சிவன் ஒரு யோகியா? கடவுளா?

article சிவன் பற்றி
சிவனை யோகக் கலாச்சாரத்தில் ஆதியோகியாகப் போற்றி வணங்குகிறோம். ஆனால், சாமானிய மக்கள் மனதில் சிவன் ஒரு கடவுளாகவே பார்க்கப்படுகிறார். இதில் எந்த பார்வை சரியானது? சிவனை ஆதியோகியாக பார்க்கும் கண்ணோட்டத்தை மக்களிடத்தில் கொண்டு வரவேண்டுமா? விடை தருகிறது சத்குருவின் உரை! சிவன் ஒரு யோகியா? கடவுளா? sivan oru yogiya kadavula

கேள்வி: சத்குரு, நீங்கள் சிவனை தலைசிறந்த யோகி, முதல் யோகி என்று அழைக்கிறீர்கள். படித்தவரோ, கல்வியறிவு பெறாதவரோ சிவனைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். நம் நாட்டில், மூலை முடுக்கெங்கும் சிவன் கோவில் உள்ளது. நம் வேண்டுதலை நிறைவேற்றுவதற்காக, அவருக்கு பாலபிஷேகம் செய்கிறோம், பூக்கள் சூட்டுவிக்கிறோம். இப்படி ஒரு சூழ்நிலை இருக்கையில் சிவனை ஒரு யோகியாக மக்களை பார்க்க வைப்பது எப்படி?

சத்குரு: யாருடைய கண்ணோட்டத்தையும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

வெவ்வேறு மனிதர்கள் வெவ்வேறு நிலைகளில் இருக்கிறார்கள். அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்ப ஏதோவொன்றை செய்கிறார்கள். அதனை நான் அழிக்க விரும்பவில்லை. இங்கு என்னுடன் அமர்ந்து கொண்டு, முக்தியைப் பற்றி பேசுகிறீர்கள், அதனால் நானும் உங்களுடன் இதைப் பற்றியெல்லாம் பேசுகிறேன். அருகிலுள்ள தாணிக்கண்டி கிராமத்திற்கு சென்றால், இதைப் பற்றி பேசுவதில்லை. தங்களுக்கு ஒரு கணபதி கோவில் வேண்டும் என்று ஊர் மக்கள் கேட்டனர், அதை நாம் உருவாக்கிக் கொடுத்தோம்.

வெறும் குடிசையில் கும்பிட்டுக் கொண்டிருந்தனர், கோவில் வேண்டும் என்று கேட்டபோது, அமைத்துக் கொடுத்தோம். நீங்கள் கும்பிடும் கடவுள் யாரென்பதில் ஒரு பிரச்சனையும் இல்லை. தங்கள் வாழ்க்கையில் மேலே பார்த்து கும்பிடுவதற்கு, ஏதோ ஒன்று மக்களுக்கு தேவையாய் இருக்கிறது. அதனை நான் எப்போதும் உடைக்கமாட்டேன். அது அவர்களுடைய வளர்ச்சிக்கு ஒரு கருவியாகவும் இருக்கிறது.

நீங்கள் எங்கிருக்கிறீர்களோ அதைப் பொருத்து எதையாவது செய்கிறீர்கள். உங்களுக்கு எது வேலை செய்யுமோ அதைச் செய்கிறீர்கள். மக்களை உந்தச் செய்து முன்னோக்கிச் செல்ல வைக்க நாம் விழைகிறோம், ஆனால், நிதர்சனம் அதுவல்லவே! நிதர்சன உண்மையை நாம் மறுக்கத்தான் முடியுமா?

அதனால், யாருடைய கண்ணோட்டத்தையும் நீங்கள் மாற்றியமைக்க வேண்டிய அவசியம் இல்லை.

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!