logo
logo
உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கம், Ujjain Mahakaleshwar Temple in Tamil

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கம்: இந்த சிவலிங்கத்தை இவ்வளவு சக்திவாய்ந்ததாக மாற்றுவது எது?

மத்தியப் பிரதேசத்தில் உள்ள உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் கோவிலில் உள்ள லிங்கம், இந்தியாவில் உள்ள 12 ஜோதிர்லிங்கங்களில் ஒன்று. புகழ்பெற்ற இக்கோவிலின் ஆன்மீக முக்கியத்துவத்தை சத்குரு விளக்குகிறார்.

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கம் கோவில்: தோற்றம் மற்றும் முக்கியத்துவம்

சத்குரு: உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வரர் கோவில் சிவனின் தீவிர பக்தரான சந்திரசேனா என்ற மன்னரால் நிறுவப்பட்டது. பக்தர்கள் மற்றும் அறிவை நாடுபவர்களின் நகரமாக இருந்த உஜ்ஜைனுடைய கலாச்சாரத்தை அழிக்க விரும்பிய மக்களால் சந்திரசேனா தாக்கப்பட்டார். உஜ்ஜைன் கிட்டத்தட்ட இந்தியாவின் இரண்டாவது காசியைப் போலவே இருந்தது. அங்கு அறிவு, கற்றல் மற்றும் ஆன்மீக அறிவின் பரிமாற்றம் ஆகியவை நகரத்தின் மிக முக்கிய அம்சங்களாக இருந்தன. இந்த நோக்கத்திற்காகவே மக்கள் உஜ்ஜைன் நகரத்திற்கு வந்தனர். இந்த நகரம் எந்த வர்த்தகப் பாதையிலும் இல்லை என்றாலும், அந்த நேரத்தில் அவந்திகா என்று அழைக்கப்பட்ட உஜ்ஜைன், அறிவு மற்றும் ஆன்மீகத்தை மட்டுமே மையமாக வைத்து பெரிதாக வளர்ந்தது. இருப்பினும், இதை விரும்பாத மற்றும் நகரத்தை அழிக்க விரும்பிய மக்களும் இருந்தனர்.

அவர்கள் தாக்கியபோது, சந்திரசேனா சிவனிடம் பிரார்த்தனை செய்தார். சிவன் மஹாகாலா வடிவத்தில் தோன்றி எதிரிகளை ஒரு குறிப்பிட்ட வழியில் உள்வாங்கினார். சந்திரசேனா தொடர்ந்து ஆன்மீகத்தையும் அறிவையும் பரப்ப இந்த சிக்கலில் இருந்து அவரை சிவன் விடுவித்தார்.

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கம்: லிங்கத்தின் சக்தி

நான் வழக்கமாக கோவில்களுக்குச் செல்வதில்லை என்றாலும், உஜ்ஜைனில் உள்ள மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கத்திற்குச் சென்றேன். இந்தக் கோவில் பல வழிகளில் சேதப்படுத்தப்பட்டுள்ளது. படையெடுப்பாளர்களால் கோவில் இடிக்கப்பட்டு இரண்டு அல்லது மூன்று முறை மீண்டும் கட்டப்பட்டுள்ளது, ஆனால் இன்றும், நீங்கள் அங்கே அமர்ந்தால், இந்த சிறிய வடிவம், ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக அங்கு அமர்ந்திருக்கும் ஒரு சிறிய கல் துண்டு, உங்களை முற்றிலுமாக வியப்பில் ஆழ்த்தும். இது நேற்று கட்டப்பட்டதைப் போல அதிர்வுமிக்கதாக இருக்கிறது. எப்படி என்று உங்களுக்குத் தெரிந்தால், உங்களுடைய அமைப்பை முழுமையாக மறுசீரமைத்து, அதுபோன்ற ஒரு லிங்கத்தின் முன்னிலையில் உங்கள் அமைப்பை முற்றிலுமாக மாற்றியமைக்க முடியும்.

மஹாகாலா கோவிலும், அங்குப் பிரதிஷ்டை செய்யப்பட்ட லிங்கமும் அற்புதமான தன்மையுடையவை. அது உங்கள் மூலத்தையே வேரிலிருந்து அசைத்துப்போடும். இது ஒரு வியக்கத்தக்கப் பிரதிஷ்டை, ஏதோ ஒரு வகையில் உங்களைக் கரைக்கும் நோக்கத்திற்காக மட்டுமே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. அவர் வெளிப்படும் விதத்தில் ஒரு அப்பட்டமான ஆக்ரோஷம் இருக்கிறது. ஒருவர் இந்தக் கோவிலுக்குள் முறையாக நுழைவதற்குத் தயாராக இருக்க வேண்டும், ஏனெனில் இது மகத்தான சக்தியைக் கொண்டுள்ளது, மேலும் இளகிய மனம் படைத்தவர்களுக்கு அல்ல.

ஒவ்வொரு நாளும், மஹாகாலாவிற்கு செய்யப்பட வேண்டிய அர்ப்பணம் மயான பூமியிலிருந்து பெற்ற புத்தம் புதிய சாம்பலாகும், ஏனென்றால் அதைத்தான் மஹாகாலா விரும்புகிறார். மேலும் அது குறிப்பிட்ட விதத்தில் இயங்குவதற்கு அதுதான் காரணம். அதேபோல் தொடர்ந்து வைத்திருப்பதற்கும் இந்த சாம்பல் மிகவும் முக்கியம். இது ஒரு கலாச்சார அம்சம் மட்டுமல்ல. அதில் ஒரு அறிவியல் இருக்கிறது. அனுபவப்பூர்வமாக, மயான பூமியிலிருந்து பெற்ற சாம்பலுக்கும் வேறு சில சாம்பலுக்கும் உள்ள வேறுபாடு தனித்துவமானது.

இந்த செயல்முறையைத் தொடர்வது மிகவும் முக்கியம், ஏனெனில் அதுவே மஹாகாலாவின் இயல்பு. இந்த மஹாகால ரூபாவின் இயல்பு என்பது நீங்கள் அங்குச் செல்லும்போது, எல்லாம் சாம்பலாக எரிக்கப்படுகிறது. அதாவது நீங்கள் பொருள்தன்மையில் இருந்து விடுபடுகிறீர்கள். இது உங்கள் உச்சபட்ச விடுதலையை நோக்கி உங்களைத் தூண்டுகிறது.

நீங்கள் அதை மென்மையான வழியில் செய்ய விரும்பினால், தியானலிங்கத்தில் மஹாகாலாவின் ஒரு பரிமாணம் உள்ளது. ஆனால் அது மறைக்கப்பட்டுள்ளது, எனவே அது தீவிரத் தேடலில் இருப்பவர்களுக்கு மட்டுமே கிடைக்கும். ஆனால் நீங்கள் அதை ஒரு சக்திவாய்ந்த வழியில் செய்ய விரும்பினால், நீங்கள் உண்மையிலேயே கடினமாகத் தள்ளப்பட விரும்பினால், மேலும் நீங்கள் இளகிய மனம் கொண்டவர் இல்லை என்றால், மஹாகாலா கோவில் ஒரு அற்புதமான வழி.

சிவனின் மஹாகாலா வடிவம்: சுக்ராச்சாரியார் மற்றும் சஞ்சீவினி மந்திரத்தின் கதை

சிவனின் பல்வேறு வடிவங்களில், 'காலா' அல்லது 'மஹாகாலா' ஒரு முக்கியமான மற்றும் உக்கிரமான வடிவமாகும். மஹாகாலா என்ற வகையில், அவர் காலத்தின் இறைவன். முக்தி அல்லது உச்சபட்ச விடுதலையை நாடுபவர்களுக்கு, மஹாகாலா என்று நாம் குறிப்பிடும் இந்த பரிமாணம் மிக முக்கியமானது.

ஒருமுறை இப்படி நடந்தது. அசுரர்களுக்கு குருவாக இருந்த மகா முனிவர் சுக்ராச்சாரியார், கடும் தவம் இருந்து சிவனை வழிபட்டார், அதனால் சிவன் தோன்ற வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. சிவன் தோன்றியபோது, சுக்ராச்சாரியார் சாகா வரம் கேட்டார். அதற்கு சிவன், "அது சாத்தியமில்லை. பிறந்தவர்கள் அனைவரும் ஒருநாள் இறந்தே ஆகவேண்டும். வேறு ஏதாவது கேளுங்கள்" என்றார். பின்னர் சுக்ராச்சாரியார், "எனக்குப் புத்துணர்வை உண்டாக்கும் சக்தியைக் கொடுங்கள், அதனால் நான் எந்த வகையான காயத்தையும் நோயையும் குணப்படுத்த முடியும்" என்றார். குணப்படுத்துவதில் தலைசிறந்தவரும் அனைத்து மூலிகைகள் மற்றும் மருந்துகள் பயன்படுத்துவதில் வல்லவருமான சிவன், சஞ்சீவினி மந்திரத்தை சுக்ராச்சாரியாருக்கு வழங்கினார். இந்த மந்திரம் எல்லாவிதமான நோய்களையும் காயங்களையும் குணப்படுத்தும் சக்தி கொண்டது.

சுக்ராச்சாரியாருக்கு இந்த சஞ்சீவினி மந்திரம் கிடைத்தவுடன், அசுரர்கள் அதிகப்படியான தைரியத்துடன் தேவர்கள் மீது போருக்கு மேல் போர் தொடுத்தனர். போரில் எப்படிப்பட்ட கடுமையான காயத்துடனும் விழுந்த அனைத்து அசுரர்களையும் சுக்ராச்சாரியார் சஞ்சீவினி மந்திரத்தைப் பயன்படுத்திக் குணப்படுத்தினார். அதனால் அசுரர்களின் படையால் ஒருவரையும் இழக்காமல் தொடர்ந்து போரிட முடிந்தது.

தேவர்கள் மிகவும் பதறிப்போனார்கள், இது மிகவும் நியாயமற்ற போர் என்று உணர்ந்தனர், ஏனென்றால் அவர்கள் எவ்வளவு போரிட்டாலும், அசுரர்கள் இறக்கவில்லை, ஆனால் தேவர்கள் இறந்துபோகின்றனர். அவர்கள் பிரம்மாவிடம் சென்றனர். பிரம்மா சிவனிடம் முறையிட்டு, "நீங்கள் சுக்ராச்சாரியாருக்கு இப்படி ஒரு சக்தியைக் கொடுத்துள்ளீர்கள். நீங்கள் தான் அவரைக் கொல்ல வேண்டும். இல்லையெனில், உலகின் சமத்துவத்தை இது மோசமாக பாதிக்கும்” என்றார். அசுரர்களிடம், தேவர்களிடம் இல்லாத சக்தி உள்ளது என்று சொன்னார். அதற்குச் சிவன், "அவரைக் கொல்ல வேண்டிய அவசியமில்லை, நான் அவரைக் கட்டுப்படுத்துகிறேன்" என்றார்.

தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையிலான போரின் போது, சுக்ராச்சாரியார் மந்திரத்தை உச்சரித்து, அனைத்து அசுரர்களையும் காயங்களிலிருந்து குணப்படுத்தினார். பின்னர் அடிவானத்தில் கொடிய யக்ஷியான கிருத்திகை ஒரு பயங்கரமான கோர ரூபத்தில் தோன்றினார். இவர் சிவ கணங்களில் ஒருவர். அவர் சுக்ராச்சாரியாரை தனது கருவறைக்குள் உறிஞ்சிக்கொண்டார், சுக்ராச்சாரியார் அங்கு ஒரு கருவாகவே தங்கிவிட்டார். இப்படி சுக்ராச்சாரியார் கட்டுப்படுத்தப்பட்டார், தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே சமநிலை நிலைநாட்டப்பட்டது.

பிரம்மா மிகவும் பூரிப்படைந்தார், ஒருவரைக் கொல்லாமலேயே, அவருடைய வாழ்க்கையை முழுமையாகக் கட்டுப்படுத்த மஹாகாலாவால் மட்டுமே முடியும் என்று நினைத்தார். சுக்ராச்சாரியார் தொடர்ந்து கிருத்திகையின் கருவறையிலேயே இருந்ததால், சஞ்சீவினி மந்திரம் செயலிழந்து போனது. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், மஹாகாலா சுக்ராச்சாரியாரால் தொடர்ந்து இயங்க முடியாதபடி அவருக்குக் காலத்தை உறைந்துபோக வைத்தார்.

மஹாகாலேஷ்வரர் கோவில் உஜ்ஜைனை உண்மையான GMT (Greenwich Mean Time) ஆக்கியது!

ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு வந்து கிரீன்விச் சராசரி நேரத்திற்கு மாற்றுவதற்கு முன்பு மத்திய இந்தியாவில் நிறுவப்பட்ட மஹாகாலேஷ்வரர் கோவில் பல ஆயிரம் ஆண்டுகளாகக் காலத்திற்கான மையமாக இருந்தது. இதுவே உலகின் சராசரி நேரமாக இருந்தது, ஏனென்றால் இங்குதான் நேரம் தொடங்கியதாகக் கருதப்பட்டது. எனவே, அவர்கள் அங்கு ஒரு குறிப்பிட்ட தெய்வத்தை நிறுவினர், அது மஹாகாலா என்று அழைக்கப்படுகிறது. 

யோக அறிவியலில், காலம் மட்டுமே உள்ளது, வெளி என்ற ஒன்று இல்லை என்று நாம் பார்க்கிறோம். வெளி என்பது காலத்தின் விளைவு. நேரம் இல்லையெனில், வெளி என்பது இருக்காது. வெளி என்பது நாம் பொருள்தன்மையில் ஈடுபாட்டுடன் இருப்பதால் உருவாக்கப்பட்ட ஒரு மாயை. பொருள்தன்மையில் இருந்து நீங்கள் விடுபட்டால், திடீரென காலம் இல்லாமல் போகிறது, வெளியும் இல்லாமல் போகிறது.

காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டிற்கும் நம்மிடம் ஒரு பொதுவான சொல் உள்ளது. நாம் அதைக் காலா என்று அழைக்கிறோம். காலா என்றால் நேரம் என்றும், வெறுமை என்றும் பொருள். வெறுமை என்றால் வெளி என்று பொருள். ஒரு அறை காலியாக உள்ளது என்று நாம் கூறும்போது, இங்கே வெளி உள்ளது என்று அர்த்தம். அறை நிரம்பியிருக்கும் போது, இங்கே இடம் இல்லை. அதாவது வெளி இல்லை என்று நாம் கூறுகிறோம். அதைத்தான் எளிமையான முறையில் சொல்கிறோம். ஆனால் காலம் மற்றும் வெளி ஆகிய இரண்டிற்கும் ஒரே சொல் பயன்படுத்தப்படுகிறது, ஏனெனில் வெளி காலத்தால் தோன்றுகிறது. காலம் இல்லையென்றால், வெளி என்பது இல்லை.

யோகாவில், நாம் காலத்தை இரண்டு வெவ்வேறு பரிமாணங்களில் பார்க்கிறோம்: காலா மற்றும் மஹாகாலா. மஹாகாலா, மஹா காலத்தைக் குறிக்கிறது. அன்றாட வாழ்க்கையில், காலத்தைப் பற்றிய நமது புரிதல் என்பது சுழற்சியான இயக்கங்கள். பூமி சுழல்கிறது, அது ஒரு நாள். சந்திரன் பூமியைச் சுற்றி வருவது, ஒரு மாதம். பூமி சூரியனைச் சுற்றி வருவது, ஒரு ஆண்டு. மேலும் இதுபோன்று பொருள்தன்மையில் இருக்கும் அனைத்தும் சுழற்சியான இயக்கத்திலே உள்ளன. ஆனால் மஹாகாலாவிற்கு சுழற்சி என்பது கிடையாது.

பொருள்தன்மையால் மட்டுமே இந்த சுழற்சி இயக்கம். பொருள்தன்மையால் பிறப்பு மற்றும் இறப்பு, தொடக்கம் மற்றும் முடிவு ஆகியவற்றின் வடிவில் காலம் என்பது உள்ளது. ஒவ்வொரு அணு, எலக்ட்ரான் மற்றும் புரோட்டானுக்கும் ஒரு வயது உள்ளது. கிரகங்கள், சூரியக் குடும்பம் மற்றும் சூரியனுக்கும் கூட ஒரு வயது உள்ளது. ஒரு காலத்தில் அவை தொடங்கின, ஒரு காலத்தில் அவை முடிவுக்கு வந்தே தீரும். அது ஒரு வெடிப்பாக இருக்கப்போகிறதா அல்லது வலுவிழந்து மறையப்போகிறதா என்பது நாம் விவாதிக்கக்கூடிய ஒன்று. ஆனால் பொருள்தன்மை நிரந்தரமானது அல்ல. இது தொடங்குகிறது மற்றும் முடிவடைகிறது. இதனால் வழக்கமாக நாம் காலத்தை அந்த விதத்தில் பார்க்கிறோம். ஆனால் சுழற்சி இயல்பிற்கு அப்பாற்பட்ட காலம் உள்ளது, இதை நாம் மஹாகாலா என்று அழைக்கிறோம்.

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் லிங்கம் மற்றும் முக்தி

ஆன்மீகத் தேடலில் இருப்பவர் ஒருவரின் முழு விருப்பமும் முக்தி அல்லது உச்சபட்ச விடுதலையை அடைவதே, அதாவது நீங்கள் பொருள்தன்மையைக் கடக்க விரும்புகிறீர்கள். வேறு வார்த்தைகளில் கூறுவதென்றால், நீங்கள் இருப்பின் சுழற்சி இயல்பைக் கடக்க விரும்புகிறீர்கள். இருப்பின் சுழற்சி இயல்பைக் கடந்து செல்வது என்பது வாழ்க்கையில் சுழற்சியாக மீண்டும் மீண்டும் நடக்கும் நிகழ்வுகளைக் கடந்து செல்வதாகும். வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் நடக்கும் நிகழ்வுகளைக் கடந்து செல்வது என்பது நீங்கள் யார் என்ற கட்டாயத்தன்மையைக் கடப்பதாகும். கட்டாயத்திலிருந்து விழிப்புணர்வுக்குச் செல்வதே இந்தப் பயணம். 

நீங்கள் கட்டாயத்திலிருந்து விழிப்புணர்வுக்குச் செல்ல விரும்பினால், பொருள்தன்மையின் சுழற்சி இயக்கத்தின் வெளிப்பாடான, உங்களுக்கு இப்போது இருக்கும் காலத்தின் குறைந்தபட்ச அனுபவம், கடக்கப்பட வேண்டும். பொருள்தன்மையின் அடிப்படையோ வரம்புகளோ இல்லாமல் நீங்கள் காலத்தை அனுபவித்தால், அந்த காலத்தை 'மஹாகாலா' என்று அழைக்கிறோம். மஹாகாலாவின் மடியில் படைப்பு என்பது மிக மிகச் சிறிய சிதறிக்கிடக்கும் பொருட்கள். விண்மீன் திரள்கள் மகத்தானவை, இருந்தும், அவை படைப்பின் சிறிய புள்ளிகளே. மீதமுள்ளவை அனைத்தும் வெறுமையாக உள்ளன. ஒரு அணுவில் தொண்ணூற்றொன்பது சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்டது வெறுமையே. அதுவே மஹாகாலா.

அணு சுழற்சி இயக்கங்களில் சிக்கி இருந்தாலும், அணுவில் தொண்ணூற்றொன்பது சதவீதத்திற்கும் அதிகமானவை வெறுமையே. பிரபஞ்சத்தில், தொண்ணூற்றொன்பது சதவீதத்திற்கும் அதிகமானவை வெறுமை. பெரிய விண்மீன் திரள்கள் சுழற்சி இயக்கங்களில் சிக்கியுள்ளன. ஆனால் தொண்ணூற்றொன்பது சதவீதத்திற்கும் அதிகமானவை வெறுமையே. எனவே, மஹாகாலாவின் மடியில் தான் படைப்பு என்பது நிகழ்கிறது. நீங்கள் படைப்பின் சிறிய புள்ளிகளில் ஈடுபாட்டுடன் இருந்தால், காலத்தை ஒரு சுழற்சி இயக்கமாகவே அனுபவிக்கிறீர்கள். இந்த பரிமாணம் சம்சாரா என்று குறிப்பிடப்படுகிறது - அப்படியென்றால் சுழற்சி இயக்கங்கள்.

நீங்கள் இதைக் கடந்தால், நாம் அதை 'வைராக்யா' என்று அழைக்கிறோம். இதன் பொருள் நீங்கள் காற்றைப்போல ஒளிபுகும் தன்மைக்கு மாறிவிட்டீர்கள் என்பதாகும். நீங்கள் ஒளிபுகும் தன்மையில் இருந்தால், ஒளியை நிறுத்தமாட்டீர்கள். நீங்கள் ஒளியை நிறுத்தவில்லை என்றால், வாழ்க்கையின் கட்டாய இயல்பு அல்லது வாழ்க்கையின் சுழற்சி இயக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டுவிட்டீர்கள் என்று அர்த்தம்.

வாழ்க்கையின் சுழற்சி இயக்கத்திலிருந்து நீங்கள் விடுபட்டால், 'நீங்கள் முக்தி அடைந்துவிட்டீர்கள் அல்லது உச்சபட்ச விடுதலை அடைந்துவிட்டீர்கள் என்று நாங்கள் கூறுகிறோம். எனவே, முக்தி அல்லது உச்சபட்ச விடுதலையை விரும்புவோருக்கு, நாம் மஹாகாலா என்று குறிப்பிடும் இந்த பரிமாணம் மிக முக்கியமானது.

    Share

Related Tags

சிவ தத்துவம்

Get latest blogs on Shiva

Related Content

சிவனும், சக்தியும்: 54 சக்தி பீடங்கள் எவ்விதம் தோன்றின?