logo
logo
தமிழ்
தமிழ்

மூன்றாவது கண்... சில உண்மைகள்!

வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது.

சத்குரு:

பார்வதிக்கு சிவனை திருமணம் செய்ய தணியாத ஆர்வம். அதனால் மன்மதனான காமதேவனை அனுகினார். பொதுவாக, மன்மதர்களின் வேலையில் அத்தனை சாதுர்யத்தை காண முடியாது. நம் காமதேவனும் மரத்திற்கு பின்னால் ஒளிந்துகொண்டு சிவன் மீது காமபாணம் வீசினான். அந்த மலர் அம்பு சிவனை தீண்டியது. தியானத்திலிருந்து கண்திறந்த சிவனின் கண்முன்னே அழகு சொரூபமான பார்வதி அமர்ந்திருந்தார். திடீரென சிவனுக்குள் ஆசை பிறந்தது. பார்வதி மீது காதல் பிறந்தது. கிடுகிடுவென சுதாரித்துக் கொண்டவருக்கு கோபம் பீறிட்டு எழுந்தது. "யார் எனை தூண்டியது?"

அங்கே மரத்திற்கு பின்னால் நின்று, தன் வெற்றியை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த காமனை கண்டார் சிவன். "நீ என் சாதனாவை கலைத்து, எனக்குள் ஆசை மூட்டி விட்டாயா?" என்று கூறி, தன் நெற்றிக்கண்ணை திறந்து, அவனை சாம்பலாக்கினார்.

ஆசைகளும், தாபங்களும், காமமும் வெளியிலிருந்து வருவதில்லை, அவை நமக்குள் இருந்தே எழுகின்றன. சிவன் வெளியே இருக்கும் காமனை எரிக்கவில்லை, மாறாக, தனக்குள் இருந்த காமனை எரித்தார் என்பதையே இந்தக் கதை சொல்கிறது. ஆசையும் தாபமும் எழும்போதே தன் மூன்றாவது கண்னை திறந்து, அதனை பஸ்பமாக்கினார் சிவன். நமக்கு வழங்கப்பட்டிருக்கும் இரு கண்களும் உலகை காண்பதற்கு. அவற்றால் பொருள்தன்மையில் இருப்பவற்றை மட்டுமே கிரகித்துக்கொள்ள முடியும்.

பொருள்தன்மை அல்லாத ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள நினைத்தால், உள்முகமாய் திரும்புவது ஒன்றே வழி. உள்முகமாய் திரும்ப ஒரு கண் இருந்தால், அதனைத்தான் மூன்றாவது கண் என்கிறோம். நெற்றியில் புடைத்துக் கொண்டிருக்கும் ஒரு உறுப்பை நாம் மூன்றாவது கண் எனச் சொல்வதில்லை.

வழிவழியாக, நம் பாரம்பரியத்தில் நெற்றியில் அந்தக் கண் அமைந்திருப்பதாக சொல்வதேன்? ஏனெனில், கிரகித்துக்கொள்ளும் திறனோடு தொடர்புடைய ஆக்ஞா சக்கரம் நெற்றியில் அமைந்திருக்கிறது. முன்னர், ஈஷா யோக மையத்தின் அறிகுறி - ஒரு வட்டம், அதற்குள் ஒரு முக்கோணம், அதன் நடுவே மற்றொரு வெள்ளை வட்டம். இதுவே ஈஷா யோக மையத்தின் அறிகுறியாய் பல வருடங்கள் இருந்தது. இந்நாட்களில், நம் மக்கள் அதன் பயன்பாட்டை மெல்ல குறைத்துவிட்டனர். புருவமத்தியில் இருக்கும் ஆக்ஞா சக்கரம், உள்முக பயணத்தை வழங்குகிறது. ஈஷா யோக மையம், மக்களை உள்முக பயணமாய் அழைத்துச் செல்வதால் இந்த அறிகுறியை வைத்திருந்தோம்.

அனைவரது வாழ்விலும் மூன்றாவது கண் - அனுபவ உண்மையாய் ஆவதில்லை, ஒரு சாத்தியமாய் மட்டுமே இருக்கிறது. அது நமக்கு அனுபவப்பூர்வமான உண்மையாக வேண்டுமென்றால், அதை மெல்ல மெல்ல வளர்க்க வேண்டும். அதற்காக பயிற்சிகள் செய்ய வேண்டும். ஈஷா யோக மையத்தில் சம்யமா போன்ற உயர் வகுப்புகளில் பங்கேற்பாளர்கள் 8 மணி நேரம் மிகச் சுலபமாய் கண்மூடி அமர முடிகிறது. மூன்றாவது கண் தூண்டப்படாமல் இது சாத்தியமில்லை.

    Share

Get latest blogs on Shiva

Related Content

சிவனும் காளியும்: தாந்திரீக குறியீடு