ieco
ieco

சிவனுடன் புத்தரை ஒப்பிடுவது சரியா?

article ஆன்மீகம் & மறைஞானம்
ஆதியோகி சிவனோடு புத்தரை ஒப்பிடும்போது மாபெரும் வித்தியாசங்களைக் காணமுடியும்! புத்தரின் வழியில் செல்லும்போது உள்ள சாதக பாதகங்களை அலசும் இந்த பதிவு, ஆதியோகியுடன் புத்தரை ஒப்பிடத் தேவையில்லை என்பதையும் புரியவைக்கிறது! சிவனுடன் புத்தரை ஒப்பிடுவது சரியா? shivanudan buddharai oppiduvathu sariya

புத்தரின் வழி தர்க்கம் சார்ந்தது. எளிதான பாதையாய் இருந்தாலும், நீண்ட நெடிய பாதை அது. புத்தர் மக்களுக்குக் கொடுத்த செயல்முறைகள் எல்லாம், சில பிறப்புகள் வரையில் நீடிக்கக் கூடியது. இவ்வகை செயல்முறையில் ஈடுபடும் அளவிற்கு உங்களுக்கு பொறுமை இருந்தால், நீங்கள் அந்த பாதையைத் தேர்வு செய்யலாம். ஏனென்றால், அது தர்க்கம் சார்ந்ததாக, விஞ்ஞானப்பூர்வமானதாக வடிவமைக்கப்பட்ட, படிப்படியாக செல்லும் பாதை. அது விழிப்புணர்வுப் பாதை. இந்தப் பாதையின் தனித்துவம் என்னவென்றால், நீங்கள் எவ்வளவு தூரம் பயணித்திருக்கிறீர்கள் என தெரிந்துக்கொள்ள முடியும். இதுதான் இப்பாதையின் முக்கிய அம்சம்.

பெருமளவு பக்தியும், நம்பிக்கையும் இல்லாமலே, ஒருவர் இதில் வளரமுடியும். ஏனென்றால், உங்களுக்கென ஒரு செயல்முறை உள்ளது. என்ன ஆனாலும் அதனை நீங்கள் பற்றிக் கொண்டபடியே இருக்கலாம். உங்கள் வளர்ச்சியைத் தெளிவாகக் காண்பிக்கவும் செய்யும்.

சிவனிடம் அப்படியில்லை. அவனிடம் அந்த உத்திரவாதம் கிடையாது. அவன் அவ்வாறு மைல்கற்கள் நிறுவுவது கிடையாது. நீங்கள் முன்னால் போகிறீர்களா, பின்னால் போகிறீர்களா ஒன்றும் புரியாது. ஆனால், எங்கோ போகிறோம் என்பது மட்டும் தெரியும். இது ஒரு அடியில்லா குழியில் விழுவது போன்றதுதான்.

பயமிக்கதாக இருக்கிறதல்லவா? ஒன்றை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும், குதிப்பதற்கு அடியில்லாத குழிதான் பாதுகாப்பானது. கீழ்மட்டம் உள்ள குழி, ஆபத்தானது. வெறுமனே குதித்து விட்டால், உங்கள் வாழ்க்கையின் நோக்கம் முற்றுப் பெற்றுவிட்டது போலதான். நீங்கள் விழுந்து கொண்டேயிருப்பீர்கள், அவ்வளவுதான்.

நீங்கள் எப்போதாவது வானத்தில் டைவிங் செய்திருந்தால், இதை நீங்கள் புரிந்துகொள்வீர்கள். நீங்கள் மேலே போகிறீர்களா, கீழே போகிறீர்களா என்பது தெரியாது. வெறுமனே மிதந்து கொண்டிருப்பது போலிருக்கும். மிக அற்புதமான அனுபவம் அது. ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ நீங்கள் கீழே பார்த்தால்தான் பிரச்சனை. பூமி உங்களை நோக்கி மிக வேகமாக நெருங்கிக் கொண்டிருக்கும். பூமி இல்லையென்றால், அதை எடுத்துவிட்டால், மிக அற்புதமான அனுபவமாக அது அமைந்திடும்.

விழுவது எதிர்மறையான ஒன்று கிடையாது. விழுவது மிக அழகான ஒரு விஷயம். நீங்கள் எப்போதாவது காதலில் விழுந்திருக்கிறீர்களா? அடிப்பகுதியைத் தொட்டால் நல்லதல்ல. அடியில்லாத குழியில் விழுவதில் பாதகமில்லை.

சிவன் ஒரு அடியில்லாத குழி. அவனுடைய செயல்முறைகள் மிக வித்தியாசமானவை. ஆனால், அவனுக்கு அத்துடன் எல்லை போட்டுவிட முடியாது. அவருடைய ஏழு சிஷ்யர்களிடம், அதாவது சப்தரிஷிகளிடம், மனிதன் தன்னுடைய விழிப்புணர்வை உணர ஏழு அடிப்படை வழிகளை வழங்கினார். இந்த 7-ல் இருந்து, 112 வழிகள் வரை அவர் கண்டறிந்தார். இவ்வாறு மனிதன் தன் உச்சநிலையை அடைய, அவர் 112 வழிகளைக் கண்டறிந்தார். இந்த 112 வழிகள், மனித உடலின் 112 சக்கரங்களைக் குறிக்கிறது.

மனித உடலில் 114 சக்கரங்கள் உள்ளன. உடலளவில் 112 வழிகள்தான். மீதமுள்ள இரண்டும், உடலிற்கு அப்பாற்பட்டது. இவ்வாறு, உடலின் ஒவ்வொரு சக்கரமும், மனிதனின் உச்சநிலையை அடையும் சாத்தியங்களாகும்.

இந்த விஷயத்தில் சிவன் எதையும் விட்டு வைக்கவில்லை. புத்தர் அவருடைய பணியில் ஒரு சிறுபகுதி. ஆரம்பத்திலிருந்தே கௌதமர் வெறுமனே காட்டில் உட்காரவில்லை. அதற்கு முன், எட்டு வருட காலம் கடும் சாதனாவில், இந்தியாவின் பல குருமார்களிடம், பலவற்றைக் கற்றுக்கொண்டார். அவர் கற்றுக் கொண்ட ஆன்மீகச் செயல்முறையின் அடிப்படை, அந்த அறிவியலின் அடிநாதம், முதுகெலும்பு, சிவனிடமிருந்து வந்தது.

உலகின் எந்த இடமானாலும், அங்குள்ள அடிப்-படையான ஆன்மீக வழிமுறைகள் சிவன் என்ற மூலத்திலிருந்து வந்ததுதான். அதுதான் உலகின் பல இடங்களுக்கும் பல முறைகளில் எடுத்துச் செல்லப்பட்டது. ஒரே மூலத்திலிருந்து வந்திருந்தாலும் இவை அனைத்தும் மிக வித்தியாசமாக இருப்பது ஏனெனில், இந்த 112 வழிகளும் ஒன்றுக்கொன்று வெவ்வேறு விதமாக அமையப் பெற்றுள்ளது. அதனால், சிவனுக்கும் புத்தருக்கும் என்ன வித்தியாசம் என்று கேட்பது பொருத்தமல்ல.

சிவனின் வழிகளில் புத்தர் எதனை கையாண்டார் என்று கேட்கலாம். அவர் விழிப்புணர்வு பாதையை போதித்தார். புத்தரின் இந்த வழி ஒருமுகமானதுதான். ஆனால், அவரது தனித்துவம் என்னவென்றால், அவரின் விஞ்ஞானப்பூர்வமான அணுகுமுறை. அவர் தர்க்கமான அறிவுக்கு ஏற்றவர்.

ஆனால் சிவன், அவரும் அசைவில்லாமல் உட்கார்ந்தார். பல சமயங்களில் அவர் கடுந்துறவியாக அசைவில்லாமல் உட்கார்ந்தார். இன்னும் பல சமயங்களில் ஆனந்த நடனம் ஆடினார். அவர் எல்லா நிலைகளிலும் இருந்தார்; ஏனென்றால், அவர் உயிர்த்தன்மையின் அனைத்து அம்சங்களிலும், பரிமாணங்களிலும் இருந்தார். தன்னை ஏதோவொரு பரிமாணத்தோடு மட்டும் நிறுத்திக் கொள்ளவில்லை. எந்தவித எல்லையையும் அவர் தனக்கென வகுத்துக்கொள்ளவில்லை. அவர் உயிர் சம்பந்தமான எதையும் விட்டுவைக்கவில்லை. அதனால், புத்தரின் வழியென்பது சிவன் கண்ட 112 வழிகளில் ஒரேவொரு அம்சம் மட்டும்தான்.

அதனால், சிவனையும் புத்தரையும் ஒப்பிடுவது பொருத்தமானது அல்ல. கௌதமரிடம் எனக்கு பெரிய மரியாதையுண்டு. அவர் ஒரு மகத்தான மனிதர், அதைப் பற்றி சந்தேகமே இல்லை. அவருடைய செயல்கள் மகத்தானவை. அவர் உலகில் ஒரு பெரிய ஆன்மீகப் புரட்சியையே ஏற்படுத்தினார்.

2500 ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னும் அது உயிர்ப்புடன் இருக்கிறது. இருந்தாலும் அவர்கள் இருவரையும் ஒப்பிட முடியாது. சிவனின் பணியில் புத்தர் பயன்படுத்திய முறை ஒரு சிறு பகுதி. அது 112 வழிகளில், ஒரு சதவிகிதத்திற்கும் குறைவானது. ஆனால், அதில் முக்கியமானது, அவர் தனது செயல்முறையை நன்கு விளம்பரப்படுத்தியதுதான்.

ஆயிரக்கணக்கான மக்களுக்கு அவர் பாதையை பின்பற்ற ஊக்கமளித்தார். அதுதான் அவரது வெற்றி. சிவனுக்கு அப்படி விளம்பரம் செய்யத் தெரியாது; அவன் சற்றே போதையில் இருப்பவன். அதனால், நாம்தான் அவனுக்காக விளம்பரம் செய்ய வேண்டும்.

அவனது செயல் ஆரம்பித்து சுமார் 40 முதல் 60 ஆயிரம் ஆண்டுகள் வரை இருக்கும் என்று நம்பப்படுகிறது. இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், இன்றும் உயிர்ப்புடன் இருக்கிறது. உங்களால் அதனை அழிக்க முடியாது. என் ஆயுள் முடிவதற்கு முன், அவனை இப்போது இருப்பதைவிட, சிறிது அதிகமாக பிரபலமாக்கிட சித்தமாய் இருக்கிறேன்.