ieco
ieco

சிவபுராணம் (Sivapuranam in Tamil) – கதை வாயிலாக சொல்லப்பட்ட விஞ்ஞானம்!

article சிவனின் கதைகள்
சிவபுராணம், அடிப்படை விஞ்ஞானத்தின் பல அம்சங்களை எவ்வாறு விளக்கியுள்ளது என்பதையும் மேலும் ஒருவர் தன் கட்டுபாடுகளைக் கடந்து போவதற்கு அது எப்படி ஒரு சக்தியான கருவியாக இருக்கிறது என்பதையும் சத்குரு இங்கே தெளிவுபடுத்துகிறார்.

சத்குரு:

சிவபுராணம் வாசித்தால்… (Sivapuranam in Tamil)

ஷிவா என்று நாம் அழைக்கும் இந்த பரந்த வெறுமை, எல்லையற்றதும் பொருள்தன்மை அற்றதுமான ஒன்று. காலவரம்பு அற்று எப்பொழுதும் இருப்பது. ஆனால் மனிதரின் புரிதல், உருவம் எனும் எல்லைக்குள் இருப்பதால், நம் கலாச்சாரத்திலும், பாரம்பரியத்திலும் சிவனுக்கு பல அற்புதமான வடிவங்களை உருவாக்கினோம். புதிரான, புரிந்து கொள்ள இயலாத ஈஸ்வரன், அனுகூலமான ஷம்போ, எளிமையான போலா, வேதங்கள், சாஸ்திரங்கள், தந்திரங்கள் கற்பிக்கும் ஆசிரியரும், சிறந்த குருவுமான தட்சிணாமூர்த்தி, எளிதாய் மன்னிக்கும் அசுதோஷ், படைத்தவனின் உதிரத்தில் தோய்ந்த பைரவா, முற்றிலும் நிசப்தமான அச்சலேஷ்வரா, நடனத்தில் தேர்ந்த நடராஜா, இப்படி வாழ்வில் எத்தனை அம்சங்கள் இருக்கிறதோ, அத்தனை அம்சங்களும் அவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டிருக்கிறது.

 

சிவபுராணத்தில் நவீன இயற்பியல்

பொதுவாக, உலகின் பல பாகங்களிலும் தெய்வீகம் என்று மக்கள் நன்மை என்று கருதுவதையே குறிப்பிடுவார்கள். ஆனால் சிவபுராணம் வாசித்தால், சிவனை நல்லவன் என்றோ தீயவன் என்றோ அடையாளப்படுத்த முடியாது. அவன் அனைத்துமானவன். அவன் அழகற்றவன், அவனே மிகவும் அழகானவன்; அவன் சிறந்தவன், அவனே மோசமானவன்; அவன் மிகவும் ஒழுக்கமானவன், அவனே ஒரு குடிகாரன்; கடவுள்கள், பேய்கள் என அனைத்து விதமான ஜீவனும் அவனை வழிபடும். அவனைப் பற்றி ஏற்றுக் கொள்ள முடியாத கதைகளை, மிகவும் நாகரிகம் என்று கருதப்படும் தற்போதைய சமூகம், அனைத்து விதங்களிலும் அழித்துவிட்டாலும், அவன் சாரம் அதுதான். வாழ்வின் முற்றிலும் மாறுபட்ட அம்சங்கள் அனைத்தும் அடங்கியதுதான் சிவனின் ஆளுமை. பிரபஞ்சத்தின் அத்துனை சிக்கலான தன்மைகளின் கலவை ஒரே நபரின் உள்ளே போடப்பட்டுள்ளது. ஏனெனில் இந்த ஒருவரை ஏற்றுக் கொண்டால், பிறகு நீங்கள் இந்த வாழ்வையே கடந்தவராக ஆகிறீர்கள். வாழ்வின் பெரும் போராட்டமே, ஏதோ ஒன்றை இது அழகானது, அழகற்றது, நல்லது, தீயது என்று தேர்ந்தெடுப்பதுதான். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களும் உள்ள சிவனை ஏற்றுக் கொண்டால் பிறகு எவரோடும் உங்களுக்கு பிரச்சனை என்பதே இருக்காது.

 

கதை வடிவில் சிவபுராணம், விஞ்ஞான வடிவில் யோகா

sivapuranam in tamil, சிவபுராணம், sivapuranam, சிவபுராணம் கதை
சிவபுராணத்தின் கதைகளை கவனமாக வாசித்தால் முழு நவீன இயற்பியலும் அதில் அழகாக உணர்த்தப்பட்டிருப்பதை பார்க்கலாம். இது ஒரு பேச்சு வழக்கு கலாச்சாரம். விஞ்ஞானம் கதைகளின் வாயிலாக உணர்த்தப்பட்டது. இங்கு அனைத்துமே உருவகப்படுத்தப்பட்டது. ஆனால் எங்கோ மக்கள் கதைகளை மட்டும் வைத்துக் கொண்டு அறிவியலை விட்டு விட்டார்கள். நாளடைவில், கேலிக் கூத்தாகும் அளவுக்கு அந்த கதைகளை மிகைப்படுத்தி விட்டார்கள். மீண்டும் அறிவியலை கதைகளுக்குள் புகுத்தினால், அறிவியலை வெளிப்படுத்தும் ஒரு அழகான வழியாக அது இருக்கும்.

அழகான கதைகள் வாயிலாக சொல்லப்பட்டிருக்கும் சிவபுராணம், மனித விழிப்புணர்வை உச்சத்திற்கு உயர்த்தும் உச்சபட்ச விஞ்ஞானம். விஞ்ஞான வடிவில், யோகாவும் கதைகள் அற்று விளக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஆழமாக பார்த்தால் யோகாவும், சிவ புராணமும் பிரிக்க இயலாத ஒன்று. கதைகள் பிடித்தவருக்கு ஒன்று, எதையும் விஞ்ஞான ரீதியாக பார்ப்பவருக்கு மற்றொன்று என இருந்தாலும் இரண்டின் அடிப்படையும் ஒன்றுதான்.

நவீன கல்வி முறையின் தன்மை குறித்து இன்றைக்கு விஞ்ஞானிகள் பல ஆராய்ச்சிகள் மேற்கொள்கிறார்கள். தற்போதைய கல்விமுறையில், ஒரு குழந்தை 20 வருடங்கள் தொடர்ந்து படிக்கும்போது, அவனுடைய புத்திசாலித்தனம் மீட்டெடுக்க முடியாத அளவு அழிந்து போகிறது என்பது ஆராய்ச்சி முடிவுகளில் ஒன்று. அறிந்த முட்டாளாக இருப்பான் என்று அர்த்தம். விளையாட்டு அல்லது கதைகள் மூலம் பயிற்றுவிப்பது சிறந்த முறைகளில் ஒன்று என கருத்து தெரிவிக்கிறார்கள். இந்த ரீதியில் சிறிய முயற்சிகள் நடந்து கொண்டிருந்தாலும் உலகின் பெரும்பான்மை கல்விமுறை அழுத்தம் தருவதாகவே இருக்கிறது. பெரும் அளவில் கொட்டிக் கிடக்கும் தகவல்கள், குறிப்பிட்ட முறையில் வழங்கப்படாவிட்டால் புத்திசாலிதனத்தை அழிக்கிறது. கதை வடிவம் என்பது ஒரு சிறந்த கற்பிக்கும் முறை. இந்த கலாச்சாரம் அதைதான் செய்தது. விஞ்ஞானத்தின் உயர்ந்த பரிமாணங்கள் அற்புதமான கதைகள் வடிவில் பரப்பப்பட்டது.