பக்திக்குப் பதிலளிக்காமல் போவதில்லை பரமசிவன்

article சிவனின் கதைகள்
சிவன்மீது பக்திகொண்ட பல உன்னத பக்தர்களைப் பற்றி அறியும் அதே வேளையில், தன் பக்தர்களின் சொல்லுக்கு கட்டுப்படுவராக சிவன் இருப்பதையும் பல்வேறு கதைகள் உணர்த்துகின்றன. அசுரனின் வயிற்றுக்குள் குடிபுக சம்மதித்த சிவன் பற்றி தொடர்ந்து படித்தறியுங்கள்!

சிவனின் அளவில்லா, பாகுபாடற்ற கருணையை எடுத்துரைக்கும் விதமாக நிறைய கதைகள் உள்ளன. தூய்மையான கள்ளம் கபடமற்ற அவனுடைய அன்பு, ஒருவரது தாளாத ஏக்கத்தைத் தணித்தது.

முன்னொரு காலத்தில், கஜேந்திரன் என்ற அசுரன் வாழ்ந்து வந்தான். அவன் சிவனை நோக்கி கடுந்தவம் புரிந்தான். அவன் தவத்தைக் கண்டு மனமிரங்கினான் சிவன். கஜேந்திரன் எப்போது அழைத்தாலும் சிவன் வந்துவிடுவான். தன்னுடைய சிறிய தேவைகளுக்குக்கூட, அந்த அரக்கன் சிவனை அழைப்பதைக் கவனித்து வந்த நாரதன், அசுரனிடம் சிறிதே விளையாடிப் பார்க்க முடிவுசெய்தான்.

அவன் கஜேந்திரனிடம், நீ ஏன் சிவனை அவ்வப்போது மட்டும் அழைத்துக் கொண்டிருக்கிறாய்? எப்படியும் சிவன் உன் அழைப்புக்கு வந்துவிடுகிறான், அவனிடம் உன் உடலுக்குள்ளேயே வந்து இருக்கச் சொல்லேன், அவன் எப்போதுமே உன்னிடமே இருப்பான், உனதாகவே இருப்பான். கஜேந்திரனுக்கும் இது ஒரு நல்ல யோசனையாகப்பட்டது.

கஜேந்திரன் வழக்கம்போல சிவனை அழைத்தான், சிவனும் வந்துவிட்டான். அப்போது சிவனிடம் கஜேந்திரன், “இப்போது நீ வந்திருக்கிறாய், இனி என்னை விட்டு நீ எங்கும் போகக்கூடாது,” எனக் கூறினான். சிவனும், தன் குழந்தை போன்ற குணத்தினால், கஜேந்திரனின் உடலுக்குள்ளேயே லிங்கமாக மாறி, அங்கேயே தங்கினான்.

நாளாக நாளாக, முழு பிரபஞ்சமே சிவனைக் காணவில்லை எனத் தேட ஆரம்பித்து. அவன் எங்கு இருக்கிறான் என்று எவருக்கும் தெரியவில்லை. எங்கு தேடியும் கிடைக்காததால், அனைத்து தேவர்களும், கணங்களும் இதற்கு தீர்வு காண விஷ்ணுவிடம் சென்றனர்.

பிரச்சனையைக் கேட்ட விஷ்ணு, சிறிது யோசித்து விட்டு, சிவன் கஜேந்திரனின் கர்ப்பத்தில் இருப்பதாகக் கூறினான். சிவனைத் தன்னுள்ளே கொண்டதால் சாகாதவனாகிய கஜேந்திரனிடமிருந்து எப்படி சிவனை மீட்பது என்று அனைவரும் குழம்பினர்.

வழக்கம் போலவே விஷ்ணு இதற்கு நல்லதொரு தீர்வை தந்தார். தேவர்கள் சிவபக்தர்களாக வேடம் பூண்டு, கஜேந்திரனின் ராஜாங்கத்திற்கு வந்தனர். அங்கு அவர்கள் சிவனைப் போற்றி பாடல்கள் பாடினர். இதைக் கேள்விப்பட்ட கஜேந்திரன், சிவனின் தீவிர பக்தனாக இருந்ததால், அவர்களை அரச சபைக்கு வந்து பாடுவதற்கு அழைப்பு விடுத்தார்.

பக்தர்களாக வேடம் பூண்டிருந்த தேவர்கள், சிவனைப் போற்றி மிக அருமையான பாடல்களைப் பாடினர். கஜேந்திரனுக்குள்ளே இருந்து, இந்த இசையை கேட்டுக் கொண்டிருந்த சிவன், அதனை கேட்டுப் பூரிப்படைந்தார். அவர்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் எனக் கருதினார். அதனால், அவர் கஜேந்திரனின் உடலிலிருந்து வெளியே வந்தார். இவ்வாறு, எங்கிருந்தாலும் பக்திக்குப் பதிலளிக்காமல் போவதில்லை பரமசிவனின் பேரருள்!

Dont want to miss anything?

Get the monthly Newsletter with exclusive shiva articles, pictures, sharings, tips
and more in your inbox. Subscribe now!