ஓர் அமைதியான கடல்
ஓர் அமைதியான நாள்
ஓர் அமைதியான மனம்.
அதேசமயம்,
ஓர் பண்டைய ஞானி
பற்றவைத்த நெருப்பில் தழல்பெருகி
எரியும் ஓர் உள்ளம்.
பல்லாயிரத்தாண்டுகளாய் பற்றியெரிந்திருக்கிறது -
அறியாமையில் உள்ளோர்க்கு அழிவாகவும்
தேடலில் விழைவோர்க்கு ஞானமாகவும்
இறுகி இசையார்க்கு கடுமையாகவும்
விரும்பி இசைவோர்க்கு கனிவாகவும்.
தந்திரங்கள் அனைத்தும் உதிர்ந்திடும் போது
அறியாமை திரையை எரித்து
வருங்காலத்தின் மாளிகைக்கு
வெளிச்சம் பாய்ச்சுகிறது
ஆதியோகியின் தீ.
வருங்கால மாளிகைகள் கட்டப்படுவது என்னவோ
அஞ்ஞான இருளோ ஞானஒளியோ நிறைந்த மனங்களில்தான்.
இனங்கள் அத்தனையும் படைத்த
நீலவண்ணனின் பேரருளில்
இம்மாளிகைகள் ஒளிரும் போது
அவை வாழத் தகுந்த இடமாகின்றன
அறியவொண்ணா வழிகளுக்கு வாசலாகின்றன.
ஆஹா! ஆதியோகியின் தீயை ஏந்தி இருப்பது
நாம் பெற்ற பெரும்பேறு அன்றோ !