சத்குரு: சந்திர நாட்காட்டியின் ஒவ்வொரு பதினான்காம் நாளிலும், அமாவாசைக்கு முந்தைய நாள் சிவராத்திரி என்று குறிப்பிடப்படுகிறது. இந்த நாளில், மனித அமைப்பின் சக்தி நிலையானது இயல்பாகவே மேல்நோக்கி எழுகிறது. மாசி மாதத்தில் வரும் சிவராத்திரி, மஹாசிவராத்திரி என்று குறிப்பிடப்படுகிறது, ஏனென்றால் குறிப்பாக இந்த நாளில் மனித உடலமைப்பினுள் இருக்கும் சக்தி நிலைகள் மேல்நோக்கி எழுவதற்கு இயற்கையே ஒரு பக்கபலமாக இருக்கிறது. யோகா மற்றும் ஆன்மீக செயல்முறையின் ஒட்டுமொத்த அமைப்பும், ஒரு மனிதரை அவரது எல்லைகளிலிருந்து, எல்லையற்ற தன்மைக்கு மேம்படுத்துவதைப் பற்றியதாகவே இருக்கின்றது. இந்த மேம்பாடு நிகழ்வதற்கு, சக்தி நிலை மேல்முகமாக நகரும் செயல்பாடு மிகவும் அடிப்படையான ஒரு வழிமுறையாக இருக்கிறது. ஆகவே, தற்போது இருக்கும் நிலையைவிட இன்னும் சற்று அதிகமாக இருக்க விரும்பும் அனைவருக்கும், சிவராத்திரி முக்கியத்துவமானது, குறிப்பாக மஹாசிவராத்திரி முக்கியத்துவம் வாய்ந்தது.
சத்குரு: மஹாசிவராத்திரி பல விதங்களிலும் குறிப்பிடத்தக்கதாக உள்ளது. குடும்ப சூழல்களில் வாழும் மக்களுக்கு, மஹாசிவராத்திரி என்பது சிவனின் திருமண ஆண்டு விழாவாக வணங்கப்படுகிறது. சந்நியாசிகளைப் பொறுத்தவரை, மஹாசிவராத்திரி என்பது சிவன் கைலாயத்துடன் இரண்டறக் கலந்த நாள், அதாவது அவர் அச்சலேஷ்வரராக மாறி மலையுடன் இணைந்தார். ஆயிரம் ஆண்டுக்கால தியானத்திற்குப் பிறகு, அவர் ஒரு மலைக்கு இணையான நிச்சலனம் அடைந்தவராக, தனது ஞானம் அனைத்தையும் கைலாயத்தில் பொதித்து, ஒன்றிக் கலந்து அதன் ஒரு பாகமாக ஆனார். எனவே சந்நியாசிகள் மஹாசிவராத்திரியை, நிச்சலனத்தின் நாளாகப் பார்க்கிறார்கள். உலகில் குறிக்கோளை நோக்கி செயல்படுபவர்கள், இதனை, சிவன் தனது எதிரிகள் அனைவரையும் வெற்றிகொண்ட நாளாகப் பார்க்கிறார்கள்.
சத்குரு: புராணக்கதைகள் எதுவாக இருந்தாலும், மனித உடலின் சக்தியானது மேல்நோக்கி எழுவது அந்த நாளின் முக்கியத்துவமாக இருக்கிறது. ஆகவே இந்த இரவில் நாம் செய்யும் எந்த ஒரு சாதனாவுக்கும் இயற்கை நமக்குப் பேருதவியாக இருப்பதைப் பயன்படுத்திக்கொள்ளும் வண்ணம் நம் முதுகுத்தண்டை நேராக வைப்பதுடன் முழுமையான உணர்தல் மற்றும் விழிப்புணர்வாக இருப்பதை நாம் விரும்புகிறோம். இதனால் ஒரு மனிதனின் அனைத்து பரிணாம வளர்ச்சியிலும், சக்தியின் மேல்நோக்கிய இயக்கம் அடிப்படையானதாக இருக்கிறது. ஒரு ஆன்மசாதகரின் ஒவ்வொரு பயிற்சியும், ஒவ்வொரு சாதனாவும் அவரது சக்தி நிலைகளை மேல்நோக்கிச் செலுத்துவதற்காகவே செய்யப்படுகிறது.
ஈஷா யோக மையத்தில் இரவு முழுவதும் நீடிக்கும் உற்சாகமான விழாவானது, மஹாசிவராத்திரியை உணர்வதற்குத் தகுந்த சூழலை அமைத்துத் தருகிறது. வெடித்தெழச் செய்யும் தியானங்கள் மற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் அற்புதமான இசை நிகழ்ச்சிகளுடன், பத்து இலட்சத்துக்கும் அதிகமான மக்களை ஈர்க்கிறது. சத்குருவின் முன்னிலையில், இந்த நிகரற்ற வானியல் நிகழ்வு சிவராத்திரி நாள் இரவின் மகத்தான ஆன்மீக சாத்தியங்களை வெளிப்படுத்துகிறது. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இசைக் கலைஞர்களின் நேரடி நிகழ்ச்சிகள், அதனுடன் இணைந்த வண்ணமயமான கலாச்சார நடனங்கள் மற்றும் ஈஷாவினால் வளர்த்தெடுக்கப்பட்ட இசைக்குழு, சவுண்ட்ஸ் ஆஃப் ஈஷா ஆகியவை இரவு முழுவதும் நீடிக்கும் கொண்டாட்டத்தின் தனிச் சிறப்புகளாக இருக்கின்றன.
மனித உடல் உட்பட அனைத்து படைப்புகளுக்கும், ஐந்து மூலக்கூறுகள் அல்லது பஞ்சபூதங்கள் அடிப்படையாக இருக்கின்றன. மனித அமைப்பினுள் இருக்கும் ஐந்து மூலக்கூறுகளையும் தூய்மைப்படுத்துவதன் மூலம் உடல் மற்றும் மனதின் நல்வாழ்வை நிலைநிறுத்த முடியும். ஒருவரது உச்சபட்ச நல்வாழ்வுக்காக, உடல் ஒரு தடையாக இருப்பதை விட ஒரு படிக்கலாக உருவெடுப்பதற்கும்கூட இந்த செயல்முறை உதவியாக இருக்கிறது. யோகாவின் ஒட்டுமொத்த அமைப்பாகிய பூதசுத்தி என்று அழைக்கப்படுவது, உடல் கூறுகளைச் சுத்தப்படுத்துவதற்கான செயல்முறையாக உள்ளது. தீவிரமான சாதனா தேவைப்படக்கூடிய இந்த ஆழமான யோக அறிவியலிலிருந்து பயன்பெறுவதற்காக, பஞ்சபூத ஆராதனா மூலம் சத்குரு ஒரு தனித்துவமான வாய்ப்பை பக்தர்களுக்கு வழங்குகிறார்.