லிங்கம் என்ற சொல்லுக்கு "உருவம்" என்று பொருள். இதனை நாம் உருவம் என்று அழைப்பதற்குக் காரணம், பொருளற்றது பொருள்வடிவம் எடுக்கத் துவங்கும்போது, அதாவது படைப்பு நடக்கத் துவங்கியபோது, முதன்முதலாக அது எடுத்த வடிவம் நீள்வட்டம்.
நீயே முதன்முதலில் பிறந்தாய்
அண்டத்து வெறுமையின் முதல் வெளிப்பாடு நீ
ஞானம் மிகுந்தோர் உனை கண்டுகொண்டனர்
உயிர்ப்பான இந்த லீலையின் ஆதாரம் நீ என்று
வலிகள் இன்பங்கள் அனைத்துக்கும் மூலம் நீ
நீயே மிக உயர்ந்ததும் மிக தாழ்வானதுமாக இருக்கிறாய்
அட, உன் பலப்பல லீலைகள்
பலப்பல வடிவங்களுக்கு நீ மூலமாக இருக்கிறாய்
நீ இதுவுமில்லை அதுவுமில்லை
படைப்பினூடே புழுவைப்போல ஊர்ந்துசென்றேன்
உன்னையும் என்னையும் கண்டுகொள்ள
ஓ ஈஷானா, மிகுந்த மகிமையான உருவமே
உனக்கு வீற்றிடமாக இருப்பது ஈஷாவின் பேறு
– சத்குரு
"உரிய தொழில்நுட்பத்தின் துணையுடன், ஒரு சாதாரண வெளி அல்லது கல்லைக்கூட தெய்வீக சக்தியாக மாற்றிட முடியும். இதுதான் பிரதிஷ்டை எனும் அதிசயம்." - சத்குரு
என்னிடம் நீங்கள் ஒரு பொருளைக் கொடுத்தால், உதாரணத்திற்கு ஒரு துண்டு தாளைக் கொடுத்தால், அதற்கு என்னால் சக்தியூட்டி உங்களிடம் கொடுக்கமுடியும். அதை நான் தொடுவதற்கு முன்பும் பின்பும் அதை நீங்கள் கையில் வைத்துப் பார்த்தால் வித்தியாசத்தை உணர்வீர்கள், ஆனால் அந்த சக்தியை அந்த தாள் தக்கவைத்துக்கொள்ள முடியாது. ஆனால் நீங்கள் துள்ளியமான லிங்கவடிவத்தை உருவாக்கினால், அது நிரந்தரமாக சக்தியின் களஞ்சியமாக இருக்கும். அதற்கு ஒருமுறை சக்தியூட்டினால், அது எப்போதும் அப்படியே இருக்கும்.
பிரதிஷ்டை என்றால் சக்தியூட்டுவது. பொதுவாக அதிகம் செய்யப்படும் பிரதிஷ்டை முறைகள், மந்திரங்கள், சடங்குகள் மற்றும் பிற செயல்முறைகளை பயன்படுத்துகின்றன. நீங்கள் மந்திரங்கள் மூலம் ஒரு வடிவத்தை பிரதிஷ்டை செய்தால், அதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும், அந்த விக்ரகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்க தொடர்ந்து சடங்குகள் செய்யவேண்டும்.
பிராண பிரதிஷ்டை அத்தகையது அல்ல. மந்திரங்கள் அல்லது சடங்குகள் மூலமாக இல்லாமல், உயிர்சக்தி மூலமாக ஒரு வடிவத்தை ஒருமுறை பிரதிஷ்டை செய்துவிட்டால், அது நிரந்தரமாக நிலைத்திருக்கும், அதற்கு பராமரிப்பும் தேவையில்லை. அதனால்தான் தியானலிங்கத்தில் எந்த பூஜைகளும் இல்லை; அதற்கு அத்தகைய பராமரிப்பும் தேவையில்லை. அது பிராண பிரதிஷ்டை மூலமாக பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. லிங்கத்தின் கல்வடிவத்தை நீக்கினாலும் அதன் சக்திவடிவம் அப்படியே இருக்கும். உலகம் முழுவதும் அழிந்தாலும் அந்த சக்திவடிவம் அப்படியே இருக்கும்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக வழக்கத்தில் இருந்துள்ள லிங்கம் உருவாக்கும் அறிவியல், மகத்தான ஒரு அனுபவப்பூர்வமான சாத்தியமாக விளங்குகிறது. ஆனால் கடந்த 800 அல்லது 900 ஆண்டுகளில், குறிப்பாக பக்தி இயக்கம் தேசத்தில் பேரலையாக பரவியபோது, கோயிலை கட்டமைக்கும் அறிவியல் அதில் அடித்துச் செல்லப்பட்டது. ஒரு பக்தருக்கு, தனது உணர்ச்சியைத் தவிர வேறெதுவும் முக்கியமில்லை. அவரது பாதையே உணர்ச்சிப் பெருக்குதான். அவரது உணர்ச்சியின் வலிமையால்தான் அவர் எல்லாவற்றையும் செய்கிறார். அதனால் அவர்கள் இந்த அறிவியலை ஒதுக்கிவைத்து விரும்பிய விதத்திலெல்லாம் கோயில்கள் கட்டத் துவங்கினர். இது ஒரு காதல் உறவைப் போல, ஒரு பக்தரால்தான் விரும்பியதெல்லாம் செய்யமுடியும். அவருக்கு எல்லாம் நியாயமானதுதான், ஏனென்றால் அவரிடம் இருப்பதெல்லாம் அவரது உணர்ச்சியின் வலிமைதான். இதனால் லிங்கம் உருவாக்கும் அறிவியல் நலிந்துபோனது. இல்லாவிட்டால் இது மிக ஆழமான அறிவியலாக இருந்தது. இது உள்ளார்ந்த ஒரு அறிவியல், இது ஒருபோதும் எழுதப்படவில்லை, ஏனென்றால் இதை எழுதினால் முற்றிலுமாக தவறாக புரிந்துகொள்ளப்படும். இப்படி பல லிங்கங்கள், அதன் அறிவியல் பற்றிய எந்த ஞானமும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ளது.
சத்குரு: சக்கரங்கள் என்பது சக்தி அமைப்பில் உள்ள சந்திப்புப் புள்ளிகள், இங்கு பிராண நாடிகள் சந்தித்து சக்தியின் ஒருவித சூழலை உருவாக்குகின்றன. உடலில் 114 சக்கரங்கள் உள்ளன, ஆனால் பொதுவாக நாம் சக்கரங்கள் எனும்போது முக்கியமான ஏழு சக்கரங்களைக் குறிப்பிடுகிறோம், அவை உயிரின் ஏழு பரிமாணங்களைக் குறிக்கின்றன. அவை ஏழு முக்கிய நெடுஞ்சாலை சந்திப்புகளைப் போன்றவை.
இப்போது இந்தியாவில் பெரும்பாலான லிங்கங்கள் ஒன்று அல்லது அதிகபட்சமாக இரண்டு சக்கரங்களை மட்டுமே பிரதிபலிக்கின்றன. ஈஷா யோக மையத்தில் உள்ள தியானலிங்கத்தின் தனித்தன்மை என்னவென்றால், ஏழு சக்கரங்களும் சக்தியூட்டப்பட்டு அவற்றின் உச்சநிலையில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இதுதான் உச்சபட்ச பிரதிபலிப்பு, அதாவது சக்தியை உயர்ந்த தீவிரநிலைகளுக்கு கொண்டுசென்றால், அதனால் ஒரு குறிப்பிட்ட எல்லை வரையில்தான் உருவத்தை தக்கவைத்துக்கொள்ள முடியும். அதற்குமேல் தீவிரமாக்கினால் அது உருவமில்லாமல் போகும். அது உருவமின்றி போனால் மக்களால் அதை அனுபவத்தில் உணரமுடியாது. உயிர்சக்தியை உருவத்தை தக்கவைத்துக் கொள்ளக்கூடிய உச்சநிலைக்கு கொண்டுசென்று, அந்நிலையில் அதை நிலைநிறுத்துவது - இப்படித்தான் தியானலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
யோக முறையில் மிக அடிப்படையான சாதனா என்பது பூதசுத்தி. பஞ்சபூதங்கள் என்பது இயற்கையிலுள்ள ஐந்து மூலப்பொருட்கள். உங்களை நீங்களே பார்த்தால், உங்கள் பொருள் உடல் பஞ்சபூதங்களால் ஆனது. அவை நிலம், நீர், நெருப்பு, காற்று மற்றும் ஆகாயம். இவை ஒரு குறிப்பிட்ட விதத்தில் ஒன்றுசேர்ந்து இந்த உடலாகிறது. ஆன்மீக செயல்முறை என்பது பொருள்தன்மையையும் பஞ்சபூதங்களையும் கடந்து செல்வது பற்றியது. இந்த பஞ்சபூதங்களுக்கு, நீங்கள் அனுபவத்தில் உணரும் எல்லாவற்றின்மீதும் மிகப்பெரிய பிடி உள்ளது. அதைக் கடந்துசெல்வதற்கான அடிப்படையான யோகப் பயிற்சிகள் பூதசுத்தி என்று அழைக்கப்படுகிறது. இதில் பஞ்சபூதங்களில் ஒவ்வொன்றுக்கும், அதிலிருந்து விடுதலையடைய நீங்கள் செய்யக்கூடிய ஒரு குறிப்பிட்ட பயிற்சி உள்ளது.
தென்னிந்தியாவில், பஞ்சபூதங்களில், ஒவ்வொன்றையும் பிரதிபலிக்கும் விதமான லிங்கத்தைக் கொண்ட ஐந்து பிரம்மாண்டமான கோயில்கள் கட்டப்பட்டன. நீங்கள் நீர் தத்துவத்தின்மீது சாதனா செய்ய விரும்பினால் திருவானைக்காவல், ஆகாயத்திற்கு சிதம்பரம், காற்றுக்கு காலஹஸ்தி, பூமிக்கு காஞ்சிபுரம், நெருப்பிற்கு திருவண்ணாமலை ஆகிய கோயிலுக்குப் போகலாம்.
இக்கோயில்கள் ஆன்மீக சாதனாவிற்கான ஸ்தலங்களாக உருவாக்கப்பட்டன, வழிபாட்டுத்தலங்களாக அல்ல.
சத்குரு:
ஆயிரமாயிரம் ஆண்டுகளாக மக்கள்தொகை முழுவதும், மனிதரின் உச்சபட்ச நல்வாழ்வின்மேல் மட்டுமே கவனமாக இருந்த, உலகின் மிகக்குறைவான கலாச்சாரங்களில் ஒன்றாக இந்திய கலாச்சாரம் இருந்துவந்துள்ளது. நீங்கள் இந்தியாவில் பிறந்துவிட்டால், உங்கள் வாழ்க்கை, உங்கள் தொழில், மனைவி, கணவன் அல்லது குடும்பத்தைப் பற்றியது அல்ல, உங்கள் வாழ்க்கை முக்தியைப் பற்றியதாக மட்டுமே இருக்கும். சமுதாயம் முழுவதுமே இப்படித்தான் கட்டமைக்கப்பட்டிருந்தது.
இந்த நோக்கத்தில், பலவிதமான சக்திவாய்ந்த கருவிகள் இந்த கலாச்சாரத்தில் உருவாக்கப்பட்டது. இந்த திசையில் மிகவும் சக்திவாய்ந்த கருவிகளாக ஜோதிர்லிங்கங்கள் உருவாக்கப்பட்டன. இத்தகைய வடிவங்களின் முன்னிலையில் இருப்பது சக்திவாய்ந்த அனுபவமாகும்.
ஜோதிர்லிங்கங்களுக்கு அபாரமான சக்தியுண்டு, ஏனென்றால் அவை வெறும் மனித ஆற்றலோடு நில்லாமல், இயற்கையின் சக்தியையும் பயன்படுத்தி பிரதிஷ்டை செய்யப்பட்டு, குறிப்பிட்ட விதமாக உருவாக்கப்பட்டன. வெறும் பன்னிரண்டு ஜோதிர்லிங்கங்கள்தான் உள்ளன. அவை புவியியல்ரீதியாகவும் வானியல்ரீதியாகவும் மகத்துவம் வாய்ந்த புள்ளிகளில் இடம்பெற்றுள்ளன. இந்த புள்ளிகள் பிரபஞ்சத்தில் இயற்கையாகவே சில சக்திகளுடன் இருக்கின்றன. நெடுங்காலத்திற்கு முன்பு, உயர்ந்த நிலையிலான கிரகிப்பாற்றல் கொண்ட மக்கள் கவனமாக இவ்விடங்களை கணக்கிட்டு வானியல் அசைவுக்கேற்ப இப்புள்ளிகளை தீர்மானித்தனர்.
இவற்றில் சில ஜோதிர்லிங்கங்கள் இப்போது உயிருடன் இல்லை, ஆனால் அவற்றில் பல ஜோதிர்லிங்கங்கள் இன்றும் சக்திவாய்ந்த கருவிகளாக இருக்கின்றன.
ஷி-வா எனும் சொல்லுக்கு "எது இல்லையோ அது" அல்லது பொருள்-இல்லாதது என்று அர்த்தம் - இந்த இடைக்கோடு முக்கியமானது. பரந்துவிரிந்த பொருள்-இல்லாததன் மடியில்தான் படைப்பு நிகழ்ந்திருக்கிறது. அணுவிலும் அண்டத்திலும் 99% வெறுமைதான் - அதாவது பொருள்-இல்லாதது. ஒரே வார்த்தையான காலா, காலத்தையும் வெளியையும் குறிப்பதோடு, சிவனின் ஒரு உருவமான காலபைரவரையும் குறிக்கிறது. காலபைரவர் என்பது அதிர்வுமிக்க ஒரு இருள்நிலை, ஆனால் அவர் முற்றிலுமாக அசைவில்லாமல் ஆகும்போது அவர் மஹாகாலா ஆகிறார், அதாவது உச்சபட்ச கால இயந்திரமாகிறார்.
உஜ்ஜெயினில் உள்ள மஹாகாலா கோயில் வியக்கத்தக்க விதத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும் இடமாகும். இவ்விடம் நிச்சயம் இதயத்தில் உறுதி இல்லாதவர்களுக்கானது அல்ல. பண்படுத்தப்படாத உக்கிர வடிவமாக இருக்கும் அவர், உச்சபட்ச விடுதலையைத் தேடுவோருக்கு, காலத்தை நாம் அறிந்தவிதத்தில் அழிப்பவராக இருக்கிறார்.
உலகில் எங்குமே ஆன்மீக செயல்முறை என்பது பொருள்தன்மையைக் கடப்பதைப் பற்றியதாகத்தான் எப்போதும் இருக்கிறது, ஏனென்றால் உருவம் என்பது சுழற்சிகளுக்கு உட்பட்டு இருக்கிறது. எனவே காலபைரவர், அறியாமையை அழிப்பவராக பார்க்கப்படுகிறார்: பிறப்பு மற்றும் இறப்பு, இருப்பது மற்றும் இல்லாதிருப்பது ஆகிய கட்டாயத்தால் நிகழும் சுழற்சிகளை தவிடுபொடியாக்குபவராக இருக்கிறார்.
சிவனைப் பற்றி, ஒரு எல்லையில்லாத பரிமாணமாக அல்லது பொருள்தன்மைக்கு அப்பாற்பட்ட ஒன்றாக பேசாத, தன்னையுணர்ந்த ஞானிகள் எவருமே இல்லை. ஒரே வித்தியாசம், அவர்கள் அவர்களுக்குரிய மொழியில், அவர்கள் வாழ்ந்த இடத்திற்குரிய குறியீடுகளுடன் வெளிப்படுத்தியிருப்பார்கள்.
எனினும், உலகெங்கிலும் மிகவும் முரட்டுத்தனமாக மதத்தைப் பரப்பும் வழக்கங்களால், கடந்த 1500 ஆண்டுகளில், தொன்மையான மெசொபொட்டாமியா நாகரிகம், மத்திய ஆசிய நாகரிகங்கள், வட ஆப்பிரிக்க நாகரிகங்கள் என்று கடந்தகாலத்தின் மகத்தான கலாச்சாரங்களில் பெரும்பான்மையானவை அழிந்துவிட்டன. எனவே இது இப்போது அந்த அளவு தெரிவதில்லை, ஆனால் சரித்திரத்தில் நீங்கள் சற்று ஆழமாகப் பார்த்தால், இது எங்கும் இருந்துள்ளது. எனவே ஏதோவொரு விதத்தில் மறைஞானத்தின் அறிவியல் ஒவ்வொரு கலாச்சாரத்திலும் இருந்தது. ஆனால் கடந்த 1500 ஆண்டுகளில் உலகின் மற்ற பகுதிகளில் பெரும்பாலும் தொலைந்துவிட்டது.
இயற்கையாக உருவாகும் லிங்கங்கள் சுயம்பு லிங்கங்கள் என அழைக்கப்படுகின்றன. வடக்கிலுள்ள ஜம்மு மாநிலத்திலுள்ள அமர்நாத்தில் ஒரு குகை உள்ளது. குகையின் கூரையிலிருந்து சொட்டும் சுண்ணாம்பு உப்புகள் கலந்த நீரால் இந்த லிங்கம் இயற்கையாக உருவாகியுள்ளது. குகையின் கூரையிலிருந்து மெதுவாக நீர்த்துளிகள் விழுந்து பனியாக உரையும் காட்சி, பார்ப்பதற்கு மாயாஜாலத்தைப் போலத் தெரியும்.
சில லிங்கங்கள் பாறை, மரம் அல்லது ரத்தினங்களில் இருந்து செதுக்கப்படுகின்றன; சில லிங்கங்கள் களிமண், மணல் அல்லது உலோகங்களால் செய்யப்படுகின்றன. இவை பிரதிஷ்டை லிங்கங்கள் ஆகும். பல லிங்கங்கள் உலோக உரையால் மூடப்பட்டு ஒரு முகமும் வழங்கப்பட்டு, பக்தர்கள் எளிதில் தொடர்புகொள்ளும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளன. இவை முகலிங்கங்கள் ஆகும். சில லிங்கங்களில் சிவனின் உருவம் முழுவதுமே அதன்மேல் செதுக்கப்பட்டுள்ளன.
லிங்கங்கள் ஆண்தன்மை மற்றும் பெண்தன்மையின் சங்கமத்தைக் குறிக்கின்றன. இதன் பெண்தன்மையான அடிபாகம் கௌரிபீடம் அல்லது ஆவுடையார் என்று அழைக்கப்படுகிறது. லிங்கமும் அடிபாகமும் சேர்ந்து, சிவன் மற்றும் சக்தி அல்லது ஆண்தன்மை மற்றும் பெண்தன்மையின் சக்திகள் சங்கமிப்பதைக் குறிக்கின்றன.
யோகா அணுகும் சக்திநிலைகள் ஐம்புலங்களின் வட்டத்திற்குள் இல்லாததால், இத்தகைய உள்நிலைகளை உணர சாதாரணமாக ஒரு குருவின் வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. பல உறவுகள் மனம், உணர்ச்சி மற்றும் உடல்நிலையிலான பிணைப்பை சார்ந்திருக்கின்றன, ஆனால் குரு-சிஷ்ய உறவு சக்தியை அடிப்படையாகக் கொண்டதால் அது தனித்துவமானது.
நவீன அறிவியல், முழுவதுமாக ஐம்புலங்களை சார்ந்திருப்பதால், ஆராய்ச்சி அல்லது தேடுதலை அனுபவரீதியாக அல்லது தர்க்கரீதியாக அணுகுவதால், மனித மனத்தின் மேலோட்டமான சக்திகளை மட்டுமே அவை அறிந்துணர்கின்றன. நவீன கல்விமுறையும் இந்த அணுகுமுறையை எதிரொலிப்பதால், ஒரு தனிமனிதரின் கிரகிப்பாற்றலை கவனிக்காமல் அது புறந்தள்ளுகிறது. இந்த ஒரு சூழ்நிலையில், தர்க்கத்திற்கு அப்பாற்பட்ட உள்ளார்ந்த பார்வைக்கான ஆற்றல் ஒரு குருவிற்கு இருப்பது பற்றி மிகவும் சந்தேகிக்கும் நிலை நிலவுகிறது. எனினும் சரித்திரம் முழுவதிலும், தேடுதலில் இருக்கும் ஒருவர் எப்போதும் உள்ளுணர்வால் ஒரு குருவை நோக்கி ஈர்க்கப்படுகிறார். ஆன்மீக வழிகாட்டுதலுக்கான இந்த அவசரத் தேவையை நிவர்த்திசெய்ய, சில தொலைநோக்குப் பார்வையுடைய குருமார்கள், குருவின் இருப்பையும் சக்தியையும் மறுவுருவாக்கம் செய்யும்விதமான சக்தி ஸ்தலங்களை உருவாக்கியுள்ளனர்.
தியானலிங்கம் என்பது குருவின் மிகச்சிறந்த வெளிப்பாடாகும். அது யோக அறிவியலின் சாரமாக விளங்குவதோடு, உள்நிலை சக்திகளின் உச்சபட்ச வெளிப்பாடாக இருக்கிறது.
இப்படி ஒரு கதை இருக்கிறது. ஒருமுறை பிரம்மனும் விஷ்ணுவும் ஒரு மிகப்பெரிய ஒளியின் தூணைக் கண்டனர். இந்த ஆதியந்தமில்லாத தூணிலிருந்து ஆஉம் என்ற சப்தம் வெளிப்பட்டது. ஆச்சரியமடைந்த அவர்கள் இதனை ஆராய முடிவுசெய்தனர். ஒரு அன்னப்பறவையின் உருவத்தை எடுத்த பிரம்மன், நீலவானம் நோக்கி அதன் உச்சத்தைத் தேடி பறந்தார். ஒரு காட்டுப்பன்றியின் உருவத்தை எடுத்த விஷ்ணு, பிரபஞ்சத்தின் ஆழத்திற்குள் அதன் அடிபாகம் தேடி தோண்டினார்.
இருவரும் தோல்வியடைந்தனர். ஏனென்றால் அந்த ஒளியின் தூண் சிவனேயன்றி வேறெதுவும் இல்லை. அளவிட முடியாததை ஒருவரால் எப்படி அளக்கமுடியும்? விஷ்ணு திரும்பியபோது அவர் தோல்வியை ஒப்புக்கொண்டார். எனினும் தோல்வியை ஒப்புக்கொள்ள விரும்பாத பிரம்மன் அந்த தூணின் உச்சத்தைக் கண்டதாக கர்வமாகப் பேசினார். ஆதாரமாக அதன் உச்சத்தில் கண்டெடுத்ததாக தாழம்பூ ஒன்றையும் அவர் சமர்ப்பித்தார்.
இந்த பொய்யைச் சொன்ன மாத்திரத்தில் சிவன் ஆதியோகியாகத் தோன்றினார். இரண்டு தெய்வங்களும் அவர் காலில் விழுந்தனர். பிரம்மன் சொன்ன பொய்யின் காரணமாக, இனி பிரம்மன் வழிபாட்டுக்குத் தகுதியில்லாத கடவுளாவார் என்று சிவன் அறிவித்தார். இந்த பொய்க்கூற்றுக்கு துணைநின்றதன் காரணமாக, அந்த மலரும் அதன் அருளை இழந்தது. அதனை ஒரு அர்ப்பணமாக இனி ஏற்கமாட்டேன் என்று ஆதியோகி அறிவித்தார். எனினும் புனிதமான மஹாசிவராத்திரி இரவுக்கு மட்டும் அவர் விதிவிலக்கு வழங்கினார். இன்றுவரை மிக ஆழமான ஆன்மீக சாத்தியம் நிறைந்த வருடத்தின் மிக இருண்ட மஹாசிவராத்திரி இரவில் மட்டும்தான் தாழம்பூ வழிபாட்டிற்கு அர்ப்பணிக்கப்படுகிறது.
"தியானலிங்கத்தின் வளையத்திற்குள் ஒருசில நிமிடங்கள் மௌனமாக அமர்ந்திருப்பதே, தியானம் பற்றி ஏதும் அறியாதவரையும் ஆழ்ந்த தியான நிலையை உணரச்செய்யும்." - சத்குரு
சம்ஸ்கிருதத்தில் "தியானம்" என்ற சொல் தியானத்தையும், "லிங்கம்" எனும் சொல் வடிவத்தையும் குறிக்கிறது. பிராணப் பிரதிஷ்டை எனும் மறைஞான செயல்முறையின் மூலம் சத்குரு தனது உயிர்சக்தியைப் பயன்படுத்தி, லிங்கத்தை அதன் உச்சபட்ச சக்திநிலைக்கு பிரதிஷ்டை செய்துள்ளார். இந்த செயல்முறையில் ஏழு சக்கரங்களும் (உடலின் பிரதான சக்தி மையங்கள்) அவற்றின் உச்சநிலைக்கு சக்தியூட்டப்பட்டு பூட்டப்பட்டுள்ளன. அதனால் இது மிக உயர்ந்த உயிர் அல்லது பரிணாம வளர்ச்சியின் உச்சபட்ச உயிரின் சக்தி உடலைப்போல இருக்கிறது.
எந்த வழிபாடும் பிரார்த்தனையும் தேவையில்லாத தியானத்திற்கான இந்த ஆலயம், அனைத்து மதங்களையும் ஒரே பொதுவான ஆதாரத்தின் வெளிப்பாடுகளாக அங்கீகரிக்கிறது.
நீயே என் குருவின் ஆசை
என் ஓயாத ஆசை
என் கனவிலும் நினைவிலும்
என் ஒரே ஏக்கம் உன்னை நிறைவுசெய்வதுதான்
மனிதர்கள் செய்யக்கூடியது செய்யக்கூடாதது
எதையும் செய்யத் தயாராக
என்னை அர்ப்பணிக்கவும் தேவை வந்தால்
இன்னும் நூறு உயிர்களையும் அர்ப்பணிக்கத் தயாராக
ஓ மகிமைபொருந்திய வடிவமே
இப்போது நீ நிறைவடைந்துவிட்டதால்
உன் மகிமையும் அருளும்
தூங்கும் கூட்டங்களை
விழித்தெழுந்து ஒளிரச்செய்யட்டும்
இப்போது நீ நிகழ்ந்துவிட்டதால்
இன்னும் உயிரெனும் வரம் என்னிடம் இருப்பதால்
எனைக்கொண்டு நான் என்ன செய்வது
சிகரங்களில் நீண்டகாலம் வாழ்ந்தாகிவிட்டது
வாழ்வின் பள்ளத்தாக்குகளில் வலம்வரும் நேரமிது.
– சத்குரு