிறார்கள். சில சமயங்களில் சூடான தட்பவெப்பத்தை அவர்கள் சந்தித்ததுண்டு, ஆனால் குளிரைக் கண்டிருக்க மாட்டார்கள். அவர்கள் பனியினூடே இமயமலையைக் கடந்தார்கள். கைலாயத்தில் பனிமழை பொழிகிறது. அங்கு வெப்பநிலை -7, அது எளிதில் சரிந்து –13, -14 வரை செல்லும். சென்னைவாசிகள் பனியில் வெறுங்காலுடன் நடக்க அவர்களை எது உந்தியிருக்கும்? நீங்கள் சிந்திக்க வேண்டும். ஏனென்றால், மக்கள் இந்தப் பயணத்தில் இறங்கியபோது, ​​அவர்கள் திரும்பிச்செல்ல மாட்டார்கள் என்பது உறுதியானது போலத்தான். அவர்கள் திரும்பிச்செல்ல முடியாமல் போகலாம் என்று நன்கு தெரிந்தபோதும், அவர்கள் ஒரு ஆண்டு விடாமல் இந்த பயணத்தை மேற்கொண்டனர்.

இது ஏதோ சாகசத்திற்காக மலையேறிய யாரோ ஒருவர் என்று இல்லை, ஒவ்வொரு ஆண்டும் மக்கள் குழுக்களாக இந்தப் பயணத்தை மேற்கொள்கிறார்கள். எனவே, மிக சக்திவாய்ந்த ஏதோவொன்று அவர்களை உந்தியிருக்கிறது, மிக சக்திவாய்ந்த ஒன்று அவர்களை இத்தனை ஆண்டுகளாக ஈர்த்திருக்கிறது. 12,000 ஆண்டுகளின் கதைகளும் வரலாறும் உள்ளது. ஆனால் 12,000 வருடங்கள் ஒவ்வொரு வருடமும் நடக்க வேண்டும் என்றால், அதற்கு பலப்பல ஆண்டுகளுக்கு முன்பே மக்கள் அதைச் செய்துவந்திருக்க வேண்டும். அதற்கான எந்தவித பதிவும் வரலாறும் நம்மிடம் இல்லை, ஆனால் அவர்கள் அதைச் செய்திருக்க வேண்டும்; இல்லாவிட்டால் எப்படி திடீரென்று நடக்கும்? எதற்காக இந்த பயணம்?

நேபாளம் என்றால் என்ன…

நாம் நேபாளத்தில் இருக்கிறோம். இந்தியாவின் பெரும் பகுதிகள் ஒரு காலத்தில் இப்படித்தான் இருந்தது, அந்த இடத்தின் புவியியல் அமைப்பு முழுவதும் ஒரு உயிருள்ள உடலைப் போல உருவாக்கப்பட்டிருந்தது. மனித உடலில் எப்படி சக்திவாய்ந்த மையங்கள் இருக்கிறதோ, அதுபோல இந்த நிலவியல் உடல்களை நிறுவினார்கள். பல மன்னர்கள் தங்கள் சாம்ராஜ்யம் முழுவதையும் ஒரு ஆன்மீக உடலாக மாற்றும் இந்த மாபெரும் சாகசங்களுக்கு நிதியுதவி செய்தார்கள். ஆண், பெண், குழந்தை, விலங்கு, பறவை, புழு உட்பட யாரும் ஆன்மீக செயல்முறையிலிருந்து விடுபடக்கூடாது என இதைச் செய்தார்கள். ஆன்மீக செயல்முறை என்பது கண்களை மூடி கருவிழிகளைச் சுழற்றி உட்காருபவர்களுக்கு மட்டுமல்ல, யாரும் இதிலிருந்து விடுபடக்கூடாது என்பதுதான் நோக்கமாக இருந்தது.

இதுவே கருணையின் உச்சம் என்று சொல்லலாம், புழுக்கள் கூட இந்த சக்தியால் தீண்டப்படாமல் இருக்கக்கூடாது என்பதற்காக, புவியியல் முழுவதையும் ஒரு ஆன்மீக செயல்முறையாக மாற்றினார்கள். ஆனால் பெரும்பாலும் இந்தியாவின் வடக்குப் பகுதியில் செய்யப்பட்ட இந்த கட்டமைப்புகள் அல்லது பிரம்மாண்டமான வேலைப்பாடுகள் அழிக்கப்பட்டன, ஏனெனில் நாட்டின் வடக்குப் பகுதி படையெடுப்புகளுக்கு மேல் படையெடுப்புகளைக் கண்டது. படையெடுத்து வந்தவர்கள் முதலில் தாக்கியது இதைத்தான். ஏனென்றால் அவர்கள் இதை உடைத்தால், மக்களின் மனம் உடைந்துபோகும், அவர்களின் உற்சாகம் நிலைகுலையும் என்று அவர்களுக்குத் தெரியும்.

தெற்கில் இன்னும் கொஞ்சம் எஞ்சியிருக்கிறது. ஆனால் வெளியிலிருந்து வந்த படையெடுப்புகளால் அல்லாமல், எந்த எதிரியையும் விட ஆபத்தான அறியாமையின் படையெடுப்பால் அது சீர்குலைந்து இருக்கிறது. அந்த கட்டமைப்பின் மீதங்களை நீங்கள் இன்றும் காணலாம், ஆனால் அது உயிரோட்டமான செயல்முறையாக இல்லை. சில செயல்முறைகள் இன்னும் நடக்கின்றன, ஆனால் பெரும்பாலும் செயலிழந்து இருக்கின்றன. சில விஷயங்கள் உயிர்ப்பாக இருக்கின்றன, ஆனால் பெரும்பாலும் அழிந்துவிட்டன.

நேபாளம், இந்தியாவில் நீங்கள் காணக்கூடியதை விட மிக உயிர்ப்புடன் இருக்கும் இடமாக விளங்குகிறது. ஏனெனில் கலாச்சாரம் முழுவதும் இதற்கு உறுதுணையாக இருந்தது. இப்போதும் 98% மக்கள் இந்த செயல்முறைக்கு தங்களை அர்ப்பணித்துள்ளனர். இன்றும் நேபாளத்தில் உள்ள 98% மக்களுக்கு, கோவிலுக்கு செல்வதும், அவர்களின் முக்தியைத் தேடுவதும்தான் உயர்ந்த விஷயம். இந்தியாவில் இது பெரும்பாலும் அழிந்துவருகிறது, இல்லையா? இந்தியாவில் முக்தி இப்போது உயர்ந்தது இல்லை, அமெரிக்கா செல்வதுதான் மிக உயர்ந்த விஷயம். ஆகவே, ஒரு நாகரிகத்தின் உளவியலே இறுதியான விடுதலையை நோக்கி முழுமையாக செயல்படும்போது, புவியியலையே உயிருள்ள ஆன்மீக உடலாக மாற்றுவது சாத்தியமாகும்.

பசுபதிநாத் கோயிலின் சிறப்பு

காத்மாண்டுவில் உள்ள பசுபதிநாத் கோவில் பூமியிலேயே மிக முக்கியமான கோவிலாக சில மரபுகளில் கருதப்படுகிறது. இந்த கோவில் பல்லாயிரம் ஆண்டுகள் பழமையானது. கோவிலில் இருக்கும் லிங்கம் வேத காலத்துக்கு முந்தையது. வேதகாலம் என்பது 5000 முதல் 8000 ஆண்டுகளுக்கு முந்தையது. அந்த காலகட்டத்தின் 3000 ஆண்டுகள் வேதகாலம் என்று அழைக்கப்படுகிறது. இது வேதகாலத்திற்கும் முந்தையது. கோயில் பலமுறை இடிந்து எத்தனையோ முறை புனரமைக்கப்பட்டது, ஆனால் லிங்கமானது மிகவும் தொன்மையானது, வேதகாலத்திற்கு முன்பு நிறுவப்பட்டது. ஆரியப் படையெடுப்புகள் நடப்பதற்கு முன்பே இவை அமைக்கப்பட்டன.

பசுபதிநாத் சிவனின் நெற்றியாக காணப்படுகிறது, அவருடைய ஒரு உடல் தெற்கிலும், மற்றொரு உடல் மேற்கு நோக்கியும் பாய்கிறது. ஒரு தலை, இரண்டு உடல்கள். இந்த இரண்டு உடல்களும் தந்த்ராவின் இரண்டு அடிப்படை அமைப்புகளைக் குறிக்கின்றன. தெற்கு உடல் வலது கை, மேற்கு உடல் இடது கை. நான் தந்த்ரா என்று சொல்லும்போது, ​​இன்று நீங்கள் கேட்கும் தந்திரத்தைப் பற்றி நான் பேசவில்லை. தந்த்ரா என்றால் கட்டுப்பாடற்ற ஒழுக்கமின்மை அல்ல. இன்று, தந்த்ரா என்ற சொல் மக்கள் மனதில் எல்லா வகையான மோசமான விஷயங்களையும் தூண்டுகிறது, ஏனெனில் தந்த்ரா பற்றி உங்களுக்குத் தெரிந்த பெரும்பாலான தகவல்கள் அமெரிக்கக் கரையிலிருந்து வந்தவை. இந்தியாவில் கூட எந்த புத்தகக் கடைக்கு சென்றாலும், தந்த்ரா பற்றிய பெரும்பாலான புத்தகங்கள் அமெரிக்க எழுத்தாளர்களால் எழுதப்பட்டவை. நான் பேசுவது அப்படிப்பட்ட தந்த்ரா அல்ல.

தந்த்ரா எனும் நுட்பமான விஞ்ஞானம்

தந்த்ரா என்பது ஒரு நுட்பம் அல்லது அறிவு அல்லது உயிரை அழித்து மீண்டும் உயிரை உருவாக்கும் ஒரு குறிப்பிட்ட தொழில்நுட்பம். நோக்கம் என்ன? நான் உங்களுக்கு ஒரு இயந்திரத்தைக் கொடுத்தால், உதாரணத்திற்கு… நீங்கள் சிறுவயதில் இதை உங்கள் சைக்கிளில் முயற்சித்திருக்கலாம், உங்கள் சைக்கிளை பிரித்துப் பார்த்தீர்கள், அதை உங்களால் திருப்பி ஒன்றுசேர்க்க முடியவில்லை, அது உலோகக் குவியலாக மாறியது. இது உங்களுக்கு நடந்ததா?

எனவே நீங்கள் ஒரு இயந்திரத்தைப் புரிந்துகொள்ள விரும்பினால், அதை நீங்கள் அகற்றி, ஒவ்வொரு பகுதியாய் பார்த்து, அது என்ன என்பதைப் புரிந்துகொண்டு பிறகு அதை மீண்டும் சேர்த்து வைக்க வேண்டும். நீங்கள் மீண்டும் என்ஜினை கர்ஜிக்க வைத்தால், அது உங்களுக்கு புரிந்துவிட்டது. கலைத்துவிட்டு, திரும்பச் சேர்க்க முடியாவிட்டால் அரைகுறை அறிவு, ஆமாம்தானே? எப்படி பிரிப்பது என்று உங்களுக்குத் தெரியும், ஆனால் அதைத் திரும்ப சேர்ப்பது எப்படி என்று தெரியாது.

எனவே தந்த்ரா இந்த இயந்திரத்தை பிரித்துப் பார்ப்பது பற்றியது. (ஒருவரின் கட்டமைப்பைப் பற்றியது) இது மிகவும் அதிநவீன இயந்திரம், இது மிகப்பெரிய சவால். உங்களுக்கு இயந்திர மூளை இருந்தால், இந்த இயந்திரம் மிகப்பெரிய சவால். நீங்கள் இதைப் பிரித்து மீண்டும் சேர்க்க முடிந்தால், நீங்கள் பல வழிகளில் படைப்பாளரைப் போலவே சிறந்தவர்.

ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணருக்கு அவரது காரில் ஒரு சிறிய பிரச்சனை இருந்தது, அதனால் அவர் அதை ஒரு உள்ளூர் மெக்கானிக்கிடம் கொண்டு சென்று இயந்திர கோளாறு காரணமாக அங்கே விட்டுச் சென்றார். மூன்று நாட்களுக்குப் பிறகு, அவர் குறிப்பிட்ட தேதியில் காரை எடுக்க அங்கு சென்றார், ஆனால் அவர் அங்கு சென்றபோது கார் தயாராக இல்லை. எனவே அவர் கேட்டார், 'உங்களுக்குத் தெரியும், நான் ஒரு இருதய அறுவை சிகிச்சை நிபுணர். யாரோ ஒருவரின் இதயம் படபடக்கும் போது, அவர்கள் என்னை அழைத்தால், நான் விரைந்து செல்ல வேண்டும், எனக்கு என் கார் வேண்டும், தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்'. 'நாளை வாருங்கள்’ என்றார் மெக்கானிக்.

அவர் அடுத்த நாள் சென்றார், இன்னும் அது பிரித்துப்போட்ட நிலையில்தான் இருந்தது. அவர், 'என்னிடம் ஏன் இப்படிச் செய்கிறாய்?' நீ முதலில் நேற்று என்றாய், அது தயாராக இல்லை, இன்றும் தயாராகவில்லை, என்ன பிரச்சனை?' மெக்கானிக் அவரை கொஞ்சம் முறைத்துப் பார்த்தார். கைகளில் இருந்த கிரீஸைத் துடைத்துவிட்டு, 'நீ என்ன பெரிய விஷயம் செய்கிறாய்? நீங்களும் இன்ஜின்களை சரிசெய்கிறீர்கள்தானே? இதயம் ஒரு இயந்திரம் போன்றது. நீங்களும் ஒரு இயந்திரத்தை சரிசெய்கிறீர்கள், நானும் ஒரு இயந்திரத்தை சரிசெய்கிறேன். நீங்கள் 4 வால்வுகளுடன் ஒரு இயந்திரத்தை சரிசெய்கிறீர்கள்; நான் 16 வால்வுகளுடன் ஒரு இயந்திரத்தை சரிசெய்கிறேன். அப்படியென்றால், என்னைவிட 100 மடங்கு அதிக சம்பளம் ஏன்?' இருதய அறுவை சிகிச்சை நிபுணர் அவரைப் பார்த்து, 'இன்ஜின் ஆன் ஆனவுடன் சரிசெய்து பாருங்கள்' என்றார்.

ஆகவே, நீங்கள் இந்த வாழ்க்கையை (தன்னைக் குறிப்பிடுவது), இந்த இயந்திரத்தை அகற்றி, அதைத் திரும்ப சேர்க்க முடிந்தால், அது மிகப்பெரிய விஷயம்.

தந்த்ரா உணர்த்தும் குறியீடு

இந்தியாவில் இருந்து வந்தவர்களும், இந்தியாவில் காலண்டர் படங்களைப் பார்ப்பதற்கே சிறிது நேரம் செலவழித்தவர்களும், சில சமயங்களில் ஒரு யோகி அல்லது சில சமயங்களில் ஒரு பெண் தன் தலையையோ அல்லது வேறொருவரின் தலையையோ கழற்றி கையில் வைத்துக்கொண்டு நடந்து செல்வதை பார்த்திருப்பீர்கள். இந்த படத்தைப் பார்த்திருக்கிறீர்களா? எனவே, இந்த வாழ்க்கையைத் தகர்த்து, உங்கள் சொந்த தலையை உங்கள் கையில் எடுத்துக்கொண்டு, எல்லாவற்றையும் திரும்பப் பெறுவது பற்றிய அடிப்படை தாந்த்ரீக கற்பனை இதுவாகும். இது ஒரு குறியீடாகும், இது அவசியமில்லை, ஆனால் உண்மையில் அதுவும் செய்யப்படுகிறது, மக்கள் தலை துண்டிக்கப்பட்டு அது மீண்டும் சேர்த்து வைக்கப்படுகிறது.

எனவே, இந்த அடிப்படை தாந்த்ரீகப் படங்கள், இது வாழ்க்கையின் இயக்கவியலைப் பற்றியது, இந்த இயந்திரத்தை மிகச் சரியாக புரிந்துகொள்வது, நீங்கள் அதை முழுவதுமாக அகற்றி மீண்டும் ஒன்று சேர்க்கலாம். எனவே இதன் அடிப்படையில்... நான் தந்திரம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தும்போது, ​​இந்தச் சூழலில் இருந்து நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று விரும்புகிறேன். எனவே இந்த சூழலில் அவர்கள் ஒரு தலையுடன் இரண்டு தாந்த்ரீக உடல்களை உருவாக்கினர். நெற்றி இங்கே, பசுபதிநாத்தில் உள்ளது. தலையின் உச்சியில் உள்ள சஹஸ்ரார் கல்பநாத்திலும், மேலே இருப்பது முக்திநாத்திலும், அப்பால் இருப்பது கைலாயத்திலும் உள்ளது. நீங்கள் தெற்கே பாய்ந்தால், கேதார் என்பது கூம்பு, துங்கநாத் கொம்புகள், மத்யமஹேஸ்வரர் தொப்புள் - இதுபோல பசுபதிநாத்திற்கு கீழே ஐந்து சக்ரா, ஒன்று தெற்கே, ஒன்று மேற்கு நோக்கி பாய்கிறது; ஒரே தலையுடன் இரண்டு உடல்கள். இந்த இரண்டு உடல்களும் வெவ்வேறு வகையான மக்கள் அதைப் பயன்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டன. ஒன்று இடது பாதை, அது ஒரு தீவிர பாதை, எந்த தடையும் இல்லை. தெற்கு ஒரு ஒழுக்கமான பாதை.

எனவே, பெரும்பாலும் இந்திய துணைக்கண்டம் யோகப் பாதையை தேர்ந்தெடுத்தது, ஏனெனில் அது ஒழுக்கத்தின் பாதை. தென்பகுதியுடன் ஒப்பிடும்போது சிறிய உடலாக இருக்கும் இந்தப் பாதை, இன்று தாந்த்ரீகப் பாதை என்று அழைக்கப்படுகிறது, எந்தவிதமான தடையும் இல்லை, இது வெளிப்புற சூழ்நிலைகளைக் கொண்டது. யோகாவுக்கு வெளிப்புற சூழ்நிலைகள் பொருந்துவதில்லை. யோகா என்பது முழுக்க முழுக்க உள்நிலை சம்பந்தப்பட்ட செயல்முறை. இந்த செயல்முறையைச் செய்ய உங்களுக்கு எதுவும் அல்லது யாரும் தேவையில்லை, இது முற்றிலும் உள்நிலை பற்றியது. இது மிகவும் நுட்பமான பாதை, ஏனென்றால் அதற்கு எந்த பொருளும் தேவையில்லை, எந்த சடங்கும் தேவையில்லை, எந்த வகையான வெளிப்புற சூழ்நிலைகளும் தேவையில்லை; நீங்கள் எங்கிருந்தாலும், கண்களை மூடி உட்கார்ந்தால் நீங்கள் தான் சூழ்நிலை, நீங்கள் தான் உலகம். அதனால் யோகப் பாதை தெற்கு நோக்கி ஓடியது. தாந்த்ரீகம் என்று குறிப்பிடப்படுவது மேற்கு நோக்கி ஓடியது. அது மேற்கு நோக்கி சென்றது. உண்மையில் வெகுதொலைவில் மேற்கு. அவர்கள் அதை கற்பனை செய்ததாக நான் நினைக்கவில்லை, ஆனால் அது மேற்கு நோக்கி வெகுதூரம் சென்றது.

பசுபதிநாத் என்றால்... (Pasupathi Meaning in Tamil)

பசுபதி என்றால் - பசு என்றால் உயிர், பதி என்றால் இறைவன் - எல்லா உயிர்களுக்கும் இறைவன். ஒரு மனிதன் ஒரு உயிராகப் பார்க்கப்படுகிறான். ஒரு மனிதன், யோக முறையிலும், நிச்சயமாக நவீன இயற்கை அறிவியல் மற்றும் உயிரியலிலும், விலங்குகளின் ராஜ்ஜியத்தின் உச்சியில் காணப்படுகிறான். இன்று, உங்களில் பலருக்கு இது தெரிந்திருக்கலாம், நீங்கள் ஒரு குரங்கு என்று சார்லஸ் டார்வின் சொன்னது உங்களுக்குத் தெரியும், மேலும் வால் தவறுதலாக கீழே விழுந்து நீங்கள் இப்படி ஆகியிருக்கலாம். எனவே நீங்கள் தான் பரிணாம வளர்ச்சியின் உச்சம். இந்த பரிணாம செயல்முறையின் அனைத்து அம்சங்களும் உங்களிடம் இல்லை என்று அர்த்தமில்லை, ஏனென்றால் மனித DNA (மூலக்கூறு) மனிதக்குரங்கில் இருந்து 1.23% மாறுபாட்டை மட்டுமே காட்டுகிறது. நீங்கள் உண்மையில் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறீர்கள். இது மனித DNAவான மனிதக்குரங்கில் இருந்து 1.23% மட்டுமே வித்தியாசமானது. எவ்வளவு பெரிய வித்தியாசம் பாருங்கள்! இதனாலேயே சில நேரங்களில், உங்களுக்குத் தெரியும், மக்கள் அந்த 1.23% ஐப் புறக்கணித்து, இப்படி நடந்துகொள்ளத் தொடங்குகிறார்கள். இது ஒரு சிறிய மாற்றம், ஆனால் அது ஒரு பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே பரிணாம அளவில், மனிதன் விலங்கு ராஜ்ஜியத்தின் உச்சக்கட்டம், எனவே இந்தியாவில் பாரம்பரியம் தெய்வீகத்தின் மறுபிறவிகளைப் பற்றி பேசுகிறது, இது மீனிலிருந்து தொடங்குகிறது, இது தண்ணீருக்குள் ஒரு வாழ்க்கை, பின்னர் நில-நீர் வாழ்வன, இது கூர்ம-அவதாரம், ஆமை, பின்னர் வராஹ அவதாரம், பன்றி, மற்றும் பாதி மனிதன், பாதி விலங்கு, பின்னர் ஒரு பிக்மி (குள்ளர்) போன்ற ஒரு மனிதன், பின்னர் ஒரு நேரான மனிதன், பின்னர் பல்வேறு நிலைகள் கொண்ட மனிதன், உயர்ந்த மற்றும் உயர்ந்த நுண்ணறிவு மற்றும் பெரிய மற்றும் பெரிய சாத்தியக்கூறுகளின் பல்வேறு மனித வடிவங்கள். தெய்வீகத்தின் இந்த ஒன்பது அவதாரங்களும் உங்களுக்கு பரிணாமக் கோட்பாடு மட்டுமே. எனவே இந்தச் சூழலில் நாம் மனிதனைப் பற்றி பேசுவது ஒரு பசுபதா; அதாவது வாழ்க்கை வடிவக் குவியலின்மேல் இருப்பவர்.

பசுபதியான சிவன்

எனவே இந்த உயிர் வடிவங்கள் அனைத்தின் உச்சமாக இருப்பது என்றால், குரங்கின் ஆர்வம், பாம்பின் விஷம், பன்றியின் காமம், இவை அனைத்தும் உங்களிடம் உள்ளன. இவை அனைத்தும் மனித குணங்களில் விளையாடுகின்றன, இல்லையா? உங்களிடம் இல்லை என்று ஒரு உயிரினத்தின் அடையாளத்தை சொல்லுங்கள். எல்லா உயிரினங்களும் உங்கள் மூலம் விளையாடுகின்றன, எனவே இந்த ஆன்மீக செயல்முறைகள் அனைத்தும், ஒரு மனிதன் விழிப்புணர்வோடு இருப்பது பற்றியது. ஏனென்றால் இந்த முழு முயற்சியும், உங்களை ஒரு செல் உயிரினத்திலிருந்து இவ்வளவு சிக்கலான இயந்திரநுட்பமாக மாற்றும் இயற்கையின் முயற்சியை வீணாக்கிவிடும், ஏனென்றால் அவர்கள் தொடர்ந்து விளையாடுவார்கள்.

நீங்கள் மனித உடலில் இருந்துகொண்டே குரங்கு, பன்றி, பாம்பு, ஆமை என எதுவாகவும் நடந்துகொள்ளலாம். நீங்கள் விழிப்புணர்வை அடையாதவரை அடுத்த கட்டத்துக்கு செல்லாமல் இன்னும் அப்படியே நடந்துகொள்பவராக இருக்கலாம். அதனால் சிவன் அதற்கு மேலே உயர்ந்தார், பசுபதாவாக இருந்து அவர் பசுபதி ஆனார், அவர் இறைவன் ஆனார், அதாவது அவர் தனக்குள்ளே மிருக இயல்பை முழுமையாக ஆளுமைகொண்டார், அவர் விலங்கு இயல்பிலிருந்து விடுபட்டு, தனக்குள்ளே இருந்த எல்லா பரிமாணங்களின் பாதிப்பில்லாமல் யோகியாக இங்கே அமர்ந்தார், அவர் அதற்கும் அப்பால் ஆனார்.

எனவே இந்த பசுபதிநாத் கோயில் முக்கியத்துவம் வாய்ந்தது, ஏனெனில் இது உடல் தாண்டிய அனுபவத்திற்கான இடம்.

கல்பநாத் & முக்திநாத் – மகத்துவம் என்ன?

கல்பநாத்... கல்ப என்றால் படைப்பு. நீங்கள் பிறந்தபோது, ​​11 மாதங்கள் கழித்துப் பிறந்தாலும்... எவ்வளவு காலம் அங்கு இருந்தீர்கள்? நீங்கள் முழு கர்ப்பகாலம் முடிந்து பிறந்தாலும், உடலின் ஒரு பாகம் இன்னும் உருவாகாமல் இருந்தது, எது தெரியுமா? தலையின் மேல்பகுதி. அது மட்டும் உருவாகாமலே இருக்கும், ஏனெனில் அதுதான் உங்கள் பெற்றோர்கள் உங்களின் வாழ்க்கைக்காக வழங்கிய சதை குவியலுக்குள் உயிர்சக்தி நுழையும் பாதையாகும். நீங்கள் உயிரை உருவாக்கவில்லை, உயிருக்கான ஒரு பாத்திரத்தை மட்டுமே உருவாக்குகிறீர்கள். நீங்கள் ஒரு கிண்ணத்தை உருவாக்குகிறீர்கள், நீங்கள் ஒரு பாத்திரத்தை உருவாக்குகிறீர்கள், ஆனால் உயிர்சக்தி நுழைய வேண்டும். எனவே அந்த பாகம் உருவாக்கப்படவில்லை, ஏனென்றால் அதுதான் நுழைவு வழி, மேலும் அதில் பல்வேறு அம்சங்கள் உள்ளன, நாம் இப்போது அதற்குள் செல்லமாட்டோம். எனவே இதுதான் கல்பா, இங்குதான் உயிர் தொடங்கியது. உயிர் உடலினுள் நுழைந்தது, அதுவே கல்பநாத். அதையும் தாண்டி முக்திநாத் உள்ளது. மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளன; 112 உடல் மண்டலத்தில் உள்ளன, மீதி இரண்டும் மேலே உள்ளன. எனவே 113வது முக்திநாத் என்று குறிப்பிடப்படுகிறது, ஏனெனில் அது முக்தியின் புள்ளி மற்றும் 114வது கைலாஷ் என்று அழைக்கப்படுகிறது, அதுவே சிவனின் இருப்பிடம்.

எனவே நாம் கைலாயம் செல்வதற்கு முன் பசுபதிநாத்திற்கு வருவது முக்கியம். நீங்கள் உலகிலிருந்து வெளியேறுவதை நாங்கள் விரும்பாததால் நாம் முக்திநாத்தைக் கடந்து செல்வோம். நீங்கள் ஒரு சுற்றுலாப் பயணி; நீங்கள் இதையெல்லாம் பார்த்துவிட்டு மீண்டும் உயிர்பெற விரும்புகிறீர்கள், இல்லையா? நீங்கள் இதன் மூலம் உலகிலிருந்து வெளியேறத் திட்டமிடவில்லை, எனவே நாங்கள் முக்திநாத்தை தவிர்ப்போம்.

ஆக்கிரமிப்புக்கு உள்ளான முக்திநாத்

முக்திநாத் ஒரு பெரிய ஈர்ப்பாக மாறியது, ஏனென்றால் முழு கலாச்சாரமும், முழு நாகரிகமும் முக்தி அல்லது இறுதி விடுதலையை நோக்கிச் சென்றது. மக்கள் அதை நாடிச் சென்றனர்; அவர்கள் அதை நோக்கி மொத்தமாக சென்றார்கள். சிறிது காலம் கழித்து அது ஒரு விரும்பத்தக்க இடமாக மாறியது, எனவே எல்லோரும் அந்த இடத்தைக் கைப்பற்ற விரும்பினர். ராஜாவுக்குப் பின் ராஜா, அந்த இடத்தைக் கைப்பற்றினால் முக்தி கிடைக்கும் என்று நினைத்தார்கள் - அதற்காக சென்றார்கள். எனவே இந்த கோவில் நூறு முறை இடிக்கப்பட்டு நூற்றுக்கணக்கான முறை வெவ்வேறு நபர்களால் வெவ்வேறு காலகட்டங்களில் புனரமைக்கப்பட்டது, அவர்கள் மாறினர்... அவர்கள் தெய்வத்தை கூட பலமுறை மாற்றினர். எல்லா வகையான தெய்வங்களும் எழுந்தன.

தற்போது அங்கே விஷ்ணு சிலை உள்ளது. மேலும் அனைவரையும் கவர்ந்திழுக்க, அவர்கள் உருவாக்கிய தெய்வம்... இது ஒரு தங்க சிலை, கிட்டத்தட்ட முழுமையாக வளர்ந்த மனிதனின் அளவு. பின்னர் அதெல்லாம் தேவையில்லை என்பதுபோல, பௌத்தர்கள் வந்து, அவர்களின் கலாச்சாரமும் அவர்களின் நிர்வாணா அல்லது முக்தி என்று அவர்களும் முக்திநாத் சென்று அமைப்பு ஏற்படுத்தி, 'இது எங்களுக்கு முக்கியம்' என்றார்கள். எல்லோரும் முக்திக்காக பாடுபடுவதை விட முக்திநாத்தை ஆக்கிரமிப்பு செய்ய விரும்பினர். எனவே, இது நடந்தது. முக்திநாத், இது ஒரு அற்புதமான இடமாக இருந்தாலும், நான் உங்களை ஆக்கிரமிப்பு செய்த இடத்திற்கு அழைத்துச் செல்ல விரும்பவில்லை, எனவே நாம் முக்திநாத்தை விட்டுவிட்டு கைலாயத்திற்கு செல்கிறோம், ஏனென்றால் நீங்கள் வீட்டிற்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று விரும்புகிறோம், இல்லையா?

பசுபதிநாத் கோவில் இங்கு உள்ளது, நீங்கள் தரிசனம் செய்யப் போகிறீர்கள், உங்கள் நிறம் (உடல் வண்ணம்) குறைவாக இருந்தால் உங்களுக்கு சிரமம் இல்லை. உங்களுக்கு பொன்னிற முடி இருந்தால், நிறைய பிரச்சனைகள், சரியா? அவர்கள் எந்த காரணத்திற்காகவோ உங்களை அனுமதிக்க மாட்டார்கள். ஆனால், இப்போதைக்கு அங்கே போனால் மீன் மார்க்கெட் போல தோன்றுகிறது. மீன் மார்க்கெட் போல இயங்குகிறது. அதுதான் அதன் சோகம், அதுவே இதன் அழகு, ஏனென்றால் மீன் மார்க்கெட் போல இயங்கினாலும், அங்கே இருப்பதைப் பற்றி முற்றிலும் அறியாத மனிதர்களின் கைகளில் அது இருந்தாலும், அது இன்னும் உயிருடன் இருக்கிறது. அனைத்தும் நேற்று செய்யப்பட்டது போல. அது உயிரோட்டமாக இருக்கிறது, அறியாமையால் இதை அழிக்க முடியவில்லை, அதுதான் இதன் அழகு, அதுதான் சோகம். எனவே, நீங்கள் பசுபதிநாத் தரிசனம் செய்யும்போது, ​​இந்த இடம் மக்கள் மதிப்பாக வணங்கிய இடம் மட்டுமல்ல, அனுபவித்து, அவர்களின் இறுதி நிலையான முக்திக்கு படிக்கல்லாகப் பயன்படுத்தப்பட்ட ஒரு இடம் என்பதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று நான் விரும்புகிறேன். எத்தனை ஆயிரம் ஆண்டுகள் என்று தெரியாது, ஆனால் லிங்கம் பழங்கால வேதத்திற்கு முந்தையது. எனவே குறைந்தபட்சம், 8,000 ஆண்டுகள்; அதைவிடவும் அதிகமாக இருக்கும்.

நான்கு முகங்கள் கொண்ட லிங்கம்

பசுபதிநாத், அங்குள்ள லிங்கத்திற்கு நான்கு முகங்கள் உள்ளன. உங்களை நோக்கியுள்ள, நீங்கள் பார்க்கும் ஒரு முகம் கிழக்கு முகம். இது சத்புருஷம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது உயர்ந்த வகையான உயிர். மேற்கு முகம் சத்யோஜதா என்று அழைக்கப்படுகிறது. வடக்கு முகம் வாமதேவர் என்று அழைக்கப்படுகிறது. தெற்கு முகம் அகோரா என்று அழைக்கப்படுகிறது. ஒருவர் மிக உயர்ந்த வகை உயிரினம், மற்றொருவர் மகிழ்ச்சியை அளிப்பவர், மற்றொருவர் அமானுஷ்ய அறிவியலில் தேர்ச்சி பெற்றவர், மற்றொருவர் அகோரி, அதாவது அவர் மோசமானவற்றைத் தாண்டியவர், கோரமானது அவரைத் தொடாது. அவருக்கு வெறுப்பூட்டும்படி எதுவும் இல்லை; அவர் அனைத்தையும் தழுவி ஏற்றுக்கொண்ட வகையானவர். எனவே அது தெற்கு முகம். சிவன் அந்த மாதிரியான முகத்துடன், அனைத்தையும் தழுவிய முகத்துடன் தென்திசையைப் பார்த்தார், அன்பில் அல்ல, இரக்கத்தில் அல்ல, வெறும் உயிராக.

இந்த இரக்கம் (கருணை), அன்பு, இந்த வார்த்தைகள் அனைத்தும் வாழ்க்கையை ஏதோ ஒருவகையில் பின்பற்றுவதற்காக மனிதர்களால் கண்டுபிடிக்கப்பட்டவை. குறைந்தபட்சம் அவர்கள் வாழ்க்கை செயல்முறையைப் பின்பற்ற விரும்புகிறார்கள், ஏனெனில் வாழ்க்கை செயல்முறை அனைத்தையும் உள்ளடக்கியது. 'I love you, I love you, I love you' என்று ஒருவரைச் சேர்க்க முயல்கிறார்கள். ஒரு நாளைக்கு 108 முறை இதைச் சொல்ல வேண்டும், இல்லையெனில் நீங்கள் விரும்பியவர்களை மறந்துவிடுவீர்கள். எனவே, சிவன் ஒரு குறிப்பிட்ட பார்வையுடன் தெற்கு நோக்கி பார்த்தார். அவர் உங்களை எளிமையாகப் பார்த்தார், அதைப்போலவே, அன்போடு அல்ல, கருணையுடன் அல்ல, எதனுடனும் பார்க்கவில்லை, உங்களை வெறுமனே உயிராகப் பார்த்தார், அந்த குணம் தெற்கின் ஒவ்வொரு அம்சத்திலும் ஊடுருவியது. தெற்கு என்று சொல்லும்போது, ​​இமயமலைக்கு தெற்கே உள்ள அனைத்துமே தெற்கு, சென்னை மட்டும் அல்ல.

பசுபதிநாத் இன்று நாம் இருக்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த இடமாகும், இந்த உடல் பலவழிகளில் இருந்தாலும்... நான், உடல், ஆன்மீக உடல் என்று சொல்லும்போது, ​​அதைப் பற்றிய சிறந்த உணர்வை உங்களுக்கு வழங்க, ஒரு தேசம் எப்படி ஒரு உடலாகும், உங்களுக்கு புரியும் வகையில் - எடுத்துக்காட்டாக, தியானலிங்கம் என்பது ஏழு சக்கரங்களின் முழு செயல்பாட்டில் மற்றும் உயிர்த்துடிப்புடன் இருக்கும் ஒரு ஆன்மீக உடல். இதைவிட பெரிய உடலை நாம் எளிதாக உருவாக்க முடியும், ஆனால் அதை பராமரிப்பது மிகவும் கடினமாக இருக்கும்.

பசுபதிநாத்தில் நுழையக்கூடியவர்கள், உங்களில் பலரால் முடியும், எனவே தயவுசெய்து அதைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள், இல்லையெனில் மிக அருமையான தேவி கோவில்கள் உள்ளன, அவையும் பெண் உடல்கள். தேவி உடலும் பல வழிகளில் உருவாக்கப்பட்டுள்ளது; அது இதைப்போல் முழுமையான செயல்முறையை கொண்டது இல்லை. இந்த உடலை உருவாக்கும் இந்த முழு செயல்முறையும், அங்கு அது ஆணும் பெண்ணும் இல்லை, அதனால்தான் சிவன் என்று சொல்கிறோம், ஏனென்றால் சிவன் ஆணோ பெண்ணோ இல்லை. இதில் பிரபலமான சித்தரிப்பு அவர் அர்த்தநாரி என்பதாகும் - ஒரு பாதி பெண்பால், மற்றொரு பாதி ஆண்பால். இதன் பின்னணியில் உள்ள கதையும் புராணக்கதையும் இப்படித்தான் இருக்கிறது.

பஞ்ச பாண்டவர்கள்

பாண்டவர்கள், அந்த ஐவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். இந்த ஐந்து சகோதரர்கள்... உங்களில் இந்தியப் பின்னணியில் இருந்து வராதவர்களுக்கு, குருக்ஷேத்திரப் போர் நடந்தது, இந்த ஐந்து சகோதரர்களுக்கும் மறுபுறம் 100 உறவினர் சகோதரர்களுக்கும் இடையே சண்டை நடந்தது, இந்த போர்க்களத்தில் தான் கிருஷ்ணர் கீதையாக மாறி போதனையைக் கொடுத்தது, புகழ்பெற்ற புத்தகம்; இது இந்தியாவின் பைபிள் போன்றது. இந்தியாவில் எத்தனையோ பைபிள்கள் உள்ளன, அதுதான் பிரச்சனை. அதனால் எதைப் படிப்பது என்று மக்களுக்குத் தெரியவில்லை, எதைப் படிப்பது என்று அவர்கள் இன்னும் யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு புனித புத்தகம் நிறைய பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். அவற்றில் நிறைய உள்ளன, எனவே யாரும் எதையும் படிப்பதில்லை, ஏனென்றால் எதைப் படிக்க வேண்டும் என்பதை அவர்களால் தீர்மானிக்க முடியாது. என்னால் கூட முடிவு செய்ய முடியவில்லை, அதனால் நான் ஒருபோதும் படிக்கவில்லை, நான் கண்களை மூடிக்கொண்டு இதைப் படிக்கத் தேர்ந்தெடுத்தேன். (தன்னையே சுட்டிக்காட்டி).

பாண்டவர்கள் செய்த கோத்ர வதம்

அதனால் இந்தப் போர்க்களத்தில் கீதை கொடுக்கப்பட்டு, பாண்டவர்கள் போரில் வெற்றி பெற்றனர். நீங்கள் போரில் வெற்றிபெற வேண்டும் என்றால், நிச்சயமாக நீங்கள் பல மக்களை படுகொலை செய்ய வேண்டும். அவர்கள் செய்தார்கள். இந்த படுகொலையில் சில விசித்திரமான எதிரிகள் இல்லை, அதில் அவர்களின் சகோதரர்கள், அவர்களின் நெருங்கிய நண்பர்கள், உறவினர்கள், அவர்களின் தாத்தா, அவர்களின் குரு, தங்கள் வாழ்க்கையில் முக்கியமான அனைவரையும் கொன்றனர், ஏனென்றால் அவர்கள் போரில் வெற்றிபெற வேண்டும். அவர்கள் எல்லா வகைகளையும் பயன்படுத்தி படுகொலை செய்தனர். தந்திரங்கள் மற்றும் வஞ்சகமான முறைகள் - உங்களுக்கு தெரியும், போரில் எல்லாம் நியாயமானது.

காதல் பற்றி எங்களுக்குத் தெரியாது, ஏனென்றால் அது போரைப் போல அடிக்கடி நடப்பதில்லை. பெரிய அளவிலான காதல் விவகாரங்கள் போர் போல அடிக்கடி நடந்ததில்லை, அப்படித்தானே? ஒரு போரில் பத்து லட்சம் மக்கள் நேரடியாக ஈடுபடலாம். இன்று லட்சக்கணக்கான மக்கள் காதலிக்கும் சூழ்நிலையை நீங்கள் எப்போதாவது பார்த்திருக்கிறீர்களா? இல்லை. நாம் பெரிய அளவிலான காதல் விவகாரங்களைப் பார்த்ததில்லை, அடிக்கடி போர்களைப் பார்க்கிறோம். ஆனால் போரில் எல்லாம் நியாயமானது என்று நமக்குத் தெரியும், எனவே அவர்கள் எல்லா வகையான முறைகளையும் பின்பற்றினர். அவர்கள் போரில் வென்றனர், ஆனால் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்றனர். அதனால் அவர்கள் கோத்ர-வதம் என்று அழைக்கப்படுவதிலிருந்து மீளவேண்டியிருந்தது.

கோத்ர-வதம் என்றால் அவர்கள் தங்கள் சொந்த குலத்தையே கொல்வதாகும். உங்கள் சொந்த சகோதரரின் இரத்தத்தை சிந்தவைப்பது கலாச்சாரத்தில் அனுமதிக்கப்படவில்லை. நீங்கள் சண்டையிட்டால், அது வெளியில் இருந்து வரும் விசித்திரமான மனிதருடன். நீங்கள் உங்கள் சொந்த குலத்துடன் சண்டையிடுவதில்லை. அவர்கள் தங்கள் சொந்த குலத்துடன் சண்டையிட்டார்கள், அவர்களின் கைகள் அனைத்து வகையான இரத்தத்தால் பூசப்பட்டன, தங்கள் குரு, அவர்களின் தாத்தா, அவர்களின் சகோதரர்கள், அவர்களின் மாமாக்கள். குழந்தைகள் கூட, இன்னும் 16 வயது கூட ஆகாதவர்களையும் அவர்கள் கொல்ல வேண்டியிருந்தது, ஏனென்றால் அவர்களும் ஆர்வத்துடன் போரில் நுழைந்தனர். அதனால் அவர்கள் தங்கள் சொந்த குலத்தையே கொன்றுவிட்ட இந்த கர்மத்தில் இருந்து விடுபட விரும்பி, குற்ற உணர்ச்சியில் தவித்தனர். அவர்கள் ராஜாக்கள் ஆனார்கள், இந்த விரிவடைந்த சாம்ராஜ்யத்தின் ராஜாக்களாக ஆட்சி செய்தார்கள், ஆனால் திருப்தியடையவில்லை, நிறைவு இல்லை, துன்பம் இருந்தது, குற்ற உணர்வு இருந்தது, அவர்களின் கைகளில் இருக்கும் இரத்தக் கறையை எடுக்க முடியவில்லை. எனவே அவர்கள் இந்த கர்மாவிலிருந்து விடுபட விரும்பினர்,

சிவனைத் தேடிய பாண்டவர்கள்

இதை வேறு யாராலும் செய்யமுடியாது என்பதை அவர்கள் அறிந்தார்கள், சிவன் ஒருவரே இந்த பாவத்திலிருந்து அவர்களை விடுவிக்க முடியும்.

அதனால் அவர்கள் அரசர் பதவி முடிந்து, முதுமை அடைந்து ராஜ்ஜியத்தை பிள்ளைகளிடம் ஒப்படைத்துவிட்டு, எந்த பலனும் இல்லாமல் சிவனைத் தேடி சென்றனர். அவர்கள் விரைவாக சரிசெய்ய விரும்பினார்கள். பலர் என்னிடம் வந்து, 'சத்குரு, என் கர்மவினைக்கு உங்களால் ஏதாவது செய்ய முடியுமா? நான் தினமும் உட்கார்ந்து தியானம் செய்ய விரும்பவில்லை. எனக்கு ஏதாவது சீக்கிரம் செய்ய முடியுமா?' எனக்கு அப்படிப்பட்ட வாடிக்கையாளர்கள் இருக்கிறார்கள். எனவே இந்த ஐந்து பேரும் சிவனைப் பின்தொடர்ந்தனர், அவர்களுக்கு விரைவில் தீர்வு வேண்டும், தங்கள் கைகளில் உள்ள இரத்தத்தை முழுமையாக கழுவ வேண்டும் என்று அவர்கள் விரும்பினார்கள். அனைத்து கொலைகளும் முடிந்து, அதிலிருந்து விடுபட்டு, அவர்கள் நிச்சயமாக இறுதி விடுதலையான முக்திக்கு செல்ல விரும்பினர். எனவே அவர்கள் சிவனை நாடிச் சென்றனர்.

சிவன் அவர்களுக்கு ஒரு எளிதான திட்டத்தைக் கொடுக்க விரும்பவில்லை, அவர்கள் மீண்டும் இதுபோன்ற செயல்களைச் செய்யாமல் இருக்க அவர்களின் குற்ற உணர்விலேயே சிறிது காலம் ஊறவைக்க வேண்டும் என்று அவர் விரும்பினார். என்ன வேண்டுமானாலும் செய்துவிட்டு, சிவனை நாடிச் சென்று அதிலிருந்து விடுபடலாம் என்று மக்கள் நினைத்துவிட்டால், பாவ மன்னிப்புக்குச் சென்று மக்கள் மீண்டும் தங்கள் பாவங்களை தொடர்வது போல, நீங்கள் மீண்டும் மீண்டும் தொடரலாம். இது ஒரு அமைப்பில் மட்டுமல்ல, உலகம் முழுக்க உள்ளது.

பாண்டவர்களும் அத்தகைய நம்பிக்கையுடன் சிவனைப் பின்தொடர்ந்தனர். சிவன் அவர்களுக்கு அதை எளிதாக கொடுக்க விரும்பவில்லை. அவர் இமயமலையின் நிலப்பரப்பு முழுவதையும் நன்கு அறிந்தவர், எனவே அவர் அவர்களை ஏமாற்றி, வேறு திசையில் சென்றார். ஆனால் அவர்கள் தீவிரமான சகோதரர்கள், அவ்வளவு எளிதில் விட்டுவிட மாட்டார்கள். அவர்கள் சிவன் பின்னால் சென்றார்கள். ஆனால் சிவன், இந்த மறைந்து ஆடும் ஆட்டம் போதும், மாறுவேஷம் போடலாம் என்று நினைத்தார். அதனால் அவர் தன்னை ஒரு காளையின் வடிவமாக மாற்றிக்கொண்டார், அப்போது அவர்களால் தன்னை கண்டுபிடிக்க முடியாது என்று நினைத்தார். ஆனால் இவர்கள் அதை கண்டுபிடித்து, காளையின் பின்னால் சென்றார்கள்.

காளை இங்குமங்கும் சென்றது; அவர்களும் பின்தொடர்ந்தார்கள். சிவனுக்கு என்ன செய்வதென்று தெரியாமல், தரைக்கடியில் சென்றார். அவர் தரைக்கடியில் சென்றவுடன், பாண்டவர்கள், கதையின் படி, காளையின் வாலைப் பற்றிகொண்டனர். பீமன் முதலில் வாலைப் பற்றிக்கொண்டான், பின்னர் மற்றவர்களும் வாலைப் பற்றிக்கொண்டனர். உங்களுக்குத் தெரியவில்லை என்றால், இன்றுகூட ஒரு காளையோ, எருதோ எழுந்திருக்க மறுத்தால், பாரம்பரியமாக ஒரு விவசாயிக்கோ அல்லது மாட்டு வண்டி ஓட்டுபவர்களுக்கோ, அதன் வாலைப் பிடித்து முறுக்கினால் அது உடனே எழுந்து நிற்கும் என்பது தெரியும்.

எனவே பாண்டவர்கள், குறிப்பாக பீமன், காளையிடம் அதைச் செய்தான், காளை எழுந்தது. சிவன் எழுந்திருக்க வேண்டியதாகிவிட்டது. அவர் எழுந்தபோது, ​​அவரது நெற்றி பசுபதிநாத்தில் எழுந்தது, அவரது கூம்பு கேதாரில் எழுந்தது, அவரது கொம்புகள் துங்கநாத்திலும் மற்றும் அவரது தொப்புள் மத்யமஹேஷ்வரில் எழுந்தது; அதுதான் கதை.

நாத்திகள் கோரக்நாத்திகள்

எனவே பசுபதிநாத் பல வழிகளில் மிக மிக முக்கியமானவர். இந்த அமைப்பில் இது ஒரு பெரிய படியாகும். இன்னும் சில உள்ளன - சில மரபுகள் இந்த செயல்முறையை தீவிரமாக பயன்படுத்துகின்றன. இதை மிகவும் சுறுசுறுப்பாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் ஒரு பாரம்பரியம், நீங்கள் பசுபதிநாத்திற்கு சென்றால் அவர்களைப் பார்க்க முடியும், அது நாத்தி சமூகம். நாத்திகள், கோரக்நாத்திகள் பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? வட இந்தியாவில் இருந்து வருபவர்கள் கோரக்நாத்திகள் பற்றி கேள்விப்பட்டிருக்க வேண்டும். இது கெட்ட காலங்களில் விழுந்து எல்லா வகையான அர்த்தங்களையும் பெற்றுள்ளது, ஆனால் இந்த கோரக்நாத்திகள் மத்ஸ்யேந்திரநாத்தின் சீடரான கோரக்நாத்திடம் இருந்து வந்த பாரம்பரியம்.

மத்ஸ்யேந்திரநாத் சிவனின் மறு அவதாரமாகவே பார்க்கப்படுகிறார், அவர் கோரக்நாத் பாரம்பரியத்தை உருவாக்கினார், மேலும் உலகின் மிகப்பெரிய யோக வழிபாட்டு முறைகளில் ஒன்றையும் நிறுவினார்… மன்னிக்கவும், அந்த நேரத்தில் உலகின் இந்த பகுதியில், அது இன்னும் வாழ்கிறது. மற்ற அமைப்புகளுடன் ஒப்பிடும்போது, ​​அதிக எண்ணிக்கையிலான துறவிகள் மற்றும் சாதுக்கள். எனவே அந்த அமைப்பு இன்னும் இந்த தெற்கு உடலைப் பயன்படுத்துகிறது, மேலும் அவர்கள் மேலே பயணிக்கிறார்கள், மேலும் இந்த ஐந்து சக்கரங்களிலும் ஆசிரமங்கள் நிறுவப்பட்டுள்ளன, இதில் சிவனின் உடல் காளை வடிவில் உள்ளது. இப்போதும் அதையே பின்பற்றுகிறார்கள்.

அவர்களில் சிலரை நீங்கள் பசுபதிநாத் கோவிலில் பார்க்கலாம். இடது காதில் பெரிய வளையம், பொதுவாக எலும்பு வளையம் இப்படி யாரையாவது பார்த்தால், அவர் கோரக்நாத்தி, அவர் நாத்தி சமூகம் அல்லது நாத்தி அமைப்பைச் சேர்ந்தவர் என்று அர்த்தம். இன்னும் மேலே ஏறிச் சென்றால், நாத்திகளின் ஆசிரமம் இருக்கிறது, ஞானமடைந்தவர்களுக்கு மட்டுமே சரியான கல் சமாதி கிடைத்தது, மற்றவர்கள் மரத்தடியில் புதைக்கப்பட்டனர். எனவே, அந்த அமைப்பின் செழுமையைக் குறிக்கும், ஏராளமான மக்கள் ஞானமடைந்ததை நீங்கள் காண்பீர்கள். பல மக்கள் தங்கள் அமைப்பின் மூலம் அடைந்தனர், எனவே நீங்கள் தரிசிக்கக்கூடிய பல சமாதிகள் உள்ளன, அவை இன்று பாழடைந்த நிலையில் உள்ளன, ஆனால் இப்போதும் ஒருவர் பார்வையிடலாம்.

    Share

Related Tags

சிவ தத்துவம்

Get latest blogs on Shiva

Related Content

யார் இந்த ஆதியோகி சிவன் ?