logo
logo

4 சிவன் கதைகள்

யோக மரபில் ஞானம் வழங்கக்கூடிய விலை மதிப்பற்ற ஏராளமான சிவன் கதைகள் இயங்கியல் வடிவில் உள்ளன. இங்கே அதுபோன்ற நான்கு கதைகள் வழங்குகிறோம்.

கதை 1 : மிதக்கும் மாட்டு வண்டியில் முகமில்லா மனிதர்!

சத்குரு: தென்னிந்திய பகுதியில், கர்நாடக மாநிலமாக தற்போது உள்ள இடத்தில், ஒரு பக்தரின் வாழ்க்கையில் நிகழ்ந்த ஒரு அழகான சம்பவம் எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த பக்தருக்கு வயதுமுதிர்ந்த தாய் இருந்தார். அவரது தாய் தன் குழந்தைகளை வளர்த்து அவர்களை உயர்வடையச் செய்வதிலேயே தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்திருந்தார். அவர் தனக்கென்று எதையும் கேட்டதில்லை. முதல்முறையாக தன் ஒரே மகனிடம் காசிக்குச் சென்று தன் உடலைவிடும் ஆசையைத் தெரிவித்தார்.

"இந்த ஒரு விஷயத்தை எனக்கு தயவுசெய்து நிறைவேற்றிக்கொடு!" என்று அவர் வேண்டினார். தனது தாய் மீது அளவில்லா அன்புகொண்ட அம்மகன் உடனடியாக பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்வதாகச் சொன்னார். தனது பொருள்வாழ்க்கை சார்ந்த செயல்பாடுகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட அவர், மனைவி மற்றும் குழந்தைகளையும் விட்டுவிட்டு, அவர்களிடம் பிரியாவிடை பெற்று, தனது தாயைக் கூட்டிக்கொண்டு பயணத்தை துவக்கினார். இந்தியாவின் தென் பகுதியிலிருந்து காசிக்கு நடந்தே செல்ல இருவரும் முற்பட்டார்கள். அது ஒரு நீண்ட பயணம்.
பல வாரங்கள் கடந்த நிலையில் பயணக் களைப்பில், வயதுமுதிர்ந்த தாய் பலகீனமடைந்தார். அவரால் தொடர்ந்து நடக்க முடியவில்லை. ஆகவே, அந்த பக்தர் தனது தாயை தோளில் தூக்கிக்கொண்டு நடக்கத் துவங்கினார். தனது முழுபலமும் தீரும்நிலையிலும் கூட நடந்துகொண்டிருந்த அவரிடம், தனது தாயின் ஆசையை என்ன விலைகொடுத்தாவது பூர்த்திசெய்துவிட வேண்டுமென்ற முனைப்பு இருந்தது.

அந்த நீண்ட பயணத்தில் ஒரு காட்டு வழியில் பயணிக்க நேர்கையில், அங்கே ஒரு மணியோசையை கேட்டார். அந்த அத்துவான காட்டிற்குள் அப்படியொரு மணியோசை கேட்பது ஒரு இசைவான விஷயம்தானே! யார் மாட்டுவண்டியில் வருவது என்று அவர் பார்த்தபோது, ஒற்றை மாடு பூட்டப்பட்ட மாட்டுவண்டி எனத் தெரிந்தது. பொதுவாக ஒற்றை மாடு பூட்டப்படும் வண்டிகள் உள்ளூர் தேவைகளுக்காக பயன்படுத்தப்படக் கூடியவை. தொலைதூரப் பயணத்திற்கு எப்போதும் இரட்டை மாடுகள் பூட்டப்படும் வண்டிகள்தான்!

ஆனால், அந்த காட்டின் அடர்ந்த மையப் பகுதியில், ஒரு ஒற்றை மாடு பூட்டப்பட்ட வண்டி வந்துகொண்டிருந்தது. தனது தாயை தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்த இந்த மனிதனின் அருகில் அந்த மாட்டுவண்டி நின்றது. "உள்ளே ஏறுங்கள்" என்றார் மாட்டுவண்டி ஓட்டுநர். ஏறிக்கொண்டனர். தனது தாயை வண்டியினுள்ளே பத்திரமாக அமரவைத்தார் மகன். வண்டி நகரத் துவங்கியது. தனது தாயை வண்டியில் கூட்டிச்செல்வது குறித்து மகிழ்ச்சியுற்ற மகன், சிறிது நேரத்திற்குப் பின் ஒரு விஷயத்தைக் கவனித்தார்.

வழக்கமாக மாட்டு வண்டிகளில் செல்லும்போது பாதையில், மேடுபள்ளங்களில் ஏற்படும் அதிர்வுகள் ஏதும் உணரப்படவில்லை என்பதை உணர்ந்தார். பொதுவாக, மாட்டு வண்டிகளில் மேடுபள்ளங்களில் போகும்போது அதன் அதிர்வுகளை தாங்குவதற்கான suspension ஏதும் இருக்காது. ஆனால், இந்த வண்டியோ மிதப்பதுபோல இருந்தது. வண்டியின் சக்கரத்தைக் கவனித்தபோது அவை சுழலவில்லை. பின் அவர் காளையினைப் பார்த்தார். அது கால்மடக்கி அமர்ந்தவாறு இருந்தது, ஆனாலும் வண்டி சென்றுகொண்டிருந்தது.

பின் அவர் ஓட்டுநரைப் பார்த்தார். அங்கு முகமில்லாத ஒரு மேலாடை மட்டுமே இருந்தது. அது, "வெறுமையான முகம்." அந்த ஆடைக்குள் ஒன்றும் இல்லை! அவர் தனது தாயைப் பார்த்தார். அவர் பிரகாசமாய் ஜொலித்துக் கொண்டிருந்தார்.

அவரது தாய் உடனே எழுந்து உட்கார்ந்து, “நாம் வந்து சேர்ந்துவிட்டோம்! அவர் இங்குதான் இருக்கிறார். நான் போகும் நேரம் வந்துவிட்டது" என்று சொல்லி, தனது உடலை அங்கேயே துறந்தார்.

பொருள்நிலையுடன் யாரெல்லாம் ஆழமான அடையாளம் கொண்டு அதன் கட்டுப்பாட்டிற்குள் சிக்கியுள்ளார்களோ அவர்கள்தான் "காலம், இடம்" என்ற தன்மைகளில் சிக்கிக் கொள்கிறார்கள்.


கதை 2: மல்லா: (ஒரு) சிவனடியாரும் திருடனும்

சத்குரு: நான் பிறந்த இடத்திற்கு மிக அருகாமையில் வாழ்ந்த ஒரு யோகியைப் பற்றி இப்போது சொல்கிறேன். அவரைப் பற்றியும், அங்கு நடந்த அதிசயங்களைப் பற்றியும் சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால் என்னுடைய இளம்வயது காரணமாக நான் அதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை. அது ஒருவிதமான ஈர்ப்பை அளித்தாலும், அந்த நேரத்தில் அதற்கு நான் அதிக முக்கியத்துவம் கொடுக்கவில்லை.

மைசூருக்கு 16 கிலோமீட்டர் தொலைவில், தற்போது பிரபலமாயிருக்கும் நஞ்சங்கூட்டின் புறநகர்ப் பகுதியில் ஒரு பக்தர் வாழ்ந்து வந்தார். அவரது பெயர் மல்லா. மல்லா எந்த குறிப்பிட்ட பாரம்பரியத்தைச் சார்ந்தவரோ அல்லது முறையாக வழிபாடு செய்வதையோ தியானம் செய்வதையோ அறிந்தவரல்ல. ஆனால், குழந்தைப் பருவம் முதல் கண்ணை மூடினால் அவர் காண்பது சிவனின் உருவத்தைத்தான். பக்தர் என்பது அவருக்கு பொருந்தாத வார்த்தையாய் இருக்கலாம். அவர்போல ஆயிரக்கணக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் சிவனிடம் சிறைப்பட்டிருக்கிறார்கள். அவர்களுக்கு வேறு வாய்ப்பில்லை. நானும்கூட அவரால் சிக்கவைக்கப்பட்டவன்தான். நாங்கள் அவரைத் தேடியவர்கள் அல்ல, எதையும் தேடாத திமிரானவர்கள். ஆனால் அவரால் சிக்கவைக்கப்பட்டவர்கள். சிவன் ஒரு வேட்டைக்காரன். அவர் விலங்குகளுக்கு மட்டும் கண்ணி வைப்பதில்லை, மனிதர்களுக்கும்தான். இதுவும் அதைப்போல் ஒன்றுதான்.

மல்லாவுக்கு சிவனைத் தவிர வேறொன்றும் தெரியாது. வியாபாரத்தையோ, கைத்தொழிலையோ கற்றவரும் அல்ல. அதனால் காட்டுத்தனமாக வளர்ந்தார். யாரோ ஒருவரை நிறுத்தி அவரிடமிருந்து தனக்கு (தேவையானதை) தேவைப்படும் பணத்தை எடுத்துக்கொள்வது தவறென்று அவருக்கு தோன்றவில்லை. எனவே அதை மட்டுமே செய்தார். அதனால் கொள்ளைக்காரன் என்று பெயரெடுத்தார்.

மக்கள் பயன்படுத்தும் காட்டுவழியில் ஒரு வழக்கமான கொள்ளைக்காரனாக மாறினார். அவர் எந்த இடத்தில் இருந்துகொண்டு தனது “சுங்கவரியை” வசூலித்தாரோ, அந்த இடம், திருடனின் மூலை என்று பொருள்படும் “கள்ளன மூலை” என்று அழைக்கப்படலாயிற்று. ஆரம்பத்தில் மக்கள் அவரைத் திட்டினாலும், வருடக் கடைசியில் அவர் மக்களிடமிருந்து சம்பாதித்த ஒவ்வொரு பைசாவையும் மஹாசிவராத்திரியைக் கொண்டாடுவதில் செலவழித்தார். மிகப்பெரிய விருந்தை அவர் அளித்தார்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மக்கள் அவரை ஒரு பெரும்பக்தராக அறிந்துகொண்டு தாங்களாகவே பணத்தை வழங்க ஆரம்பித்தார்கள். தங்களாகவே கொடுக்காதவர்களை ஊக்குவிப்பதில் அவருக்கு ஆர்வமில்லை.

சில ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த வழியே வந்த சகோதரர்களான இரண்டு யோகிகள், இவர் பெரும்பக்தனாகவும் அதேசமயம் கொள்ளைக்காரனாகவும் இருப்பதைக் கண்டார்கள். அவரிடம் “உங்கள் பக்தி மிகவும் அற்புதமானது, ஆனால் உங்கள் பாதை மக்களை துன்புறுத்துகிறது” என்றார்கள். அதற்கு அவர், “நான் சிவனுக்காக செய்கிறேன், அதில் என்ன பிரச்சினை?” என்றார். அவர்கள் அவரை சமாதானம் செய்து, அவரை தனியே அழைத்து மற்ற வழிமுறைகளில் ஈடுபடச்செய்து, கள்ளன மூலை என்ற இடத்தை மல்லன மூலை என்று பெயர் மாற்றம் செய்தனர். இப்போதும் அந்த இடம் மல்லன மூலை என்றே அழைக்கப்படுகிறது. அவரால் கொண்டாடப்பட்ட மஹாசிவராத்திரி பெரும் சங்கமாக அங்கே உருவெடுத்தது.

கொள்ளையடிப்பதைக் கைவிட்டு, இந்த இரண்டு யோகிகளுடன் அமர்ந்த இரண்டரை ஆண்டிற்குள்ளாகவே அவர் மஹாசமாதி அடைந்தார். இப்படி அவரை விடுவித்த பிறகு அந்த இரண்டு யோகிகளும் தாங்களும் அப்படியே அமர்ந்து அதேநாளில் தங்கள் உடலை துறந்தனர். இன்று இவர்களுக்காக அழகான கோவில் எழுப்பப்பட்டு, கபினி ஆற்றின் கரையில் இன்றும் மல்லன மூலை என்று அழைக்கப்பட்டு வருகிறது.

கதை 3: குபேரன் சிவனின் தலைசிறந்த பக்தனாக எப்படி ஆனார்

சத்குரு யக்ஷர்களின் அரசன் குபேரன். யக்ஷர்கள் இடைப்பட்ட உயிர்கள். அவர்கள் இங்கு உயிர்களாகவும் இல்லை, உயிரைக் கடந்தவர்களாகவும் இல்லை. இடைப்பட்டவர்கள். இராவணன், குபேரனை இலங்கையிலிருந்து நாடு கடத்தியதாகவும், குபேரன் தாயகத்திற்கு ஓடிவந்ததாகவும் கதை உள்ளது. தன் நாடு மற்றும் நாட்டு மக்களை இழந்த விரக்தியின் காரணமாக சிவனை வழிபட ஆரம்பித்து சிவபக்தனாக - சிவனடியாராக மாறினார்.

சிவன், தன்னுடைய கருணையின் வெளிப்பாடாய், மற்றொரு நாட்டையும், உலகத்தின் அனைத்து செல்வங்களையும் குபேரனுக்கு வழங்கினார். குபேரனும் உலகத்தின் தலைசிறந்த செல்வந்தராக ஆனார். செல்வம் என்றால் குபேரன் என்று ஆகிவிட்டது. குபேரன் ஒரு சிறந்த பக்தனாக ஆனார். எப்போது ஒரு பக்தன் தான் சிறந்த பக்தன் என்று உணர ஆரம்பிக்கிறானோ அப்போதே அனைத்தையும் இழந்தவனாகிறான். அவர் ஏன் அப்படி நினைத்தார் என்றால், அவர் சிவனுக்காக மிகப்பெரும் அளவிலான செல்வங்களை அர்ப்பணித்தார். ஆனால் சிவன், அவருக்கு அர்ப்பணிக்கப்பட்ட பொருள்களில் இருந்து திருநீற்றைத் தவிர வேறு எதையும் தொட்டதுகூட இல்லை. ஆனால் குபேரன் தான் மிகவும் அதிகமாக அர்ப்பணிப்பதால் தன்னை மிகச் சிறந்த பக்தனாக எண்ணிக்கொண்டான்.

ஒருநாள், சிவனிடம் வந்த குபேரன், “உங்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்று நான் விரும்புகிறேன். என்ன செய்யட்டும்?” என்றார். சிவன், “ஓ… நீ எனக்கென்று எதுவும் செய்யமுடியாது. உன்னால் எனக்கு என்ன செய்யமுடியும்? ஏனென்றால் எனக்கு எதுவுமே தேவையில்லை, நான் நன்றாகவே இருக்கிறேன். ஆனால் என்னுடைய மகனை எடுத்துக்கொள்” என்று கூறி கணபதியைக் காட்டினார். “இந்தப் பையன்தான் எப்போதும் பசியோடே இருக்கிறான். அவனுக்கு நன்றாக உணவளி” என்றார்.

“அது ஒன்றும் பிரச்சனை இல்லை” என்ற குபேரன், கணபதியை மதிய உணவு உண்ண அழைத்துச்சென்றார். அவர்கள் கணபதிக்கு உணவு பரிமாறினார்கள். அவர் சாப்பிட்டார், சாப்பிட்டார், சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். அவர்கள் உணவு பரிமாறிக்கொண்டே இருந்தார்கள். அவரும் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார். குபேரன் நூற்றுக்கணக்கான சமையல்காரர்களை வரவழைத்து மிகப் பெரிய அளவில் சமைக்க ஆரம்பித்தார். அவர்கள் இந்த உணவு அனைத்தையும் பரிமாறினர். ஆனால் அவர் சாப்பிட்டுக்கொண்டே இருந்தார்.

பயந்துபோன குபேரன், “நிறுத்துங்கள், இப்படியே நீங்கள் சாப்பிட்டுக்கொண்டே இருந்தால் வயிறு வெடித்துவிடும்” என்றார். அதற்கு கணபதி “நீங்கள் ஒன்றும் கவலைப்பட வேண்டாம். பாருங்கள் நான் இந்த பாம்பை அரைக்கச்சாக அணிந்திருக்கிறேன். என்னுடைய வயிற்றைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம் .எனக்கு பசிக்கிறது, பரிமாறுங்கள்” என்றார். “நீங்கள்தானே என்னுடைய பசியைக் கவனித்துக்கொள்கிறேன் என்று சொன்னீர்கள்” என்றார்.

குபேரன் தன் சொத்து முழுவதையும் செலவிட்டான். மற்ற லோகங்களில் இருந்தும் உணவை வாங்கி பரிமாறினார்கள். அவற்றையும் உண்ட கணபதி, “என் வயிறு இன்னும் நிரம்பவில்லை, தேவையான உணவு எங்கே?” என்று கேட்டார். அப்போதுதான் தன் சிறுமதியை உணர்ந்த குபேரன், சிவன் திருவடியை பணிந்தார். “என்னுடைய செல்வங்கள் எல்லாம் உங்களுக்கு ஒரு தூசுக்கு சமானம் என்பதை உணர்ந்தேன். ஒரு பெரும் பக்தன் என்று என்னை தவறாக நினைத்து, நீங்கள் எனக்கு ஏற்கனவே கொடுத்ததில் ஒரு சிறு பங்கை திருப்பி கொடுத்தேன்” என்றார். அந்த கணத்தில் இருந்து அவரது வாழ்க்கை மாறுபட்ட திசையில் நகரத் தொடங்கியது

கதை 4: ப்ருகு மஹரிஷிக்கு பாடம் புகட்ட அர்த்தனாரியான சிவன்

சத்குரு: நாம் யோகா என்று சொல்லும்போது, ஒரு குறிப்பிட்ட உடற்பயிற்சியையோ, ஒரு தொழில்நுட்பத்தையோ குறித்து பேசுவதில்லை. படைப்பின் விஞ்ஞானத்தையும், படைப்பின் இந்த ஒரு சிறு பங்கைக்கொண்டு உச்சபட்ச வாய்ப்பை அடைவது பற்றியே பேசுகிறோம். வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் உச்சபட்ச வாய்ப்பை அடையும் வாய்ப்பாக இருக்கும் விஞ்ஞானத்தைப் பற்றியும், தொழில்நுட்பத்தைப் பற்றியும் பேசுகிறோம்.

சிவன், சப்தரிஷிகள் அல்லது ஏழு முனிவர்களுக்கு யோகாவை பரிமாறத் துவங்கி வாழ்வின் இயல்புகளைப் பற்றி விவரித்தபோது ஒரு அழகான சம்பவம் நடந்தது. சப்தரிஷிகளில் ஒருவராக இருந்து பின்னால் ப்ருஹு மஹரிஷி என்று அழைக்கப்பட்டவர், சிவனின் தீவிர பக்தர். கருணையின் ஏரியான காந்த்திசரோவர் ஏரிக்கரையில் நடந்த இந்த முதல் யோக நிகழ்ச்சிக்கு பார்வதியும் ஒரு பார்வையாளராக இருந்தார். வழக்கம்போல் காலையில் வந்த ப்ருஹு முனிவர் சிவனைச் சுற்றி வலம்வர விரும்பினார். பார்வதி சிவனுக்கு நெருக்கமாக அமர்ந்திருந்தார். ஆனால், ப்ருஹு முனிவர் அவர்களுக்கு இடையே நுழைந்து சிவனை மட்டும் சுற்றிவந்தார். அவர் சிவனை மட்டுமே சுற்றி வலம்வர விரும்பினார், பார்வதியை அல்ல.

சிவனுக்கு இது வேடிக்கையாக இருந்தது. ஆனால் பார்வதிக்கு அப்படி அல்ல. அவருக்கு இது பிடிக்கவில்லை. அவர் சிவனைப் பார்க்க, சிவன் “இன்னும் நெருக்கமாக அமர்ந்துகொள், அவர் உன்னையும் சுற்றி வருவார்” என்றார். பார்வதி நெருக்கமாக அமர்ந்து கொண்டார். இதைக் கண்ட ப்ருஹு முனிவர் தன்னை ஒரு எலியாக மாற்றிக்கொண்டு சிவனை மட்டும் வலம்வந்தார். பார்வதியை சுற்றி வருவதை தவிர்த்துவிட்டார்.

இதனைக் கண்ட பார்வதி மிகவும் எரிச்சலுற்றார். அவரை சமாதானப்படுத்த விரும்பிய சிவன் பார்வதியை எடுத்து தன் மடியில் அமர்த்திக்கொண்டார். ப்ருஹு தன்னை ஒரு சின்னஞ்சிறிய பறவையாக உருமாற்றிக்கொண்டு, பார்வதியைத் தவிர்த்து சிவனை மட்டுமே வலம் வந்தார். இதைப் பார்த்து பொங்கியெழுந்த பார்வதியை தனக்குள் இழுத்து, தன்னுள் ஒரு பாகமாக ஆக்கினார் சிவன். அவரது ஒரு பாகம் பார்வதியாக மாற மற்றொரு பாகம் சிவனாகவே இருந்தது. அவர் அர்த்தனாரியாக உருவெடுத்தார்.

இதை கண்ட ப்ருஹு தன்னை ஒரு தேனீயாக உருமாற்றிக்கொண்டு சிவனின் வலது காலை மட்டும் சுற்றிவந்தார். சிவனுக்கு ப்ருஹுவின் இந்த குழந்தைத்தனமான பக்தி வேடிக்கையாக இருந்தாலும் அதேநேரத்தில் ப்ருஹு தன் பக்தியில் தொலைந்துபோய் வாழ்வின் உச்சபட்ச இயல்பை உணரத் தவறிவிடுவதை விரும்பவில்லை. எனவே அவர் யோகாசனத்தின் ஒருவகையான சித்தாசனாவில் அமர்ந்தார். இதன்மூலம் ப்ருஹுவுக்கு அவர் காலையோ அவரது உடலின் இதர பாகங்களையோ சுற்றிவர வாய்ப்பே இல்லாமல் போனது. அவர் அப்படிச் செய்ய விரும்பினால் பெண்மை மற்றும் ஆண்மை என்னும் இருதன்மைகளையுமே சுற்றிவர இயலும்.

இந்த கதை எதைச் சொல்லவருகிறது என்றால், நாம் யோகா என்று பேசும்போது, அனைத்தையும் ஒன்றிணைத்துக்கொள்ளும் தன்மையைப் பற்றி பேசுகிறோம். இது உடற்பயிற்சியோ அல்லது உடல்நலத்தை உருவாக்குவதற்கான வழிமுறையோ அல்ல. இது மனிதகுலத்தின் உச்சபட்ச நலனுக்கானது. இதில் வாழ்வின் எந்தத் தன்மையையும் நீங்கள் விலக்குவதற்கில்லை. இது பரிமாணங்கள் அனைத்தையும் கடந்த பரிமாணத்தை அடைவது பற்றியது. உங்கள் உடல், மனம், உணர்ச்சி மற்றும் சக்திநிலை என்னும் உங்களின் அமைப்பையே தெய்வீகத்துக்கான ஏணியாக உபயோக்கிக்கும் ஒரு அமைப்பு. உங்களையே ஒரு படிக்கல்லாக உபயோகித்து உங்கள் உச்சபட்சத் தன்மையை உணரும் ஒருசெயல்முறை

    Share

Related Tags

சிவன் கதைகள்

Get latest blogs on Shiva

Related Content

உஜ்ஜைன் மஹாகாலேஷ்வரர் ஜோதிர்லிங்கம்: இந்த சிவலிங்கத்தை இவ்வளவு சக்திவாய்ந்ததாக மாற்றுவது எது?