சிவன் என்றாலே, ஒருவிதத்தில் மூன்றாவது கண் என்று அர்த்தம். சிவனுடைய பல பெயர்களில் ஒன்று "த்ரையம்பகா" அல்லது "த்ரிநேத்ரா" -அதாவது மூன்று கண் கொண்டவன் என்று பொருள். மூன்றாவது கண் கொண்டதால், அவன் "எது இல்லையோ அதை" கிரகித்துக்கொள்கிறான். "எது இருக்கிறதோ அது" பொருள்தன்மையில் உள்ள பிரதிபலிப்பு -"எது இல்லையோ அது" பொருள்தன்மைக்கு அப்பாற்பட்டது. ஐம்புலன்கள் கிரகித்துக்கொள்ள முடியாதது இப்போது உங்கள் அனுபவத்தில் இல்லை. முயற்சிசெய்திட விருப்பத்துடன் இருந்தால், ஒரு மனிதனால், "எது இல்லையோ அதை", பொருள்தன்மை அல்லாததை, 'சி'-'வா' என்பதைக் காணமுடியும். தாங்கள் தற்போது யாராக இருக்கிறார்களோ அதைவிடப் பெரிதாக இருக்கவேண்டும் என்ற மனிதனின் விழைவால் பல உயிர்கள் பலியாகியுள்ளன, பல உயிரினங்கள் அழியும் நிலைக்குச் சென்றுள்ளன, பூமியே அழியும் அபாயத்தில் உள்ளது. பணம், சொத்து, உறவு, குடும்பம், என்று எதையாவது சேகரித்து உங்களைப் பெரிதுபடுத்திக்கொள்ள முடியும் என்று நீங்கள் நினைத்தால், அது இன்னொன்றுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது மட்டுமே பொருந்தும். ஆனால் தன்னளவில் உங்களில் எதுவும் மேம்பட்டிருக்காது. உங்கள் கிரகித்துக்கொள்ளும் திறன் மேம்படும்போதுதான் உங்கள் வாழ்க்கை அனுபவமும் மேம்படுகிறது.
புரிதலை மேம்படுத்துவதன் மூலம் மட்டுமே வாழ்க்கை மேம்படமுடியும் என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காக, உலகெங்கும் பிரம்மாண்டமான முத்திரைச்சின்னங்களாக ஆதியோகியை நிறுவ நாங்கள் திட்டமிட்டுள்ளோம். 112 அடி உயரமுள்ள ஆதியோகியின் முகத்தை சிலையாக வடித்துக்கொண்டு இருக்கிறோம். இந்த எண்ணிக்கை ஒரு அறிகுறியாகவும், நம் இருப்பிற்கு அறிவியல்பூர்வமாக தொடர்புடையதாகவும் இருக்கிறது. ஏனென்றால், மனிதர்கள் தங்கள் உச்சநிலையை அடைய சிவன் நூற்றுப்பன்னிரண்டு சாத்தியங்களைத் திறந்தார், நீங்கள் அந்த சாத்தியங்கள்மீது வேலை செய்வதற்கு உடலில் நூற்றுப்பன்னிரண்டு சக்கரங்கள் உள்ளன. ஆதியோகியின் இந்த முகம் பூமியிலேயே மிகப்பெரிய முகமாக இருக்கப்போகிறது. இந்த ஆதியோகி திருவுருவத்தோடு, ஒரு புத்தகத்தையும் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம், அடுத்த சில வருடங்களில் ஒரு திரைப்படமும் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கிறோம்.
இப்படி ஒரு முகத்தை உருவாக்குவதன் நோக்கம் இன்னுமொரு நினைவுச்சின்னம் உருவாக்குவதல்ல, நம்புபவர்களின் கூட்டமாக இருக்கும் இவ்வுலகை, வாழ்க்கையையும் அதைத் தாண்டியுள்ளதையும் உணர விழையும் தனிமனிதர்களாக மாற்றுவதற்கான உந்துசக்தியாக இம்முகத்தை உருவாக்குவதுதான் நோக்கம். வெறும் நம்பிக்கையுடையவர்கள் எப்படிப்பட்ட கொடூரங்களைச் செய்யக்கூடியவர்கள் என்று உங்களுக்குத் தெரியும். சிலர் உலகிலுள்ள சண்டை சச்சரவுகளை, தீயசக்தியை எதிர்க்கும் நல்லசக்தியாக சித்தரிக்க விரும்பினாலும், சண்டைகள் அனைத்துமே ஒரு மனிதனின் நம்பிக்கையை எதிர்க்கும் இன்னொரு தனிமனிதனின் நம்பிக்கையால் தான். நீங்கள் ஏதோவொன்றை நம்பத்துவங்கிவிட்டால், அது எதுவாக இருந்தாலும் சரி, மற்றவை எதுவும் உங்கள் கண்களுக்குத் தென்படாத குருடராகிவிடுகிறீர்கள். நம்பிக்கை முறைகள் வேலை செய்யவேண்டுமென்றால், உங்களுக்கு ஒரு கூட்டம் வேண்டும். உங்கள் புத்தியைப் பயன்படுத்தி உங்களுக்கு நீங்களே சிந்தித்தால், உங்கள் நம்பிக்கைகள் தவிடுபொடியாகிவிடும். தேடுதலுடைய தன்மையே, அது தனிமனிதர்கள் சார்ந்தது, ஒவ்வொரு தனிமனிதரும் தனக்குள் தேடவேண்டும்.
எப்போதும் தனிமனிதர்கள் தேடுதலுடன் இருக்கும்விதமாக இந்தக் கலாச்சாரத்தைக் கட்டமைப்பது மிகவும் முக்கியமானது, இதை ஒருபோதும் ஒரு மதமாக்கிவிடக்கூடாது. தேடுபவர்களிடமுள்ள நல்ல விஷயமே, அவர்கள் ஆனந்தமாக குழம்பியிருக்கிறார்கள். நீங்கள் தேடுதலில் இருக்கும்போது, நீங்கள் ஏதோவொன்றை நோக்கிப் பாடுபடுவீர்களே தவிர, நீங்கள் சண்டை போடுவதற்கு எதுவுமிருக்காது. உலகிற்கு இதுதான் தற்போதைய அவசரத்தேவை. மனிதர்களிடம் இப்போது இருக்கும் சக்தியை வைத்துப் பார்க்கும்போது, நம்மிடம் ஆக்கவும் அழிக்கவும் அபரிமிதமான ஆற்றல் உள்ளது. நாம் ஒன்றை அடையப் பாடுபடும்போது, உருவாக்குவதற்கு முயல்கிறோம். நாம் சண்டை போடும்போது அழிக்கிறோம். நம்பிக்கை என்றால், உங்களுக்குத் துளியும் தெரியாத விஷயங்களை உறுதியாக நம்புவது. இது தெளிவு தராமல் வெறும் தன்னம்பிக்கையைத் தரும், அது மிகவும் ஆபத்தானது. தேடுதல் என்றால், உறுதியான நம்பிக்கையிலிருந்து தனக்குத்தெரியாது என்ற நிலைக்கு விழிப்புணர்வாகச் செல்வது. நீங்கள் தொடர்ந்து புதிய இடங்களில் கால்பதித்துக்கொண்டு இருந்தால், நீங்கள் தொடர்ந்து முன்னேறிக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நமக்குப் பரிட்சயமான விஷயங்களால் தான் உறுதியான நம்பிக்கை வருகிறது. ஒரே இடத்தை சுற்றிச்சுற்றி வந்துகொண்டு இருந்தால், நீங்கள் எங்கும் போகவில்லை என்று தானே அர்த்தம்! வாழ்க்கையின் பல்வேறு பரிமாணங்களை ஆராய்ந்துணர விழைபவர்களிடம் எப்போதும் ஐயத்திற்கிடமிருக்கும். மிக உயர்ந்த விஞ்ஞானிகள் 'இப்படி இருக்கக்கூடும்', 'ஆனால்' போன்ற சொற்களையே பயன்படுத்துகிறார்கள்.
அடுத்த மஹாசிவராத்திரியன்று ஆதியோகி சிலையை திறந்துவைக்கவிருக்கிறோம். அதற்குள் வேலைகள் அனைத்தையும் முடிப்பதற்கு இங்கு இருப்பவர்கள் இரவுபகலாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். 2017 பிப்ரவரி 24ஆம் தேதி நாம் அவரை உலகிற்கு அர்ப்பணிக்கப் போகிறோம். இது வாழ்நாளில் ஒருமுறையே காணக்கூடிய பிரம்மாண்ட நிகழ்வாக இருக்கப்போகிறது. தியானலிங்கப் பிரதிஷ்டையை தவறவிட்டவர்களுக்கு, இப்படி ஒன்றை உணர்வதற்கு இதுதான் வாய்ப்பு. உலகில் ஆதியோகி பற்றி எவ்வளவு உரக்கச்சொல்ல முடியுமோ அவ்வளவு உரக்கச்சொல்லுங்கள். அடுத்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள் நம்பிக்கை உடையவர்களாக இல்லாமல், தேடுதல் கொண்டவர்களாக இருப்பது இன்று மிகவும் முக்கியமானதாக இருக்கிறது. இறந்தபிறகே உள்ளே நுழையும் தகுதியை சம்பாதிக்கும் கற்பனை சொர்க்கத்தை அடைய விரும்புபவர்களாக அடுத்த தலைமுறையினர் இருக்கக்கூடாது. உலகில் புதியதோர் உதயத்தை உருவாக்குவதில் ஆதியோகி முக்கியமானவராக இருப்பார், அவரால் சுய-மாற்றத்திற்கான கருவிகள் சுலபமாக கிடைக்கூடியதாக மாறும். இன்று உலகின் பெரும்பான்மையான மனிதர்களுக்கு, பல் தேய்ப்பது தெரிந்திருப்பதுபோல, தங்களை எப்படி அமைதியாகவும் ஆனந்தமாகவும் வைத்திருப்பது எனத் தெரிந்திருக்க வேண்டும். மனிதர்களுக்குத் தங்கள் உடலையும் மனதையும் கையாளத் தெரிந்திருக்க வேண்டும். இது நிகழ்ந்தால், மனிதர்கள் பிரம்மாண்டமான சக்தியாகவும் சாத்தியமாகவும் மாறுவார்கள்.
இப்போது எல்லாவற்றையும் போராட்டமாக மாற்றுபவர்களாக மனிதர்கள் இருக்கிறார்கள். ஏனென்றால் அவர்களிடம் சுய-மாற்றத்திற்கான கருவிகள் இல்லை. நம் வீடுகளிலும் நம்மைச் சுற்றியிருக்கும் சமுதாயங்களிலும் துவங்கி, நாம் இந்நிலையை மாற்றுவதற்கான நேரம் வந்துவிட்டது. மனிதர்களாக நாம் எப்படி இயங்குகிறோம் என்பதற்கு அதிக கவனம் செலுத்தும் கலாச்சாரத்தை நம்மால் உருவாக்கமுடியும். உங்கள் உடலமைப்பு எப்படி இயங்குகிறது என்பதைப் புரிந்துகொண்டால், அதைப் பல அற்புதமான விதங்களில் நீங்கள் பயன்படுத்தலாம். இல்லாவிட்டால் நீங்கள் எதேச்சையாக வாழ்வீர்கள், அப்படி வாழும்போது நீங்கள் எப்போதும் பதற்றமாகவே இருப்பது இயல்பாகிவிடும். அப்படி இருக்கும்போது மிக சாதாரணமான விஷயங்கள் பெருத்த போராட்டங்களாக மாறிவிடும். இப்போது பெரும்பாலான மனிதர்கள் என்ன செய்கிறார்கள்? தங்கள் பிழைப்பை சம்பாதிக்கிறார்கள். விரும்பினால் பிள்ளைகள் பெற்றுக்கொள்கிறார்கள். ஒருநாள் இறந்துபோகிறார்கள். மற்ற உயிரினங்கள் அனைத்தும் கூட இதைத்தான் செய்கின்றன, ஆனால் அலட்டிக்கொள்ளாமல் செய்கின்றன. மனிதர்கள் உருவாக்கியிருக்கும் அனைத்தும் எதிர்மறையானவை என்று நான் சொல்ல வரவில்லை. அறிவியலும் தொழில்நுட்பமும், அது உலகில் என்ன செய்யமுடியும் என்பதும், அடிப்படையில் எப்படிப்பட்ட மனிதர்கள் அவற்றைக் கையாளுகிறார்கள் என்பதைப் பொறுத்தே இருக்கிறது. அறிவியலையும் தொழில்நுட்பத்தையும் சரியாகக் கையாண்டு, பூமியிலுள்ள ஒவ்வொரு உயிரின் வாழ்க்கையையும் மேம்படுத்தக்கூடிய மனிதர்களை உருவாக்குவதே நம் நோக்கம். நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள அனைவருக்கும் அழிவு ஏற்படுத்தும் விதமாக நடந்துகொண்டு, இப்போது நிகழ்ந்துகொண்டிருப்பது போல, நமக்கும் மற்ற அனைவருக்கும் பிரச்சனையும் பாதிப்பும் ஏற்படுத்தும் விதமான மனிதர்களை உருவாக்குவது நம் நோக்கமல்ல.
கடந்த இரண்டு மூன்று கோடைக்காலங்கள், முன்பு எப்போதும் இல்லாத அளவு வெப்பமாக இருந்ததை நீங்கள் கவனித்திருக்கலாம். இமயமலையில் இதை நீங்கள் கண்கூடாகக் காணமுடியும். பாகிரதி நதி தோன்றும் கோமுக் என்ற இடத்தில், முன்பெல்லாம் பனிப்பாறையின் குகைவாயிலிருந்து ஊற்றைப்போல நீர் பொங்கிவரும். இப்போது அந்த பனிப்பாறை எந்த அளவு உருகியிருக்கிறது என்றால், அந்த குகைக்குள் ஒரு மைல் தூரத்திற்கு நடந்து செல்லலாம், அங்கே சிறிய ஓடையைப்போல நீர் சொரிந்துகொண்டிருக்கிறது. இமயத்தில் வருடம் முழுவதும் பனியால் மூடப்பட்டிருந்த மலைச்சிகரங்கள் பல, இப்போது மாதக்கணக்காக பனியின் சுவடே இல்லாமல் காட்சியளிக்கின்றன. காவிரி நதியும் கூட வருடத்தில் மூன்று மாதங்களுக்கு கடலைச் சென்றடைவதே இல்லை. வருடம் முழுவதும் ஓடிய வற்றாத நதியை, பருவமழையின் போது மட்டுமே ஓடும் நதியாக நாம் ஒரே தலைமுறையில் மாற்றிவிட்டோம். இதன் அர்த்தம் என்னவென்றால், நம்மிடம் இருக்கும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் கருவிகள், பொறுப்பற்றவர்கள் கைகளில் இருக்கிறது. நமக்கு வெறும் அறிவியலும் தொழில்நுட்பமும் மட்டுமல்லாது, தனிமனிதர்களின் மாற்றம் தேவைப்படுகிறது. வரும் பத்தாண்டுகளில் சுய-மாற்றத்திற்கான கருவிகள் பெரியளவில் மக்களுக்கு பரிமாறப்படவில்லை என்றால், பூமியில் வாழ்வது நம் குழந்தைகளுக்கு மென்மேலும் கடினமாகும்.
நாம் இப்போது சூரியனின் ஒரு புதிய சுழற்சியின் துவக்கத்தில் இருக்கிறோம். பல விதங்களில் அடுத்த பன்னிரண்டு ஆண்டுகள், உலகில் ஆன்மீகத்திற்கு பொற்காலமாக இருக்கப்போகிறது. அடுத்த பத்தாண்டுகளில் நாம் சரியான விஷயங்களைச் செய்தால், இது இன்னும் சுலபமாய்க் கனிந்து பலன்தரும். இப்படி ஒன்று நிகழ்வதற்கு ஏதுவாக, மனித புத்திசாலித்தனம் முன்பு எப்போது இல்லாத விதத்தில் திறந்து தயாராக உள்ளது. எல்லாம் இதற்காக ஒன்று திரண்டுவருகிறது. முதன்முறையாக ஆதியோகி யோகாவைப் பரிமாறியபோது இருந்த சூழ்நிலைகள் போலவே இப்போது சூழ்நிலைகள் உருவாகி வருகின்றன. இவை அனைத்தும் நமக்கு நல்லது. வருங்கால சந்ததியினருக்கு இதனை உருவாக்கித்தரும் பெருமை நம் தலைமுறையைச் சேரவேண்டும் என்பதே என் ஆசையும் ஆசியும். இதை நிகழ்த்துவதற்கு ஒரு பிரம்மாண்டமான சின்னமாக நாம் ஆதியோகியை நிறுவ விரும்புகிறோம். நாம் ஆதியோகியை கடவுளாக உலகில் பிரச்சாரம் செய்யவில்லை, அவரை யோகியாக உலகிற்கு அறிவிக்க விரும்புகிறோம். கடவுளை நீங்கள் வழிபட வேண்டியிருக்கும். யோகி என்றால் ஒரு சாத்தியமாக இருக்கிறார். ஜாதி, மதம், இனம் ஆகியற்றவைக் கடந்து, வருவோர் அனைவருக்கும் மாற்றத்திற்கான கருவிகளை வழங்கும் இடங்களை நாம் உருவாக்க விரும்புகிறோம். இப்படி முதல் இடம் டென்னிஸியில் உருவாகியுள்ளது. இங்கு அற்புதங்கள் நிகழ்த்தப்படுவதில்லை, இது கோரிக்கைகள் வைப்பதற்கான இடமில்லை, இது ஆன்மீக சாதனா செய்வதற்கான இடம். அப்படியிருந்தும் இங்கு வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டுதான் போகிறது.
தேவையான சூழ்நிலையை நாம் உருவாக்கினால், சுய-மாற்றத்திற்கான கருவிகளை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான இதுபோன்ற இடங்கள், உலகெங்கும் உருவாகும். தேவையான நேர்மையும் உறுதியும் சக்திவாய்ந்த இடமும் உருவாக்கப்பட்டால், மக்கள் தேடி வருவார்கள். இன்று, முன்பு எப்போது இல்லாத அளவு அதிக மக்கள் தேடுதலில் இருக்கிறார்கள். தற்போது பிரச்சாரம் செய்யப்படும் நம்பிக்கை முறைகளில், முன்பு இல்லாத அளவு அதிக மக்கள் ஏமாற்றமடைந்துள்ளார்கள். அவர்களுக்கு இதில் அர்த்தமிருப்பது போல் தெரியாவிட்டாலும், இன்னும் நிறையபேர் அவர்கள் நம்பிக்கை முறைகளைப் பற்றிக்கொண்டு இருப்பதற்குக் காரணம், அதற்கு பதிலான மேலான மாற்றுவழி அவர்களுக்குக் கிடைக்கவில்லை. நல்லதொரு மாற்றுமுறையை அவர்கள் கண்டுபிடிப்பதற்கு வழிசெய்வது நம் பொறுப்பு, ஏனென்றால் இதில்தான் உலகின் நல்வாழ்வு அடங்கியிருக்கிறது.
நமக்கு அமைதியான உலகம் வேண்டுமென்றால், நமக்கு அமைதியான மனிதர்கள் தேவை. நமக்கு அன்பான உலகம் வேண்டுமென்றால், நமக்கு அன்பான மனிதர்கள் தேவை. நமக்கு புத்திசாலித்தனமான உலகம் வேண்டுமென்றால், இன்னும் புத்திசாலித்தனமான மனிதர்கள் தேவை. நாம் உடன் வாழ விரும்பும் விதமான மனிதர்களை, உலகம் முழுவதும் நாம் பார்க்க விரும்பும் விதமான மனிதர்களை, நம் குழந்தைகள் அவர்களுடன் வாழக்கூடிய விதமான மனிதர்களை நாம் உருவாக்க விரும்பினால், அடுத்த பத்து முதல் பன்னிரண்டு ஆண்டுகளில், ஒவ்வொரு குழந்தையும் தன் பத்தாவது வயதைத் தாண்டும்முன் ஏழிலிருந்து பத்து நிமிடங்களாவது கண்மூடி அமர்ந்திருக்கும் விதமான ஏதோவொரு எளிமையான ஆன்மீக செயல்முறையைக் கற்றுகொள்ள வேண்டும், அதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கவேண்டும். பூமியிலுள்ள ஒவ்வொரு மனிதரும், சுய-மாற்றத்திற்கான ஏதாவது ஒரு எளிமையான செயல்முறையை அறிந்திருக்க வேண்டும். அவர்கள் வாழ்க்கைக்குள் நாம் இதனைக் கொண்டுவராவிட்டால், வன்முறையும் பேரழிவும் உலகில் தொடர்ந்து பெருகிக்கொண்டே போகும். 2050ல், மக்கள்தொகை 970 கோடியைத் தாண்டிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகத்தில் மக்கள்தொகை அதிகமாக அதிகமாக, இப்படிப்பட்ட சூழ்நிலைகளின் நெருக்கடியும் மோசமாகிக்கொண்டே போகும். நாம் மற்றவர்களுடன் நெருக்கடியான சூழ்நிலையில் வாழவேண்டும் என்றால், மனிதர்கள் அவர்களால் முடிந்த அளவு இனிமையாகவும் அமைதியாகவும் ஆனந்தமாகவும் இருக்கவேண்டியது மிகவும் முக்கியம். அதனால்தான் உள்நிலை மாற்றத்திற்கான கருவிகள் மிகவும் அத்தியாவசியமாகின்றன.
உலகில் இருக்கும் ஒவ்வொருவரும் ஆதியோகியின் திருவுருவப் பிரதிஷ்டையைப் பற்றி அறிந்துகொள்வதை நீங்கள் அனைவரும் உறுதிசெய்ய வேண்டும். அவர் திருமுகத்தைப் பார்த்ததும் அனைவரும் யோகப் பயிற்சி செய்யத் துவங்காவிட்டாலும், "ஆதியோகி" என்ற வார்த்தையே மெதுவாக அவர்களுக்குள் வேலை செய்யத் துவங்கும். இன்னும் இனிமையான மனிதர்களை உருவாக்குவதற்கு பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்பதை உலகம் முழுவதும் அறிந்துகொள்ள வேண்டும். நாம் உள்ளே நுழைந்தபோது இருந்ததைவிட உலகை சற்று சிறப்பாக விட்டுச்செல்வதே எந்தவொரு தலைமுறைக்கும் மிகவும் அடிப்படையான வேலை. சுற்றுச்சூழலைப் பொருத்தவரை, நம் வாழ்நாளில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை நம் தலைமுறையில் நம்மால் சரிசெய்துவிட இயலாது. ஆனால் மனிதர்களை நாம் கண்டபோது இருந்ததைவிட இன்னும் சிறப்பான நிலையில் நம்மால் விட்டுச்செல்ல முடியும். அவர்கள் அமைதியாக ஆனந்தமாக இருந்தால், அவர்கள் சுற்றுச்சூழலை நிச்சயம் சரிசெய்வார்கள் என்று நான் நம்புகிறேன். நாம் இதனை நிகழச்செய்வோம்.